செவ்வாய், 30 ஜூலை, 2019

நட்பின் பெருமை சொல்லும் தமிழ் திரைப்படங்கள்


 நட்பின் பெருமை சொல்லும் தமிழ் திரைப்படங்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மா, அப்பா, அண்ணன் ,தங்கை போன்ற உறவுகளை தேர்வு செய்யும் உரிமை நமக்கு இல்லை. அது ஆண்டவன் நமக்கு இயற்கையாக கொடுத்த உறவுகள். ஆனால் 'நண்பன்' என்ற உறவுமுறை நாமே தேர்வு செய்யும் வகையில் அமைந்த உறவு. பெற்றோர்களிடம், உடன் பிறந்தவர்களிடம், உறவினர்களிடம் கூற முடியாத சில விஷயங்களை கூட நண்பர்களிடம் கலந்து ஆலோசிக்கலாம். உறவுகள் உபத்திரம் செய்த பல வரலாறு உண்டு. ஆனால் உண்மையான நண்பன் கைவிட்டதாக ஒருசிறு எடுத்துக்காட்டு கூட இருக்காது. அப்படியே இருந்தாலும் அதில் போலியான நட்புதான் இருந்திருக்கும்

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நட்பை போற்றும் வகையில் கருப்பு வெள்ளை முதல் டிஜிட்டல் காலம் வரை பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. எம்ஜிஆர் சிவாஜி காலம் முதல் நட்பு நாயகன் என்று அழைக்கப்படும் சசிகுமார் வரை நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள் ஏராளம். அவற்றில் ஒருசிலவற்றை தற்போது பார்ப்போம்

கூண்டுக்கிளி எம்.ஜி.ஆர்-சிவாஜி நட்பு:
MGR-Sivaji
1954ஆம் ஆண்டு டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் எம்ஜிஆர்-சிவாஜி இணைந்து நடித்த ஒரே படம். இந்த படத்தில் எம்ஜிஆர், சிவாஜி இருவரும் நல்ல நண்பர்களாக இருப்பார்கள். பின்னர் சிவாஜி காதலித்த பெண்ணை எம்ஜிஆர் திருமணம் செய்து கொள்வார். அதனால் ஆத்திரப்படும் சிவாஜி, எம்ஜிஆரை ஒரு சூழ்நிலையில் சிறைக்கு செல்லும்படி செய்து, பின்னர் அவருடைய மனைவியை அடைய நினைப்பார். இந்த போராட்டத்தில் கடைசியில் எம்ஜிஆர் ஜெயில் இருந்து ரிலீஸ் ஆகி சிவாஜியிடம் இருந்து தனது மனைவியை காப்பாற்றுவார். முதலில் சில காட்சிகளில் நண்பர்களாக நடிக்கும்போது நிஜத்தில் நண்பர்களான எம்ஜிஆர்-சிவாஜி தங்களது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.

நினைத்தாலே இனிக்கும்: கமல்-ரஜினி:
Rajini-Kamal
கமல், ரஜினி இருவரும் இணைந்து நடித்த பல படங்களில் இதுவும் ஒன்று. கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஒரு இசைக்குழுவில் கமல், ரஜினி உள்பட ஐந்து பேர் நண்பர்களாக இருப்பார்கள். சிங்கப்பூருக்கு இசை நிகழ்ச்சிக்கு செல்லும் இந்த நண்பர்களின் ஜாலியான அரட்டை, கமலின் காதல், ரஜினியின் காமெடி என படம் முழுவதும் கலகலப்பாக சிரிக்க வைக்கும் படம். இன்று வரை சிறந்த நண்பர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் கமல்-ரஜினி இணைந்து நடித்த கடைசி தமிழ் படம் இதுதான்.

தளபதி, ரஜினி-மம்முட்டி:
Rajini-Mammooty
நட்பை கூட கற்பை போல எண்ணுவேன் என்ற வரிகள் தான் இந்த படத்தின் ஆணிவேர். துரியோதனன் - கர்ணன் நட்பை ஞாபகப்படுத்தும் அளவிற்கு ரஜினி-மம்முட்டி கேரக்டர்களை மணிரத்னம் உருவாக்கியிருப்பார். தன்னை பெற்ற தாயே நண்பரிடம் இருந்து பிரிந்து வந்துவிடு என்று அழைத்தும் நட்புக்காக உயிரையே கொடுக்க துணியும் கேரக்டரான சூர்யா என்ற கேரக்டரில் ரஜினி நடித்திருப்பார். மம்முட்டியும் தேவா என்ற கேரக்டரில் நட்பின் பெருமையை உணர்த்துவதோடு, இறுதியில் நண்பனுக்காக உயிரையும் கொடுப்பார்

புது வசந்தம்: ஆண்-பெண் தூய்மையான நட்பு:
Pudhu Vasantham
விக்ரமன் இயக்கத்தில் முரளி, ஆனந்த்பாபு, சித்தாரா உள்பட பலர் நடித்த இந்த படம் நட்பின் பெருமையை மிக ஆழமாக உணர்த்திய படம். ஆண்களுடன் ஒரு பெண் சாதாரண நட்பாக பழக முடியாது, அதில் காதல் கலந்துவிடும் என்று உறுதியாக நம்பப்பட்ட 90களில், அதை உடைக்கும் வகையில் வெளிவந்து வெற்றி பெற்ற படம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சித்தாரா பேசும் வசனங்களுக்கு கிடைத்த கைதட்டலே இதற்கு சான்று

ஃப்ரெண்ட்ஸ்: விஜய்-சூர்யா:
Friends
நேருக்கு நேர்' படத்திற்கு பின் மீண்டும் விஜய், சூர்யா இணைந்து நடித்த இந்த படத்தில் இருவரும் உயிருக்குயிரான நண்பர்களாக நடித்திருப்பார்கள். தேவயானி கேரக்டரால் இருவரின் நட்பில் ஒரு சிறு விரிசல் ஏற்பட்டாலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் உண்மையான நட்பின் பெருமையை உணர வைக்கும் வகையில் இருவரது கேரக்டர்களும் அமைக்கப்பட்டிருக்கும்

சிநேகியே, ஜோதிகா-ஷர்பானி முகர்ஜி:
Snehithiye
பொதுவாக ஆண்கள் நட்பு அளவிற்கு பெண்களின் நட்பு நீடித்து இருக்காது என்று சொல்வார்கள். இந்த படத்தில் அப்படி ஒரு வசனமே தபு பேசுவது போல் இருக்கும். ஆனால் பெண்களுக்கு இடையிலும் ஆழ்ந்த நட்பு இருக்கும் என்பதை ஜோதிகா, ஷர்பானி முகர்ஜி கேரக்டர் மூலம் இயக்குனர் பிரியதர்ஷன் உணர்த்தியிருப்பார்.

சுப்பிரமணியபுரம், சசிகுமார்-ஜெய்:
Sasikumar-Jai
நட்பு திரைப்படம் என்றால் கூப்பிடு சசிகுமாரை என்ற நிலையை உருவாக்கிய படம்தான் இது. ஜாலியாக ஊரை சுற்றி கொண்டிருக்கும் நண்பர்களுக்கு சிலர் சூழ்ச்சியால் உருவாகும் சோதனைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள், பணத்துக்காக நண்பனையே காட்டி கொடுக்கும் கேரக்டர்கள் என படம் முழுவதும் நட்பின் அடிப்படையிலேயே இந்த படம் அமைந்திருக்கும்

நண்பன், விஜய்-ஜீவா:
Nanban
ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த இந்த படமும் நட்பின் பெருமையை உணர்த்திய படங்களில் ஒன்று. இப்படி ஒரு நண்பன் நமக்கு இல்லையே என்று ஏங்க வைக்கும் அளவுக்கு விஜய்யின் பாரிவேந்தன் கேரக்டர் இந்த படத்தில் அமைந்திருக்கும். நண்பர்களுக்கு உண்மையான தேவை என்பதை விளங்க வைக்கும் அளவுக்கு இந்த கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கும்.

கண்ணெதிரே தோன்றினாள், பிரசாந்த்-கரண்:
Prashanth-Karan
நண்பனுக்காக காதலையே விட்டுக்கொடுக்கும் ஒரு அற்புதமான கேரக்டரில் பிரசாந்த் நடித்திருப்பார். நண்பன் கரணின் தங்கை என்று தெரியாமல் சிம்ரனுடன் காதல் கொள்ளும் பிரசாந்த், அவர் நண்பனின் தங்கை என்று தெரிய வருவதும் ஏற்கனவே ஒரு நண்பரால்தான் தங்கையை இழந்த கரண், தன்னால் சிம்ரனையும் இழந்துவிட கூடாது என்று காதலை தியாகம் செய்ய துணியும் கேரக்டரை பிரசாந்த் அழகாக செய்திருப்பார். அதேபோல் நண்பனுக்காக கிளைமாக்ஸில் பரிந்து பேசும் சின்னிஜெயந்த் பேசும் உணர்ச்சிகரமான வசனமும் இந்த படத்தின் ஹைலைட்

பிதாமகன், விக்ரம்-சூர்யா:
Vikram-Suriya
மன நிலை பாதிக்கப்பட்ட விக்ரம் கேரக்டருக்கும் சின்ன சின்ன திருட்டுகள் செய்யும் சூர்யாவின் கேரக்டருக்கும் ஏற்பட்ட வித்தியாசமான நட்பை இயக்குனர் பாலா உணர்த்தியிருப்பார். விக்ரமுக்கு அதிக வசனங்கள் இல்லாமல் தேசிய விருதை பெற்று தந்த இந்த படத்தின் இறுதிக்காட்சியில் நண்பன் சூர்யாவின் மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்கும் கேரக்டரில் விக்ரம் மிக அபாரமாக நடித்திருப்பார்

இதேபோல் அண்ணாமலை, 'காதல் தேசம்', பிரியமான தோழி', '5 ஸ்டார்', 'பாஸ் என்கிற பாஸ்கரன், 'நாடோடிகள்', சென்னை 600028', 'சரோஜா' போன்ற பல படங்களில் நட்பின் பெருமையை ஜாலியாகவும் சீரியஸாகவும் சொல்லப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks-indiaglitz