சனி, 2 மே, 2020

ஒரு தலை ராகம்….ஒரு மரபுக்கவிதை…


ஒரு தலை ராகம்….ஒரு மரபுக்கவிதை…

இன்றைய 40 வருடங்களுக்கு முன் எம்.ஏ தமிழ் இலக்கியம் படித்த அந்த மாணவன் அந்த ரயிலில் பயணம் செய்த பெண்ணை விரும்பினான். அப்போது வழக்கமாக வரும் கனவான சினிமாவில் வரவேண்டுமென தீராத ஆவல் அவனுக்கும்…பாடல் எழுதுவான். கையால் ரயில் பெட்டிகளில் தாளம் போட்டு பாட்டும் பாடுவான். காதல் என்னவோ கை கூட வில்லை. ஆனால் கை கூடியது சினிமா எடுக்கும் வாய்ப்பு…அவர் டி.ராஜேந்தர்….

நண்பரின் மூலம் ஒரு சிங்கப்பூர்க்காரரை பார்த்து கதை சொல்ல படம் எடுக்க முடிவெடுக்கப்பட்டது. அன்று பிறந்தது ஒரு தலைராகம்…

நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். மலையாளத்தில் ஒரு படத்தில் நண்பனாக தலை காட்டியிருந்த சங்கர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தயாரிப்பாளரும், டைரக்டருடம் மாயவரம் என்பதால் சூட்டிங் அங்கேயே நடத்தப்பட்டது.

பாடல்கள் வாயால் இசைஅமைத்த ராஜேந்தரால் இசைக்கருவிகளில் கொண்டுவர அனுபமின்மையால் சிரமமாக இருந்தார். ஆந்திராவை சேர்ந்த AA.ராஜ் என்கிற பழைய இசையமைப்பாளர் உதவியுடன் பாடல் பதிவு நடந்தது. பாடகிகள் கிடையாது. பாடகர்கள் எல்லோருக்கூம் ஒரு பாட்டு என பதிவுசெய்யப்பட்டது.

சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியது. தயாரிப்பாளர், டைரக்டர் கருத்து மோதல் ஏற்பட டைரக்டர் வெளியேற்றப்பட்டார். டைரக்டர் தான் என தயாரிப்பாளர் தன் பெயரை போட்டுக்கொண்டார். டைரக்டர் உயிர் பிழைத்தால் போதுமென ஓடி வந்தார். அப்படி மிகச்சிரமத்துடன் அந்த மரபுக்கவிதை பிறந்தது.

குறிப்பிட்ட நாளில் வெளியான ‘ஒரு தலைராகம்’ சக்கைப் போடுபோட்டது. பாடல்கள் பயங்கர ஹிட். ஆனால் சில. ரேடியோக்களில் பாடல் இசை ராஜேந்தர்-ஏஏ.ராஜ் என்ற அறிவிப்புகளும் நடந்தன.

ஊர்ஊராக நூறாவது நாள் விழாவுக்கு நடிகர்கள் சென்று விழாவில் கலந்து கொண்டனர். நடிகர்கள் பிரபலமானார்கள். ஒளிப்பதிவாளர்கள் ராபர்ட்-ராஜசேகர் தனி டைரக்டர்களானார்கள். இதே நடிகர்களை வைத்து எடுத்த ‘பாலைவனச்சோலை’ அவர்களை இயக்குனராக்கியது. ரவீந்தர் முன்னனி வில்லனானார். சந்திரசேகர் நடித்த சிவப்புமல்லி அவரை ஹீரோவாக்கியது. சங்கர் மலையாளத்திலும் தமிழிலும் முன்னனி நடிகரானார். இவருடன் மோகன்லால் வில்லனாக அறிமுகமானார். தயாரிப்பாளர் இப்ராஹிம் ராஜேந்தர் இல்லாமல் ஏ.ஏ.ராஜ் இசையில் ‘தணியாத தாகம்’ என்ற படத்தை டெல்லிகணேஷ் ஹீராவாக எடுத்தார். சில பாடல்கள் ஹிட்டானது. அதிலும் ‘பூவே யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்’ என்ற பாடல் ரேடியோ ஹிட்….நாயகி ரூபா லட்சுமி தேவி என்ற கன்னட நடிகையின் மகள். இந்தப்படத்துக்கப்புறம் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்தார். அவரது கண்கள் அன்று பெரும்பாலும் பேசப்பட்டது….

ஒரு தலைராகம் ஒரு மரபுக்கவிதையாக ஏன் பார்க்கப்படுகிறதென்றால் இதில் தொட்டாற்சிணுங்கி நாயகி. யாரோடும் ஒட்டாதவள். தன் தாய் கெட்ட பெயர் வரக்கூடாதென வாழ்பவள். நாயகனோ காதலை சொல்லாமல் தவித்து மருகுபவன். கடைசி வரை காத்திருப்பவன். இது போன்ற குணாதிசயங்களை இன்று பார்க்கவே முடியாது…அந்த காதலுக்கு அடையாளமாக சந்திரசேகர் சொல்லும் வெள்ளைரோஜாக்கதை கிளாஸாக பார்க்கப்பட்டது.

முழுவதும் கல்லூரி வாழ்க்கையை காட்டியபடமும் இதுவாகத்தான் இருக்கும். பாடல்கள் டி.ராஜேந்தர். ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’ என தனக்காக எழுதிய வரிகளை இந்த படத்தில் பயன்படுத்தினார் டி.ஆர். பெண்களின் பெயரால் எழுதப்பட்ட மீனாரீனா பாடல் அன்றைய ஹிட். இதில் பரதம், டப்பாங்குத்து, வெஸ்டர்ன் எல்லாம் கலந்து இருக்கும். கடைசியில் நாயகன் காதலை சொல்லவரும் போது நாயகன் இறப்பது எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ். தெலுங்கில் இந்த படத்தை சுபக்ளைமாக்சில் முடித்திருப்பார்கள்.

படம் முழுக்க ராஜேந்தரின் சொந்த ஊரான மாயவரம் பகுதிகளிலேயே எடுக்கப்பட்டது. அன்றைய மாயவரம் பகுதிகளை 79ல் காண இப்படம் ஒரு சிறந்த டைம் மெஷின். இந்தப்படத்தில் ஒரு காட்சியில் ராஜேந்தர் தோன்றுவார். அப்போது மேடையில் ஹிந்தி பாடல் பாடும் அவரை கூவி வெறுப்பேற்றுவார்கள். தெரிந்தே அந்த காட்சி வைத்தார் போல. இன்றும் அவர் வந்தால் கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

படத்தில் நடித்த அனைவரும் 90க்கு பின் காணாமல் போய்விட்டார்கள். சங்கர் சமீபத்தில் ‘மணல்நகரம்’ என்ற படம் எடுத்தார். ரவீந்தர் ‘இடுக்கி கோல்ட்’ என்ற மலையாளப்படத்தில் நடித்தார். இப்போதும் நடித்துக்கொண்டிருக்கிறார். தும்பு கைலாஷ் சில மலையாள சீரியல்களில் நடிக்கிறார்.

படத்தில் வரும் AVC கல்லூரி இன்றும் எனக்குப் பிறகு எங்கள் வாரிசுகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் ரயில் நிறுத்தப்பட்டு தண்டவாளங்கள் நீக்கப்பட்டன. தும்புவின் கல்யாணம் நடந்த திருமணமண்டபம் இன்றும் திருமணங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. என் நிச்சயம் இங்கு தான் நடந்தது.

படத்தின் சிறப்பம்சங்கள்…
பெண் பாடகர் கிடையாது.
நாயகன், நாயகி தொட்டுக்கொள்ளவே மாட்டார்கள்.
ஏன் நேரடி உரையாடல் கூட கிடையாது.
பாடல் வரிகள் பாமரனும் புரிந்து கொள்ளும் விதத்தில் யதார்த்தமாக இருக்கும்.

இது ஒரு கவிதை இனி பிறக்காது என்பதே உண்மை….ஏனென்றால் இன்று புதுக்கவிதை காலம்…..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக