செவ்வாய், 25 ஜூன், 2019

#HBD_MSV


ஒரு நாளைக்கு நூறு முறை காதில் பேசும் தெய்வம்..

தற்கொலை முடிவில் மகனை தள்ளிவிட்டு பின்னர் மாண்டுபோகலாம் என்று செயல்பட்ட தாயிடம், ‘’மொதல்ல குளத்துல நீ குதி.. ஒருவேளை என்னை தள்ளின பின்னாடி நீ குதிக்கலைன்னா?’’

– இப்படி கேட்டு உயிர்பிழைத்த சிறுவன்தான், கோடானு கோடி மக்களின் காதுகளில் இன்றைக்கும் அமிர்தமாக பாய்ந்துகொண்டிருக்கிறார்.

மளையாள மண்ணில் பிறந்த அவர்தான், இன் றைக்கு தமிழர்களி்d; நாட்டுப்பண்ணாக திகழும், நீராரும் கடலுடுத்த நிலமடந்தை என்று தொடங்கும் பாடலுக்கு இசையமைத்து உதடுகளில் இனிமையாக ஒலிக்கச் செய்தவர்..

இசை-எம்எஸ் விஸ்வநாதன் என்ற ஒற்றைவரியை புதுப்பட போஸ்டர்களில் பார்க்கும்போதே மனதில் அவ்வளவு குதூகலம் பிறக்கும்..

காரணம், எளிமையான மெல்லிசை..எம்எஸ்வி யின் பாடல்களை கேட்க மேதாவித்தனமெல்லாம் தேவையில்லை..

பாவமன்னிப்பு படத்தின் எல்லோரும் கொண்டாடு வோம் அல்லாவின் பேரை சொல்லி, பாடலை, ஒரு சாமான்யன்கூட சாப்பாட்டுத்தட்டை தட்டியபடியே நேர்த்தியாக இசையை கோர்த்துவிடமுடியும்..

இவ்வளவு வெகுஜன ஈர்ப்பு இசையில் இருந்ததற்கு காரணம், எம்எஸ்வி என்ற மனிதன் வாழ்வில், கடைசி உயர்மூச்சுவரை கூடவே இருந்த பாமரத்த னமும், கள்ளம் கபடமில்லா குழந்தைத்தனமும் தான்.

1930களில் சிறுவனாக இருந்தவருக்கு நடிப்பும் இசையுமே மிகப்பெரிய வாழ்க்கை லட்சியமாக துடித்துக்கொண்டிருந்தது. இதற்காக பல இடங்களில் எடுபிடி செய்யவும் அவர் தயங்கியதே இல்லை..

1940களில் சினிமாவில் தலைகாட்டும் வாய்ப்பு கிடைத்தாலும், அவையெல்லாம் மின்னல் வேகத் தில் கடக்கும் வேதனையான தோன்றல்களே..

ஏதோ ஒரு தருணத்தில், நடிப்பை பின்னுக்கு தள்ளி வைத்துவிட்டு ஆர்மோனியம் மூலம் இசையை உரசிப்பார்க்கும் எண்ணம் வந்துவிட்டது.

இன்றைக்கு ஆஸ்கார் விருது வென்ற ஏஆர் ரஹ் மான் எப்படி ஒரு காலத்தில் சின்ன சின்ன இசைக் குழுக்களில்லாம் வாசித்து தள்ளினாரோ, அதைப் போல் 1940களில் எம்எஸ்வி வாசிக்காத இசைக் குழுக்களும் இசையமைப்பாளர்களுமே கிடையாது.

எஸ்வி வெங்கட்ராமன். எஸ்எம் சுப்பையா நாயுடு, சிஆர் சுப்பாராமன் என ஒரு பட்டியலே உண்டு. எல்லாருக்குமே தெரிந்த ஒரு விஷயம், விஸ்வ நாதன் திறமையான பையன்..நிச்சயம் ஒரு நாள் அவன் கொடி தமிழ்சினிமாவில் பறக்கத்தான் போகிறது என்பது.

ஏனென்றால் உதவியாளர் என்ற முறையில் எம்எஸ்வி போட்ட டியூன்களில் பல தடவை ஜாம்பவான் இசையமைப்பாளர்களுக்கு பெரும் புகழையும் விளம்பரத்தையும் தேடித்தந்துள்ளது.

என்டிஆர் பானுமதி நடித்து 1953ல் வெளிவந்த சண்டிராணி படம் என்றைக்கும் பேசப்படும் என்றால், அதற்கு முக்கியமான விஷயம், அதில் இடம்பெற்ற ‘’வான் மீதிலே இன்பத்தேன் மாரி பெய்யுதே’’ என்ற பாடல். இசை குருநாதர் சிஆர் சுப்பாராமன் பெயரில் இருந்தாலும் டியூன் போட்டது விஸ்வநாதன்தான்.

இந்த பாடல் சாமான்யர்களை கவர்ந்தது பெரிய விஷயமல்ல.. பெரிய பெரிய இசையமைப்பார்களே சொக்கிப்போனார்கள் என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.

அதிலும் நம்ம இசைஞானி இளையராஜா, இந்த பாடலின் தீவிர அடிமை.. எம்எஸ்வியோடு பின்னா ளில் இணைந்து பணியாற்றிய மெல்லத் திறந்தது கதவு படத்தில் , வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே என்று பாடலுக்கு வேண்டிவிரும்பி மறுவடிவம் கொடுக்கவைத்தவர் இளையராஜா.

குருநாதர் சி.ஆர்.சுப்பராமனிடம் எம்எஸ்வி போட்ட சில டியூன்களின் மகிமை பின்னாளில் எப்போது தெரியவந்தது என்றால் குருநாதர் மறைந்து, அவரின் படங்களை எம்எஸ்வி முடித்துக்கொடுத்தபோது தான்..

தெலுங்கு ஜாம்பவான் நடிகர் நாகேஸ்வர்ராவ் வாழ்வில் எவரெஸ்ட் சிகரம்போல இன்றைக்கும் இருக்கும் தேவதாஸ் பாடல்களும் இப்படித்தான் எம்எஸ்வியால் காவியங்களாக வழங்கப்பட்டன.

எம்எஸ்வியின் திறமையை தெரிந்து அவருக்கு முதலில் வாய்ப்பளித்தவர் கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன்தான்.. நடிகர் திலகம் சிவாஜியின் இரண் டாவது படமான பணம் படத்தை என்எஸ்கே தயாரித்து இயக்கினார்.

இந்த படத்தில் விஸ்வநாதனையும் சிஆர் சுப்பரா மனிடம் வயலினிஸ்ட்டாக பணியாற்றிய டி.கே ராமமூர்த்தியையும் இணைத்து விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற இரட்டையரை உருவாக்கினர்.

இந்த நேரத்தில் ஜெனோவா படத்திற்கு இசைய மைக்க எம்எஸ்விக்கு வாய்ப்பு கிடைத்தது.. ஆனால் படத்தின் ஹீரோ ஏற்றுக்கொள்ளவில்லை. ஜூபிடர் பிக்ஸ்சர் சில் ஆபிஸ் பாயாக இருந்தவர் என் படத்துக்கு இசைய மைப்பதா என்று கேள்வி கேட்டார். அவர் வேறு யாருமல்ல சாட்சாத் எம்ஜிஆர்தான்.

இத்தனைக்கும் எம்எஸ்வியின் குருநாதர் சி.ஆர்.சுப்ப ராமனுக்கும் எம்ஜிஆருக்கும் இடையே ஒரு சிறிய வரலாறு உண்டு.

1947ல் எம்ஜிஆர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்தாலும் அதன்பின்னர் வெளி வந்த. ரத்னமாலா, பைத்தியக்காரன், அபிமன்யு, மோகினி ராஜமுக்தி, ரத்னகுமார் ஆகிய படங்களில் அவர் இரண்டாது ஹீரோதான். இவை அனைத்துக் குமே சிஆர் சுப்பராமன்தான் இசை.

இந்த காலகட்டங்களில்தான் எம்எஸ்வி என்ற இளை ஞர் எம்ஜிஆரின் பார்வையில் ஆபிஸ்பாயாக தெரிந்தி ருக்கிறார்.கடைசியில் ஜெனோவா படத்தில் அரை குறையாக எம்ஜிஆர் சம்மதிக்க விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைக்கின்றனர்.

இப்படி பணம்-ஜெனோவா என ஒரே நேரத்தில் இருபெரும் திலகங்களுடன் எம்எஸ்வியின் பயணம் ஆரம்பமானது..

1955ல் வெளியான எம்ஜிஆரின் படமான குலேபகா வலி, மாஸ் ஹிட்.. எம்எஸ்வி ராமமூர்த்தி போட்ட பாடல்கள் அத்தனையும் தியேட்டர்களுக்கு திரும்பத் திரும்ப வரவழைக்கிற ரகமாக அமைந்து போய்விட்டது..

1956ல் எம்கே.ராதா நடித்த பாசவலையும் விஸ்வ நாதன் ராமமூர்த்தி பாடல்களுக்காகவே தறிகெட்டு ஒடிய படம்.. அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை..’’ ‘’ உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் உலகத்துக்கெதுதான் சொந்தமடா’’ ‘’லொள்லொள் லொள்’’ என பத்து பாடல்கள்.

சிவாஜி நடித்த புதையல் படத்தின் ‘’விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’’ கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கையின் ‘’ஆடை கட்டிவந்த நிலவோ’ போன்ற பாடல்கள் 1950களின் இறுதி கட்டத்தை விஸ்வநாதன் ராமமூர்த்தி வசம் ஒப்படைத்துக்கொண்டிருந்தன.

எம்எஸ்வி வாழ்க்கையில் வேகமான ஒட்டத்திற்கு நிரந்தரமாய் களம் அமைத்தவர் இயக்குநர் ஏ.பீம்சிங்… இவரது பதிபக்தி படத்தில் சிவாஜியும் ஜெமினியும் இணைய, இசைக்காக எம்எஸ்வியும் சேர்ந்தார்.

அதன்பிறகு பாகப்பிரிவினை, பாசமலர் பாலும் பழமும், பாவ மன்னிப்பு, பார் மகளே பார், பச்சை விளக்கு என படங்கள் வரிசையெடுத்தன..

தாழையாம் பூ முடிச்சி தடம் பார்த்து நடை நடந்து..

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்..

மலர்ந்தும் மலராத பாதி மலர்போல

காலங்களில் அவள் வசந்தம்.. என தமிழ் திரையுலகில் ராமமூர்த்தியோடு சேர்ந்து காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாய் கொடுத்தார் எம்எஸ்வி..

இன்னொரு பக்கம் எம்ஜிஆருடன் மன்னாதி மன்னனில், அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா என்று ஜெட் வேகத்தில் விறுவிறுவென மேலே ஏறியது..

பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா,

1970களில் இன்னும் அதகளம்..  பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பாடலெல்லாம்.. பக்கா லோக்கல் மாஸ்..

நினைத்தாலே இனிக்கும் பில்லா போன்ற படங்களெல்லாம் இளையராஜா என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் இன்றும் நிறைய பேர்..
.

#HBD_MSV

பிக் பாஸ் தமிழ் 3வது சீசன் போட்டியாளர்களின் முழு விபரங்கள்


பிக் பாஸ் தமிழ் 3வது சீசன் போட்டியாளர்களின் முழு விபரங்கள்

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் 3வது சீசன் நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. பிக்பாஸில் பங்கேற்கும் போட்டியாளர்களின் முழு விபரங்களை இங்கு காண்போம்.

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி விட்டது. நேற்று முதல் பிக்பாஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. பிகபாஸ் 3 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள். இன்றைக்கு எபிஸோட் தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது.

முதல் போட்டியாளராக உள்ளே நாம் சொன்னபடியே நடிகை செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு உள்ளே வந்துள்ளார்.கடந்த இரண்டு முறையும் பட்டிதொட்டியெங்கும் பரவிய பிக்பாஸ் இப்போது மூன்றாவது சீசனுகுள் நுழைந்திருக்கிறது. சூர்யா, நயந்தாரா, ஆகிய இருவரில் ஒருவர் தொகுத்து வழங்குவார்கள் என எதிர்பார்க்கபப்ட்ட நிலையில் கமலே இந்த சீசனையும் தொகுத்து வழங்க வருகிறார்.

பிக் பாஸ் தமிழ் 3வது சீசனில் செய்தி வாசிப்பாளர், நடிகை, நடிகர், மாடல் என பல்வேறு வித்தியாசமான துறைகள் மற்றும் குணாதிசயத்துடன் இருக்கும் நபர்கள் போட்டியாளராக பங்கேற்கின்றனர்.
இதனால் இதுவரை பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியை விட மேலும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


பாத்திமா பாபு

முதல் போட்டியாளர் பாத்திமா பாபு டீவியில் செய்தி வாசிப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர். பின் பால்சந்தர் மூலம் திரைப்படங்களில் அறிமுகமானார் கல்கி படம் தான் இவரது அறிமுகம். தொடர்ந்து நிறைய திரைப்படங்கள் நடித்தார். கமல்ஹாஸனுடன் ஆளவந்தான் திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழ் உச்சரிப்புக்கு பெயர் போனவர். அதிமுக கட்சியில் இணைந்து கட்சிப்பணி ஆற்றியவர்.

பாத்திமா பாபுவை வித்யொயாசமான முறையில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து கமல்ஹாசன் வரவேற்றார்.


லொஸ்லியா

இலங்கையைச் சேர்ந்தவர். அங்கு செய்தி வாசிப்பாளராக இருக்க கூடியவர். படிப்பை முடித்தவுடனே மீடியாவில் சேர்ந்தார்.

இவர் குடும்பம் இலங்கையின் போர்ச் சூழல்களில் சிக்கித் தவித்த குடும்பம். இவரது தந்தை வெளிநாட்டுக்கு சென்று சம்பாதித்தன் மூலம் இவர் குடுமபத்தை காப்பாற்ரியவர். தன் தந்தை மீது அதீத பாசம் கொண்டவர் லாஸ்லியா. இவர் இலங்கைத்தமிழ் உச்சரிப்பு அட்டகாசமாக இருக்கும். வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தமிழ் நாட்டு டீவி ஷோவில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை.


சாக்‌ஷி அகர்வால்

பிக்பாஸ் மூன்றாவது போட்டியாளர். இவர் சென்னைப் பெண். இவர் பெங்களுரில் மாடலாக பணியாற்றி பின் சினிமாவுக்குள் நுழைந்தார். கன்னட படமொன்றில் அறிமுகமான அவர் பின் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். கன்னடம், மலையாளம்,தமிழ் என மூன்று மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் பணியாற்றி வந்தார். நிறைய விளம்பர படங்களிலும் மாடலிங்கிலும் கலக்கி வந்தார். சென்னையில் செட்டிலான இவர் ரஜினியின் காலா திரைப்படத்தில் ரஜினி மருமகளாக நடித்து புகழ் பெற்றார். தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக அறிமுகாமாகியுள்ளார்.


மதுமிதா

பிகபாஸ் போட்டியாளராக களமிறங்கியுள்ள மதுமிதா தமிழ் சினிமா காமெடி நடிகை. ஒரு கல் ஒரு காண்ணாடி படத்தில் அறிமுகமாகி புகழ் பெற்றவர். சந்தானத்தின் சிபாரிசின் பேரில் தான் இவர் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை தொடர்ந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமார படத்தில் இவர் நடிப்பு பேசப்பட்டது. இவரது ஸ்லாங் இவரை தனித்து தெரிய வைக்க கூடியது. தமிழ் சினிமாவில் திறமையான காமெடி நடிகைகள் இல்லை என்ற குறையை போக்கியவர். இப்போது பிக்பாஸில் களமிறங்கியுள்ளார்.


கவின்

டீவித்தொடர்களில் ஹிரோவாக நடித்து புகழ் பெற்றவர். விஜய் டீவித் தொடரான சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்து புகழ் பெற்றவர். சரவணனாக இவர் நடிப்பு கிராமங்களிலும் இவருக்கான ரசிகர்களை உருவாக்கியது. பெண் ரசிகைகள் இவருக்கு அதிகம். டீவித் தொடர்கள் மூலம் புகழ் பெற்ற பின் சினிமாவில் “நட்புண்ணா என்னன்னு தெரியுமா” படம் மூலம் ஹிரோவானார். இப்படம் மூன்று வருடங்கள் தயாரிப்பு பிரச்சனைகளில் சிக்கி மிகச் சமீபத்தில் ரிலீஸ் ஆனது.

“நட்புண்ணா என்னன்னு தெரியுமா” படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. நேற்று அவருக்கு பிறந்த நாள் பிறந்த நாளில் முதல் ஆண் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.


அபிராமி வெங்கடாச்சலம்

ஒரு மாடல், விளம்பரங்கள் மூலம் இந்தியா முழுதும் தெரிந்த முகமாக புகழ் பெற்றவர். தமிழில் களவு திரைப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக அறிமுகமானார். சினிமாவில் குறுகிய காலத்தில் நல்ல திரைப்படங்களில் வாய்ப்பு பெற்றவர்.

தல அஜித் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். தற்போது 6வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழந்துள்ளார்


சரவணன்

தமிழ் சினிமா 80களில் கதாநாயகன். அப்போதைய காலகட்டத்தில் கார்த்திக், பிரபு , ராமராஜனுடன் போட்டிபோட்ட கதாநாயகர்களில் ஒருத்தர் சரவணன். இடையில் பல காலமாக காணாமல் போயிருந்த அவர் இயக்குநர் பாலா இயக்கிய நந்தா திரைப்படத்தில் வில்லனாக ஒரு சிறு வேடத்தில் நடித்தார். பின் அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு மாமாவாக நடித்ததன் மூலம் பட்டிதொட்டிங்கும் பிரபலமானார். மீண்டும் சினிமாவில் பிஸியாகி பல படங்களில் கேரக்டர் ரோல்களில் வலம் வந்தார். தற்போது பிக்பாஸில் ஒரு போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.


வனிதா விஜயகுமார்

நடிகர் விஜய்குமார குடும்பத்து தகராறு பெண். மாணிக்கம் படத்தில் ராஜ்கிரன் ஜோடியாக ஹிரோயினாக அறிமுகமானவர். நடிப்பு வாய்ப்பு சரியாக அமையாததால் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலானவர்.
தொடர்ந்து இவரது கல்யாண வாழ்வு மற்றும் விஜய்குமார் குடும்பத்துடனும் பிரச்சனைகளில் சிக்கி பத்திரிக்கைகளில் வலம் வந்து கொண்டே இருந்தார். நடிகர் விஜயகுமாருடன் சொத்துப் பிரச்சனைகளில் போலிஸ் கோர்ட் என பெரும் பிர்ச்சனைகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கியவர். விஜயகுமார் கமலுக்கு நெருங்கிய நண்பர் என்ற வகையில் இவர் மிக முக்கிய போட்டியாளராக உள்ளார்.

சேரன்

பிக்பாஸின் மற்றொரு போட்டியாளராக களமிறங்கியுள்ளார். அறிமுகம் தேவையற்ற தமிழக பிரபலம் சேரன். சேரன் இந்தப்போட்டியில் கலந்து கொள்வது பலருக்கு ஆச்சர்யமே !.
சேரன் பாரதிக் கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குநர். ஆட்டோகிராப் படம் மூலம் நடிகராக மாறினார். தேசிய விருது பெற்ற படங்களை இயக்கியவர். நல்ல தரமான படங்கள் மட்டுமல்லாது ஆனால் அதை மக்கள் ரசிக்கும்படியும் எடுத்தவர். திருட்டு விசிடி எதிராக ஒரு அமைப்பை ஆரம்பித்தார். அதில் அவருக்கு ஏற்பட்ட வீழ்ச்சி அவரை பட இயக்கத்திலிருந்து தள்ளி வைத்தது. சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் விஷாலுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டார்.


ஷெரீன்

ஷெரீன் கன்னட மாடல். படிப்பிற்குப் பின் 16 வயதில் மாடலான இவர் அதே வருடத்தில் துருவா எனும் கன்னட படத்தில் அறிமுகமானார். அதே வருடத்தில் தமிழில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானார். தனுஷ், செல்வராகவனுக்கு திருப்புமுனையாக அமைந்த துள்ளுவதோ இளமை திரைப்படம் ஷெரினுக்கும் மிக முக்கியமான படமாக அமைந்தது.
தமிழ் ,கன்னடம் , மலையாளம் என பல மொழிகளிலும் எண்ணற்ற படங்களில் ஹிரோயினாக நடித்துள்ளார். படங்களில் வாய்ப்பு குறைந்த பின் நடிப்பிற்கு முழுதாக முழுக்கு போட்டிருந்தவர் தற்போது பிக் பாஸ் மூலம் மீண்டும் லைம் லைட்டுக்குள் வந்துள்ளார்.

மோகன் வைத்தியா

கர்னாடக பாடகர், இசைக் கலைஞர், வீணைக்கலைஞர். நாடக மேடைகளில் நடிக்க கூடியவர். டீவித் தொடர்களிலும் சினிமாக்களிலும் நடித்திருக்கிறார். புகழ்பெற்ற பாடகர் ராஜேஷ் வைத்தியாவின் சகோதரர் இவர். தொலைக்காட்சி தொடர்களில் காமெடி செய்து புகழ் பெற்றவர். அதிக அறிமுகமற்ற முகம் ஆனால் திறமை மிகுந்த ஒருவர் பிக் பஸுக்குள் நுழைந்துள்ளார். 60 வயதில் கலந்து கொள்ளும் ஒரே போட்டியாளர் இவர்


தர்ஷன் தியாகராஜா

தமிழக அறிமுகமில்லாத புதிய முகம். சாஃப்ட் வேர் துறையில் இருந்தவர் மாடலிங்கில் நுழைந்து, பல துன்பங்களுக்கு பிறகு முன்னணிக்கு வந்தவர். கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் வெளிச்ச முகம் ஏதுமற்ற போட்டியாளர் இவர்தான். ஏழ்மையான குடுமபத்திலிருந்து வந்து சினிமா ஆசையில் ஹிரோவாக ஆசைப்பட்டவர். தற்போது பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்து உள் நுழைந்திருக்கிறார்.


சாண்டி

நடன இயக்குநர். விஜய் டீவி ஜோடி நம்பர் ஒன் உட்பட டீவி நடனப்போட்டிகளில் நடன இயக்குநராக பணியாற்றி புகழ் பெற்றவர். பிக் பாஸில் ஏற்கனவே கலந்து கொண்ட காஜலுடன் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். நடன இயக்குநராக சினிமாவில் அறிமுகமானவர். ரஜினிக்கு காலா படத்தில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். கமலை மேடையில் ஆடவைத்து பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து ஷோக்களில் காமெடி செய்துள்ளார். தற்போது அவரே இந்த பிக் பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.


முகேன் ராவ்

மலேஷியன் பாடகர். மலேஷியாவில் பிறந்து வளர்ந்தவர். சுதந்திரப்பாடகராக பல ஆல்பங்களில் பாடியுள்ளார். யூடுயூப் வீடியோக்கள் இவரை புகழுக்கு அழைத்து சென்றது. தொடர்ந்து பாடலகள் எழுதி பாடி ஆலபங்கள் வெளியிட்டார். சிறிய ஏழ்மை குடும்பத்தில் பிறந்து ஒரு நல்ல இடத்தை தன் திறமையால் பெற்றவர். வெளிநாட்டில் இருந்து தமிழ் ஷோ ஒன்றில் கலந்து கொள்ளும் இரண்டாவது நபர். தமிழ் மக்களுக்கு அதிக பரிச்சியம் அற்றவர். தற்போது பிக் பாஸ் மூலம் அடியெடுத்து வைக்கிறார்.


ரேஷ்மா

டீவி சீரியல்கள் மூலமாக புகழ் பெற்றவர் ரேஷ்மா. இவர் மாடலாகவும் இருந்துள்ளார். சினிமாக்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இவர் நடித்த புஷ்பா கதாப்பாத்திரம் மிகப்பெரிய அளவில் இவரை பிரப்லப்படுத்தியது. காமெடி நடிகர் யோகிபாபுவுடன் இவருக்கு காத்லென்று ஒரு செய்தி பரவியது. செய்தியை மறுத்தவர். எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என குண்டை போட்டார். மீண்டும் கிசுகிசு பரவிய நிலையில் இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.

ஞாயிறு, 2 ஜூன், 2019

இசைராஜா


பெரிய அளவுல எழுதமுடியலைனாலும்.. சுருக்கமாய்..

முதல் படமான அன்னக்கிளிக்காக முதன் முதலாய் ரெக்கார்டிங்கிற்கு அமரும்போதே பவர் கட்..

ஆனால் அபசகுனத்தையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு அன்னக்கிளி பாடல்களை படு ஹிட்டாக்கி 1976ல் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கச் செய்தார்..

ஜி.ராமநாதன், எஸ்எம் சுப்பையா நாயுடு கேவி மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி போன்றோர் கோலேச்சிய இசை உலகில் தனியாக தனக்கென பாணியை கடைபிடித்தால்தான் சாதிக்க முடியும் என்பதை தெளிவாகவே புரிந்துகொண்டார்..

களத்தில் உள்ள எம்எஸ்வியை மீறி முன்னுக்கு வர வேண்டும் என, எழுபதுகளின் இறுதிகளில் போராடிய போது போட்ட பாடல்கள்,. அவற்றில் பறந்த மண்வாசனை, அப்பப்பா அத்தனையும் வியக்கத் தக்கவை..

அதனால்தான், இயக்குநர்கள் தேவராஜ்-மோகன் தொடர்ந்து கொடுத்த வாய்ப்பை அவர் தவறவிட வேயில்லை

நான் பேசவந்தேன் ( பாலூட்டி வளர்த்த கிளி),
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் ( உறவாடும் நெஞ்சம்), கண்ணன் ஒரு கை குழந்தை (பத்ரகாளி) என மிரட்சியான ஹிட் பாடல்களை கொடுக்க முடிந்தது

இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது..என்ன ஒரு மாஜிக்.. ஆயிரம் தடவைக்கு மேல் கேட்டிருந் தாலும். இன்றைக்கும் தினம் இரண்டு தடவையாவது...

சோளம் வெதைக்கையிலே...
ஆயிரம் மலர்களே மலருங்கள்,
நினைவோ ஒரு பறவை..விரிக்கும் அதன் சிறகை...
ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி....
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு.
அந்தப்புரத்தில் ஒரு மகராணி...
தென்னை மரத்துலு தென்றலடிக்குது (அவரின் முதல் டூயட்)
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்..என பின்னிபெடலெடுத்தார்....

பாடலுக்கான இசையை தாண்டி பின்னணி இசையி லும் கலக்கினால் இன்னும் உச்சம் தொடலாம் என்பது 1980களின் துவக்கத்தில் புரிந்துவிட்டது. அதனால்தான் அந்த ஏரியாவிலும் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

பக்கா கமர்சியல் படமான கமலின்  காக்கிச்சட்டையில் பின்னணி இசை பல இடங்களில் அதகளம் செய்யும்.. டைட்டிலியே தனி கச்சேரி செய்திருப்பார்..பிணத்தை விமானத்தில் கடத்திக்கொண்டு வந்து விமான நிலையத்திலிருந்து காரில் ஏறுகிற வரை விறுவிறுப் பான காட்சிகளின், எடிட்டிங்கிற்கு பின்னணி இசை  அவ்வளவு சவால் விட்டிருக்கும்.. படத்தின் போக்கில் தான் அதன் வீரியம் புரியம்..

முதல் மரியாதை, நாயகன், தளபதி போன்ற படங்களை போட்டுவிட்டு பக்கத்து அறையில் படுத்துக்கொண்டு இசையை மட்டும் காதில் கேட்டால் அப்படியொரு அலாதியான சுகம் கிடைக்கும்.. படம் முழுக்க இசையை அருவியாக ஓடவிட்டிருப்பார்..

திரையிசையில் தாம் மட்டுந்தான் என ஒரு நிலை உருவானபோது...80 களின் மத்தியில் தென்றலே என்னைத்தொடு. வைதேகி காத்திருந்தாள், ஆண்பாவம்..உதயகீதம். காக்கிச்சட்டை, புன்னகை மன்னன், மௌனராகம் நாயகன் என அவரின் இசை, அப்போது தொடர்ந்து தாக்கிய சுனாமிகளே

கோவைத்தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ்சில் மோகன் கதாநாயகனாக மைக் பிடித்துக்கொண்டு நின்றால் மட்டும் போதும். பாடல்களை போட்டு ஹிட்டாக்கி வெள்ளிக்காசுகளை மூட்டை மூட்டையாக கொட்டவைத்த வரலாறெல்லாம் வியப்பானவை..

டவுசர், மாடு, குடிசை வீடு காமாச்சி, மீனாச்சி என ஏதாவது இரண்டு மூன்று பெண் கேரக்டர்கள். ஹீரோவாக  ராமராஜன்.. அப்புறம் ஒரே தேவை . இவரின் இசை..எல்லாமே பாட்டுக்காக ஓடி வசூலை வாரி வாரி குவித்து கோடம்பாக்கத்தையே வியக்க வைத்ததையெல்லாம் விவரிக்க தனி புத்தகமே போடணும்..

நம்மைப் பொருத்தவரை அவரின் முதல் பத்தாண்டுகள் இன்றளவும் வியப்பாகவே உள்ளது..

ஒரே நாள் உனை நான் ( இளமை ஊஞ்சலாடுகிறது)
நானே நானா யாரோ..(அழகே உன்னை ஆராதிக்கிறேன்)
தென்னை மரத்துல தென்றல் அடிக்குது (லட்சுமி)
சின்னப்பொன்னுசேலை (மலையூர் மம்பட்டியான்)
பூமாலையே தோள் ( பகல் நிலவு)
ராஜா கைய வெச்சா (அபூர்வ சகோதர்கள்)
சுந்தரி கண்ணால் ஒரு சேதி ( தளபதி)
ஆனந்த தேன் காற்று..(மணிப்பூர் மாமியார் படம் வரவில்லை)
பூங்காற்று திரும்புமா ( முதல் மரியாதை)

1980 களின் துவக்கத்தில் பூஜை போடப்பட்ட
மணிப்பூர் மாமியார் படத்தில் ஒரு பாடல்..
ரசிகனே என் அருகில் வா என அவரே பாடி கலக்கிய பாடல் அது.. அதில் கடைசியாக இப்படி வரும்..

''தெரிந்ததை நான் கொடுக்கிறேன்
தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து
இதயங்கள் சில எதிர்க்கலாம்
எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்.
நான் காணும் உள்ளங்கள்
நல் வாழ்த்து சொல்லுங்கள்
நாளும் நாளும் இன்பம் இன்பம்.''

76 வது பிறந்த நாள் காணும் இசைஞானி இளையராஜா நீடுடி வாழ வாழ்த்துவோம்...

 மீள் பதிவு