அப்பா – மகள் பாசம் சொல்லும் 5 தமிழ் படங்கள் (5 Tamil Movies about Father – Daughter Relationship)
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் மகள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக அளவில் 28-ம் தேதியும் இது கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் நேற்று மகள்கள் தினமாகும். இந்த ஆண்டு மட்டும் செப்டம்பர் மாதத்தில் 5 ஞாயிற்றுக் கிழமைகள் வருகின்றன. அதனால் 4-வது ஞாயிற்றுக் கிழமையைக் கணக்கில் கொண்டு மகள்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
திரைப்படங்கள்!
அப்பா – மகள் என்றாலே அதீத பாசம்தானே! ஊரே பேசும் இந்தப் பாசத்தை, திரைப்படங்கள் பேசாதா?! பேசியிருக்கின்றன, சில படங்கள் மக்கள் மனதை வென்றுள்ளது, சில படங்கள் வசூல் சாதனைகளையும் செய்துள்ளது
தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்கள் அம்மா – மகன் பாசத்தை சொல்லும் படங்களாகவே அமைந்திருக்கின்றன. ஆனால் வெகு சில படங்கள் மட்டுமே தகப்பன் – மகள் இடையிலான பாசப்பிணைப்பை படமாக்கியுள்ளன. அதிலும் சமீபத்தில் ‘தல’ அஜித்குமார் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் அப்பாக்கள் – மகள்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதேபோல ஒரு சில படங்கள் மட்டும் காலத்திற்கும் நின்றுபேசும் அளவிற்கு இருக்கின்றன.
அப்பா – மகள் பாசம் சொல்லும் 5 தமிழ் படங்கள் (5 Tamil Movies about Father – Daughter Relationship)
அப்பா – மகள் பாசம் சொல்லும் அற்புதமான திரைப்படங்களுள் 5-ஐ மட்டும் இங்கே வரிசைப் படுத்தியிருக்கிறோம். இந்த தரவரிசையானது அதிகம்பேர் பார்த்த, அனைவருக்கும் பிடித்த, சமீபத்திய திரைப்படங்களை மட்டுமே உள்ளடக்கியது. ஏதாவது படங்கள் அல்லது குறிப்பிட்ட அம்சங்கள் விடுபட்டிருந்தாலோ, பின்வரும் படங்களில் உங்களுக்கு பிடித்தவற்றையோ கமெண்டில் சொல்லுங்கள்.
5) தெறி (Theri)
ஒரு காவல்துறை உயரதிகாரி, தனது மகளை எதிரிகளிடமிருந்து காப்பதற்காகவும், மகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டும், தனது பெயரை மாற்றி வேறொரு இடத்தில் வாழ்ந்துவருவார். இப்படத்தில் ‘தளபதி’ விஜயின் மகளாக, நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருப்பார். நைனிகா மற்றும் விஜயுடனான காட்சிகள் அனைத்தும், ஒரு தந்தை மகளின் பாசத்தை அப்படியே படமாக்கியிருப்பார் இயக்குனர் அட்லீ!
ஈனா மீனா டீக்கா என்றொரு பாடல் இடம்பெறும், இப்பாடல் பெரும்பாலும் அனைவராலும் விரும்பப்பட்ட ஒரு பாடல். காட்சியாக்கப்பட்ட விதமும், விஜயின் நடன அமைப்புகளும் மிக அழகாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்பட்ட பாடலாக இது அமைந்தது.
அழகான கதையில், அப்பா-மகள் பாசமென, நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இப்படத்தை குழந்தைகள், ரசிகர்கள் குடும்பமாக கொண்டாடினர். இதுவொரு நல்ல வெற்றிப்படமும் கூட.
4) தங்க மீன்கள் (Thanga Meengal)
மிடில் கிளாஸ் தந்தையாக இயக்குனர் ராமும், தனது ஆசைகள் நிறைவேறாத சராசரி பெண் குழந்தையாக சாதனாவும் பிரித்து மேய்ந்திருப்பார்கள். இந்த திரைப்படம் மிடில்கிளாஸ் அப்பா-மகள் பாசப்போராட்டங்களை மிக அழகாக எடுத்துச் சொல்லும். படத்தின் பல காட்சிகள் பார்ப்பவர் கண்களை குளமாக்கிவிடும்.
மிகவும் உணர்வுப்பூர்வமான, உருக்கமான கதையை எளிமையாக படமாக்கியிருப்பார், ராம்! யுவான்ஷாங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் கொள்ளையழகு. அதிலும் ஆனந்த யாழை மீட்டுகிறாள் என்ற பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இப்பாடல், அவ்வளவு அழகான மற்றும் உருக்கமான பாடல். இப்படத்தின் எல்லாப் பாடல்களுமே மிக அருமையாக இருக்கும்.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும், முத்தம் காமத்தில் சேராதென்று! என்றொரு வரி ‘தங்க மீன்கள்’ படத்தில் இடம்பெற்றிருக்கும். மிகவும் உண்மையான மற்றும் உருக்கமான வரியிது. பெரும்பாலான தந்தைகளால் இதை உணரமுடிந்திருக்கும்.
3) தெய்வத்திருமகள்! (Deiva Thirumagal)
மனவளர்ச்சி குறைந்த விக்ரமின் மனைவி, குழந்தை பிறந்தவுடன் இறந்துபோக, அந்தக் குழந்தையை விக்ரமே வளர்க்கிறார். இதைத் தெரிந்துகொண்ட அவரது மனைவியின் குடும்பத்தினர் அவரிடமிருந்து குழந்தையைப் பிரித்துச் செல்கின்றனர். அதன் பின், நீதிமன்றம் மூலம் போராடி, விக்ரம் குழந்தையை மீட்பார் என்பதாகப் படம் முடியும்.
மனவளர்ச்சி குறைந்த நிலையிலும் குழந்தைக்காக போராடும் காட்சிகளிலும், என்னசெய்வதென்று தெரியாமல் தடுமாறும் காட்சிகளிலும், படம் பார்ப்பவர் கண்களை வியர்க்கவைத்துவிடுவார் விக்ரம். குறிப்பாக, கிளைமேக்ஸ் கோர்ட் காட்சிகளை கண்கள் கலங்காமல் பார்க்கவே முடியாது. குழந்தை நிலா கேரக்டரில் ‘பேபி’ சாரா மிக அழகாக நடித்திருப்பார். பெண் குழந்தை இந்த அப்பாவுக்கு தாயாகவே இருக்கும். ஒவ்வொரு காட்சியமைப்பும் மிக நேர்த்தியாக இருக்கும். மிக அற்புதமான காட்சிகளால் அனைவரையும் ஈர்த்திருப்பார் இயக்குனர். பாடல்கள் அனைத்தும் பிரமாதம். குறிப்பாக கத சொல்லப்போறேன் பாடல், குட்டீசை மிகவும் ஈர்த்தவொன்று. மற்றொரு பாடலை ‘சீயான்’ விக்ரமே பாடியிருப்பார்.
2) அபியும் நானும்! (Abhiyum Naanum)
அபியும் நானும் 2008-ல் வெளியான தமிழ்த் திரைப்படம். ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் திரிஷா, பிரகாஷ் ராஜ் மகளாக முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். சிறப்புத் தோற்றதில் பிரித்திவிராஜ் நடித்திருப்பார். தந்தை மகள் இருவருக்குமிடையிலான பாசப்பிணைப்பிணை கதைக்கருவாகக் கொண்டதுதான் இத்திரைப்படமே!
abhiyum naanum movie
குழந்தையிலிருந்து பாசமாக வளர்த்த மகள், வேறொருவரைக் காதலிப்பதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், மகளிடம் எதிர்ப்பும் தெரிவிக்காமல், அன்பான அப்பாவாக பிரகாஷ் ராஜ் அசத்தியிருப்பார். திரிஷாவும் போட்டிபோட்டுக்கொண்டு கலக்கியிருப்பார். நல்ல காமெடிக் காட்சிகளும், மனதை நெகிழவைக்கும் செண்டிமெண்ட் காட்சிகளும் இப்படத்தில் நிறையவே இருக்கும்.
மனதை வருடும் பாடல்கள் தான் இப்படத்தின் மிகப்பெரிய சிறப்பே. ‘வா வா என் தேவதையே’ என்ற பாடலும், படமாக்கப்பட்ட விதமும் அனைத்து வயது அப்பாக்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாகவே இருக்குமென்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது. அனைத்து தரப்பினருக்குமான இப்படம் நல்ல வியாபார வெற்றியையும் பெற்றது. ஜூன் 16-ஆம் தேதி அப்பாக்கள் தினமென்பதால், இப்படத்தை மீண்டுமொருமுறை பார்க்கலாம்.
viswasam movie thala nayan
1) விஸ்வாசம்!(Viswasam)
விஸ்வாசம் படத்தை பார்த்தவர்கள் அழாமல் இருந்திருக்க மாட்டார்கள் அல்லது யாரும் பார்க்காமல் இருந்திருக்க மாட்டார்கள். என்ற அளவில் பெரும்பாலான அனைவராலும் விரும்பப்பட்ட திரைப்படமிது! திடமாக இருந்து, எதற்கும் அழாத பல அப்பாக்களையே, விஸ்வாசம் திரைப்படம் விழுந்து விழுந்து, கதறி கதறி அழவைத்தது. அப்பா-மகள் பாசத்தை திடமாக உணரவைத்தது.
காதலித்துத் திருமணம் செய்த மனைவி(நயன்தாரா), சில சூழ்நிலைக்காரணங்களால் பிரிந்துவிட, உடைந்துபோகிறார் நாயகன்(‘தல’ அஜித்). பிரியும்போது தன்னுடனேயே குழந்தையையும் எடுத்துச்செல்கிறார் நாயகி. மனைவி, குழந்தையின் வளர்ச்சியை தூரத்திலிருந்தே பார்க்கிறார் தல. சொந்தங்களின் உந்துதலின் பேரில், மனைவி மற்றும் குழந்தைகளைத் தேடிச்செல்கிறார். அதேசமயம், தனது மகளின் உயிருக்கே ஆபத்திருப்பதை உணர்கிறார். இந்த ஆபத்துகளை முறியடித்து, எப்படி மனைவி மற்றும் குழந்தையுடன் ஒன்றுசேர்கிறார் என்பதே விஸ்வாசம்!
பாசக்கார அப்பாவாக ‘தல’ அஜித் மிரட்டியிருப்பார். கெத்தான அம்மாவாக நயன்தாராவும் தன் பங்கிற்கு பட்டையைக் கிளப்பியிருப்பார். ‘கண்ணான கண்ணே’ பாடலை கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். இன்றளவிலும் நிறைய அப்பாக்களின் காலர் டியூனாக இப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. யூடியூப்பில் ரெக்கார்டுகள் செய்கிறது.
குடும்பம் குடும்பமாக, கூட்டம் கூட்டமாக அலைகடலென திரையரங்குகளில் குவிந்தனர் மக்கள். மாபெரும் வெற்றிபெற்று, வசூல் சாதனைகளை நிகழ்த்தி, மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றது! இந்த நேரத்தில் அப்பா-மகள்கள் சார்பாக, இப்படியொரு சிறப்பான படத்தை இயக்கிய சிவா அவர்களுக்கும், இதில் நடித்த ‘தல’ அஜித் உள்ளிட்ட நடிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜூன் 16 – அப்பாக்கள் தினம்
அப்பாக்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். தனது குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் அயராது உழைப்பவர். ஜூன் 16-ஆம் தேதி அப்பாக்கள் தினம், அதுவும் ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. குடும்பமாக சேர்ந்து அசத்தலாம் தானே?! நேரம் கிடைத்தால் இந்த நாளில், மேற்சொன்ன படங்களை பார்க்க முயற்சி செய்யுங்கள். அப்பாக்களை கொண்டாடுங்கள்.
Thanks BabyDestination.
Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக