சர்ச்சைக்குரிய 'பத்மாவத்' படம் எப்படி?
சர்ச்சைக்குரிய பத்மாவத் (பத்மாவதி) திரைப்படம் நாளை (ஜன., 25) உலகம் முழுக்க வெளியாக உள்ள நிலையில், படத்தின் சிறப்பு காட்சி பத்திரிகையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. பத்மாவத் படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது. தினமலர் இணையதளத்தின் விமர்சனம்:
பத்மாவத் - விமர்சனம்
நடிப்பு - ஷாகித் கபூர், ரண்வீர் சிங், தீபிகா படுகோனே
இயக்கம் - சஞ்சய் லீலா பன்சாலி
இசை - சஞ்சய் லீலா பன்சாலி, சஞ்சித் பல்ஹாரா
தயாரிப்பு - பன்சாலி புரொடக்ஷன்ஸ், வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ்
நேரம் - 2 மணி 43 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5
ஹிந்தியில் வெளியாகும் 'பத்மாவத்', தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகிறது. பலருக்கும் தெரிந்த வரலாற்றுக் கதை என்பதால் படத்தைப் பார்ப்பதில், புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது.
இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, பிரமாண்ட திரையில், காட்சி வடிவில், பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 3 டி-யில் பார்க்கும் போது பிரமிப்பு இன்னும் அதிகம் வெளிப்படுகிறது. பெரும்பாலான காட்சிகள் இருட்டிலேயே நடப்பதால், அவை மங்கலாகவே தெரிகின்றன. கண்களை அதிகமாக விரித்து, வலிக்க, வலிக்க பார்க்க வேண்டி உள்ளது. இதைத் தவிர்த்திருந்தால் பிரமிப்பின் வீரியம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
ராஜபுத்திர வம்சத்தை பெருமைப்படுத்தி இருக்கிறது படம். படத்தின் டைட்டில் கார்டிலேயே மாலிக் முகம்மது ஜெய்சியின் கவிதையை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
சிங்கள தேசத்திலிருந்து முத்துக்களை எடுத்து வருவதற்காகச் சென்ற மேவார் மன்னன் ராவல் ரத்தன் சிங் (ஷாகித் கபூர்), அங்கு சிங்கள நாட்டு இளவரசி பத்மாவதியின் (தீபிகா படுகோனே) அழகில் மயங்குகிறான். பத்மாவதியும் ராவல் ரத்தன் மீது காதல் கொள்ள, இருவருக்கும் திருமணம் நடக்கிறது. மன்னனும், அரசியும் நெருக்கமாக இருந்ததை, திருட்டுத் தனமாகப் பார்த்தால், அரசியின் வேண்டுகோள்படி நாடு கடத்தப்படுகிறான் மேவார் நாட்டு ராஜகுரு,
அந்த நேரத்தில், மாமனார் டில்லி சுல்தானைக் கொன்று அரியணையைக் கைப்பற்றிய அலாவுதீன் கில்ஜியிடம் (ரண்வீர் சிங்) சென்று பத்மாவதியின் அழகைப் பற்றிக் கூறுகிறார் ராஜகுரு. பெண்கள் மீது அதிக மோகம் கொண்ட அலாவுதீன் பத்மாவதியைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆசையில் மேவார் மீது போர் தொடுக்கக் கிளம்புகிறான்.
ஆறு மாதம் காத்திருந்தும் ராஜபுத்திர வீரர்களின் எதிர்ப்பால் வெற்றி பெற முடியாமல், சமாதானம் செல்கிறான் அலாவுதீன். அப்போது ராஜபுத்திர அரசுக்கு விருந்தினராக வரவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் வைக்கிறான். அதை ஏற்றுக் கொண்ட மன்னன் ராவல் ரத்தன் சிங், அலாவுதீனுக்கு விருந்தளிக்கிறான். அப்போது, திடீரென அரசி பத்மாவதியைப் பார்க்க வேண்டும் என்கிறான்.
சில விவாதங்களுக்குப் பின் பத்மாவதி சில கணங்கள் மட்டுமே காட்டப்படுகிறாள். பத்மாவதியை முழுமையாகப் பார்க்க வேண்டும் என நினைக்கும் அலாவுதீன், சதி செய்து ராவல் ரத்தன் சிங்கைக் கைது செய்து தில்லிக்கு அழைத்துச் செல்கிறான்.
கணவனை மீட்க பத்மாவதி, அலாவுதீன் வழியிலேயே சதி செய்து கணவனை மீட்டு வந்து விடுகிறாள். கோபமடையும் அலாவுதீன் மீண்டும், மேவார் மீது போர் தொடுக்கிறான். இதன் பின் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் மீதிக் கதை.
ஷாகித் கபூர், தீபிகா படுகோனே, ரண்வீர் சிங் என மூவருமே அவரவர் கதாபாத்திரங்களில் பொருந்திப் போகிறார்கள். அதிலும் ஷாகித், தீபிகா இடையிலான காதல் காட்சிகள், வீரம் செறிந்த கதையில் காதலையும் கண்ணியமாக இணைத்திருக்கின்றன. நிமிர்ந்த தோற்றம், நேர் பார்வை, கம்பீரமான பேச்சு என ஷாகித் கபூரின் நடிப்பில் இந்தப் படம் அவருக்கு பெரிய முத்திரையைப் பதிக்கும்.
தீபிகா படுகோனேவின் அழகைப் பற்றி என்ன சொல்வது, சாந்தமான அழகு, அதே சமயம் எப்போது வீரமும், கம்பீரமும் வெளிப்பட வேண்டுமோ அப்போது அந்த அழகுக்குள் அதுவும் திமிராய் வெளிப்படுகிறது. அவருக்கு பொருத்தமான ஆடை, அணிகலன்களை அணிவித்து ரசிகர்களை ரசிக்க வைத்தவருக்கு தனி பாராட்டுகள்.
அலாவுதீன் கில்ஜியாக ரண்வீர் சிங். காமம், கோபம், வீரம், திமிர், ஏளனம் என எந்த ஒரு நவரசத்தையும் விட்டு வைக்காத நடிப்பு. மாற்றான் மனைவி மீது கொண்டுள்ளது காதல் அல்ல காமம் என்பதை கண்களாலேயே புரிய வைக்கிறார்.
அந்தக் காலத்தில், போர் நடக்கக் காரணம் மண்ணாசை, பெண்ணாசை என்பார்கள். இந்தப் படத்தில் அந்த பெண்ணாசை, ஒருவனை எப்படியெல்லாம் செய்ய வைக்கும் என்பதை உணர்த்தியிருக்கிறார்கள். அதற்கு ரண்வீர் சிங்கின் நடிப்பு அபாரம்.
அலாவுதீன் கில்ஜியின் வலது கையாக, நம்பிக்கையான அடிமையாக ஜிம் சர்ப். மனைவியாக அதிதி ராவ் ஹைதரி, சுல்தான் ஜலாலுதீன் கில்ஜி ஆக ரசா முரத், மேவார் மன்னன் ராவல் ரத்தன் சிங் முதல் மனைவியாக அனுப்ரியா கோயங்கா நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
சஞ்சய் லீலா பன்சாலியின் இசையில் பாடல்கள் தமிழிலும் ரசிக்க வைக்கின்றன. முதலில் தீபிகா படுகோனே அரண்மனையில் ஆடும் ஆட்டம் மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும். சஞ்சித் பல்ஹாராவின் பின்னணி இசையும் குறிப்பிட வேண்டியது.
தமிழில் பார்க்கும் போது முதலில், டப்பிங் சீரியல் பார்ப்பது போன்று தோன்றினாலும், போகப் போக ஒன்றிவிடுகிறோம். பல இடங்களில் தமிழ் வசனங்களுக்கும் தியேட்டரில் கைதட்டல் கிடைக்கிறது.
படத்தின் தயாரிப்பு வடிவமைப்பு, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் பிரமிக்க வைக்கின்றன. 'பாகுபலி' படத்திற்குப் பிறகு ஒரு பிரமிக்க வைக்கும் சரித்திரப் படத்தைப் பார்த்த அனுபவம் கிடைக்கும்.
இருந்தாலும், ஒரு மன்னனின் மனைவியைக் கவரத் துடிக்கும் மற்றொரு மன்னன் என்பதுதான் படத்தின் ஒரு வரிக் கதை. மேவார் மன்னன், அவனது பேரழகியான அரசி, அவளைக் கவரத் துடிக்கும் டில்லி மன்னன் இவர்களுக்கிடையே தான் அதிகப்படியான காட்சிகள் பயணிக்கிறது. வேறு கதாபாத்திரங்களுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை.
காதல், காமம், வீரம் தவிர, மற்ற உணர்வுகளுக்கு வேலை இல்லை என்பது குறையாகத் தெரிகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த கிளைமாக்ஸ் காட்சி பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் விஷுவலாகவும், வியப்பாகவும் ஒரு படத்தைப் பார்க்கத் தயாராக இருப்பவர்களுக்கு 'பத்மாவத்' பிரமிப்பைக் கொடுக்கும்.
சர்ச்சை என்ன ஆச்சு:
அதெல்லாம் சரி சர்ச்சையான விஷயம் படத்தில் இருக்கிறதா என்று தானே கேட்கிறீர்கள்.
சித்தூர் மகாராணியை தவறாக சித்தரித்து உள்ளதாக இப்படத்திற்கு ராஜபுத்ர வகுப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் படத்தில் அப்படிப்பட்ட காட்சிகள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் ராஜபுத்ர வம்சத்தினரை பெருமைப்படுத்தி இருக்கிறார்கள். அந்த வம்சத்தை சேர்ந்த பெண்களின் வீரத்தை பெருமைப்படுத்தும் விதமாகவே சொல்லியிருக்கிறார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக