திங்கள், 8 அக்டோபர், 2018

நடிகர் ராமராஜன்


ராமராஜன் சிறந்த நடிகரா இல்லையா என்பது வேறு விஷயம்.

 அவருக்கு டான்ஸ் ஆட வருமா, வராதா என்பதும் வேறு விஷயம்... ஆனால் அவரது படங்கள், குறிப்பாக இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து கொடுத்த அத்தனை படங்களுமே மக்களின் மனதை மயக்கிப் போட்ட மாயாஜாலப் படங்கள் என்பது மட்டும் உண்மை.

மன பாரமா.. மனக் கஷ்டமா.. சந்தோஷமாக கிராமத்து நினைவுகளில் மூழ்க வேண்டுமா.. எடுத்துப் போட்டு ஒரே ஒரு ராமராஜன் பாட்டைக் கேட்டுப் பாருங்கள்.. முடிஞ்சா கரகாட்டக்காரன் படத்தைப் பாருங்கள்.. அத்தனையும் நொடிப் பொழுதில் பறந்து போவதை உணர்வீர்கள்.

சரி வாங்க ராமராஜனைப் பத்தி ஒரு ரவுண்டு பார்த்துவிட்டு வருவோம்...


மக்கள் நாயகனான மதுரைக்கார ராசா...
ஆரம்பத்தில், யாருமே பெரிதாக அறிந்திராத இயக்குநராக வலம் வந்தவர்தான் ராமராஜன்.

ஆனால் மக்கள் நாயகன் என்ற இமேஜ் அவர் மீது குறுகிய காலத்திற்குள் வந்து சேர்ந்தது பெரிய சாதனைதான்.

முன்னணி நடிகர்களைப் பின்னுக்குத் தள்ளி...
நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி நடிகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்ததும் அந்தக் காலத்தில் மிகப் பெரிய சாதனைதான்.
கோடி வாங்கிய முதல் நடிகர்
தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகப் பெரிய சாதனை இதுதான்.

ஒரு நடிகர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியது ராமராஜன் காலத்தில்தான் முதல் முறையாக நடந்தது.

 அந்த சாதனைக்குரியவர் ராமராஜன்தான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட அப்போது அந்த அளவுக்கு சம்பளம் வாங்கவில்லை என்று அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது.


கிராமப்புற வசூல் ராஜா
ராமராஜன் படங்கள் அன்று மிகப் பெரிய ஹிட் படங்களாகவே அமைந்தன.

குறிப்பாக கிராமப்புறங்களில் ராமராஜன் படங்கள்தான் சூப்பர் ஹிட்டாக ஓடி வசூலில் சாதனை படைத்தன.

 இந்த சாதனையை வேறு எந்த நடிகரும் நிகழ்த்தினரா என்பது தெரியவில்லை - எம்.ஜி.ஆரை இந்த லிஸ்ட்டில் சேர்க்க முடியாது.. காரணம், அவர் தனி சகாப்தம்.
பாட்டும் - பட்டையைக் கிளப்பிய சட்டையும்
ராமராஜன் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது இளையாராஜவும், ராமராஜன் போட்ட கலர் கலரான சட்டைகளும்தான்.

 பாட்டுக்காகவே ஓடிய படங்கள் அவருடையது... அதேபோல அவர் போட்ட பச்சை, மஞ்சள், சிவப்பு, கருப்பு, நீலம் என விதம் விதமான கலர் சட்டைகளும் அப்போது டிரெண்ட் செட்டாக அமைந்தன.


'காடி' காஸ்ட்யூமாக இருந்தாலும் கலெக்ஷன் சூப்பரப்பு...
ராமராஜன் படங்களில் அவர் போட்ட டிரஸ்கள் படு காமெடியாக தெரிந்தாலும், ஓவர் மேக்கப் வெகுவாக நக்கல் செய்யப்பட்டாலும் கிராமப்புற மக்களை மட்டுமல்லாமல் நகர்ப்புறத்து மக்களிடமும் கிராமப்புறத்தின் தாக்கத்தை கொண்டு வந்து சேர்த்தது நிச்சயம் சாதனையான விஷயம்தான்.


கெட்ட வாடையே இல்லாத படம்
அதை விட ராமராஜன் படங்களின் ஸ்பெஷாலிட்டி என்று சொல்ல வேண்டுமானால், கெட்ட பழக்கங்களை, கெட்ட நடத்தைகளைக் கற்றுக் கொடுக்கும் படங்களாக இல்லாமல், நல்ல விஷயங்களைச் சொல்லும் பாடமாக அமைந்திருக்கின்றன என்பதுதான்.

 உண்மையிலேயே இது பாராட்ட வேண்டிய விஷயம்.. இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று ராமராஜனை தாராளமாக சொல்லலாம்.
கரகாட்ட ராஜா...
டான்ஸே ஆடத் தெரியாதவர் ராமராஜன் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் ஒரு கால் தேர்நத கரகாட்டக்கார நிபுணராக நடித்த படம்தான் கரகாட்டக்காரன்.

அந்தப் படம் தமிழ் சினிமாவின் வரலாற்றில் இடம் பெற்ற படம்.

படத்தின் வசனம், கேரக்டர்களின் அணிவகுப்பு, கதை சொன்ன விதம், அருமையான நடிப்பு .. முத்தாய்ப்பாக ராஜா இசை.

எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சிரிப்புக் களஞ்சியம் இது.. தில்லானா மோகனாம்பாள் போல.
கிராமங்களுக்கு கெளரவம் கொடுத்தவர்
எல்லாவற்றையும் விட ராமராஜனை நாம் பாராட்டியே ஆக வேண்டிய விஷயம் என்ன தெரியுமா.. கிராமங்களுக்கும், அந்த கிராமத்து மக்களின் வெள்ளந்தி வாழ்க்கைக்கும், அதன் பசுமையான சூழலுக்கும் கொடுத்த கெளரவம்தான்.

 ராமராஜன் நடித்துக் கொண்டிருந்த காலம் வரை கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் பல படங்கள் கிராமங்களைத்தான் சுற்றிச் சுற்றி வந்தன.

 கிராமத்து வாழ்க்கையை மிக அழகாக வெளிக்காட்டிய பல படங்களை நம் மக்கள் அந்தக் காலகட்டத்தில் காண முடிந்தது.


கை கொடுக்காத அரசியல்
ராமராஜனுக்கு சினிமா எந்த அளவுக்கு தூக்கி விட்டதோ அதை விடவேகமாக இறக்கி விட்டது இந்த அரசியல்தான்.

 புகழேணியின் உச்சியில் இருந்த அவர் அதிமுகவுக்குப் போனார்.

போன வேகத்தில் எம்.பியானார். அது அவரது வாழ்க்கையில் நிச்சயம் சாதனைதான். ஆனால் அதே வேகத்தி்ல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் மாஜி எம்.பியானார்.

 சினிமாவில் அவரது காலம் எப்படி குறுகியதாக இருந்ததோ, அதேபோல அரசியல் வாழ்க்கையும் குறுகியதாகப் போனது.
நிச்சயம் மறக்க முடியாது
ராமராஜனின் திரையுலக வாழ்க்கையும், அரசியல் வாழ்க்கையும் மிகக் குறுகியதாக இருந்தாலும் கூட எங்க ஊரு பாட்டுக்காரன்... கிராமத்து மின்னல்... செண்பகமே செண்பகமே... எங்க ஊரு காவக்காரன்... ராசாவே உன்னை நம்பி... பொங்கி வரும் காவேரி... கரகாட்டக்காரன்.. வில்லுப்பாட்டுக்காரன்... ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்.. இதுபோன்ற படங்களை நினைக்கும்போது கண்டிப்பாக ராமராஜனும் ஒரு சாதனையாளர்தான் என்று எண்ணவே தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக