சனி, 17 டிசம்பர், 2016

இசைஞானியுடன் ஜெயச்சாவும், கடசிங்காரியும்!

இசைஞானியுடன் ஜெயச்சாவும், கடசிங்காரியும்!

திரு.ஜெயச்சா சிங்காரம் இசைஞானியுடன் 'அன்னக்கிளி' தொடங்கி இப்போது வரை 20க்கும் மேல் உள்ள இசைக்கருவிகளை
வாசிக்கும் இசை கலைஞர். இவரது முழுப்பெயர் ஜெயச்சந்திரன் இவரது தந்தை திரு.சிங்காரம் அவர்கள், ஜெயச்சா அவர்கள் தனது
12 வது வயதில் ஜால்ரா, சலங்கை போன்ற இசைக்கருவிகளை தமிழ்திரைக்கு வாசித்திருக்கிறார், 1970களில் இவர் கற்றுக்கொண்ட இசைக்கருவி கிட்டார்..  ஆனால் கடசிங்காரி வாசிப்பதில் இவருக்கு நிகர் இவரே, கடசிங்காரிக்கு கிராக்கி அதிகரிக்கவே, இதை வாசிக்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதின் காரணமாகவே இதை தேர்வு செய்து கொண்டார்.

'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தில் "பருவமே புதிய பாடல்" பாடலுக்கு தொடையில் தாளம் வாசித்தவர் இருவர், அந்த இருவரில் இவர் ஒருவர்

அது சரி, கடம் என்றால் இசைக்கருவி, அது என்ன கட சிங்காரி?

கடசிங்காரியை வடிவமைத்தது இவரது தந்தை சிங்காரம் அவர்கள். கடத்தின் மேல் ஒரு மேளத்தை வைத்து அதில் எழும்பும் இசையானது கடத்தின் உள்ளே சென்று வெளியே வரும், பொதுவாகவே இசைக்கருவிகளின் நடுப்பகுதியில் பொட்டுவைப்பது வழக்கம், அதன் மைய பகுதியில்
பொட்டுவைத்ததன் காரணமாக இந்த இசைக்கருவியை பெண்பால் பெயர் வைத்து "கடசிங்காரி" என்று பெயர் சூட்டினார்கள்.

கடசிங்காரியை பொருத்தவரை தாலாட்டு பாடல்களுக்கும், கிராமிய பாடலுக்கும் மட்டுமே பயன்படுத்தினார்கள் அன்றைய இசையமப்பாளர்களான ராமனாத அய்யர், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் இடம்பெற்ற "மாட்டு வண்டிய பூட்டிக்கிட்டு" பாடலுக்கும், கே.வி மகாதேவன் அவர்கள்கா ட்டுக்குள்ளே திருவிழா போன்ற பாடலுக்கும் பயன்படுத்தினார்கள்.

இவர்களுக்குன் பின் இசைஞானியின் ஆளுமையின் கீழ் வந்தது இந்த கடசிங்காரி. இசைஞானி தாலாட்டு பாடலுக்கு மட்டுமல்ல கிராமியம், மேற்கத்திய முறையிலும் கடசிங்காரியை பயன்படுத்தினார். இளையராஜாவை பொருத்தவரை 'அன்னக்கிளி' முதல் இப்போது வரை இந்த கருவியுடன் காதல் தொடர்கிறது...

அப்படி ராஜாவின் இசையின் கடசிங்காரி இடம்பெற்ற சில பாடலை தொடுக்கிறேன்...

'கிழக்கு வாசல்' படத்தில் இடம்பெற்ற "பச்சமல பூவு"
'நாயகன்' படத்தில் இடம்பெற்ற "தென்பாண்டி சீமையிலே"

'சகலகலா வல்லவன்' படத்தில் இடம்பெற்ற கட்டவண்டி கட்டவண்டி

'முதல் மரியாதை படத்தில் இடம்பெற்ற "ராசாவே உன்ன நம்பி"

'மண்வாசனை' படத்தில் இடம்பெற்ற "பொத்தி வச்ச மல்லிக மொட்டு"
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...

இது மட்டுமல்ல பின்னணி இசைக்கும் இந்த கருவியை அபாராமாக பயன்படுத்தியவர் இசைஞானி மட்டுமே.

இதில் கூடுதலான விஷயம் என்னவென்றால் 'நாயகன்' படத்தின் காட்சிகளும், கதாபாத்திரங்களும் 1960 காலகட்டத்தை தழுவி எடுத்த திரைப்படம் என்பதால் அந்த காலக்கட்டத்திற்கு ஏற்ப இசைக்கருவிகளை வைத்து இசையமைத்தார் இசைஞானி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக