எம்.ஜி.ஆர் 100 : கருணாநிதி நட்பு, கிரிக்கெட் ஆர்வம், படப்பிடிப்புதளப் பண்பு... 100 சுவாரஸ்ய தகவல்கள்!
1. எம்.ஜி.ஆர் பொதுவாக பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறமாட்டார். அதற்கு ஒரு சுவையான காரணம் உண்டு. அவரது 'நாடோடிமன்னன்' திரைப்படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன் அவருக்கு பதிவுத்தபால் ஒன்று வந்தது. அதை, கையெழுத்திட்டுப் பெற்றுக்கொண்டு பிரித்துப்பார்த்தால் அதில் ஒன்றுமில்லை. வெற்றுக்காகிதம் மட்டுமே இருந்தது. பின்பு அதை மறந்துவிட்டுப் படவேலைகளில் மூழ்கினார். பின்னாளில், 'நாடோடிமன்னன்' வெற்றிபெற்று திரையரங்குகளில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தது. பிரித்துப்பார்த்தால் முந்தைய பதிவுத்தபால் அனுப்பியவரின் சார்பாக அனுப்பப்பட்டிருந்தது. அதில், 'நாடோடிமன்னன்' கதை என்னுடையது. அதை, உங்களுக்கு பல மாதங்களுக்கு முன் அனுப்பிவைத்தேன். ஆனால், படத்தில் என்பெயர் இல்லை. அதனால் அதற்கு எனக்குரிய நஷ்ட ஈட்டை வழங்கவேண்டும் என்றிருந்தது. அதிர்ந்துபோனார் எம்.ஜி.ஆர். பிறகு, அதற்கு தம் வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பிவிட்டாலும், “இப்படியெல்லாம் கூடவா செய்வார்கள்" என ஆச்சர்யமாகி அதன்பின் சந்தேகம்படும்படியான பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறுவதைத் தவிர்த்துக்கொண்டார்.
2. எம்.ஜி.ஆருக்கு திரையுலகில் 'சின்னவர்' என்ற பெயர். அதென்ன சின்னவர்? எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தைப் பொறுப்பெடுத்து நடத்திவந்த அவரது சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி, நாடக உலகில் பெரியவர் என அழைக்கப்பட்டதால்... எம்.ஜி.ஆரை, 'சின்னவர்' என்பார்கள்.
3. லாயிட்ஸ் ரோட்டில் உள்ள தாய்வீட்டில் தம் அண்ணனுடன் கூட்டுக்குடித்தனமாக இருந்த எம்.ஜி.ஆர்., தன் துணைவியார் சதானந்தவதி இறந்த துக்கத்தால் பின் சில மாதங்களில் ராமாவரம் தோட்டத்துக்கு வரநேர்ந்தது. அங்கும் மினி தியேட்டர், பெரிய நீச்சல்குளம் எனப் பல வசதிகளையும் ஏற்படுத்தியிருந்தார்.
4. எம்.ஜி.ஆரை யாரும் கணிக்கமுடியாது. அப்படி இருப்பதையே அவர் விரும்பினார். முதல்வராக இருந்தபோது ஒருமுறை அப்போதைய கவர்னர் தடுக்கிவிழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. அவரைப் பார்க்க கிளம்பியவர் என்ன நினைத்தாரோ அவருக்கு நெருக்கமான ஓர் இயக்குநரின் படத்துக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்.
5. எம்.ஜி.ஆர்., ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவர் விரும்பிவாங்கும் பொருட்களின் பட்டியலில் கேமரா தவறாமல் இடம்பெறும். வீட்டில் பலவகை கேமராக்களைச் சேர்த்து வைத்திருந்தார். இறுதிநாட்களில் அவற்றை தமக்குப் பிடித்தமானவர்களுக்குப் பரிசாக தந்து மகிழ்ந்தார்.
6. எம்.ஜி.ஆரை புகைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. புகைப்படக்காரர் தன்னை எந்தக் கோணத்தில் எடுக்கிறார். ரிசல்ட் எப்படி வரும் என்பதை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர். அவருக்கு தெரியாமல் யாரும் அவரை புகைப்படம் எடுத்துவிட முடியாது.
7. தனக்கு யாரும் மாலை அணிவித்து புகைப்படம் எடுக்கும்போது ஜாக்கிரதையாக தன் முகம் வரும்படியும், அதேசமயம் மாலை போடுபவர் பரபரப்பில் தன் தொப்பியை கழற்றிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடனும் மாலை போடுபவரின் கையை அழுந்த பிடித்துக்கொள்வார் எம்.ஜி.ஆர். புகைப்படம் எடுத்தபின்புதான் அவருடைய கையை விடுவிப்பார். இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கை முத்தண்ணா அவர்.
8. பொதுவாக பத்திரிகைகளுக்கு பிரத்யேக பேட்டிக்கு ஒப்புக்கொள்ளும்போது அவர்களிடம் ஒரு நிபந்தனை விதிப்பார். பிரசுரமாவதற்கு முன் எழுதப்பட்ட பேட்டியை தனக்கு ஒருமுறை காட்டியாகவேண்டும் என்று. அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே பேட்டி. பிரசுரமானபின் கட்டுரையாளர் கருத்தால் தேவையற்ற சிக்கல்கள் வந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை அது. ஒரு கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் தன் இமேஜை அந்தளவுக்கு ஜாக்கிரதையாகக் கையாண்டார் எம்.ஜி.ஆர்.
9. சுமார் அரைநூற்றாண்டு காலம் தமிழகத்தைக் கட்டிப்போட்டிருந்த எம்.ஜி.ஆர் வார்த்தையின் முழுவிவரம்... மருதுார் கோபாலமேனன் ராமசந்திரன்.
10. திரையுலகில் தான் பங்கேற்ற அத்தனை துறைகளிலும் சாதனை புரிந்த எம்.ஜி.ஆருக்கு தம் இறுதிக்காலம் வரை ஒரு குறை இருந்தது. அது, கல்கி எழுதிய பொன்னியின்செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது. கிட்டத்தட்ட 3 முறை அதற்கான ஆயத்தப்பணிகளைத் தொடக்கி அது ஆரம்பநிலையிலேயே நின்றுபோனது. படம் எடுத்தால், அதில் தான் வல்லத்தரசனாகவும், கதாநாயகியாக குந்தவி கேரக்டரில் பிரபல டைரக்டர் சுப்ரமணியத்தின் மகளும் நாட்டியக்கலைஞருமான பத்மா சுப்ரமணியத்தை நடிக்கவைக்கவும் திட்டமிட்டார் எம்.ஜி.ஆர். இறுதிவரை அது நிறைவேறவில்லை.
11. முன்னணி நடிகராக எம்.ஜி.ஆர் இருந்தாலும் பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் அதிக எண்ணிக்கையில் நடிக்கவில்லை என்பது ஆச்சர்யமான செய்தி. ஜெமினிக்கு, 'ஒளிவிளக்கு'; ஏ.வி.எம்முக்கு, 'அன்பே வா'; விஜயா வாஹினிக்கு, 'எங்க வீட்டுப்பிள்ளை' என தலா ஒரு படம் மட்டுமே நடித்தார். மற்றவை எல்லாம் சிறு தயாரிப்பாளர்கள் மூலம் வெளிவந்தவை. திரைத்துறையில் ஓரிரு நிறுவனங்களே ஏதேச்சதிகாரம் செய்யாமல் பலரும் இந்தத் துறைக்குள் நுழையவேண்டும் என்பதே அவரின் இந்த முடிவுக்குக் காரணம்.
12. எம்.ஜி.ஆரின் அதிக படங்களில் நடித்த கதாநாயகிகள் ஜெயலலிதா, சரோஜாதேவி.
13. எம்.ஜி.ஆர்., காபி, டீ அருந்துவதில்லை. மீன் வகையான உணவுகளுக்கு அவர் தீவிர ரசிகர். படப்பிடிப்பின் இடைவேளையில் ஜீரக தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.
14. எம்.ஜி.ஆருக்கு தன் தாய் மீது அளவற்ற அன்பு உண்டு என்பது உ லகறிந்த விஷயம். தான் சார்ந்த தொடர்பான முக்கிய முடிவுகளை தன் தாயின் படத்துக்கு முன் நின்று சொல்லியே முடிவெடுப்பார். அம்மாதிரியான சந்தர்ப்பங்களில் ஏதேனும் அசம்பாவிதமாக நடந்தால் மட்டுமே எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கிவிடுவார்.
15. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கடும்மோதலில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் இந்த இருகட்சிகளும் இணைய முயற்சி செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர் அப்போது முதல்வர் என்பது கூடுதல் செய்தி. ஒடிசா முதல்வர் பிஜீ பட்நாயக் இந்த இணைப்பு முயற்சியை மேற்கொண்டார். முயற்சி வெற்றிபெற்றால் கட்சியின் தலைவராக கருணாநிதியும் முதல்வராக எம்.ஜி.ஆரும் தொடர்வதாக நிபந்தனை விதிக்கப்பட்டது. காலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்து வீட்டுக்குச் சென்ற எம்.ஜி.ஆர் மாலையில் இந்த முயற்சியை கைவிட்டுவிட்டார். யாராலும் கணிக்க முடியாத தலைவர் எம்.ஜி.ஆர்.
16. எம்.ஜி.ஆரின் அரிய வெள்ளை நிறத்துக்குக் காரணம் அவர் தங்கபஷ்பம் சாப்பிடுவதே என்ற வதந்தி உலவி வந்தது. சென்னையில் நடந்த ஆணழகன் போட்டி ஒன்றில் இதற்குப் பதிலளித்த எம்.ஜி.ஆர், “தங்க பஷ்பத்தை குண்டுமுனையில் தொட்டு அதை பாலிலோ, நெய்யிலோ கலந்து சாப்பிடுவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். அப்படி குண்டூசி முனையைவிடக் கூடுதலாகச் சாப்பிட்டுவிட்டால் மரணம் நேர்ந்துவிடும். இந்த விஷப் பரீட்சையில் யாராவது இறங்குவார்களா'' என்றார்.
17. எம்.ஜி.ஆர் இறுதிவரை தொடர்ந்த பழக்கம் உடற்பயிற்சி. படப்பிடிப்பு முடிந்து நள்ளிரவு எத்தனை மணிநேரத்துக்கு வீடு திரும்பினாலும் விடியற்காலை 5 மணிக்கு எழுந்துவிடுவார். தொடர்ந்து ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்தபின்னரே அடுத்த வேலையைத் தொடங்குவார். படப்பிடிப்புக்காக வெளியிடங்களுக்குச் செல்லும்போது பெரும்பாலும் போதிய உடற்பயிற்சிக் கருவிகளை தன்னுடன் எடுத்துச்செல்வார். உடற்பயிற்சிக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளித்தவர் அவர்.
18. தமிழின் முதல் கேவா டெக்னாலஜி கலர் படம், எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்.'
19. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்... காங்கிரஸ் அரசு, மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, மத்திய அரசு தனக்களித்த பத்மஸ்ரீ விருதை திருப்பியளித்தார் எம்.ஜி.ஆர்.
20. எம்.ஜி.ஆருக்கு பிடித்த தேசியத்தலைவர் சுபாஷ் சந்திரபோஸ். தான் அரசியலுக்கு வரக்காரணமான தலைவர் சுபாஷ் என்று குறிப்பிட்டிருந்தார் ஒருபேட்டியில்.
21. எம்.ஜி.ஆருக்கு நினைவுத்திறன் அதிகம். ஒரே ஒருமுறை அறிமுகமானாலும் அவரைப்பற்றி பல ஆண்டுகள் ஆனப்பின்னரும் சரியாக நினைவில் வைத்திருப்பார்.
22. 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு அண்ணாவிடமிருந்து அழைப்பு வந்தது. சில காரணங்களால் நடிக்க மனம்ஒப்பாத எம்.ஜி.ஆர்., கணேசன் என்ற நாடக நடிகரை அதில் நடிக்கவைக்க பரிந்துரைத்தார். நாடகம் வெற்றிபெற்றது. கணேசன் என்ற அந்த நாடக நடிகர் சிவாஜி கணேசன் என்ற பெரும் நடிகரானார்.
23. சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்தபோதும் தொடர்ந்து தனது எம்.ஜி.ஆர் நாடக மன்றம் மூலம் நாடகங்களை நடத்திவந்தார் எம்.ஜி.ஆர். அவருடைய 'இடிந்தகோயில்', 'இன்பக்கனவு' நாடகங்கள் தமிழகத்தில் நடக்காத ஊர்கள் இல்லை.
24. தொலைக்காட்சி தமிழகத்தில் வராத காலகட்டத்திலேயே ''தொலைக்காட்சி என்ற ஒன்று விரைவில் வரும். இது சினிமாவின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும்'' என்று 1972-லிலேயே பேசிய தீர்க்கதரசி எம்.ஜி.ஆர்.
25. எம்.ஜி.ஆரை, பலருக்கும் வெறும் சினிமா நடிகர் என்ற அளவில்தான் தெரியும். ஆனால் சினிமாவின் அத்தனை தொழில்நுட்பங்களையும் கரைத்துக் குடித்தவர் அவர். எத்தனை குழப்பமான காட்சிகளையும் சில நிமிடங்களில் கோர்வையாக எடிட் செய்துவிடுவதில் சாமர்த்தியக்காரர்.
26. எம்.ஜி.ஆருக்கு பிடித்த இயக்குநர் ராஜா சாண்டோ.
27. 1960-களில் எம்.ஜி.ஆர் மக்களுக்காக தன் சொந்த செலவில் இலவச மருத்துவமனையை நடத்தியிருக்கிறார். ஆனால் நடைமுறை சிக்கல்களால் அதை தொடரமுடியாமல் போனது.
28. எம்.ஜி.ஆர் பத்திரிகையாளர் என்பது பலரும் அறியாத தகவல். 'சமநீதி' என்ற பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்து பல ஆண்டுகள் அதை நடத்தினார்.
29. மறைந்து 30 ஆண்டுகள் ஆன பின்னாலும் இன்னும் தொடர்ந்து பத்திரிகைகள் வருவது எம்.ஜி.ஆர் ஒருவருக்கே.
30. ''வயதானபின்னும் கதாநாயகனாக நடிக்கிறீர்களே'' என பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கேள்வி எழுந்தபோது, ''20 வயதுள்ள ஒருவர் 50 வயதுக்காரராக நடிப்பதை கைதட்டி வரவேற்கிறீர்கள் அல்லவா...அதேபோல் 50-ஐக் கடந்த நான் 20 வயது இளைஞனாக நடிப்பதை ஏன் வரவேற்கக்கூடாது. அதுதானே நடிப்பு..நீங்கள் திரையில் பார்க்கும்போது இளைஞனா தோன்றுகிறேனா... இல்லையா என்பதுதான் என் கேள்வி“ என்றார் பொட்டிலடித்தாற்போல்.
31. தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து கட்சி தொடங்கியபின் 1972 அக்டோபர் 29-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில்தான் முதன்முறையாக, ''எம்.ஜி.ஆர் இனி புரட்சி நடிகர் அல்ல, புரட்சித்தலைவர்'' என்றார் கே.ஏ.கிருஷ்ணசாமி.
32. கட்சி தொடங்கி ஆட்சியில் அமர்ந்தபின் எத்தனை மாச்சர்யங்களுக்கிடையிலும் சட்டமன்றம் நடைபெறும் நாட்களில் கருணாநிதியை நலம் விசாரிப்பார் எம்.ஜி.ஆர்.
33. பெரும்பாலும் தன் எதிரில் சீனியர்களைத் தவிர மற்றவர்களை கருணாநிதி என்று பெயர் சொல்லிக் குறிப்பிடுவதை விரும்பமாட்டார் எம்.ஜி.ஆர்.
34. எம்.ஜி.ஆருக்குப் பிடிக்காத ஒரு விஷயம் குதிரையேற்றமும் விமானப்பயணமும். தவிர்க்கமுடியாமல்தான் சில படங்களில் அவ்வாறு நடித்திருப்பார். விமானப்பயணமும் அப்படியே.
35. தம் இறுதிக்காலத்தில் தம் பால்ய கால சினிமா நண்பர்களை வரவழைத்துச் சந்தித்துப்பேசினார் எம்.ஜி.ஆர்.
36. எம்.ஜி.ஆருக்கு உடலுறுதியைப்போலவே மனஉறுதி அதிகம். அமெரிக்காவில் அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் கானுக்கு பாராட்டுவிழா நடந்தது. அதில் பேசிய கானு, “எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாராவது இந்த நோய்க்கு ஆளாகியிருந்தால் மீண்டிருக்க வாய்ப்பு இல்லை. அத்தனை மன உறுதியுடன் அவர் போராடி மீண்டார்” என்றார்.
37. 'திருடாதே', 'தாய் சொல்லை தட்டாதே' என தனது படங்களின் தலைப்புகள்கூட பாசிட்டிவ் ஆக மக்களுக்கு ஒரு கருத்தைச் சொல்வதுபோல் இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் எம்.ஜி.ஆர்.
38. எம்.ஜி.ஆருக்கு ராசி எண் 7. பிறந்தது 1917. கதாநாயகனாக நடித்த முதல் படம் வெளியான ஆண்டு 1947. முதல்முறை எம்.எல்.ஏ-வானது 1967. ஆட்சியைப் பிடித்தது 1977. மரணமடைந்தது 1987. அவருடைய காரின் எண் 4777.
39. பொதுவாக தன் உடல்நிலை குறித்த தகவல்களை ரசகியமாக வைத்துக்கொள்வார் எம்.ஜி.ஆர். தேவைப்பட்டாலொழிய மருத்துவமனைக்குச் செல்லமாட்டார் அவர். பெரும்பாலும் மருத்துவ உபகரணங்களை வீட்டுக்கே வரவழைத்து சிகிச்சை பெற்றுக்கொள்வார்.
40. 'அடிமைப்பெண்' படத்துக்காக ஜெய்ப்பூர் சென்றபோது விளையாட்டாக வித்தியாசமான தொப்பி ஒன்றை அணிந்து நண்பர்களிடம் காட்டினார். தொப்பியில் அவரது தோற்றம் இளமையாக தெரிவதாக நெருக்கமான சிலர் கூறவே அதை வழக்கமாக்கிக்கொண்டார்.
எம்.ஜி.ஆரின் புகைப்படத்தொகுப்பை காண இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...
41. எம்.ஜி.ஆரின் புரட் சி அரசியல் பயணம் தொடங்கிய இடம் திருக்கழுக்குன்றம். அங்குதான் முதன்முதலாக கட்சியின் தலைவர்களிடம் கணக்குக்கேட்டு வெளிப்படையாகப் பேசினார். இந்த விவகாரம்தான் எம்.ஜி.ஆர் - கருணாநிதி இடையே முரண் பெரிதாகி... எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கும் அளவுக்குக் காரணமானது.
42. ஒருமுறை சிவகாசிக்குச் சென்று சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். தூத்துக்குடி அருகே அவரது காரை அடையாளங்கண்டுகொண்டு பெண்கள் சூழந்தனர். அவர்களுடைய பலரது கைகளில் கைக்குழந்தைகள். ''காலையில் சாப்பிட்டீர்களா'' என்றார். “இல்லை. காலையில் சமைக்க நேரமில்லை. அதுதான் மாலையில் சென்று ஒரே வேளையாக சமைத்துச் சாப்பிடுவோம்” என்றனர். அதிர்ந்தார் எம்.ஜி.ஆர். சென்னை திரும்பியதும் அன்றே தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சத்துணவுத் திட்டம் பிறந்தது. பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பட்டினி போடாமல் உண்ண வழிவகுத்தது.
43. எம்.ஜி.ஆர் முப்பிறவி கண்டார் என்பார்கள். சீர்காழியில் நாடகம் ஒன்று நடந்தபோது 150 பவுண்டுக்கும் அதிகமான எடைகொண்ட குண்டுமணி தவறுதலாக அவர் மீது விழுந்து கால் உடைந்தது முதற்பிறவி. 1967 தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் தன் வீட்டில் வைத்து நடிகர் எம்.ஆர்.ராதாவினால் சுடப்பட்டது இரண்டாவது பிறவி. 1984-ல் மூளையில் கட்டி ஏற்பட்டு பக்கவாதம் வரை சென்று உயிர் மீண்டது மூன்றாவது பிறவி.
44. எம்.ஜி.ஆர் புகழின் உச்சியில் இருந்துபோது வெளியான, 'பாசம்' படத்தில் இறந்துவிடுவதுபோல் காட்சி வந்தது. அதைக் காண முடியாமல் பலர் அந்தப் படத்தைப் பார்க்கவி்ல்லை. படம் தோல்வியைத் தழுவியது.
45. எம்.ஜி.ஆருக்கு அவரது ரசிகர்கள் செல்லமாக வைத்த பெயர் 'வாத்தியார்.'
46. நடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு அளப்பரியது. சங்கம் தொடங்கியபோது அதன் துணைத்தலைவராக இருந்த அவர், 3 முறை அதன் செயலாளராகவும், ஒருமுறை பொதுச்செயலாளராகவும், இருமுறை தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
47. 'நாடோடி மன்னன்' பட வெற்றிக்குப்பின், அதன் அடுத்த பாகமாக 'நாடோடியின் மகன்' என்ற பெயரில் படம் ஒன்று தொடங்கப்பட்டது. பின்னர் ஏனோ அது நின்றுவிட்டது.
48. 'சதி லீலாவதி' முதல் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வரை எம்.ஜி.ஆர் நடித்த மொத்த படங்கள் 136. இதுதவிர சில படங்கள் நிறைவுபெறாமல் கைவிடப்பட்டன. இவற்றில் 'அவசர போலீஸ் 100', 'நல்லதை நாடு கேட்கும்' போன்ற படங்கள் பின்னாளில் வெளியாகின.
49. எம்.ஜி.ஆரின் படங்களில் பெண்களின் எதிர்ப்பைச் சம்பாதித்த ஒரே படம் 'இதயக்கனி'.
50. ஜனாதிபதி விருது பெற்ற தமிழின் முதல்படம் எம்.ஜி.ஆர் நடித்த 'மலைக்கள்ளன்'.
51. எம்.ஜி.ஆர் படங்களில் மிகக் குறைந்த நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம் 'தேர்த்திருவிழா'. 16 நாட்களில் எடுக்கப்பட்ட படம் இது.
52. எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த தயாரிப்பாளர் மற்றும் நண்பர் சாண்டோ சின்னப்பா. எம்.ஜி.ஆர் - ஜானகி திருமணத்துக்குச் சாட்சிக் கையெழுத்திட்டது இவர்தான்.
53. எம்.ஜி.ஆர் தனக்கு நெருக்கமானவர்களை 'முதலாளி' என்றுதான் அழைப்பார்.
54. எம்.ஜி.ஆருக்குப் பிடித்த விளையாட்டு சீட்டு. நெருக்கமானவர்களுடன் விளையாடும்போது தோற்பவர்கள் தங்கள் முகத்தை தலையணையால் கொஞ்ச நேரம் பொத்திக்கொள்ள வேண்டும். இதுதான் அவரது பந்தயம்.
55. பொங்கல் மற்றும் நல்ல நாட்களில் தன்னிடம் வேலை பார்ப்பவர்கள், நண்பர்களை வரவழைத்துத் தன் கையில் இருப்பதை வாரி வழங்குவார் எம்.ஜி.ஆர்.
56. தமிழின் வெளிநாட்டு தொழில்நுட்பமான ஸ்டிக்கர் போஸ்டரை அறிமுகப்படுத்தியது எம்.ஜி.ஆர்தான். 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் வெளியானபோது எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து வெளியேறியிருந்தார். இதனால் உசுவா பட போஸ்டர்கள் எங்கு ஒட்டினாலும் கிழிக்கப்படும் என்ற தகவல் பரவியது. ஆளும் கட்சியினரின் இந்தச் சதியை முறியடிக்க நடிகர் பாண்டுவை வெளிநாட்டுக்கு அனுப்பி சாதாரணமாகக் கிழித்துவிட முடியாத வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர் தொழில்நுட்பத்தைப் பயிலச்செய்து அந்த இயந்திரத்தையும் தருவித்தார். ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை கிழிக்கமுடியாமல் ஆளும் கட்சியினர் திணறினர். 'உலகம் சுற்றும் வாலிபன்' சக்கை போடு போட்டது.
57. தொப்பி, கண்ணாடி, முழங்கை அளவு சட்டை என்று வெளியில் தோன்றினாலும் தன்னை வீட்டில் சந்திப்பவர்கள் முன் கைலி, முண்டா பனியனுடன்தான் காட்சியளிப்பார் எம்.ஜி.ஆர்.
58. தன்னிடம் வேலை செய்பவர்கள் தவறு செய்தால் அதைப் பொறுத்துக்கொள்ளமாட்டார். அவர்களுக்கு உடனடியாக சில நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவிடும். ஆனால் சம்பளம் தவறாமல் அவர்களுக்குச் சென்றுவிடும். இது தவறு செய்தவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி அடுத்தமுறை தவறு நேராமல் பார்த்துக்கொள்வர்.
59. எம்.ஜி.ஆர் தன் வாழ்க்கை வரலாற்றை வெவ்வெறு காலகட்டங்களில் இரண்டு பத்திரிகைகளில் எழுதினார். ('ஆனந்த விகடன்', 'சமநீதி') தவிர்க்கவியாத காரணங்களால் எதுவும் முற்றுப்பெறவில்லை.
60. தனது இரண்டாவது மனைவி சதானந்தவதியின் நினைவுநாள் அன்று எம்.ஜி.ஆர் விரதம் மேற்கொள்வார்.
எம்.ஜி.ஆரின் புகைப்படத்தொகுப்பை காண இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...
61. எம்.ஜி.ஆர் ஒரு தீவிர படிப்பாளி என்பது பலருக்கும் தெரியாத தகவல். தன் வீட்டின் கீழறையில் எம்.ஜி.ஆர் பெரிய நுாலகத்தை நிறுவியிருந்தார். அதில் உலகத்தலைவர்கள் மற்றும் அனைத்து அரியவகை புத்தகங்களையும் சேமித்துவைத்திருந்தார்.
62. எம்.ஜி.ஆரின் முதல் நாடக குரு காளி என்.ரத்தினம். பின்னர் நாடக ஆசிரியர் எம்.கந்தசாமி.
63. எம்.ஜி.ஆர் நாடகத்தில் போட்ட முதல்வேஷம், 'லவகுசா' என்னும் நாடகத்தில் போட்ட குஷன் வேஷம். அப்போது அவருக்கு வயது 6.
64. எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதற்நாடகம் 'மனோகரா'... மனோகரன் வேடம்.
65. அண்ணாவின் பேச்சாலும் எழுத்தாலும் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்., தி.மு.க-வில் சேர்ந்த ஆண்டு 1952 . அவரை அண்ணாவிடம் அறிமுகப்படுத்தியவர் நடிகமணி டி.வி.நாராயணசாமி.
66. வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டால் எம்.ஜி.ஆர் தன் தாயாரை வணங்கிவிட்டுத்தான் செல்வார். அவர் மறைவுக்குப்பின், அவருக்கு தன் வீட்டிலேயே கோயில் ஒன்றை எழுப்பினார்.
67. நடிகர் சங்கம் மூலம் ஒரு நடிப்புப் பயிற்சிக் கல்லுாரியைத் தொடங்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆருக்கு இறுதிக்காலம் வரை மனிதில் இருந்த ஓர் ஆசை... அது இறுதிவரை நிறைவேறாதது துரதிர்ஷ்டம்.
68. தான் நடித்த படங்களில் எம்.ஜி.ஆருக்கு மிகப் பிடித்த படம், 'பெற்றால்தான் பிள்ளையா'.. வழக்கமான பாணியிலிருந்து விலகி தான் நடித்த இந்தப் படம் தனக்கு மிகவும் பிடித்தபடம் என்று பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.
69. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு தன் வழக்கமான அடையாளங்கள் எதுவும் தெரியாதபடி தன் பிளைமவுத் காரை தானே ஓட்டியபடி கடற்கரைச் சாலையில் பயணிப்பது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
69. நடிகராக இருந்தபோது தான் வசித்த ராமாவரம் வீட்டிலேயே முதல்வரானபின்னும் தொடர்ந்து வசித்தார் எம்.ஜி.ஆர். சம்பிரதாயத்துக்குக்கூட அந்த வீட்டை மெருகேற்றாமல் எளிமையாக அப்படியே வைத்துக்கொண்டார்.
70. முதல்வரானபின் ஒருசமயம் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் வந்தது எம்.ஜி.ஆருக்கு. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். ஆனால், எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களாலும், மத்திய அரசிடமிருந்து வந்த நெருக்கடியினாலும் அந்த ஆர்வத்தைக் கைவிட்டார். அவர் கைவிட்ட அந்தப் படம், 'உன்னைவிடமாட்டேன்'. அதன் இசையமைப்பாளர் இளையராஜா.
71. தன் கலையுலக வாரிசு என்று எம்.ஜி.ஆராலேயே அறிவிக்கபட்ட நடிகர் பாக்யராஜ்.
72. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை 'அம்மு' என்றே அழைப்பார்.
73. எம்.ஜி.ஆர் அறிமுகமான, 'சதிலீலாவதி' படத்தின் கதாசிரியர் எஸ்.எஸ்.வாசன்.
74. தனது திருமண நாளில் எந்த வெளிநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதைத் தவிர்த்துவிடுவார். அன்றைய தினம் மனைவி ஜானகி மற்றும் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களை மட்டுமே சந்திப்பார். அன்று ஒருநாள் மட்டுமே கைகள் மற்றும் கழுத்தில் நகை அணிந்து காணப்படுவார்.
75. எம்.ஜி.ஆர் வரலாற்று அறிவு நிரம்பியவர். முதல்வராக இருந்த ஒருசமயம், தஞ்சை அரண்மனையைப் பார்வையிட்டார். அப்போது அதிகாரிகளிடம் ''இங்கு சுரங்கப்பாதை ஏதேனும் இருக்கிறதா'' என விசாரித்தார். அதிகாரிகள் மறுத்தனர். ஆனால் எம்.ஜி.ஆர் விடாப்பியடியாக தர்பார் ஹால் அருகே ஓர் இடத்தைக் காட்டித் தோண்டச்செய்தார். ஆச்சர்யம் அங்கு சுரங்கப்பாதை இருந்தது. எம்.ஜி.ஆரின் ஞானத்தை அறிந்து விக்கித்தனர் அதிகாரிகள்.
76. எம்.ஜி.ஆர் தீவிரமான ஒரு கிரிக்கெட் ஆர்வலர் என்பது பலரும் அறியாத தகவல். முக்கியப் போட்டிகள் நடக்கும் சமயம் படப்பிடிப்புக்கு மறக்காமல் டிரான்சிஸ்டர் ஒன்றை எடுத்துச்செல்வார். ஓய்வின்போது அதை காதில் வைத்து ரன்னிங் கமென்ட்ரி கேட்டுக்கொண்டிருப்பார்.
77. படப்பிடிப்புக்காக வெளிமாநிலங்களுக்குச் செல்லும்போது கடைசி நாளன்று அனைவருக்கும் அங்கு பர்சேஸ் செய்ய தன்சொந்த பணத்தைத் தருவார்.
78. படப்பிடிப்பின்போது உணவுவகைகள் தனக்குக் கொடுக்கப்பட்டதுபோலவே யூனிட்டின் கடைநிலை ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்துவார்.
79. சட்டமன்றத்தில் ஒருமுறை துரைமுருகன் எம்.ஜி.ஆரை தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டேபோக ஒரு கட்டத்தில், மயக்கமாகி விழப்போனார். எம்.ஜி.ஆர் ஓடோடிச்சென்று அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தார். சங்கடப்பட்டுப்போனார் துரைமுருகன்.
80. படிக்கும் காலத்தில் முன்னாள் அமைச்சர் வளர்ப்பு மகன்போல உடனிருந்தார் துரைமுருகன். அவருடைய படிப்புச்செலவு உள்ளிட்ட செலவுகளை அப்போது கவனித்தவர் எம்.ஜி.ஆர். கல்லூரியின் பாதுகாவலர் என்ற முறையில் எம்.ஜி.ஆரே பலமுறை துரைமுருகனுக்கு கையெழுத்திட்டுள்ளார்.
81. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடிக்கச்சென்றபோதுதான் கருணாநிதியுடன் அறிமுகம் ஏற்பட்டது எம்.ஜி.ஆருக்கு.
82. 'எங்கள் தங்கம்' படத்தில் 'நான் அளவோடு ரசிப்பவன்' என்ற பாடலில் அடுத்த வரிக்காக காத்திருந்த கவிஞருக்கு, 'எதையும் அளவின்றி கொடுப்பவன்' என அடுத்த வரியை எடுத்துக்கொடுத்தவர் கருணாநிதி. அதே படத்தில் 'நான் செத்துப்பிழைச்சவன்டா' பாடலில் கருணாநிதியின் கல்லக்குடி போராட்டம் இடம்பெறும்வகையில், “ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலைவைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து தமிழ் பெயரை காத்த கூட்டம் இது“ என்ற கலைஞரின் புகழ்பாடும் வரிகளை இடம்பெறச்செய்தார் எம்.ஜி.ஆர்.
83. எம்.ஜி.ஆருக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்ததை சட்டமன்றத்தில் விவாதப்பொருளாக்கிக் கடுமையாக எதிர்த்துப்பேசினார் தி.மு.க உறுப்பினர் துரைமுருகன். தேநீர் இடைவேளையில் அவரை அழைத்த கருணாநிதி, “எம்.ஜி.ஆரை ஆயிரம் விஷயங்களுக்காக நான் எதிரக்கலாம். விமர்சிக்கலாம். ஆனால் நீ அதைச் செய்வது ஏற்புடையதல்ல. நன்றி மறக்காதே“ என கடிந்துகொண்டார். கூடவே “எம்.ஜி.ஆர் மீது நமக்கு ஆயிரம் மாச்சர்யங்கள் இருந்தாலும் அவரது வள்ளல் குணத்தினை நாம் குறைசொல்ல முடியாது. அந்த ஒரு விஷயத்துக்காக அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை ஏற்கலாம்” என்று அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
85. நாத்திக கட்சியான தி.மு.க-வில், அண்ணாவின் காலத்திலேயே எம்.ஜி.ஆர் தன்னை நாத்திகவாதியாக காட்டிக்கொண்டதில்லை. அதற்காக தீவிர ஆத்திகர் என்று சொல்லிவிட முடியாது. தனக்கு மேலே ஒரு சக்தி ஒன்று உண்டு என்பதில் அவர் திடமாக இருந்தார்.
86. திருப்பதிக்கும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கும் 2 முறை சென்றிருக்கிறார். மதுரையில், 'நாடோடி மன்னன்' படத்துக்காக தனக்கு அளிக்கப்பட்ட தங்க வாளை பின்னாளில் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தினார். எம்.ஜி.ஆரின் படுக்கை அறையில் எப்போதும் ஒரு இயேசு சிலை இருந்தது.
87. மதுரையில் எம்.ஜி.ஆர் மன்ற மாநாட்டில், ''எதிர்க்கட்சிகளிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள அ.தி.மு.க-வினர் எல்லோரும் கையில் கத்தி வைத்துக்கொள்ளவேண்டும்'' என்று அவர் பேசிய பேச்சு அரசியலை பரபரப்பாக்கியது அப்போது.
88. தமிழ்ப்பட உலகின் சாதனை என்னவென்று ஒருமுறை கேள்வி எழுப்பபட்டபோது, “தமிழ் நடிகர்களைக் கொண்டு இந்தியில் 'சந்திரலேகா' என்ற படத்தை எடுத்து உலக மக்கள் அனைவரின் உதடுகளிலும் உள்ளங்களிலும் இடம்பெறச்செய்த எஸ்.எஸ்.வாசனின் செயல்'' என்று குறிப்பிட்டார்.
89. அரசியலில் தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு பெரும்பாலும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பமாட்டார் எம்.ஜி.ஆர். ''எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்'' என்பார்.
90. சினிமாவின் ஆரம்பகாலங்கில் எம்.ஜி.ஆர் இயற்கையாகவே அழுது நடித்தார். ஆனால், பிற்காலத்தில் லைட்டிங் அதிகம் பயன்படுத்தப்பட்டபோது அதனால் ஏற்பட்ட வெப்பத்தால் கண்ணீர் காய்ந்துவிடுவதால் கிளிசரின் பயன்படுத்த ஆரம்பித்தார்.
91. ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த நடிகர் என்.டி.ராமாராவ், 'தன் குரு... வழிகாட்டி' என்று எம்.ஜி.ஆரைத்தான் குறிப்பிட்டார்.
92. கட்சியைவிட்டு சிலர் வெளியேறிய சமயம், ''கட்சியினர் அனைவரும் அ.தி.மு.க கொடியை பச்சைக்குத்திக்கொள்ள வேண்டும்'' என்று கருத்துத் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். முதல் ஆளாக தானும் குத்திக்கொண்டார். ஆனால் அடுத்த சில நாட்களில் அது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்த அதை கைவிட்டார் எம்.ஜி.ஆர்.
93. எம்.ஜி.ஆர் - சிவாஜி இணைந்து நடித்த ஒரே திரைப்படம் 'கூண்டுக்கிளி'. படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் - சிவாஜி ரசிகர்களிடையே எழுந்த எதிர்ப்பால் அதன்பிறகு சேர்ந்து நடிப்பதை இருவருமே தவிர்த்தனர்.
94. எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு, அவருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்கியது.
95. தன் இறப்புக்குப் பின் தான் வாழ்ந்த ராமாவரம் தோட்ட இல்லத்தை காதுகேளாதோர் பள்ளிக்கு உயில் எழுதிவைத்தார் எம்.ஜி.ஆர்.
96. அண்ணாவின் கதை வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி', 'நல்லவன் வாழ்வான்' ஆகியவை.
97. எம்.ஜி.ஆர் தன் வீட்டில் கரடிக்குட்டி ஒன்றையும் பெரிய சிங்கம் ஒன்றையும் வளர்த்தார். வீட்டில் சிகிச்சையின்போது கரடி எதிர்பாராதவிதமாக இறந்தது. பின்னாளில் வனவிலங்கு ஆர்வலர்கள் பிரச்னை எழுப்பியதால் சிங்கத்தையும் வனவிலங்கு சரணாலயத்துக்குக் கொடுத்துவிட்டார். ஆனால், அங்கு இறந்தபின் அதைத் திரும்பப்பெற்று தன் வீட்டில் அறிவியல்முறையில் பாதுகாத்துவைத்திருந்தார். இன்றும் அது தி.நகர் நினைவு இல்லத்தில் பாடம் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
98. எம்.ஜி.ஆரின் 100-வது படம் 'ஒளிவிளக்கு'. அதை தயாரித்தது ஜெமினி எஸ்.எஸ்.வாசன்.
99. படப்பிடிப்புத் தளங்களில் அந்நாளில் தன்னுடன் பணிபுரிந்த கலைஞர்கள் யாரையாவது கண்டால் ஓடிப்போய் நலம் விசாரிப்பார். மேலும் அவருடைய குறைகளைக் கேட்டறிவார்.
100. படப்பிடிப்பின்போது தனக்கு நொறுக்குத்தீனி சாப்பிட விரும்பினால் தனியே சாப்பிட விரும்பமாட்டார். தளத்தில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்து தருவார்.
நன்றி - விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக