தமிழ் சினிமாவில் கிச்சுக்கிச்சு மூட்டிய சில கியாகியா நடனங்கள்
தமிழ் சினிமா திரைப்படப் பாடல்களில் குறுக்கும் நெடுக்குமாக வலம்வரும் ஒரு சில கேரக்டர்களைப் பார்த்தால் சிரிப்பை அடக்கவே முடியாது. 'அழகிய லைலா' கவுண்டமணியிலிருந்து 'ஊதுங்கடா சங்கு' பாடலில் ஆடும் தாத்தா வரை இதற்கு உதாரணமாக சொல்லலாம். பொதுவாக பாடல் காட்சிகளைப் பார்க்கும் போது, சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கத் தவிறவிடுகிறோம். நம் கவனம் முழுவதும் கதாநாயகன் அல்லது கதாநாயகியின் மேல் மட்டுமே இருக்கும்.
ஆனால் அதைத் தாண்டி பாட்டுக்கு டான்ஸ் ஆடச் சொன்னால் தாறுமாறாக ஸ்டெப் போடும் கேரக்டர்ஸ் நிறைய உள்ளன. டான்ஸ் ஆடுபவர்களில் மூன்று வகை உள்ளது. ஒன்று சிறப்பாக டான்ஸ் ஆடுபவர்கள், இரண்டு முன்னாடி ஆடுபவர்களைப் பின்பற்றி ஆடுபவர்கள், மூன்றாவது கேட்டகிரி தான் நம்ம ஆளுங்க... என்ன செய்வது என்று தெரியாமல் ரகளையாக ஆடுபவர்கள். அவர்களைப் பற்றிய சிறு தொகுப்பு!
*ஊதுங்கடா சங்கு :*
கமர்ஷியல் ஷோவில் சமூகப் பிரச்னை ஒன்றின் மீதான கவனம் சேர்த்து, பட்டம் தட்டிய 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் மிகவும் பிரபலம். அதே அளவுக்கு அந்தப் பாடலில் ஆடும் தாத்தாவும் செம ஃபேமஸ் தான் பாஸ். நன்றாகக் கூர்ந்து கவனித்திருந்தால் இந்தத் தாத்தாவை பார்த்திருக்கலாம். முன்னாடி ஆடிக்கொண்டிருக்கும் கோ டான்ஸ்சர்ஸை பார்த்துத் தானும் ஆட முயற்சிப்பார். ஆனால் என்ன செய்வது என்று தடுமாறி, ஒரு கட்டத்தில் உட்கார்ந்து ஆட ஆரம்பித்துவிடுவார். பின் பாடல் முடியப் போவதை அறிந்த பெரியவர், பேக் டூ ஃபார்ம் ஆகி கலக்குவார். முடிவில் ஒரு ஸ்டெப் போட்டுவிட்டு தன் நடன சாகசத்தை நிறுத்திக்கொள்வார்.
*அழகிய லைலா :*
'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் இடம்பெற்ற 'அழகிய லைலா' பாடலில் கதாநாயகன் கார்த்தி ஆடும் நடனத்தைப் பார்க்காமல், கவுண்டமணியின் நடனத்தை மட்டும் பார்த்தால் 'குபீர்' சிரிப்பு தான். கவுண்டமணியின் பாடி லாங்வேஜை நினைத்துப் பார்த்தாலே நமக்கு சிரிப்பு வரும். அப்படிப்பட்டவர் ஆடினால் எப்படி இருக்கும்! இந்தப் பாடலில் தனது தனித்துவமான ஆட்டத்தை ஆங்காங்கே வெளிப்படுத்துவார்.
*மேகம் கருக்குது :*
'குஷி' படத்தில் வரும் பாடல் தான் 'மேகம் கருக்குது' பாடல். ஜோதிகா தன் சிறப்பான நடனத்தை அதில் வெளிப்படுத்தியிருப்பார். இந்தப் பாடலில் ஜோதிகாவின் நடனத்தைக் கவனிக்காமல், அவரோடு இணைந்து நடனமாடும் கோ டான்ஸ்சர்களைக் கவனித்தால், அவர்கள் செய்யும் லூட்டிகளைக் காணலாம். பாடலில் திடீரென இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு ஓடுவது, ஜோ நடனமாடிக் கொண்டிருக்கும் போது குறுக்கே இவர்கள் ஸ்டெப் போடுவது என்று பாடல் முழுவதுமாக இவர்களின் லூட்டிக்குகளுக்குப் பஞ்சமிருக்காது.
*ரோமியோ ஆட்டம் போட்டால் :*
இந்தியன் 'மைக்கில் ஜாக்ஸன்' பிரபுதேவா பட்டையைக் கிளப்பிய பாடல் 'ரோமியோ ஆட்டம் போட்டால் சுற்றும் பூமி சுற்றாதே'. இந்தப் பாடலில் கண்ணுக்குத் தெரியாமலே சில காமெடிகள் உள்ளன. வடிவேலு திரையில் இருந்தால் சொல்லவே தேவையில்லை அவரையும் தாண்டி ஒரு சிலரின் நடவடிக்கைகளைப் பார்த்தால் சிரிப்பு தானாகவே வந்துவிடும். ஷில்பா ஷெட்டி, பிரபுதேவா இருவரும் நடனமாடிக் கொண்டிருக்க, திடீரென தரையில் ஒருவர் ஊர்ந்து செல்வார். திடீரென குறுக்கே ஓடுவார். முக்கியமாக அவரின் காஸ்ட்யூம்ஸ் வேற லெவல்!
*கொக்கு சைவ கொக்கு :*
'முத்து' படத்தில் இடம்பெற்ற பாடல் 'கொக்கு சைவ கொக்கு' பாடல். இந்தப் பாடலில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து பலரும் நடனமாடியிருப்பர். அவர்களை விட்டுவிடுவோம். இந்த முறை இப்பாடலில் நடிகர் பொன்னம்பலத்தையும் அவருடன் இணைந்து ஆடும் பருமனான நபரை மட்டும் பாட்டு முடியும் வரை பார்த்தால், ஃபுல் எஞ்சாய்மென்ட் தான். மோசமான ஒரு வில்லனை அழைத்துவந்து டான்ஸ் ஆடச் சொன்னால் என்ன ஆகும்ன்றத விஷுவல்ல பாருங்க மக்களே.
*ஊத்திகினு கடிச்சுக்கவா :*
இந்தப் பாடலைக் கேட்டாலே நம் தலைமுடி கூட டான்ஸ் ஆடும். அந்த அளவு நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்றக்கூடிய தேவாவின் இசையும், வரிகளும் அமைந்த பாடல். இந்தப் பாடல் முழுவதுமே அதகளம் தான். சுற்றியுள்ளவர்களை மட்டும் கூர்ந்து கவனித்தால், பாடலைத் தாண்டி சில நகைச்சுவைகள் சிக்கும். அவர்கள் கொடுக்கும் ரியாக்சன்கள், டான்ஸ் ஸ்டெப் என ஒவ்வொன்றிலும் காமெடி ததும்பி வழியும். சின்னச்சின்ன விஷயத்தையும் தவறாது கவனித்துப் பார்த்தால் நடனத்தைத் தாண்டி சில காமெடிகள் தெரியும்.