திங்கள், 3 பிப்ரவரி, 2020

“சைக்கோ” படக்குழு வெற்றியின் நிமித்தம் பத்திரிக்கையாளர்களை சந்திப்பு


டபுள் மீனிங் புரோடுக்டின் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் “சைக்கோ” திரைப்படத்தை இயக்குநர் மிஷ்கின் எழுதி இயக்கியிருந்தார்.
உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன்,
இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில்
நடிதிருந்தனர். கடந்த வாரம் வெளியான
இப்படம் விமர்சகர்களிடம் பெரும் அதிர்வலைகளை கிளப்பி,
ரசிகர்களிடம் பேராதரவு பெற்று வெற்றியடைந்துள்ளது.


படம் முழுதும் குவிந்திருக்கும் குறியீடுகள் கொண்ட ஆழ்ந்த திரைக்கதை, உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனனின் வித்தியாச நடிப்பு என “சைக்கோ” படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதனையடுத்து இன்று “சைக்கோ” படக்குழு வெற்றியின் நிமித்தம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் அருண்மொழிமாணிக்கம் பேசியது...

பத்திரிக்கை நண்பர்களுக்கும் மக்களுக்கும் நன்றி சொல்லவே இந்த நிகழ்வு. இந்த படத்தை உதயநிதி நினைத்திருந்தால் அவரே தயாரித்திருக்கலாம் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இப்படத்தை அழகாக வடிவமைத்து எடுத்ததற்கு மிஷ்கின் அவர்களுக்கு நன்றி. படத்தில் நடித்து பங்காற்றிய அனைவருக்கும் நன்றி.

நடிகர் பாவா செல்லத்துரை பேசியது...

எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் உயிருக்கு அதிகமான நேசிப்பையும், இந்தப்படம் நல்லா இல்லை
என சரிபாதியாக எதிரெதிர் விமர்சனம் வந்தது இந்தப்படத்திற்குதான். மிஷ்கின் படங்களில் உலகம் வேறு. அவர் திரையில் வாழ்வை சீட்டுக்கட்டை போல் பிரித்து போடுகிறார். அதில் நீங்கள் லாஜிக் தேடக்கூடாது. இந்தப்படம் மிஷ்கின் படம். அவரது சாயல் தான் படம் முழுதும் இருக்கும். அவர் கதாப்பாத்திரங்களை வித்தியாசமாக அணுகுகிறார். பாண்டியராஜன், பாக்கியராஜ் என நமக்கு தெரிந்த நடிகர்களை நாம் அவர்களை பார்க்காத கோணத்தில் காட்டுகிறார். நேரடி வாசகர்களுக்கு இந்தப்படம் நிறைய தடுமாற்றங்கள் தரும். மிஷ்கின் இப்படத்திற்குள் பல நுட்பங்களை நிகழ்த்தியிருக்கிறார். தமிழ் சினிமா மறக்க முடியாத படம் தந்த என் நண்பன் மிஷ்கின் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.


PsychoPsycho
நடிகர் சிங்கம் புலி பேசியது....

எல்லா இயக்குநருடனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லா நடிகருக்கும் இருக்கும்.
அந்த ஆசை இந்த ஆண்டு எனக்கு நிறைவேறியிருக்கிறது. மிஷ்கினை
எப்படி அணுகுவது எனும் தயக்கம் இருந்தது. ஆனால் வாய்ப்பு தேடி வந்தது. இப்போது அவரது படத்தில் நடித்தது பெருமை. என்னை எப்படி இப்படி மாற்றினார் எனத் தெரியவில்லை. அவர் சொன்னதை மட்டுமே செய்தேன். ஆனால் வித்தியாசமாக இருந்தது. இந்த ஆண்டில் எல்லோரும் ரசிக்கும் படத்தை தந்திருக்கிறார். சைக்கோவை வைத்து “கருப்பு கண்ணாடி” என படம் ஆரம்பிப்பதாக இன்று படித்தேன். இனி மிஷ்கின் பற்றி படங்கள் வரத்தான் செய்யும். அவர் வெற்றி பெற்றிருக்கிறார். நான் இந்தப்படத்தில் நடித்த அனைத்து காட்சிகளும் வந்திருந்தது.
அவ்வளவு திட்டமிடலுடன் படத்தை எடுத்துள்ளார். இந்தப்படம் நடித்தது எனக்கு பெருமை. இப்படத்தை ஆதரித்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் ஷாஜி பேசியது....

மிஷ்கினின் “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” படத்தில் நடிக்க கூப்பிட்டார். எனக்கு நடிக்க தெரியாது என்றேன். என் படத்தில் யாரும் நடிப்பதில்லை வாருங்கள் எனக் கூட்டிப்போனார். இந்தப்படம் லாஜிக் இல்லை என சொல்பவர்கள் மிஷ்கினுக்கு தெரியாமல் நடந்திருப்பாதாக நினைக்கிறார்கள் ஆனால் மிஷ்கின் படத்தில் மிஷ்கினுக்கு தெரியாமல் எதுவும் நடப்பதில்லை. இந்தப்படம் எல்லோரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்துள்ளது. அதனால் தான் இத்தனை விமர்சனம் வருகிறது. இது ஒரு பரிட்சார்த்த முயற்சி. இப்படத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் நன்றி.

பாடலாசிரியர் கபிலன் பேசியது...

“உன்ன நினைச்சு, நீங்க முடியுமா” பாடல்கள் பற்றியே நிறைய பேச முடியும். மிஷ்கின்
படங்கள் எல்லாவற்றிலும் நான் எழுதியிருக்கிறேன். அவர் ஒரு பன்முக கலைஞர். அவர் இலக்கியவாதியும் கூட, அவர் கூட பாடல் எழுதுவது எளிதாக இருக்கும். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. உதயநிதிக்கு நேரடியாக முதல்முறை எழுதியுள்ளேன்.
படம் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. எல்லோருக்கும் நன்றி.

நடிகை ரேணுகா பேசியது...

இந்தப்படத்த பற்றி சொல்ல நிறைய இருக்கு. நாம நடிக்க ஆசைப்படுகிற
இயக்குநர் பட்டியலில் மிஷ்கின் இருந்தார். ஆனா அவர் பேட்டிகள் பார்த்து அவர் மிக கண்டிப்பானவர் என நினைத்து
பயந்திருந்தேன். ஆனால்
சந்தித்ததும் நான் கண்டிப்பான ஆள் இல்லை என்றார்.
ஷீட்டிங்கில் குழந்தை மாதிரியே இருந்தார். நான் எப்போதும் கொஞ்சம் அதிகமாகவே
நடிப்பேன் ஆனால் அதை கட்டுப்படுத்தி இயல்பாக நடித்தால் போதும் என்றார். இந்தப்படம் நடித்தது மிகப்பெரும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. எல்லோருக்கும் நன்றி.

வில்லன்
நடிகர் ராஜ்குமார் பிச்சுமணி பேசியது....

எல்லாப்புகழும் இறைவனுக்கே என்பது போல் எல்லாப்புகழுமே மிஷ்கினுக்கே. நான் ஒன்றுமே செய்யவில்லை மிஷ்கின் சார் சொன்னதை மட்டுமே செய்தேன். இவ்வளவு புகழ் கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. படம் வெற்றி பெற்றுள்ளது. ஆதரித்த அனைவருக்கும் நன்றி. உதய் அண்ணா மிகப்பெரிய மனது கொண்டவர் இப்படத்தில் எனக்கு மிகப்பெரிய இடம் தந்திருக்கிறார். அவருக்கு நன்றி.

நடிகை நித்யா மேனன் பேசியது.

இந்தப்படம் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. தரமான சின்ன படங்கள் ஓடும்போதும், உண்மையான உழைப்பு ஜெயிக்கும்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். மிஷ்கின் அவரது கதாப்பாத்திரங்களை மிக அழகாக வடிவமைக்கிறார். அவரை நம்பி ஒரு நடிகர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்தப் படத்தில் நிறைய கெட்ட வார்த்தை பேசும் கேரக்டர் ஆனால்
நிஜத்தில் நான் கெட்ட வார்த்தை பேசியது கிடையாது. அவர் சொன்னதை அப்படியே செய்தேன். இந்தப்படம் நடித்தது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. உதயநிதி, மிஷ்கின் இருவரும் என்னை குழந்தை போல் பார்த்து கொண்டார்கள். இந்தப்படத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியது...

வெற்றிப்படம் தந்து மூணு வருடம் ஆகிவிட்டது. இடையில் சில படங்கள் சரியாக போகவில்லை. அதெல்லாம் மோசமான படங்கள் இல்லை சுமாரான படங்கள் தான். இந்தப்படம் வெற்றியடைந்ததில் மகிழ்ச்சி. இந்தப்படத்தில் ராஜ்குமார் தான் ஹீரோ, நான் ஏதோ கொஞ்ச நேரம் வந்து போகிறேன் அவ்வளவுதான். இந்தபடத்தில் பங்கு கொண்ட இளையராஜா சார், பி சி ஶ்ரீராம் சார் இருவருக்கும்
நன்றி.
நானும் மிஷ்கின் சாரும் முன்னாடியே படம் செய்ய வேண்டியது. அதன் பின்னால் நிறைய கதைகள் இருக்கிறது. இந்தப்படத்தில் அது
நடந்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் அனைவருமே உதவியாளர்கள்
போலவே வேலை செய்தார்கள். நடிகர் ராஜ்குமாரை முன்னால் இருந்தே தெரியும் என்னை விட இந்தப்படத்திற்காக அதிகம் உழைத்தது அவர்தான். அவருக்கு வாழ்த்துகள். நிறைய விமர்சனங்கள் வந்தது நல்லது. படம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. நித்யா மேனனுடன் நடித்தது சவாலாக இருந்தது. சைக்கோ 2 கண்டிப்பாக நடக்கும் என்று நம்புகிறேன் எல்லோருக்கும் நன்றி.

நடிகர் நரேன் பேசியது....

நான் இன்னும் படம் பார்க்கவில்லை. எல்லோரும் “இந்தப்படம் நல்லாருக்கு”, “பயங்கரமாக பயமுறுத்தியுள்ளார்” என்று சொன்னார்கள்.
அவர் படத்தில் நடிக்க போகும்போதே பயமாகத்தான் இருக்கும். இந்தபடம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.
எல்லோருக்கும் நன்றி.

இயக்குநர் மிஷ்கின் பேசியது...

சித்திரம் பேசுதடி படம் முதல் இன்று வரை என்னை நல்லபடங்களில் ஆதரித்து மற்ற படங்களில் தலையில் குட்டி அரவணைக்கும் அனைவருக்கும் நன்றி. என் எல்லா வெற்றிகளுக்கும் காரணம் இளையராஜா சார் தான். என் எல்லா வெற்றிகளையும் அவருக்கு சமர்பிக்கிறேன். அவர் பாடல்கள் தான் சினிமாவுக்கு நான் வரக்காரணம். அவருக்கு என் நன்றி. என் தாய் வயிற்றில் பிறந்த தம்பியாக உதயை நினைக்கிறேன். என் சினிமா காதலை புரிந்து கொண்டு என்னை ஆதரித்து என்னுடன் பயணம் செய்துள்ளார். என் வாழ்வில் எப்போது கேட்டாலும் அவருக்கு படம் செய்வேன். என் தங்கையாக என்னை முழுமையாக புரிந்து கொண்ட நடிகை நித்யா மேனன் அவருக்கு இந்த வெற்றி காணிக்கை. என் எல்லா படங்களிலும் அவர் நடிக்க ஆசை. ரேணுகா மேடம் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார் அவரை நிறைய கஷ்டப்படுத்தியுள்ளோம். ஆனால் அவர் ஒரு தேவதை. சிங்கம் புலி மிகச்சிறந்த மனிதர். அவரின் அனுபவங்களில் பாதி கூட எனக்கு இல்லை. ஆனால் என்னை பொறுத்து கொண்டு நடித்ததற்கு நன்றி. நான் கேட்டததற்காக நடித்த இயக்குநர் ராமுக்கு நன்றி. எப்போது கூப்பிட்டாலும் வரும் நடிகர் நரேனுக்கு நன்றி.

என் எல்லா படங்களிலும் பாடல் எழுதுபவர் கபிலன். தயாரிப்பாளர் என்னிடம் கதையே கேட்கவில்லை என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்தார். இந்தப்படம் வெற்றியடைய முக்கிய காரணம் அவர். எடிட்டர் 24 மணி நேரமும் என்னுடனேயே இருந்தார். இந்தியாவின் மிகச்சிறந்த எடிட்டராக வருவார். ராஜ்குமார் என் குழந்தை, இந்த ஐந்து வருடமாக என்னுடனேயே இருந்தவன். கண்ணியமாக சினிமாவை நேசித்தால், ஒரு நல்ல நடிகராக வர நினைத்தால், வெற்றி பெறுவாய் என்று சொன்னேன். அதைக் கேட்டு ஐந்து வருடம் என்னுடனேயே இருந்தான். நான் நினைத்ததை உடனடியாக செய்வான்.
அவனுக்கு கைமாறு செய்யவே இந்தப்படத்தை அவனுக்காக எழுதினேன். அவனுக்காக எடுத்தது தான் இந்தப்படம். இந்தப்படத்தில் அனைவர் மனதையும் கவர்ந்து விட்டான். பி சி ஶ்ரீராம் 10 நாள் என்னுடன் வேலை பார்த்தார் என் வாழ்நாள் கனவு. அவரால்
முழுதாக
வேலை செய்ய முடியவில்லை. தன்வீர் ஒளிப்பதிவாளனாக வேலை செய்தான். அருமையாக வேலை செய்துள்ளான். அதிதி கூட
எப்போதும் சண்டை தான். பயங்கரமாக சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் அவர் நடிப்பு பிரமிப்பாக இருந்தது. அவருக்கு என் வாழ்த்துகள். இந்தப்படம் பிடிக்காதவர்களுக்கும் விமர்சனம் செய்தவர்களுக்கும் நன்றி. படம் பார்த்திருக்கிறீர்கள் எல்லோரது அன்புக்கும் நன்றி.

நாகேஷ் நினைவு தினம் ஜனவரி 31 - நினைவுகள்

நாகேஷ் நினைவு தினம் ஜனவரி 31 - நினைவுகள்

மறைந்தாலும் மறக்க முடியாத நடிகர் நாகேஷ் பற்றி சுவடுகள்....!!!

தமிழ் திரையுலகில் காலத்தால் அழிக்க முடியாத நினைவுகளை ரசிகர்கள் மனதில் பதித்து சென்றவர்களில் நடிகர் நாகேஷும் ஒருவர். கதாநாயகன், நகைசுவை நடிகர், வில்லன், குணச்சித்திர வேடம், நடனம்  என பலவற்றிலும் சிறந்து விளங்கியவர் நாகேஷ்.

தன்னுடைய ஒட்டுமொத்த திறமையை வெளிப்படுத்தி  தமிழ் திரையுலகில் அனைவரையும் சிரிக்க வைத்துவிட்டு இதே தினத்தில் ரசிகர்கள் அனைவரையும் விட்டு இந்த மன்னுகளை விட்டு விண்ணுலகம் சென்றார்.

நாகேஷுக்கு முந்தைய நகைச்சுவை நடிகர்களான என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு போன்றோர் கருத்துக்களுடன் நகைச்சுவை கூறி வந்த நிலையில் முதல்முதலாக பாடிலேங்வேஜ் மூலம் நகைச்சுவையை அள்ளித்தெளித்தவர் நாகேஷ்.

இவர் நடித்த  'திருவிளையாடல்' தருமி, 'தில்லானா மோகனாம்பாள்' வாத்தி, 'காதலிக்க நேரமில்லை' செல்லப்பா, போன்ற பல கேரக்டர்களை பல தலைமுறைகள் ஞாபகம் வைத்திருக்கும் படங்களாக அமைந்தது.



மேலும் முன்னணி கதாநாயகர்களாக எம்.ஜி.ஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, அஜித்-விஜய், ஆகிய மூன்று தலைமுறை நடிகர்களுடன் 1000 படங்களுக்கும் மேல் நடித்து அசத்தியுள்ளார் .

கமல் நடித்த 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் வில்லன், 'அவ்வை சண்முகி' படத்தில் மேக்கப் மேன், போன்ற வேடங்களிலும்   ரஜினியுடன் அவர் நடித்த 'தில்லுமுல்லு',  அதிசயபிறவி, படிக்காதவன், தளபதி, ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

விஜய்யுடன் நாகேஷ் நடித்த 'பூவே உனக்காக' படத்தில் நாகேஷின் பண்பட்ட நடிப்பு அந்த படத்திற்கு பெரும் பலமாக இருந்தது. அஜித்துடன் அவர் நடித்த 'பூவெல்லாம் உன் வாசம்' படத்தில் அஜித்தின் தாத்தாவாகவும் சிவகுமாரின் தந்தையாகவும் அருமையாக நடித்திருப்பார்.

நாகேஷின் நடிப்பை முழுக்க முழுக்க வெளிப்படுத்த காரணமாக இருந்தவர் அவருடைய நண்பரும், இயக்குனர் சிகரமுமான கே.பாலசந்தர்தான் என்று கூறினால் அது மிகையாகாது. 'எதிர்நீச்சல், நீர்க்குமிழி, பாமாவிஜயம், இரு கோடுகள், தாமரை நெஞ்சம், போன்ற பல படங்கள் காலத்தால் அழியாதது.

 நடிப்பு, நடனத்தை அடுத்து நாகேஷ் ஒரு படத்தை இயக்கவும் செய்தார். இவரது மகன் ஆனந்த்பாபு முக்கிய வேடத்தில் நடித்த 'பார்த்த ஞாபகம் இல்லையோ' படம் நாகேஷ் டைரக்ட் செய்த ஒரே படம் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகேஷ் மீது கமல், ரஜினி இருவருமே மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அதனால்தானோ என்னவோ நாகேஷின் கடைசி படமாக கமலின் 'தசாவதாரம்' அமைந்தது. நாகேஷின் மீது அளவில்லா பாசம் வைத்திருந்த ரஜினி, அவருடைய இறப்பிற்கு பின் அவரை 'கோச்சடையான்' படத்தில் உயிர்த்தெழ வைத்தார்.

நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்!...

* பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்!

* பெற்றோர் கிருஷ்ணராவ் - ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் - குண்டப்பா!

* பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!

* இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!

* முதன்முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். அன்று அவரதுநடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!

* கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்தது அவரது நடிப்பின் வெளிச்சம்!

* ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால்... தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!

* இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!

* முதல் படம் 'தாமரைக்குளம்' ஷூட்டிங்கின்போது, சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்ததைச் சொன்னார் இவர். 'மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி' என்றாராம் ராதா!

* 'அபூர்வ ராகங்கள்' படத்தில் கண்ணதாசனுக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் நாகேஷ். கண்ணதாசனிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் இவர். கவிதை சொன்ன கண்ணதாசனிடம் பீஸ் கேட்பார் இவர். 'இதுதான்யா ஃபீஸ்' என்பார் அவர்!

* முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை. யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் 'நாகேஷ் பாணி' என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!

* எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!

* 'திருவிளையாடல்' படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, 'நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க' என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டாராம்!

* நகைச்சுவையில் மட்டுமல்ல; 'நீர்க் குமிழி' குணச்சித்திரம், 'சர்வர் சுந்தரம்' ஹீரோ, 'அபூர்வ சகோதரர்கள்'ல் வில்லன், 'மகளிர் மட்டும்' பிணம் என்று வெளுத்துக்கட்டியவர்!

* 'அபூர்வ ராகங்கள்' ஷூட்டிங். பாலசந்தர் ஆக்ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ், கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, 'சியர்ஸ்' என்று சொல்ல... படம் பார்த்தவர்கள் பாராட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸுக்கு இது ஒரு சாம்பிள்!

* இவரை எப்போதும் 'டேய் ராவுஜி' என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்!

* டைரக்ஷன் துறையையும் விட்டுவைக்கவில்லை இவர். 'பார்த்த ஞாபகம் இல்லையோ' இவரது டைரக்ஷனில் வெளிவந்த திரைப்படம்!

* பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், 'எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறு தானே' என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!

* 'சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்' என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி!

* 'நாகேஷ் என் வாழ்வில் நட்சத் திரமாக, மூத்த அண்ணனாக, அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக்கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்' என்று சொன்னவர் கமல்ஹாசன்!

* 'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், 'கோழி இன்னும் சாகலையாப்பா?'

* 'தசாவதாரம்' கடைசி நாள் ஷூட்டிங் குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், 'என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured-டா கமல்!'

* தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்!

* இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது - செப்டம்பர் 27, 1933-ல். மறைந்தது ஜனவரி 31, 2009-ல்!

* 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனுக்கு 'நம்மவர்' படத்துக்காக மட்டும் தேசிய விருது கிடைத்தது!