ஒரு சில நடிகர்களே விவரம் தெரிந்த வயதிலிருந்து கடைசி மூச்சு வரை நடிகர்களாகவே இருந்தார்கள்
ஒரு சில நடிகர்களே விவரம் தெரிந்த வயதிலிருந்து கடைசி மூச்சு வரை நடிகர்களாகவே இருந்தார்கள். அவ்விஷயத்தில் எம்.ஆர் ராதா முன்னோடி, கமலஹாசனுக்கும் அந்த வாய்ப்பு இருந்தது, அவரே கெடுத்துகொண்டார்.
நடிகைகளில் அப்படி வாழ்ந்த ஒரே நடிகை ஶ்ரீதேவி, அதில் சந்தேமே இல்லை, கிட்டதட்ட 4 வயதில் நடிக்க வந்தவர். மிக சிறியவயதிலே வந்த நடிகை அவர்தான். மழலை நட்சத்திரம் , குழந்தை நட்சட்திரம் போன்ற நடிகையாக இருந்தேதான் அவரால் படிக்கவும் முடிந்தது , அதுவும் அதிகமில்லை
அவரின் குழப்பமான குடும்ப சூழலில் அவருக்கு வேறு தெரிவும் இருக்கவில்லை
பாலசந்தரும், பாரதிராஜாவும் அவரின் திறமையினை வெளிச்சம் கொடுத்து காட்டினர். தமிழக சினிமா வரலாறை புரட்டி போட்ட 16 வயதினிலே வரும்பொழுது ஶ்ரீதேவி வயது வெறும் 15
முழு புடவையினை அவர் தளைய சுற்றி, நெற்றி பொட்டும் தலைநிறைய பூவும், நீண்ட முடியுமாக வந்தபொழுது எந்த மானிடரும் அவரை திரும்பி பார்க்காமல் செல்ல முடியாது , தெய்வங்களே திரும்பும் காட்சி அது
தொடர்ந்து பாலசந்தரின் மூன்று முடிச்சு முதல் பல படங்களில் பின்னி எடுத்தார். 1980ல் கிரிக்கெட்டை கபில் ஆள, தமிழகத்தை ராமசந்திரன் ஆள , தமிழ் சினிமா உலகின் தனிபெரும் ராணியாக வலம் வந்தார் ஶ்ரீதேவி
எல்லா நடிகர்களும் அவரோடு நடிக்க துடித்தனர், சிவாஜி கணேசனே வந்து நின்றார், இதையெல்லாம் ராமசந்திரன் பார்த்து பல்லை கடித்துகொண்டிருந்தார் காரணம் அவர் முதல்வராக இருந்து தொலைத்ததால் அரசியலில் மட்டும் அவர் நடிக்க முடிந்தது
பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை அவரை கொண்டாட வைத்தது, அந்த தன்னிலை மறைந்த குழந்தை மனம் கொண்ட குமரியாக அசத்தியிருந்தார். நிச்சயம் அப்படத்தில் கொண்டாடபட்டிருக்க வேண்டியது ஶ்ரீதேவி நடிப்பு, ஆனால் ஆணாதிக்க சினிமா உலகம் கமலஹாசனையே கொண்டாடிற்று, அதில் ஜனகராஜ் நடித்திருந்தாலும் நன்றாகத்தான் வந்திருக்கும்
மூன்றாம் பிறை படத்தின் வெற்றியே ஶ்ரீதேவியிடம்தான் அடங்கி இருந்தது
கிராமத்து பெண், அல்ட்ரா மாடர்ன் பெண், காதலில் உருகும் பெண், பாசமான அன்னை, பணக்கார திமிர் என எல்லா வேடங்களிலும் இன்றுள்ள நடிகைகளுக்கு முன்னோடி அவர், குறிப்பாக ரம்யா கிருஷ்ணனுக்கு
இன்றும் 1980 படங்களை கவனியுங்கள், பிரியா, வாழ்வே மாயம், மூன்று முடிச்சு, குரு என எதுவாகவும் இருக்கட்டும், நடிப்பில் அட்டகாசமாக கமலுக்கு சவால் விடுவார் ஶ்ரீதேவி, கமல் மீது ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் அவர் சிறந்த நடிகர் என்பது மறுக்கமுடியாது
மழைக்கால மேகம் ஒன்று பாடலை கவனித்தால் கமலஹாசனின் நடனம் ஶ்ரீதேவி முன்னால் திணறுவது தெரியும், அவ்வளவு நளினான நடனம் ஶ்ரீதேவியுடையது
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது பாடலில், போட்டியாக தொடங்கும் பாடலில் கடைசியில் கமல் காதல் சொன்னதும் ஆயிரம் முகபாவங்களை நொடியில் காட்டும் ஶ்ரீதேவி அசரவைத்திருந்தார்
மீண்டும் கோகிலா போன்ற படங்களில் அப்படியே பிராமண பெண் வேடத்தில் பொருந்திய ஶ்ரீதேவி, ராணுவ வீரனின் தாழ்த்தபட்ட பெண்ணாக அசத்தவும் தவறவில்லை
மூன்று முடிச்சு படத்தில் ரஜினியின் வில்லத்தனத்திற்கு சவால்விட்டு நடித்த ஶ்ரீதேவி, குறிப்பாக சித்திடா.. உனக்கு சித்தி என தெனாவெட்டாக கடந்து செல்லு ஶ்ரீதேவி , ரஜினியின் கெத்தான நடிப்பை தூக்கி விழுங்கியவராக தெரிந்தார்
தமிழக நடிகர்கள் புகழ்பெற்றால் அடுத்து முதல்வர் கனவு வரும் , நடிகைகளுக்கு இன்று குஷ்பு போல வாய்ப்பு உண்டு என்றாலும் அன்று அப்படி அல்ல, அடுத்தகட்ட கனவு பாலிவுட்டாக இருக்கும்
பாலிவுட் பயங்கரமான சவால் நிறைந்தது, யார் வெல்வார் சறுக்குவார் என தெரியாது, தமிழில் வாய்ப்பு மறுக்கபட்ட ஹேமா மாலினியும், வித்யா பாலனும் அங்கு இந்தி அறிமுகமாகவே வென்றார்கள்
ஆனால் தமிழ் நடிகையாக ஜொலித்து, பின் மும்பை சென்று தனக்கென தனி இடம் பிடித்த ஒரே நடிகை ஶ்ரீதேவி. கமலஹாசனாலும் மும்பையில் தாக்கு பிடிக்க முடியவில்லை, சகலகலா வல்லவன் என்பதெல்லாம் த்மிழக முட்டு சந்திற்குள்தான்
அங்கேயே ஜொலித்தார் ஶ்ரீதேவி. அது என்ன சாபமோ தெரியவில்லை சினிமா நட்சத்திரம் எனும் பெயர் நடிகைகளுக்கு முக்காலமும் பொருந்த கூடியது
தன்னில் எரிந்து வெகு தொலைவில் இருக்கும் நமக்கு வைரமாக தெரியும் வானத்து நட்சத்திரம் தனக்குள் பல்லாயிரம் டிகிரி செல்சியஸில் கொதிக்கின்றது
நடிகைகளும் அப்படியே, திரைவானில் மின்னினாலும் அதன் இன்னொரு கருப்புபக்கம் அவர்களை தீரா சோகத்திலும் , ஆழா துயரத்தில் நிரப்பியும் வைத்துவிடுகின்றது
பெண் அழகாய் பிறப்பதும் பெரும் சாபம் , அழகுடன் எந்த தொழிலில் இறங்கினாலும் ஆபத்து அதுவும் சினிமாவில் இறங்கினால் பேராபத்து என்பதை உணர்ந்தவர்களில் அந்த நட்சத்திரங்களும் உண்டு, ஆனால் விழுந்தால் எளிதில் வெளிவரமுடியா மாய உலகமும் அதுவே
அதில் சிலர் தற்கொலை செய்கின்றனர், சிலர் முழுக்கு போட்டு ஓடுகின்றனர், குஷ்பு போன்ற தைரியசாலிகள் வென்று நிற்கின்றனர்
சாவித்திரி போன்றோர் குடியில் நிம்மதி தேடினர், ஶ்ரீதேவியும் அதில் விழுந்தார். பம்பாய் கலாச்சாரத்தில் அதுவன்றி நிலைக்க முடியாது என்பதும் வேறு விஷயம்
குடி அவரின் உருவத்தை மாற்றியது, கொஞ்சம் இடைவேளைக்கு பின் அவர் நடிக்க வந்தபொழுது அவர் உருவமே மாறிற்று, புலி போன்ற சமீபத்திய படங்களில் அது தெரியலாம்
ஶ்ரீதேவிக்கான இடம் கிட்டதட்ட அப்படியே இருந்தது ஆச்சரியமானது, அவர் திரும்ப தெற்கே நடிக்க வந்ததும் ஆளாளுக்கு வரவேற்றார்கள், பாகுபலியில் கூட ரம்யா கிருஷ்ணன் வேடத்தில் முதலில் பேசபட்டவர் அவர்தான்
சமீபகாலமாக குடி அதிகரித்தது என்றார்கள், நேற்று துபாய்கு சென்ற நிகழ்விலும் குடி அதிகம் என்கின்றன செய்திகள், அவர் மரணமடைந்து கூட அது மரணமா? மயக்கமா? என்ற குழப்பம் நீடிக்கும் அளவிற்கு நிலமை சென்றிருக்கின்றது
அதே நட்சத்திர சாபம்
1970களில் வளர்ந்தவர்களுக்கு அக்குழந்தை ஶ்ரீதேவி மறக்க முடியாதவர், 1980களில் வளர்ந்தவர்களுக்கு ஶ்ரீதேவி "கனவு கன்னி", இப்பொழுது வந்த விங்கிஸ், மாம் படம் பார்த்தவர்களுக்கு அவர் கனவு அம்மா
ஒரு நடிகையின் வெற்றி என்பது இதுதான், முழுக்க முழுக்க தன் வாழ்வினை சினிமா நடிப்பிற்கே அர்பணித்த ஒரே நடிகை இந்தியாவில் அவர்தான், இன்னொருவரை சொல்லவேண்டுமானால் மனோரமாவினை சொல்லலாம் ஆனால் அவர் 13 வயதிற்கு மேல்தான் நாடகத்திற்கு வந்தார் என்கின்றார்கள்.
மயிலு.. எனும் பெயருக்கு ஏற்றார் போல, சினிமாவில் மயிலாகவே ஜொலித்த அந்த ஶ்ரீதேவி இனி இல்லை
ஶ்ரீவித்யா போலவே 50களிலே அவர் வாழ்வு முற்றுபெற்றாயிற்று, ஶ்ரீதேவிக்கு சவால் விடும் நடிகையாக வந்த அந்த ஷோபாவினை போல இளம் வயதில் மரிக்கவில்லை என்றாலும் 53 வயது என்பது சாக கூடிய வயது அல்ல
ஆனால் ஷோபா விட்டுசென்ற வெற்றிடமே ஶ்ரீதேவியினை ஜொலிக்க வைத்தது என்பதும் இன்னொரு விஷயம், அவர் இருந்திருந்தால் ஶ்ரீதேவி நிச்சயம் வளர்ந்திருக்க முடியாது
மறக்க கூடியவரா ஶ்ரீதேவி?
1980கள் தமிழ்திரையில் பொற்காலம். இளையராஜா, பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா ,மகேந்திரன் என ஒரு கூட்டம் அற்புதமான காவியங்களை கொடுக்க தொடங்கியிருந்தது, தன் கடைசிகாலத்தில் அணையும் ஜொதி பிரகாசமாக எரிவது போல கண்ணதாசனும் ஜொலித்தார்
இதில் எந்த கலைஞனை எடுத்தாலும் ஶ்ரீதேவி முகம் வராமல் போகாது
பாரதிராஜாவின் "பதினாறு வயதினிலே" " சிகப்பு ரோஜாக்கள் அகட்டும், பாலசந்தரின் "மூன்று முடிச்சு" ஆகட்டும், மகேந்திரனின் "ஜாணி" ஆகட்டும் ,எஸ்.பி முத்துராமனின் "பிரியா" ஆகட்டும் ஶ்ரீதேவி தவிர்க்க முடியாதவர்
பாலுமகேந்திராவின் "மூன்றாம் பிறை" தவிர்க்க முடியாதபடம்
இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடலில் எல்லாம், ஜென்ஸி, ஜாணகி குரலில் எல்லாம் ஶ்ரீதேவி முகம் தெரிந்துகொண்டே இருக்கும்
ஶ்ரீதேவி என்றவுடன் அவரின் முகங்களில் முதலில் தெரிவது செந்தூர பூவே.. என்ற பாடலும், என் வானிலே ஒரே வெண்ணிலா எனும் அந்த பாடலுமே
அந்த ஶ்ரீதேவி மறைந்துவிட்டார் என்றவுடன் பெரும் அதிர்ச்சி தாக்கிவிட்டுத்தான் செல்கின்றது, நேற்றுதான் அவரின் மாம் படம் பார்க்க முடிந்தது. மனுஷி தாயின் போரட்டம் எனும் அக்கதையில் அப்படி வாழ்ந்திருந்தார்
மயிலு என்பது போலவே மருண்ட பார்வையும், அகவும் வித்தியாசனான குரலும், அழகு நடையும், முகத்தை அட்டகாசமாக மயில் கழுத்து போலவே வெட்டும் அந்த ஶ்ரீதேவி இனி இல்லை
சாவித்திரி, ஶ்ரீவித்யா, கண்ணதாசன் போன்ற ஜாம்பவான்கள் விடைபெற்ற 50 வயதுகளிலே அவரும் சென்றுவிட்டார்.
கவியரசன் கண்ணதாசன் வார்த்தை பலிதம் நிறைந்தவர் , தன் கடைசிபாடலான அந்த பாடலை இந்த ஶ்ரீதேவிக்காகத்தான் எழுதினார்
அப்பாடலின் வரிகளை விட அஞ்சலி ஏதுமில்லை, அதை பாடியே அவரை நிரந்தரமாக உறங்க வைக்கலாம்
"கண்ணே கலைமானே.." என தொடங்கும் அந்த பாடலின் ஆரீராரோ ஓ ஆராரிரோ என்ற வரிகளுடன் அவர் உறங்கட்டும்
பாலகியாக வந்து பருவவயதில் போராடி மும்பையில் வென்று அதில் நிலைக்க போணி கபூரையும் மணந்து பெரும் போராட்டமாகவே சென்ற அவரின் வாழ்வில் இருந்து அவர் விடைபெற்றார்,
தன் தீரா சோகங்களை மதுவுடன் மட்டுமே பகிந்துகொண்ட அவருக்கு தன் கசப்புகளை மறக்க அந்த கசப்பான பானத்தை அருந்தும் அவசியம் இனி இல்லை
சினிமா கேமராவற்கும், பத்திரிகையாளர்களுக்கும் வலுகட்டாயமாக தன் முகத்தில் சிரிப்பினை கொடுத்த ஶ்ரீதேவி, மனம் நிறைந்து தனக்கான சிரிப்பினை கொடுத்திருந்தால் எப்படி இருந்திருகும்?
கடைசி வரை அதனை கொடுக்க அவருக்கு காலம் வழிவிடவே இல்லை, அடுத்த பிறவியிலாவது அது அவருக்கு கிடைக்கட்டும்
போய்வாருங்கள் ஶ்ரீதேவி, அடுத்த பிறவியிலாவது அரிதாரம் பூசி, கேமராவிற்காய் சிரித்து, அதற்காவே வாழ்ந்து, மனதை கல்லாக்கி மனம் வெறுத்து வாழ்ந்து , அந்த உலகின் கருப்பு பக்கங்களில் மதுவுடன் மட்டும் உங்கள் கண்ணீரை பகிரும் சோக வாழ்வு வேண்டாம்
யாருக்கும் தெரியாமல் இந்த உலகின் ஏதோ ஒரு மூலையில் நீங்கள் விரும்பிய அமைதியான வாழ்வினை ரசித்து , உண்மையாக சிரித்து வாழுங்கள்.
இந்திய திரையுலகிலே முத்திரை பதித்த அந்த மாபெரும் நடிகைக்கு, தமிழக மயிலுக்கு ஆழ்ந்த அஞ்சலி
"ஏதோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது"
என்ற கண்ணதாசனின் வரிகள், காதோரம் ஒலித்து மனதை கனக்க செய்து, சில துளி கண்ணீரையும் சிந்த வைக்கும் நேரமிது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக