சனி, 30 மே, 2020

பொன்மகள் வந்தாள்-விமர்சனம்


பொன்மகள் வந்தாள்-விமர்சனம்
————————————————
2004ஆம் ஆண்டு ஊட்டியில் சிறு வயது பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறாள். இதற்கு காரணம் ஜோதி என்ற பெண் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவரை போலீஸ், என்கவுண்டர் செய்து கேசை முடிக்கிறார்கள். 15 வருடங்கள் கழித்து இந்த கேசை தூசிதட்டி எடுக்கிறார் ஜோதிகா. 

சைக்கோ கொலைகாரி என்று பட்டம் சூட்டப்பட்டு கொலைசெய்யப்பட்ட ஜோதிக்கு ஆதரவாக களம் இறங்குகிறார். இதனால் ஜோதிகாவுக்கு பல இன்னல்களும் பிரச்சனைகளும் வருகிறது. இந்தப் பிரச்சினைகளை எப்படி சமாளித்தார்? அந்த கேசில் எப்படி வெற்றி பெற்றார்? அந்தக் கேசின் உண்மை நிலவரம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ஜோதிகா வெண்பா என்ற கதாபாத்திரத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குழந்தைகளுடன் விளையாடும் போது குழந்தையாகவும், தந்தை பாக்யராஜுடன் பேசும்போது கேசில் வெற்றிபெற வேண்டும் என்ற துடிப்பும், கோர்ட்டில் வாதாடும்போது கம்பீரமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். பெண்களின் வலியை நடிப்பால் உணர்த்தியிருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து அதோடு வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் பாக்யராஜ். ஜோதிகா சோர்ந்து போகும் போது உற்சாகம் கொடுப்பவராக நடிப்பில் பளிச்சிடுகிறார். சிறிதளவே வந்தாலும் மனதில் நிற்கிறார் தியாகராஜன். பிரதாப் போத்தன், பாண்டியராஜன் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். 

தனக்கே உரிய நக்கல் நையாண்டி நடிப்பை கொடுத்திருக்கிறார் பார்த்திபன். ஜோதிகாவிற்கு பிறகு அதிக அளவு கவனத்தை ஈர்த்திருக்கிறார். சுப்பு பஞ்சு நடந்ததை சொல்லும்போது அந்த இடத்தில் பார்த்திபன் தன்னைக் கற்பனை பண்ணி பார்க்கும் காட்சி சிறப்பு. எதிர்பார்க்காத இடைவேளையும், யூகிக்க முடியாத இறுதி காட்சியும் ரசிக்க வைக்கிறது. 

பெண்களுக்கு நடக்கும் அநீதிகளையும் பாலியல் வன்கொடுமைகளையும் மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக். 

மற்றவர்களுக்கு நடந்ததை செய்தியாக பார்க்காமல், தனக்கு நடந்ததாக உணர்ந்தால் அவர்களின் வலியும் வேதனையும் புரியும் என்ற கருத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். பெண் குழந்தைகளுக்கு, ஆண்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை சொல்வதைப்போல, பெண்களை எப்படி பார்க்க வேண்டும், எப்படி பழக வேண்டும் என்பதை ஆண்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார். 

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் கதையோடு ஒன்றி பயணிக்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவு கச்சிதம்.

மொத்தத்தில் 'பொன்மகள் வந்தாள்' ஏஞ்சல்
.

“வெட்டுக்கிளி தாக்குதல்” சம்பவம் படமாக்கியது எப்படி? கே.வி.ஆனந்த் சிறப்பு பேட்டி

“வெட்டுக்கிளி தாக்குதல்” சம்பவம் படமாக்கியது எப்படி? கே.வி.ஆனந்த் சிறப்பு பேட்டி


வெட்டுக்கிளி தாக்குதல் சம்பவம் படமாக்கியது எப்படி? என்பது குறித்து பத்திரிகை.காம் இணைய இதழுக்கு பிரபல டைக்ரட்ர் கே.வி.ஆனந்த் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது, அடுத்த பாட்ஷா பாணியில் மாபியா டான் கதை இயக்குவேன் என்று தெரிவித்தார்.

கனா கண்டேன், அயன். மாற்றான், காப்பான் போன்ற படங்களை இயக்கியவர் கே .வி ஆனந்த். இவர் இயக்கிய காப்பான் படம் கடந்த ஆண்டு வெளிவந்தபோது, தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் வெட்டுக்கிளிகள் தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டது. அப்படத்தில் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று விவசாய நிலங்களை அழித்து தரிசு நிலமாக்கு வதற்காக இலட்சக்கணக் கான வெட்டுக்கிளிகளை ஏவி விட்டு பயிர்களை அழிப்பார்கள். இப்படிக்கூட நடக்குமா என்று பலர் கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது ராஜஸ்தான், பஞ்சாபில் வெட்டுக்கிளிகள் படை எடுப்பு நடந்துக் கொண்டிருக்கிறது. 50 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நாசமாகிவிட்டன.

இப்படியொரு காட்சியை முன்னரே சிந்தித்து காப்பான் படத்தில் வைத்து எடுத்து எப்படி என்பதற்கு விரிவாக பதில் அளித்தார் இயக்குனர் கே வி ஆனந்த். அவர் கூறியதாவது :

மாற்றான் படத்தின் முன்திட்டமிடல் பணிக்காக நான் மடகாஸ்கர் நாட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது காரில் ஒரு இடத்துக்கு சென்றபோது திடீரென்று லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் (Locusts) பறந்து வந்தது. எங்களால் காரை ஓட்ட முடியாததால் நிறுத்தி விட்டோம். அவைகள் கடந்து சென்ற பிறகுதான் காரை எடுத் தோம்.

அதன்பிறகு காப்பான் படத்தில் அந்த சம்பவத்தை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்து அதுபற்றி ஆராய்ந்தேன். அதிர்ச்சி தரக்கூடிய பல தகவல்கள் கிடைத்தன.

ஜன நடமாட்டமே இல்லாத இடங்களில்தான் இந்த லோகஸ்டஸ் உருவாகின்றன. அவைகள் முட்டை போட்டு குஞ்சு பொரிக்கும். அதுவும் மண்ணுக்கு அடியில் சென்று முட்டை யிடும் அதற்கான சீசன் வரை மண்ணுக்குள்ளேயே கிடக்கும்.

கோடைகாலம் முடிந்துமழைக்காலம் தொடங்கும்போது அவை குஞ்சுகளாக வெளியில் வந்து தரையில் தவழ்ந்து செல்லும் ஜன நடமாட்டம் இருந்தால் மனிதர்களின் காலில் மிதிபட்டு இறந்து விடும். அதனால்தான் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளாக லோகஸ்டஸ் முட்டையிடும் பகுதியை தேர்வு செய்கிறது.

தேர்வு செய்கின்ற அவை லட்சம், கோடிகளில் பெருகி கூட்டமாக. பறந்து வந்து பயிர்களை தாக்கி அழிக் கின்றன.

1903ம் ஆண்டில் அதாவது நூற்றாண்டுக்கு முன்பு இந்தியாவில் மும்பையில் லோகஸ்டஸ் தாக்குதல் நடந்திருக்கிறது என்பது வரலாறு. அந்த தாக்குதல் சில ஆண்டுகள் தொடர்ந்தன. தற்போது ராஜஸ்தான், பஞ்சாப்பில் தாக்குதல் நடக்கிறது. அவைகளை அழிக்க அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

ஒரு கட்டத்தில் இந்த லோகஸ்டஸ் கண்டிப்பாக மண்ணுக்கு அடியில் முட்டையிடும். முட்டையிட்ட பிறகு அவைகள் செத்து விடும்.இவைகளை எலிகள் திண்ணும் அப்போது எலிகளால் நோய்கள் உண்டாகும்.

தமிழில் இதிகாசங்கள் புராணங்கள் இருந்தபோதும் இதுபோன்ற பூச்சிகளின் தாக்குதல் பற்றி குறிப்புகள் இல்லை. ஆனால் பைபிள், குரானில் இதுபோன்ற பூச்சிகளின் தாக்குதல் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் மேலை நாடுகளில் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கிறது. இந்தியாவில் குறிப்பாக தெற்கு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கவில்லை என்பது தெரிகிறது.

இவ்வாறு வெட்டுக்கிளிகள் தாக்குதல் பற்றி விரிவாக சொன்னார் கேவி ஆனந்த்.

அவரிடம் அடுத்து அயன் இரண்டாம் பாகம் இயக்கவுள்ளதாக கூறப் படுக்கிறதே அது உண்மையா என்றதற்கு பதில் அளித்தார்.
அவர் கூறும்போது, ‘
இரண்டாம் பாகம் இயக்குவதில் எனக்கு ஆர்வ மில்லை. ஆனால் மாஃபியா கதை ஒன்றை எழுதி வருகிறேன். பாட்ஷா, நாயகன் பாணியிலான கதை இதற்காக பெங்களூர் சென்று சில நிஜ தாதாக் களை சந்த்தித்து பேசினேன். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன. இதில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்று முடிவாகவில்லை’ என்றார்.

சனி, 9 மே, 2020

#திரும்பிப்பார்த்தால்... #தேவயானி_அவர்களின்_அன்பு!


#திரும்பிப்பார்த்தால்...
#தேவயானி_அவர்களின்_அன்பு!
--------------------------------------------------------------------அந்த வருடம் 1998 கடைசி என்று நினைவு. #கும்மிப்பாட்டு படத்தின் படப்பிடிப்பு.

இளைய திலகம் #பிரபு சார், #சிவகுமார் சார், #ராதிகா மேடம், #தேவயானி மேடம்,
#ரஞ்சித் சார், #மனோரமா ஆச்சி என்று பெரிய நட்சத்திரங்கள் நடித்த படம்.

நான் ராஜராஜன் சாரை பாலோ செய்துகொண்டிருந்ததாக சொன்னேன் அல்லவா...

அப்படி நீண்ட நாள் போராட்டத்திற்கு (Following) பிறகு ஒரு நாள் சாரிடம் இருந்து பரமசிவம் அண்ணனுக்கு போன் வந்தது. மொபைல் கிடையாது. தரைவழி தொடர்புதான்.

நாளை மறுநாள் டைரக்டர் #கஸ்தூரிராஜா சார் படத்திற்கு லொகேஷன் பார்க்க திண்டுக்கல் வருகிறோம்.

கிராமத்து பெரிய வீடு அங்கே ஏதாவது இருக்கிறதா...பரமசிவம்?

இருக்குங்கணே...இங்கே சிறுகுடியில் அப்படியான கிராமம் இருக்கு.
ஏற்கனவே பல படங்களின் படப்பிடிப்பு அங்கே நடந்திருக்கு.

ஊர் முக்கியஸ்தர் #சிவஞானம் அண்ணனிடம் சொல்லி விட்டால் ஏற்பாடு செய்திடுவார். அவர் நம்ம கட்சிக்காரர்தான்ணே...

வந்திடுறோம்.. பரமசிவம். பேசி வையுங்க.

மாதவன் எப்படி இருக்கார்...?
லொகேஷன் பார்க்க டைரக்டர் வாரார்...அவர வரச்சொல்லிடுங்க..
அப்படியே சேர்ந்துக்கட்டும்...

எனக்கும் விடிந்தது. முதல்படியில் கால் வைக்க வாய்ப்பு.

சொன்ன நேரத்திற்கு Viji's என்று எழுதப்பட்டிருக்கும் டாடா சுமோ காரில் வந்தார்கள்.

நான் நான்கு எலுமிச்சம் பழம் வாங்கி வைத்திருந்தேன் கலையுலக ஆசான்களை வரவேற்க.

கஸ்தூரிராஜா சார் வரவில்லை.

ராஜராஜன் சார்... என்னய்யா நல்லாருக்கியா...டைரக்டர் வர முடியலய்யா..

அவர் பையன் வந்திருக்கார்.
அவர்தான்யா அஸோசியேட்டா ஒர்க் பண்றார். கூடவே இருய்யா...நல்லா பழகிக்க.

சரிங்க சார்..

மாதவன் உங்களை ஏன் இவ்வளவு நாளா வெயிட் பண்ண சொன்னேன்னா.... நீ நல்ல பையன்.

வேற கம்பெனில சேர்த்துவிட்டா உங்களை தண்ணி கிண்ணி அடிக்கவிட்டு கெடுத்திடுவாங்கே...

கஸ்தூரிராஜா சார் அப்படி இல்லய்யா...
தம் கூட அடிக்க மாட்டார்.

எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்.
நீ இவர்ட்ட இருய்யா...

இவர்தான் உனக்கு செட்டாவார்.
நல்லா தொழில் பழகிக்கலாம்.

சரிங்க சார்...

நான்கு எலுமிச்சம் பழத்தில் ஒன்றை காமிராமேனுக்கும், ஒன்றை மேனேஜர் #முனிரத்தினம் சாருக்கும், ஒன்றை டைரக்டரின் பையனுக்கும், ஒன்றை காமிராமேனின் அஸோஸியேட் ரமேஷ் அண்ணனுக்கு கொடுத்துவிட்டேன்.

சற்று நேரத்திற்கு பிறகுதான் தெரிகிறது
நான் டைரக்டரின் பையன் என யூகித்தவர் காமிராமேனின் இன்னொரு அஸிஸ்டெண்ட் என்று..

பிறகுதான் செல்வா சாருக்கு இன்னொரு எலுமிச்சம்பழம் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு Sorry Sir... நான் அவரை
(காமிரா அஸிஸ்டெண்ட்) நீங்கள் என நினைத்து விட்டேன்.

பரவாயில்லமா...என்று மிக அமைதியாக பேசினார். மிக எளிமையாக நடந்து கொண்டார்..

அந்த செல்வா சார் யாரென்றால் அவர்தான் இன்று மிகப்பெரிய இயக்குநராக பரிணாமம் பெற்றிருக்கும் திரு.#செல்வராகவன் அவர்கள்.

லொகேஷன் பார்க்க சிறுகுடி போனோம்.
முதலில் ஊர் பெரியவர் திரு. #சிவஞானம் இல்லம்.

ஊரின் ஊரணி வடகரையில் தெற்கு பார்த்த பிரமாண்டமான செட்டிநாட்டு பாணியிலான வீடு.

பெரும் செல்வந்தர். பெரும் நிலச்சுவான்தார். வழக்கறிஞர்.
கால்மேல் கால் போட்டுத்தான் அமர்ந்திருப்பார்.

அவரின் குடும்பத்தினர்கள் பலர் அமெரிக்காவில் இருந்தார்கள். பிள்ளைமார் சமூகம்.

நாட்டாமை படத்தில் வரும் அண்ணன் தம்பி போல அங்குதான் நேரில் பார்த்தேன்.

சிவஞானம் மூத்தவர். அவரிடம் உடன்பிறந்த தம்பிகள் கைகட்டித்தான் நிற்கிறார்கள். உட்கார மாட்டார்கள்.
அவ்வளவு பணிவு.

சினிமா குழுவினர்களை அமரச்சொன்னார் சிவஞானம்.
அமர்ந்தார்கள் திண்ணையில்.

அவருக்கு மட்டும்தான் நாற்காலி.
அவரின் தம்பி கைகட்டியபடி அவரருகே நிற்கிறார்.

நான் பவ்யமாக பிரமித்துப்போய் நடப்பதை கவனித்தபடி நின்றேன்.

சில நிமிடங்களுக்கு பிறகு என்னையும் அமரச்சொன்னார் பெரியவர் சிவஞானம்.

அமர்ந்தேன்.

காபி கொடுத்து உபசரித்தார்கள்.

உங்களுக்கு எந்த வீடு வேணுமோ சொல்லுங்க. கொடுக்கச் சொல்றேன்.

என் வீட்டை தரமாட்டேன்.

ஏற்கனவே வந்த நடிகர் #ராமராஜன் படக்குழுவினர்கள் ஹாலில் எடுத்துக்கிறோம் என்றார்கள்.

சரினு விட்டேன்.

பிறகு என்னடானா அப்படியே பெட்ரூம் வரை வந்து விட்டார்கள்.

அவங்க பாட்டுக்கு கேட்கல.. கொள்ளல..

அன்றோடு சினிமாக்காரர்களை வீட்டுக்குள் விடுவதில்லை.

அசால்டாக பேசினார்.

லட்சுமணன் என்ற அவரது உறவுக்கார அண்ணனை அழைத்தார்..

லட்சுமணா...

அய்யா..

நீ இவங்கள கூட்டிட்டு போய் எந்த வீடு வேணுமோ...பார்க்கச்சொல்லு.

நான் சொன்னேன்னு சொல்லுடா....

சரிங்கய்யா...

லட்சுமணன் அண்ணன் பின்னே சென்று பெரியவர் சிவஞானம் வீட்டின் பின்னே இருக்கும் தெருவில் சில வீடுகளை பார்த்தார்கள் படக்குழுவினர்கள்.

காமிராமேனும், செல்வா சாரும் சினிமா பாஷையில் பேசிக்கொண்டார்கள்.

எந்த இடத்தில் காமிரா வச்சிக்கலாம்.

ஆர்டிஸ்ட் எந்த சைடிலிருந்து எண்ட்ரி கொடுக்கலாம் என்பது மாதிரி...

எனக்கு அன்று #சினிமாவின்_பாலபாடம்
சிறுகுடியில் தொடங்கிற்று....
--------------------------------------------------------------------
படப்பிடிப்பில் இரண்டாவது போட்டோவில் தேவயானி மேடம் உடன் இடது புறத்தில் முதல் ஆள் நான்தான்.
கை கட்டி பவ்யமாக.
எனக்கு அடுத்ததாக நிற்பவர் இனிய நண்பர் சாகுல்.
நன்றி:படம் உதவி நத்தம் #MSD_சாகுல்.

சனி, 2 மே, 2020

ஒரு தலை ராகம்….ஒரு மரபுக்கவிதை…


ஒரு தலை ராகம்….ஒரு மரபுக்கவிதை…

இன்றைய 40 வருடங்களுக்கு முன் எம்.ஏ தமிழ் இலக்கியம் படித்த அந்த மாணவன் அந்த ரயிலில் பயணம் செய்த பெண்ணை விரும்பினான். அப்போது வழக்கமாக வரும் கனவான சினிமாவில் வரவேண்டுமென தீராத ஆவல் அவனுக்கும்…பாடல் எழுதுவான். கையால் ரயில் பெட்டிகளில் தாளம் போட்டு பாட்டும் பாடுவான். காதல் என்னவோ கை கூட வில்லை. ஆனால் கை கூடியது சினிமா எடுக்கும் வாய்ப்பு…அவர் டி.ராஜேந்தர்….

நண்பரின் மூலம் ஒரு சிங்கப்பூர்க்காரரை பார்த்து கதை சொல்ல படம் எடுக்க முடிவெடுக்கப்பட்டது. அன்று பிறந்தது ஒரு தலைராகம்…

நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். மலையாளத்தில் ஒரு படத்தில் நண்பனாக தலை காட்டியிருந்த சங்கர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தயாரிப்பாளரும், டைரக்டருடம் மாயவரம் என்பதால் சூட்டிங் அங்கேயே நடத்தப்பட்டது.

பாடல்கள் வாயால் இசைஅமைத்த ராஜேந்தரால் இசைக்கருவிகளில் கொண்டுவர அனுபமின்மையால் சிரமமாக இருந்தார். ஆந்திராவை சேர்ந்த AA.ராஜ் என்கிற பழைய இசையமைப்பாளர் உதவியுடன் பாடல் பதிவு நடந்தது. பாடகிகள் கிடையாது. பாடகர்கள் எல்லோருக்கூம் ஒரு பாட்டு என பதிவுசெய்யப்பட்டது.

சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியது. தயாரிப்பாளர், டைரக்டர் கருத்து மோதல் ஏற்பட டைரக்டர் வெளியேற்றப்பட்டார். டைரக்டர் தான் என தயாரிப்பாளர் தன் பெயரை போட்டுக்கொண்டார். டைரக்டர் உயிர் பிழைத்தால் போதுமென ஓடி வந்தார். அப்படி மிகச்சிரமத்துடன் அந்த மரபுக்கவிதை பிறந்தது.

குறிப்பிட்ட நாளில் வெளியான ‘ஒரு தலைராகம்’ சக்கைப் போடுபோட்டது. பாடல்கள் பயங்கர ஹிட். ஆனால் சில. ரேடியோக்களில் பாடல் இசை ராஜேந்தர்-ஏஏ.ராஜ் என்ற அறிவிப்புகளும் நடந்தன.

ஊர்ஊராக நூறாவது நாள் விழாவுக்கு நடிகர்கள் சென்று விழாவில் கலந்து கொண்டனர். நடிகர்கள் பிரபலமானார்கள். ஒளிப்பதிவாளர்கள் ராபர்ட்-ராஜசேகர் தனி டைரக்டர்களானார்கள். இதே நடிகர்களை வைத்து எடுத்த ‘பாலைவனச்சோலை’ அவர்களை இயக்குனராக்கியது. ரவீந்தர் முன்னனி வில்லனானார். சந்திரசேகர் நடித்த சிவப்புமல்லி அவரை ஹீரோவாக்கியது. சங்கர் மலையாளத்திலும் தமிழிலும் முன்னனி நடிகரானார். இவருடன் மோகன்லால் வில்லனாக அறிமுகமானார். தயாரிப்பாளர் இப்ராஹிம் ராஜேந்தர் இல்லாமல் ஏ.ஏ.ராஜ் இசையில் ‘தணியாத தாகம்’ என்ற படத்தை டெல்லிகணேஷ் ஹீராவாக எடுத்தார். சில பாடல்கள் ஹிட்டானது. அதிலும் ‘பூவே யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்’ என்ற பாடல் ரேடியோ ஹிட்….நாயகி ரூபா லட்சுமி தேவி என்ற கன்னட நடிகையின் மகள். இந்தப்படத்துக்கப்புறம் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்தார். அவரது கண்கள் அன்று பெரும்பாலும் பேசப்பட்டது….

ஒரு தலைராகம் ஒரு மரபுக்கவிதையாக ஏன் பார்க்கப்படுகிறதென்றால் இதில் தொட்டாற்சிணுங்கி நாயகி. யாரோடும் ஒட்டாதவள். தன் தாய் கெட்ட பெயர் வரக்கூடாதென வாழ்பவள். நாயகனோ காதலை சொல்லாமல் தவித்து மருகுபவன். கடைசி வரை காத்திருப்பவன். இது போன்ற குணாதிசயங்களை இன்று பார்க்கவே முடியாது…அந்த காதலுக்கு அடையாளமாக சந்திரசேகர் சொல்லும் வெள்ளைரோஜாக்கதை கிளாஸாக பார்க்கப்பட்டது.

முழுவதும் கல்லூரி வாழ்க்கையை காட்டியபடமும் இதுவாகத்தான் இருக்கும். பாடல்கள் டி.ராஜேந்தர். ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’ என தனக்காக எழுதிய வரிகளை இந்த படத்தில் பயன்படுத்தினார் டி.ஆர். பெண்களின் பெயரால் எழுதப்பட்ட மீனாரீனா பாடல் அன்றைய ஹிட். இதில் பரதம், டப்பாங்குத்து, வெஸ்டர்ன் எல்லாம் கலந்து இருக்கும். கடைசியில் நாயகன் காதலை சொல்லவரும் போது நாயகன் இறப்பது எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ். தெலுங்கில் இந்த படத்தை சுபக்ளைமாக்சில் முடித்திருப்பார்கள்.

படம் முழுக்க ராஜேந்தரின் சொந்த ஊரான மாயவரம் பகுதிகளிலேயே எடுக்கப்பட்டது. அன்றைய மாயவரம் பகுதிகளை 79ல் காண இப்படம் ஒரு சிறந்த டைம் மெஷின். இந்தப்படத்தில் ஒரு காட்சியில் ராஜேந்தர் தோன்றுவார். அப்போது மேடையில் ஹிந்தி பாடல் பாடும் அவரை கூவி வெறுப்பேற்றுவார்கள். தெரிந்தே அந்த காட்சி வைத்தார் போல. இன்றும் அவர் வந்தால் கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

படத்தில் நடித்த அனைவரும் 90க்கு பின் காணாமல் போய்விட்டார்கள். சங்கர் சமீபத்தில் ‘மணல்நகரம்’ என்ற படம் எடுத்தார். ரவீந்தர் ‘இடுக்கி கோல்ட்’ என்ற மலையாளப்படத்தில் நடித்தார். இப்போதும் நடித்துக்கொண்டிருக்கிறார். தும்பு கைலாஷ் சில மலையாள சீரியல்களில் நடிக்கிறார்.

படத்தில் வரும் AVC கல்லூரி இன்றும் எனக்குப் பிறகு எங்கள் வாரிசுகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் ரயில் நிறுத்தப்பட்டு தண்டவாளங்கள் நீக்கப்பட்டன. தும்புவின் கல்யாணம் நடந்த திருமணமண்டபம் இன்றும் திருமணங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. என் நிச்சயம் இங்கு தான் நடந்தது.

படத்தின் சிறப்பம்சங்கள்…
பெண் பாடகர் கிடையாது.
நாயகன், நாயகி தொட்டுக்கொள்ளவே மாட்டார்கள்.
ஏன் நேரடி உரையாடல் கூட கிடையாது.
பாடல் வரிகள் பாமரனும் புரிந்து கொள்ளும் விதத்தில் யதார்த்தமாக இருக்கும்.

இது ஒரு கவிதை இனி பிறக்காது என்பதே உண்மை….ஏனென்றால் இன்று புதுக்கவிதை காலம்…..

மறந்து போன முகம்...நடிகர் ராஜீவ்


மறந்து போன முகம்... நடிகர் ராஜீவ்...

டி.ராஜேந்தரின் இசையில் அப்போது ஹிட்டானஒரு பாடல் 'அட யாரோ பின் பாட்டு பாட..'...இரயில் பயணங்களில் படத்தில் ஹிட்டானபாடல்...அந்தப்பாடலில் ஆடி ஹிட்டானவர் ராஜீவ்..

ராஜீவ் நிறைய படங்களில் வில்லனாக வந்தாலும் அவர் பாஸிட்டிவ் ரோல்களில் நிறைய படத்தில் வருவார்...கமலோடு நானும் ஒரு தொழிலாளி, பாடும் வானம்பாடி, காதல் கோட்டை போன்ற படங்களில் பாஸிட்டிவ் கேரக்டர். காதல் கோட்டையில் அவர் வில்லனைப்போலவே காட்டப்பட்டாலும் கடைசியில் ஒரே டயலாகால் உயர்ந்த இடத்துக்கு போய்விடுவார்.

மதுரையை சேர்ந்த ராஜசேகர் ஃபிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் படித்தார். பெங்களூருவில் குடும்பத்தோடு செட்டிலான அவரது கிளாஸ்மேட் தான் பின்னாளில் ஆந்திராவில் ஹிட்டான ராஜேந்திர பிரசாத். கோர்ஸ் சேரவே தலையால் தண்ணீர் குடித்த பாடு. கோர்ஸ் இன்டர்வ்யூ செய்தது பாலச்சந்தர், ஸ்ரீதர், திருலோக்சந்தர்,,கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்..ஃபைலை தூதக்கி எறிந்து  கோபப்படுத்தி நடிக்க வைத்து பின் செலக்ட்டானார். கோர்ஸ் முடித்தும் ராஜீவுக்கு சினிமா வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. நடிப்பை மூட்டை கட்டிவிடலாம் என முடிவெடுத்து தாஜ் கொரமண்டல் ஹோட்டலில் வெயிட்டர் வேலைக்கு சேர்ந்தார். மூன்று வருடம் அங்கு காலம் கழிந்தது. ஹோட்டலில் நடந்த ஆண்டுவிழாவில் ஆடி பரிசு வாங்க ஹோட்டல் ஆட்கள் சினிமாவுக்கு போனால் பிரகாசிக்கலாம் என தூபமிட மீண்டும் முயற்சி...

ஒரு முறை ஒரு டப்பிங் ஸ்டுடியோவில் ரவீந்தரை சந்தித்திருக்கிறார் ராஜீவ். மலையாளியான ரவீந்தர் ராஜீவிடம் தான் ஒரு தலைராகம் படத்தில் நடிப்பதாகவும் தனக்கு டப்பிங் குரல் தரமுடியுமா என கேட்க அவர் சம்மதித்திருக்கிறார். ரவீந்தர் டி.ராஜேந்தரிடம் அறிமுகம் செய்து வைக்க ராஜேந்தரோ 'பல்லு படாத பழத்தை குறிவைப்பது தான்டா இந்த அணிலோட பழக்கம்' என்கிற டயலாகை சொல்ல வைத்து  டெஸ்ட் எடுக்க ரவீந்தருக்கு அப்படத்தில் ராஜீவின் குரல். அடுத்து ராஜேந்தரே எடுத்த 'வசந்த அழைப்புகள்' படத்திலும் ரவீந்தருக்கு குரல் கொடுத்தார்.


ராஜேந்தர் தன் ரயில் பயணங்களில் படத்தில் இவரை வில்லனாக்க சினிமாஉலகில் கால் வைத்தார். அடுத்த படமே பாலைவனச்சோலை. அதிலும் வெயிட்டான ரோல் தான்..அடுத்து தேவரின் 'அஞ்சாத நெஞ்சங்களி'ல் நான்கு ஹீரோக்களில் ஒருவர். ராஜீவ் ஹீரோவாகவும் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த 'வெற்றி நமதே' படத்தில் ஹீரோ..நாடோடி ராஜா, வேடிக்கை மனிதர்கள், நிழல் தேடும் நெஞ்சங்கள் என எல்லாம் ஹீரோ தான்...பின் நாயக பதவியிலிருந்து கீழிறங்க...வில்லன்..

உள்ளே வெளியே படத்தில் வில்லனாக நடித்தார். ஜெயம் படத்தில் அப்பா ரோல்...பின் கிடைக்கும் வேஷங்களை செய்தார். அபூர்வராகங்கள் படத்தை கன்னடத்தில் சுஹாசினியை வைத்து பாலச்சந்தர் எடுத்த போது அதில் ஜெய்கணேஷ், ரஜினிகாந்த் நடித்த ரோலில் ராஜீவ் நடித்தார். அது ஹிட்டாக நிறைய கன்னடப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

வயதாக ஆக வாய்ப்புகளும் குறைய தொடங்கின. நல்ல டப்பிங் கலைஞரானதால் நிறைற்ற டப்பிங் குரல் கொடுக்க தொடங்கினார். பாரதி படத்தில் பாரதிக்காக ஷாயாஜி ஷிண்டே குரல் ராஜீவுடையது தான். மோகன்லாலுக்காக அரண், சிறைச்சாலை, அரசன் போன்ற படங்களுக்கும், அருண்பாண்டியனுக்காக ராஜ முத்திரை, அசுரன் படங்களிலும் இவரது குரல் தான்.

எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் தொடங்கிய போது அதற்கு நிதி திரட்ட கங்கை அமரனோடு இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். அதை பாராட்டி எம்.ஜி.ஆர் அவருக்கு மோதிரம் பரிசளித்தார்.

ராஜீவின் பிறந்தநாளன்று நண்பர்களுக்கு இனிப்பு கொடுக்க போனபோது அவரது தந்தை மாரடைப்பால் இறந்தார். வந்து பார்த்த ராஜீவ் கதறினார். இடியாக அடுத்த ஒரு மாதத்தில் அவரது தாய்க்கும் மாரடைப்பு ஏற்பட ஒரு வருடம் ஆஸ்பத்திரியிலேயே இருந்து அவரும் இறந்தார். இந்த ஆறாத துக்கத்தால் ராஜீவ் திருமணமே செய்யாமல் காலத்தை கழித்தார்.அண்ணன்கள் ரொம்ப வற்புறுத்தியதால் உறவுக்கார பெண்ணை மணந்தார். ஒரு மகன், ஒரு மகள்...

எத்தனை படத்தில் நடித்தாலும் ராஜீவை மறக்கமுடியாதது அந்த ரயில் பயணங்கள் வில்லனான தீபக் கேரக்டர் தான்..வார்த்தையாலேயே அவர் ஜோதியை சுடுவது...அடடா..

"விலங்கை மட்டும் மாட்டிக்கல..இந்த விலங்கு கிட்ட மாட்டிக்கிட்டோம்னு ஃபீல் பண்றியா?"

"நீங்க ஏற்கனவே பார்த்துட்டீங்க...நான் இன்னும் பார்க்கவே இல்லை..ஐ மீன் படத்தை சொன்னேன்.."

"அது ஜேசுதாஸ் தாடி இல்லைடி. தேவதாஸ் தாடி.."

மனைவியின் முன்னாள் காதலனை அவள் முன்பாகவே ஆள் வைத்து அடித்து அதை ரசிக்கும் அந்த சாடிஸ்ட் கணவன்....ராஜீவ்...அசத்தல் வில்லன்...

நீங்க திரும்பவும் நடிக்கலாம்...சான்ஸ் கிடைத்தால்.....