வெள்ளி, 14 டிசம்பர், 2018

இளையராஜா ராயல்டி பஞ்சாயத்தை முழுவதுமாக கேட்டு முடித்தேன்.

அதன் பின்புலம் பின்வருமாறு:

1969ல் ஐ.பி.ஆர்.எஸ் எனும் அமைப்பு துவங்கபடுகிறது. கலைஞர்களின் படைப்புக்கு லைசென்ஸ் பெற்றுதருவதும், அதன்பின் ராயல்டி பெற்றுதருவதும் அதன் நோக்கம். ஒரு சினிமா பாட்டு வானொலி, தொலைகாட்சிகளில் ஒளிபரப்பானால் அதற்கு இந்த அமைப்புக்கு ராயல்டி செலுத்த வேண்டும்.  அந்த தொகை இசையமைப்பாளர், பாடகர், இசைதட்டு உரிமை பெற்றுள்ளவர் (பட தயாரிப்பாளர்) என பலருக்கும் செல்லும். ஆர்கெஸ்ட்ரா குழுக்களும் இவர்களுக்கு எல்லா பாடல்களுக்கும் ராயல்டி கட்டணம் செலுத்தவேண்டும்

ஆக இளையராஜா ஏதும் புதுசாக ராயல்டி கேட்கவில்லை. ஏற்கனவே எல்லாரும் 1969ல் இருந்து கொடுத்துவருவதுதான். அவரும் வாங்கிவருவதுதான். அவர் மட்டுமல்ல ஏ.ஆர்.ரஹ்மான், சந்திரபோஸ், எம்.எஸ்.வி, வடநாட்டு பப்பிலகிரி எல்லாருமே வாங்கிவருவதுதான்.

இதில் ஏன் திடீர் என பிரச்சனை முளைத்தது?

இந்த ஐ.பி.ஆர்.ஏஸ் அமைப்பு ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானது. அதன் தலைவர் ஜாவேத் அக்தர். அதில் வட இந்தியர்கள் ஆதிக்கம் அதிகம். அவர்கள் வடநாட்டு பாடகர்கள், இசையமைப்பாளர்கள் விசயத்தில் கண்ணும், கருத்துமாக இருந்து  ராய்லடியை வாங்கி கொடுப்பதால் ஒரே ஒரு ஹிட் கொடுக்கும் இந்தி இசையமைப்பாளர்களும் ஆயுள் முழுக்க நல்ல லாபத்தொகையை சம்பாதிக்கிறார்கள். ஆனால் இத்தனை ஆயிரம் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்தும் இளையராஜாவுக்கு பெரிதாக எந்த தொகையும் வரவில்லை.

அவருக்கு என இல்லை. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என எல்லா தென்னிந்திய மொழி இசையமைப்பாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் இதுதான் நிலை. அவர்கள் யாரும் வாயை திறந்து எதிர்க்குரல் கொடுக்காமல் கொடுப்பதை வாங்கிக்கொள்வோம் எனத்தான் இருந்து வருகிறார்கள். இளையராஜா மட்டும் தான் எதிர்க்குரல் கொடுத்து, நியாயம் கேட்டு, கிடைக்காமல் வெளியே வந்தார்

வெளியே வந்து தமிழ் இசைக்கலைஞர்கள் சங்கத்துடன் ஒப்பந்தம் போட்டு வரும் ராயல்டியில் 20% தொகை அவர்களுக்கு என்றும், 80% தனக்கு என்றும் முடிவெடுத்துள்ளார். இந்த சங்கத்தில் 1500 பேர் இருக்கிரார்கள். புல்லாங்குழல், வீனை, சிதார், வயலின் என பிண்னனி இசை வாசிக்கும் நலிந்த கலைஞர்கள் இவர்கள். இளையராஜாவுடன் பணியாற்றிய 600 பேர் இதில் இருக்கிறார்கள். இதுநாள் வரை இந்த ராயல்டியில் அவர்களுக்கு பங்கு இருந்ததே இல்லை. எந்த இசையமைப்பாளரும், ஐ.பி.ஆர்.எஸ் அமைப்பும் இவர்களுக்கு பத்து பைசாவையும் கொடுத்ததில்லை. இளையராஜா கொடுக்கும் இப்பணத்தால் இவர்களுக்கு மாதாமாதம் பல லட்சம் சேரும். மருத்துவ செலவு, கல்வி செலவு என பல செலவுகளுக்கு அது உதவும்.

பாட்டுக்கு எப்படி இளையராஜா உரிமை கோரமுடியும்? அவர் தான் பாட்டை விற்றுவிட்டாரே?பணம் போட்ட தயாரிப்பாளருக்கு அதில் பங்கு வேண்டாமா?

தயாரிப்பாளர் தன் படத்துக்காக இசையமைக்கப்ட்டு, எஸ்.பி.பி சித்ரா பாடிய பாடலுக்கு முழு உரிமையும் கொண்டவர் ஆகிறார். அதை படத்தில் பயன்படுத்தி, இசைத்தட்டு வெளியிட முழு உரிமையும் அவருக்கு உண்டு. ஆடியோ ரைட்ஸை அவர்கள் பெரும்பாலும் விற்றுவிடுகிறார்கள். அப்படி வாங்கும் கம்பனிகள் அந்த பாடல்கள் ரேடியோ, தொலைகாட்சியில் ஒலிபரப்பாகையில் ராயல்டி தொகையை ஐ.பி.ஆர்.எஸ் அமைப்பிடம் இருந்து பெறுகிறார்கள்.

ஆனால் இளையராஜா பயன்படுத்திய மெட்ட்டை வைத்து அதே பாடலை ஒரு ஆர்கெஸ்ட்ரா குழு நடத்துகிறது எனில் அந்த மெட்டை பயன்படுத்த அவர்கள் இளையராஜாவுக்கு தொகை கொடுக்கவேண்டும். தயாரிப்பாளருக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது. இசைத்தட்டில் உள்ள பாட்டை சன் டிவி போட்டால் காசு வேண்டும் என அவர் கேட்கலாமே ஒழிய இளையராஜாவின் மெட்டை பயன்படுத்த தயாரிப்பாலருக்கு ஏன் காசு தரவேண்டும்?

அதேபோலத்தான் அந்த பாடலை பாடிய எஸ்.பி.பி, சித்ரா ஆகியொருக்கும் ஆர்கெஸ்ட்ராகாரர்கள் பணம் தரவேண்டியது இல்லை. ஏனெனில் அந்த பாடலை ஆர்கெஸ்ட்ரா கலைஞர்கள் தானே பாடுகிறார்கள்?

சரி..பாட்டை எழுதிய வைரமுத்து, வாலிக்கு பங்கு வேண்டாமா?

அவர்களுக்கு ஐ.பி.ஆர்.எஸ்சில் இருந்து பணம் போய்க்கொண்டு தான் இருக்கிறது. இளையராஜா அதில் இருந்து பிரிந்து வந்து "எனக்கு கொடுக்கவேண்டிய பணத்தை நெரடியாக கொடு. ஐ.பி.ஆர்.எஸுக்கு கொடுப்பதை வழக்கம் போல கொடு" என கேட்கிறார். வைரமுத்து, வாலிக்கு வரவேன்டிய பணத்தை அவர்கள் தான் ஐ.பி.ஆர்,எஸ்ஸை நெருக்கி கேட்கவேன்டும். இளையராஜா எப்படி அவர்களுக்கு பணம் கொடு என ஆர்கெஸ்ட்ராகாரர்களிடம் கேட்கமுடியும்? அவர் என்ன வசூல் மன்னரா? இல்லை கலெக்சன் ஏஜண்டா? அதை ஐ.பி.ஆர்.எஸ் தான் வாங்கவேண்டும்.

மற்றபடி:

இதைப்பற்றி விடியோவில் பேசுகையில் கோபத்துடன் இளையராஜா பேசியதுதான் பலரையும் எதோ இத்தனை நாள் இல்லாத வழக்கத்தை இவர் உருவாக்கியுள்லார் என நினைக்க வைத்து, எரிச்சலடைய வைக்கிறது. உண்மையில் இதை இவர் செய்வது மிக, மிக நல்ல விசயம். தமிழ் கலைஞர்களின் உரிமைக்கு ஒரு 75 வயது முதிய கலைஞர் நடத்தும் போராட்டம். அவரது உதாரனத்தை பின்பற்றினால் வருமானம் இல்லாமல் நொடித்த நிலையில் இருக்கும் பல இசையமைப்பாளர்கள் பலன் பெறுவார்கள்.

பணம் வாங்காமல் நடத்தும் இசைகச்சேரி, பிறந்தநாள், கல்யானநாள், கோயில் திருவிழா...இதுக்கு எல்லாம் ராயல்டி வேண்டாம் என இளையராஜா தெளிவாக அறிவித்து உள்லார். பணம் வசூலித்து மிகபெரிய அளவில் நடத்தும், வெளிநாட்டு கச்சேரிகள், இசைக்குழுக்கள், இவர்களிடம் தான் ராயல்டி கேட்கிறார். அதுவும் தற்போது ஏற்கனவே அவர்கள் ஐ.பி.ஆர்.எஸுக்கு கொடுத்து வரும் ராயல்டிதான். புதிதாக எதையும் கேட்கவில்லை. என்ன சிக்கல் என்றால் ஐ.பி.ஆர்.எஸ் இதுநாள்வரை இதை தென்னிந்தியாவில் வசூலிப்பதில் எந்த முனைப்பும் காட்டாததால் பலரும் அதை சரியாக கொடுக்காமல் இருந்தார்கள். இனி அது நடக்காது என்பதால் தான் இத்தனை சண்டைகள், சர்ச்சைகள்...கூடவே சோஷியல் மீடியா அறசீற்றங்கள்.

(தெரிந்தது, கேள்விப்பட்டதை வைத்து எழுதியது. டெக்னிகல் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள். திருத்திகொள்கிறேன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக