தன் இனிய குரலால் காலத்தால் அழியாத பல நல்ல பாடல்களைக் கொடுத்த அருண்மொழி.
தமிழ் சினிமாவில் 1980 / 90களில் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ் என்கிற இந்த சூப்பர் சிக்ஸ்.... முரளி, ராம்கி, சரத்குமார் , ராமராஜன், பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், ராஜ்கிரண் என்கிற இந்த இரண்டாவது வரிசை கதாநாயகர்கள்...
விஜய், அஜித், விக்ரம், பிரசாந்த், வினீத் என்கிற அடுத்த தலைமுறை நாயகர்கள் இதுபோக பிரபுதேவா, லாரன்ஸ், ஜான் பாபு என்று டான்ஸ் மாஸ்டர்கள்... இவர்கள் அத்தனை பேருக்கும் பின்னணி பாடி இருக்கும் பாடகர்கள் யார் யார் என்று கேட்டால் உடனே வரும் பதில் இதுவாகத்தான் இருக்கும்...
"லிஸ்ட்டு கொஞ்சம் பெருசா இருக்கு... எஸ்.பி.பி.. அப்பறம் மனோ ரெண்டு பேர் தான்" என்று.. உண்மையில் இந்த அத்தனை கதாநாயகர்களுக்கும் பாடிய மூன்றாவது பாடகர் ஒருவர் இருக்கிறார்..
கெமிக்கல் கம்பெனியில் சூப்பர்வைசராக இருந்த அந்த தஞ்சாவூர்க்கார இளைஞனுக்கு பண்டிட் ஹரி பிரசாத் சௌராசியா என்றால் ஆதர்ஷம்.. ஒரு நாள் அவரது நண்பரும் இசை மேதை சி.ஆர். சுப்பராமனின் மகனுமாகிய சித்தார் கண்ணன் தன்னுடைய சித்தப்பா இசையமைக்கும் ஒரு படத்தின் பாடல் பதிவுக்கு அந்த இளைஞனை அழைத்துச் சென்றார்.. அன்று வாசிக்க வேண்டிய புல்லாங்குழல் கலைஞர் வராததால் அங்கு ஒரே பரபரப்பு... "என்னோட வந்திருக்கிற நண்பர் கூட Flute நல்லா வாசிப்பாரு.. அவரை வாசிக்க சொல்லவா? " என்று திரு. கண்ணன் கேட்க அடுத்த 5வது நிமிடத்தில் ஓ.கே செய்தனர் படத்தின் இசையமைப்பாளர்களான இரட்டையர்கள் சங்கர் - கணேஷ். அந்த இளைஞனின் சினிமா பிரவேசமும் 1981ல் பிரேம் நசீர் நடித்து வெளியான "சங்கர்ஷம்" என்கிற அந்த மலையாளப் படத்தின் மூலம் நிகழ்ந்தது..
அடுத்து சில வருடங்களிலேயே வரிசையாக அர்ஜுனன் மாஸ்டர், ஜான்சன் மாஸ்டர், தெட்சிணாமூர்த்தி, கே.வி.மஹாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், நௌஷாத் அலி என்று அன்றைய மலையாளத் திரை உலகில் இருந்த அனைத்து இசை அமைப்பாளர்களிடமும் வாசித்து விட்டார் அந்த இளைஞர்.. சொல்ல மறந்து விட்டேன்.. அவர் பெயர் நெப்போலியன்..
ஒரு நாள் அவருக்கு இளையராஜாவிடம் இருந்து அழைப்பு வந்தது.. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கும் "என் ஜீவன் பாடுது" படத்தில் "ஒரே முறை உன் தரிசனம்" என்ற பாடலுக்கு புல்லாங்குழல் வாசிக்க.. அது தான் இளையராஜாவின் இசையில் அவர் வாசித்த முதல் பாடல்.. அதைத் தொடர்ந்து அவரது இசையில் "சொல்லத் துடிக்குது மனசு" படத்தில் வரும் "பூவே செம்பூவே உன் வாசம் வரும்" பாடல்.....
இசைக் கலைஞர்களுக்கு வாசிக்க வேண்டியவற்றை மேற்கத்திய இசைக் குறிப்புகளாய் எழுதும் வழக்கமுடைய இளையராஜாவிடம் அவரது குறிப்புகளை புரிந்துகொண்டு அதை மற்ற இசைக் கலைஞர்களுக்கும் நெப்போலியன் விளக்க ஆரம்பித்தது ராஜாவுக்கு பிடித்துப் போக, அவரது ஆஸ்தான வித்வான்களான சதானந்தம் (Guitar), பிஜு மேனுவல் (Key Board), பிரபாகர் (Violin), ஜெயச்சா (Percussion), புருஷோத்தமன் (Drums / Rythm Programmer) வரிசையில் நெப்போலியன் (Flute) என்ற பெயரும் இடம்பிடித்தது.. அன்று முதல் இன்று வரை இளையராஜாவின் அத்தனை படத்திலும் கேட்கும் குழலோசை நெப்போலியனுடையது தான்..
ஒரு நாள் வாய்ஸ் ரூமில் மற்றொரு இசைக்கலைஞருக்கு வாசிக்க வேண்டிய ஸ்வரத்தை இவர் பாடிக்காட்டியதை ஹெட்போனில் கேட்ட ராஜா அடுத்த நாளே "நெப்போலியன் இந்த பாட்ட நீங்களே பாடிடுங்க" என்று ஒரு இன்ப அதிர்ச்சி அளித்தார்.. தமிழ் சினிமாவில் இன்னுமொரு புதிய பின்னணிப் பாடகர் உருவான நாள் அது..
தான் அறிமுகம் செய்கிற கலைஞர்களுக்கு பெயர் சூட்டும் இளையராஜா (மனோ (நாகூர் பாபு), மின்மினி (மினி ஜோசப்), தீபன் (சக்கரவர்த்தி ராஜரத்தினம்)) நெப்போலியனை (ரமணரின் அருண்மொழித் திரட்டு என்ற நூலின் பெயரில் இருந்து) அருண்மொழி என்று அறிமுகப் படுத்தினார்.. அவர் பாடி வெளியான முதல் பாடல் "சூரசம்ஹாரம்" படத்தில் "நானென்பது நீயல்லவோ தேவதேவி".. அதே படத்தில் "நீலக்குயிலே" என்று இன்னொரு பாடலும் பாடி இருப்பார்..
80 களின் பிற்பகுதியிலும் 90 களிலும் தமிழ் சினிமா உலகில் தன் மென்மையான குரலால் முதல் பத்தியில் நான் சொன்ன அத்தனை ஹீரோக்களுக்கும் பாடிய அந்த மூன்றாவது பாடகர் இந்த அருண்மொழி தான்..
பி.பி.எஸ், ஏ.எம்.ராஜா போன்ற மென்மையான குரல் அருண்மொழியுடையது.. அதிகம் சங்கதிகளோ பிருகாக்களோ இருக்காது. ஆனால் மேல் ஸ்தாயியில் பாடும்போது கூட கொஞ்சமும் பிசிரடிக்காது... குறிப்பாக அவரது பிரபலமான "வெள்ளிக் கொலுசு மணி" பாடலில் கூட நீண்ட பல்லவி கொஞ்சமும் மூச்சு முட்டாமலும் சரணத்தில் "உள்ள போயி நீதான் பாடுகின்ற பாட்டு" என்னும் வரியில் சுதி விலகாமலும் இனிமையாகப் பாடி இருப்பார்.
இதில் வினோதம் என்ன என்றால் எந்த நடிகருக்கு பாடினாலும் அது அருண்மொழியின் குரல் என்று தனியாகத் தெரியும்.. உதாரணத்திற்கு :
கமலுக்கு - நானென்பது நீயல்லவோ (சூரசம்ஹாரம்)
ரஜினிக்கு - ஆத்துல அன்னக்கிளி (வீரா)
விஜயகாந்துக்கு - வாசக் கறிவேப்பிலையே (சிறையில் பூத்த சின்னமலர்)
சத்யராஜுக்கு - மனசுக்குள்ள நாயன சத்தம் (மல்லுவேட்டி மைனர்)
பிரபுவுக்கு - தென்றல் வரும் முன்னே முன்னே ( தர்மசீலன்)
கார்த்திக்கிற்கு - வேண்டினா வேண்டும் வரம் ( கட்டப் பஞ்சாயத்து)
பார்த்திபனுக்கு - வராது வந்த நாயகன் (தாலாட்டு பாடவா)
ராமராஜனுக்கு - வெள்ளி கொலுசு மணி (பொங்கி வரும் காவேரி)
விஜய்க்கு - அரும்பும் தளிரே (சந்திரலேகா)
விக்ரமிற்கு - முத்தம்மா முத்து முத்து (தந்து விட்டேன் என்னை )
ராம்கிக்கு - ஆதாமும் ஏவாளும் போல (மருதுபாண்டி)
பாக்யராஜுக்கு - வந்தாள் வந்தாள் ராஜகுமாரி (ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி)
பிரபுதேவாவுக்கு - மஸ்தானா மஸ்தானா (ராசையா)
அதனால் தான் அதிகம் பிரபலமாகாத அல்லது பெயரே தெரியாத ஹீரோக்களுக்கு கூட நிரைய ஹிட் பாடல்கள் பாடி இருக்கிறார்.. உதாரணத்திற்கு..
மல்லிகமொட்டு மனசத்தொட்டு (சக்திவேல் - செல்வா (டாக்டர் ராஜசேகரின் தம்பி)
புன்னை வனப் பூங்குயிலே (செவ்வந்தி - சந்தனபாண்டியன் (நடிகை ஸ்ரீஜாவின் கணவர்)
உன்னைக் காணாமல் நான் ஏது (கவிதை பாடும் அலைகள் - ராஜ்மோஹன்)
ஏ ராசாத்தி பூச்சூட்டி (என் உயிர்த் தோழன் - தென்னவன்)
என் வீட்டு ஜன்னல் எட்டி (ராமன் அப்துல்லா - விக்னேஷ்)
பார்த்திபன் - இளையராஜா இணைந்த முதல் படமான பொண்டாட்டி தேவை படத்தில் "ஆராரோ பாட்டுப் பாட" என்று ஒரு பாடல் அருண்மொழி பாடி இருப்பார்.. இந்த ஜோடி மீண்டும் இணைந்த "தாலட்டுப் பாடவா" படத்தில் எல்லா பாடல்களும் ஹிட்டடிக்க , அவரது குரல் தனக்கு கச்சிதமாக பொருந்துவதாக உணர்ந்த பார்த்திபன் அதிலிருந்து தனது அடுத்து வந்த படங்களில் எல்லாம் பாட வைத்திருப்பார்... உன்னை வாழ்த்திப் பாடுகிறேன், அழகி, புள்ளகுட்டிக்காரன், இவன் என்று வரிசையாக இளையராஜா படங்களில் மட்டுமன்றி மற்ற இசையமைப்பாளர்களின் படங்களிலும் அருண்மொழியையே பாட வைத்திருப்பார்.. இந்த ஜோடியின் சூப்பர்ஹிட்டுகள் சில :
ஆராரோ பாட்டுப் பாட (பொண்டாட்டி தேவை)
வராது வந்த நாயகன் (தாலாட்டுப் பாடவா)
வெண்ணிலவுக்கு வானத்த புடிக்கலயா(தாலாட்டுப் பாடவா)
மெட்டி மெட்டி வெள்ளி மெட்டி (புள்ளகுட்டிக்காரன்)
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா (நீ வருவாய் என )
தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு (பாரதி கண்ணம்மா)
கம்மாக்கரை ஓரமா (சொர்ணமுகி)
ஒரு சுந்தரி வந்தாளாம் (அழகி)
நாட்டுப்புறப் பாட்டு படத்தில் இவர் பாடிய "ஒத்த ரூவா தாரேன்" தாறுமாறு ஹிட்டாக அமைய, அதிலிருந்து சலக்கு சலக்கு (சூரியவம்சம்), சாந்து பொட்டும் (வீரத் தாலாட்டு), எத்தன மணிக்கு (கரிசக்காடுப் பூவே), ஏளா அழகம்மா (திருநெல்வேலி), கஞ்சி கலயந்தான் (கும்மிப் பாட்டு), செம்பருத்திப்பூ (விண்ணுக்கும் மண்ணுக்கும்) என வரிசையாக நாடுப்புறக் குத்துப் பாடல்களே வரிசை கட்டின.
இயல்பிலேயே மெலடிப் பிரியரான இவர் இதனால் பாடுவதையே நிறுத்தி விட்டார்.
நான் அறிந்த வரையில் ஒரு இசைக்கலைஞர் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருப்பது தமிழ் சினிமாவில் இவர் தான்..
பாடுவது மட்டுமின்றி இவர் ஒரு பாடலாசிரியரும் கூட.. கிட்டத்தட்ட 20 பாடல்கள் எழுதி இருக்கிறார்... வித்யாசாகர் இசையில் "வாசகி வாசகி" (அரசியல்), கார்த்திக் ராஜாவின் இசையில் "ஜாலி ஜாலி லைப் (உல்லாசம்) மற்றும் எனக்கொரு மகன் பிறப்பான் படத்தின் அனைத்துப் பாடல்களும் இவர் எழுதியது தான்..
அதுமட்டுமல்ல, ராஜாவின் பார்வையிலே, நாட்டுப்புறப் பாட்டு உள்ளிட்ட சில படங்களுக்கு இவரை பின்னணி இசை (ரீ-ரெக்கார்டிங்) அமைக்க வைத்திருக்கிறார் இளையராஜா..
தன் இனிய குரலால் காலத்தால் அழியாத பல நல்ல பாடல்களைக் கொடுத்த அருண்மொழியை மீண்டும் தமிழ் சினிமா சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.... அருண்மொழி சார் மீண்டும் வருக... நல்ல நல்ல பாடல்களைத் தருக!!!
Thanks_krishronline