திங்கள், 30 மார்ச், 2020

ஒய் இளையராஜா இஸ் கிரேட்

*ஒய் இளையராஜா* *இஸ் கிரேட்?*


இளையராஜாவின் இசைக் கட்டமைப்பை ஆழ்ந்து உள்வாங்கினால், அவர், தனது ஒவ்வொரு பாடலையுமே, பிறந்த குழந்தையொன்றை கையில் வாங்கும் ஒரு பக்குவ மன நிலையையொத்தே கவனமாக அணுகியிருக்கிறார்.

ஒரு பாடலென்பது நமக்கு வெறும் தனிப்பட்ட ஒரு 'பீஸ்' ஆக மட்டுமே தோன்றுகிறது. ஆனால் இளையராஜாவைப் பொருத்தவரை அதை தனிப்பாடலாக கருதாமல், அதையும் கதைசொல்லும் ஒரு கருவியாகவே அணுகியிருக்கிறார்.

ஒவ்வொரு பாடலின் இசை கட்டமைப்பிலும் மகிழ்ச்சி, துக்கம், இரக்கம், கதையின் சூழல், கதாபாத்திரத்தின் குணாதியசங்கள் உள்ளிட்டவற்றை இசைக்கெனவே இருக்கும் பிரத்யேக குணாதிசயங்களின் வழியாக புகுத்தி இசையின் மொழியிலேயே பார்வையாளர்களுக்கு பூடகமாக வெளிப்படுத்துகிறார்.

ஆனால் 99 சதவிகித பார்வையாளர்களுக்கு அவரின் இசையின் உள்ளடக்கம் புரிவதில்லை. அதற்கான சூழலும் இல்லை. ஜஸ்ட் கேட்க சுகமாக இருக்கிறது என்பதுடன் அவர்கள் நிறுத்திக்கொள்கிறார்கள்.

ஆனால் அவரது இசையின் உள்ளடக்கத்தையும் சேர்த்து புரிந்துகொண்டதால்தான் கர்னாடக சங்கீத ஜாம்பவான்கள்  தொடங்கி இந்துஸ்தானி இசை மேதைகள் வரை இளையராஜாவை இன்னும் பிரமிப்பு அகலாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

 இப்படியாக, பார்த்து பார்த்து அவர் செதுக்கிவைத்திருக்கும்போது அதில் ஏதேனும் தவறு நடந்தால் சும்மாவா இருப்பார்? தான் இசையமைத்த பாடலை அதன் கட்டுமானம் விலகும்படியாக கூடுதல் திருத்தம் செய்தோ, அலட்சியமாகவோ யாரேனும் மேடைகளில் பாடினால், இளையராஜாவுக்கு பயங்கர கோவம் வரும் என சில பாடகர்கள் சொல்வதன் பின்னால் உள்ள காரணமும் இதுதான்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஸ்ரீ ராகவேந்திரர் படத்தில் வரும், 'ராம நாமம் ஒரு வேதமே' பாடலைப் பார்க்கிறேன். பாடலின் துவக்கத்தில் சிறுவனாக இருக்கும் ரஜினி, இசை கற்கிறார். பின் இளைஞராக வளர்ந்து அந்த பாடல் முடிவதற்குள்ளாக இசை வித்வானாகவே அவர் மாறிவிடுவதுபோல அந்த பாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சாதாரணமாக பார்க்கும்போது சூர்யவம்சம் படத்தில் ஒரே பாடலில் தேவயானி கலெக்டர் ஆவதுபோன்ற வழக்கமான பாடலாகத்தான் அது தெரியும். ஆனால், முன்னரே சொன்னதுபோல அந்த பாடலுக்குள் இளையராஜா புகுத்தியுள்ள விஷயங்களை உள்ளார்ந்து ஆராய்ந்தால், இளையராஜாவின் மீதுள்ள மரியாதையுடன்கூடிய பிரமிப்பு மேலும் அதிகரிக்கிறது.

காரணம், கர்னாடக சங்கீதத்தின் துவக்க படி நிலை ராகமான, “மாயாமாளவ கெளளை” ராகத்தில் அதை உருவாக்கியிருக்கிறார் இளையராஜா. கர்னாடக இசையை கற்றுக்கொள்பவர்கள் அந்த ராகத்தில்தான் முதலில் பயிற்சி எடுப்பார்கள். கதைப்படி சிறுவன் ரஜினி, இசை கற்பதால் அதே ராகத்தை இளையராஜா இங்கே பயன்படுத்துகிறார்.

நிற்க ...

விஷயம் அதுவல்ல.

ரஜினி சிறுவனாக இருக்கும்போது அந்த ராகத்தை சாதாரணமாக கையாளும் இளையராஜா, இளைஞராக ரஜினி உருமாறும்போது அதே ராகத்தில் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். மாயாமாளவ கெளளையில் உச்சபட்சமாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்கிறார். அதாவது, கதைப்படி, சிறுவன் உடல் ரீதியாக மட்டும் வளர்ச்சியடையாமல் இசையிலும்கூட வல்லமைமிக்கவராக தற்போது உருமாறிவிட்டார் என்பதை இந்த சேஞ்ச் ஓவர் வாயிலாக பார்வையாளர்களுக்கு சொல்ல விளைகிறார் இளையராஜா.

ஸ்ரீ ராகவேந்திரர் படம் ஆன்மீக பட கேட்டகரி. மற்ற படங்களை போல 20 பேரை பந்தாடும்படியாகவோ, பன்ச் டயலாக் பேசும்படியாகவோ இந்த படத்தில் ரஜினிக்கு ஓப்பனிங் வைக்க முடியாது.

ஆனால், இங்கு தனது இசைமொழியால் பார்வையாளர்களுடன் பேசும் இளையராஜா, இந்தப் பாடலில் வரும் அந்த சேஞ்ச் ஓவர் போர்சன் வாயிலாக, ரஜினியின் மற்ற கமர்ஷியல் படங்களின் ஓப்பனிங் சீன்களுக்கு நிகரான ஒரு ஓப்பனிங்கை ரஜினிக்கு வழங்குகிறார்.

இந்த பாடலை இளையராஜா அணுகியுள்ள விதம் குறித்து அறியும்போது இசை மீது அவர் கொண்டுள்ள கட்டுக்கோப்பான ஒழுங்கையும் இசையை பரிபூரணமாக வழங்கவேண்டும் என இயல்பிலேயே அவர் கொண்டுள்ள எண்ணத்தையும் அறிய முடிகிறது.

இது இளையராஜாவின் இசை குறித்த மிகச்சிறிய உதாரணமே. மற்றபடி, இதுபோல அடுக்கிக்கொண்டே போனால் சுரங்கம் போல போய்க்கொண்டேயிருக்கும்.  ❤

(இந்த ராகத்தில் கற்பனையே செய்துபார்க்க முடியாதபடி பல பரிமாணங்களில் ஏகப்பட்ட பாடல்களை இளையராஜா போட்டிருக்கிறார். கோபுர வாசலிலே படத்தில்வரும் 'காதல் கவிதைகள் படித்திடும் நேரம்' மாரியம்மா மாரியம்மா, பூங்கதவே தாழ் திறவாய், காதல் மகராணி கவிதை தேன் குடித்தாள்,மதுர மரிக்கொழுந்து வாசம், அப்பன் என்றும் அம்மை என்றும் ,குயில புடிச்சு கூண்டுலடைச்சு, தாயுண்டு தந்தையுண்டு பாடல்கள் என வருவதில் அதில் ஒரு மாஸ்டர் பீஸ் என்பது நாம் தந்த சிறுதுளி பாடல்கள் ..இது போல வெள்ளமென அள்ளி இறைத்துள்ளார் இந்த ராகத்தில் பாடல்களை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக