“மணிரத்னம் முதல் கார்த்திக் சுப்புராஜ் வரை... டாப் இயக்குநர்கள் கையில் என்னென்ன படங்கள்..!” #TopDirectorsNext
2017, பல அறிமுக இயக்குநர்கள் ஜொலித்த வருடம். தமிழ் சினிமாவின் ஆரோக்கியமான வருடம் என்றே சொல்லலாம். அதேபோல் இந்த வருடமும் பல அறிமுக இயக்குநர்கள் நல்ல படைப்புகளுடன் வருவார்கள் என்ற நம்பிக்கை ஒருபுறம் இருக்க, டாப் இயக்குநர்கள் எல்லாம் இந்த வருடம் என்ன ப்ளானில் இருக்கிறார்கள் எனப் பார்க்கலாம்.
மணிரத்னம்:
‘காற்று வெளியிடை’ படத்திற்கு அடுத்து, தான் இயக்கப் போகும் படத்தின் அறிவிப்பை வெளியிட்டு நமக்கெல்லாம் ஷாக் கொடுத்தார் மணிரத்னம். படத்தோட அறிவிப்பில் என்ன ஷாக் என்று யோசிக்காதீர்கள். அறிவிப்பில் ஷாக்கில்லை, ஆக்டர்ஸ் லிஸ்ட்டைப் பார்த்தால்தான் ஷாக். சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அரவிந்த் சாமி, ஃபஹத் ஃபாசில், ஐஷ்வர்யா ராஜேஷ் எனப் படு பயங்கரமான காஸ்டிங்கோடு வந்திருக்கிறார் மணிரத்னம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் இந்தப் படம்தான் மணி ரத்னத்தின் இந்த வருட ப்ளான்.
ஷங்கர்:
‘2.0’ படத்தில் இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாக இருக்கும் ஷங்கர், ஏப்ரலில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்கிறார். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து இயக்கும் ‘இந்தியன் - 2’ பட வேலைகளில் இறங்கவிருக்கிறார். சென்ற வருடம் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்திருக்கும் கமலுக்கு ‘இந்தியன் - 2’ மிக முக்கியமான படமாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனாலேயே இந்தப் படத்திற்காக ஷங்கர் அதிகம் மெனக்கெடுவார் என எதிர்பார்க்கலாம்.
ஏ.ஆர்.முருகதாஸ்:
‘மெர்சல்’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் அவரது 62-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே இணையம் பரபரப்பானது. ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்களுக்குப் பிறகு விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைவதால் இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. கீர்த்தி சுரேஷ், ஏ.ஆர்.ரஹ்மான் என இந்தப் படக்குழுவில் ஒவ்வொரு பிரபலங்களாக இணைந்து வருகிறார்கள். தீபாவளிக்குப் படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு பரபரப்புடன் வேலை செய்துவருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
செல்வராகவன்:
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கும் புதிய படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு நாயகிகளாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்கள். செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜாவின் மேஜிக்கல் காம்போ இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்தையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது படக்குழு. எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படமும் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. இந்த வருடம் செல்வராகவனின் இரண்டு படங்கள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கலாம்.
பாலா:
ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் இந்த மாதம் ரிலீஸாகவிருக்கும் ‘நாச்சியார்’ படத்தைத் தொடர்ந்து, அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கான ‘வர்மா’ படத்தை இயக்கவிருக்கிறார் பாலா. நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தின் வேலைகளில்தான் பாலா தற்போது தீவிரமாக இருக்கிறார். நாயகன் ரோலுக்கு துருவ் தயாராகிவரும் இந்த இடைவெளியில், படத்தின் ஹீரோயின் செலக்ஷன் நடந்து வருகிறது. தெலுங்கில் செம ஹிட்டடித்த இந்தப் படத்தை, பாலாவின் இயக்கத்தில் பார்க்கத் தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
கெளதம் வாசுதேவ் மேனன்:
தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ என இரண்டு படங்களின் வேலைகளையும் ஒரே நேரத்தில் பார்த்துவருகிறார் கெளதம். இரண்டு படங்களுமே முடியும் தருவாயில் இருப்பதால், இந்த வருடம் இவ்விரண்டு படங்கள் போக தனது புதிய படத்தின் அறிவிப்பையும் கெளதம் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அருண் விஜய்யின் 25-வது படத்தை கெளதம் மேனன்தான் இயக்கவிருக்கிறார் என்கிற தகவலும் வருகிறது.
வெற்றிமாறன்:
‘விசாரணை’ படத்திற்குப் பிறகு தனது கனவுப் படமான ‘வடசென்னை'யைக் கையில் எடுத்திருக்கிறார் வெற்றிமாறன். தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, ஐஷ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் வடசென்னை பட வேலைகளில்தான் தற்போது வெற்றிமாறன் இருக்கிறார். ‘ஆடுகளம்' படத்திற்குப் பிறகு தனுஷ் - வெற்றிமாறன் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தப் படத்தின் ரிசல்ட்டைப் பார்த்துவிட்டு, ‘வடசென்னை’ படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகத்தின் வேலைகளும் ஆரம்பிக்கப்படும் என்கிறார் வெற்றிமாறன்.
ஹரி:
‘சிங்கம் 3’ படத்திற்குப் பிறகு இயக்குநர் ஹரியும், ‘ஸ்கெட்ச்’ படத்திற்குப் பிறகு விக்ரமும் இணையும் படம் ‘சாமி ஸ்கொயர்’. ‘சிங்கம்’ படத்தைத் தொடர்ந்து ‘சிங்கம் 2, 3’ எனத் தொடர்ச்சியாகப் படங்கள் இயக்கிய ஹரி, எப்போது ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பார் என்கிற கேள்வி பலரிடமும் இருந்தது. அதற்கு விடையாக ‘இருமுகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘சாமி 2’ படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் ஹரி. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில்தான் ஓடி, ஓடி வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார் ஹரி.
ரஞ்சித்:
‘கபாலி’ பட வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியோடு ஸ்டைலா, கெத்தா காலாவில் கைகோத்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். மும்பை மற்றும் சென்னையில் படு வேகமாக நடந்த படப்பிடிப்பு, தற்போது முடிவடைந்து எடிட்டிங் பணியில் இருக்கிறது. ‘2.0’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகு இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். ‘கபாலி’யைப் போல் ‘காலா’வையும் ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் கொடுக்க வேண்டும் என வேலை செய்துவருகிறார் பா.ரஞ்சித்.
சிவா:
‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களுக்குப் பிறகு அஜித்தை வைத்து நான்காவதாக ‘விசுவாசம்’ படத்தை இயக்கவுள்ளார் சிவா. ‘விவேகம்’ படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றதால் இந்தப் படத்தை ஹிட்டாக்க வேண்டும் என ஃப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார் சிவா.
சுந்தர் சி:
ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா, சிவா மற்றும் பல நட்சத்திரங்களை வைத்து சுந்தர்.சி இயக்கியிருக்கும் ‘கலகலப்பு -2’, இந்த மாதம் வெளியாகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘சங்கமித்ரா’ பட வேலைகளைக் கையில் எடுக்கவுள்ளார் சுந்தர்.சி.
லிங்குசாமி:
விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நடிப்பில் ‘சண்டகோழி - 2’ படத்தை இயக்கிவருகிறார் லிங்குசாமி. பரபரப்பாகப் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், இந்த வருடம் படத்தை வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறார் விஷால். விஷாலின் நடிப்பில் ‘இரும்புத்திரை’ ரிலீஸுக்கு ரெடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் சுப்புராஜ்:
பிரபுதேவா நடிப்பில் வசனங்களே இல்லாமல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் ‘மெர்குரி’. இந்தப் படத்தில் சனத், தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இந்த வருடம் தனது அடுத்த படத்தின் அறிவிப்பையும் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக