வியாழன், 29 ஜூன், 2017

நரிக்குறவர்கள் மீது அன்பு காட்டும் எம்.ஜி.ஆர்.



நரிக்குறவர்கள் மீது அன்பு காட்டும் எம்.ஜி.ஆர்.

M.G.R. மீது ரசிகர்களும் அடித்தட்டு மக்களும் தங்கள் உயிரையே வைத்திருந்தனர். இது ஏதோ கண்மூடித்தனமான பக்தியால் திடீரென ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல. அந்த அளவுக்கு ரசிகர்களையும் சாதாரண மக்களையும் எம்.ஜி.ஆர். நேசித்தார். சில நேரங்களில் அவர்கள் தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டாலும் அதை அவர்களின் அன்பின் வெளிப்பாடாகவே எடுத்துக் கொள்வார்.
எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் முகத் துவார பகுதியில் எடுக்கப்பட்டன. அது வரை எந்தப் படங்களிலும் இடம்பெறாத அபூர்வ லொகேஷன் அது. அதேநேரம், மனித நடமாட்டத்தை அதிகம் பார்க்க முடியாத, மீனவர்களேகூட அப்போது போக அஞ்சிய இடம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து அங்கும் மக்கள் வந்துவிட்டனர்.
அந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர். மாறு வேடத்தில் இருப்பார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர் கள் எம்.ஜி.ஆரை காண வேண்டும் என்ற ஆவலில் தண்ணீரில் குதித்து நீந்தி அவர் இருந்த இடத்துக்கு வந்துவிட்டனர். அந்த இளைஞர்களை அழைத்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் நலம் விசாரித்தார். அப் போது, ஒரு இளைஞர் எதிர்பாராமல் எம்.ஜி.ஆரை கட்டிக்கொண்டு முத்தமிட்டார். கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் அந்த இளைஞரின் அன்பை எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண்டார்.
அந்தப் புகைப்படம்தான் எத்தனை உணர்வுகளை வெளிப்படுத்துகிறது! எம்.ஜி.ஆரை முத்தமிடும் இளைஞரின் முகமே தெரியவில்லை. அந்த அளவுக்கு அன்பின் வெளிப்பாடாய் ஆழமாக தன் முத்தத்தை பதிக்கிறார். அருகில் நிற்கும் இளைஞர் எம்.ஜி.ஆரைப் பார்த்த பரவசததில் கும்பிட்ட கையை கீழிறக்காமல் சிரித்தபடி அவரை பார்த்துக் கொண்டே நிற்கிறார். நீரில் நீந்தி வந்த தன் அடையாளமாக அவர் அணிந்துள்ள டிராயர் தண்ணீரில் நனைந்து உடலோடு ஒட்டியுள்ளது. முத்தமிடும் ரசிகரை அணைத்தபடி அவரது அன்பு மழையில் திளைக்கும் எம்.ஜி.ஆரின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம். அன்பு மனங்களின் சந்திப்பு, சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி; பார்ப்பவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து சமீபத்தில்தான், நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நரிக்குற வர் இன மக்கள் மீது எம்.ஜி.ஆர். மிகுந்த அன்பு கொண்டவர். ‘ஒளி விளக்கு’ படத் தில் ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க…’ பாடலில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நரிக்குறவர்கள் வேடத்தில் ஆடிப் பாடுவர்.
அந்தப் பாடலின்போது நடனத்தில் எம்.ஜி.ஆர். கலக்கியிருப்பார். தியேட்ட ரில் ஆடாதவர்கள் குறைவு. அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக நரிக்குறவர் இன மக்களை வரவழைத்து, அவர்களை ஆடச் சொல்லி கவனித்து எம்.ஜி.ஆர். பயிற்சி எடுத்துக் கொண்டார். ‘நவரத் தினம்’ படத்தில் ‘குருவிக்கார மச்சானே…’ பாடல் காட்சியிலும் எம்.ஜி.ஆரின் மூவ்மென்ட்ஸ் அற்புதமாக இருக்கும்.
எம்.ஜி.ஆர். கொண்டாடிய ஒரே பண்டிகை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை. அன்றைய தினம், கட்டுக் கட்டாக பணத்தை வைத்துக் கொண்டு, தன்னைக் காண வருவோருக்கெல்லாம் கைக்கு வரும் பணத்தைக் கொடுத்து மகிழ்வார். ஒருமுறை பொங்கல் நாளில் ஏராளமான நரிக்குறவர்கள் எம்.ஜி.ஆரை காண, அவரது ராமாவரம் தோட்டத்துக்கு வந்தனர். எம்.ஜி.ஆரை கண்டதும் உற்சாகக் கூச்சலிட்டனர். அவர் களை அருகே வருமாறு அழைத்த எம்.ஜி.ஆர்., கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் பணம் கொடுத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள், அவர் எவ்வளவோ தடுத்தும் அவரது காலில் விழுந்து வணங்கினர்.
நரிக்குறவர் இன மக்களை எந்தவித பேதமும் இல்லாமல் எம்.ஜி.ஆர். கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களது குழந்தைகளை வாங்கிக் கொஞ்சினார். சமூகத்தில் அடித்தளத்தில் இருக்கும் தங்கள் மீது அவர் காட்டிய பாசத்தையும் அன்பையும் பார்த்து வந்தவர்கள் கண்கலங்கினர்.
வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரை கட்டியணைத்து முத்தமிட் டார். அவரது உதடுகளின் அடையாளம் எம்.ஜி.ஆரின் கன்னத்தில் பதிந்துவிட் டது. இதை எதிர்பாராத எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் வேகமாகப் பாய்ந்து அவரை விலக்க முற்பட்டனர். அவர் களைத் தடுத்த எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘விடுங்கப்பா, அவங்க அன்பை இப்படிக் காட்டுறாங்க. இதில் தவறு ஒன்றுமில்லை’’ என்று சாதாரண மாகக் கூறினார். இதன் தொடர்ச்சி யாக மறுநாள் நடந்ததுதான் வேடிக்கை.
முதல்நாள் எம்.ஜி.ஆரை பார்த்துவிட் டுச் சென்ற நரிக்குறவ சமூக மக்கள் மறுநாளும் கூட்டமாக வந்துவிட்டனர். படப்பிடிப்புக்கு கிளம்பிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் விசாரித்தார். முதல்நாள் அவரை முத்தமிட்ட அந்த நரிக் குறவர், ‘‘உங்க தயவால என் சபதம் நிறை வேறிடுச்சு சாமி’’ என்றார். ‘‘என்ன சபதம்?’’ என்று என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு, ‘‘உங் களை யாரும் தொடமுடியாதுன்னு எங்க கூட்டத்தினர் சொன்னாங்க. அவர்களிடம் உங்களை முத்தமிட்டு காட்டுறேன்னு சபதம் செய்தேன். ஜெயிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சாமி’’ என்று கூறினார்.
அதைக் கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர்., ‘‘பரவாயில்லை. இனிமேல் இதுபோன்று வேறு யாரையும் முத்தமிடுவதாக சபதம் செய்யாதே. வம்பா போயிடும்’’ என்று சொல்லி, பணியாளர்களை அழைத்து, வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு போடச் சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கு புறப்பட்டார்.
மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளின் போதும் எம்.ஜி.ஆர். முதல்வராக வில்லை. தமிழ்த் திரையுலகின் நம்பர் ஒன் ‘ஹீரோ’வாக இருந்தார். என்றாலும் புகழ்மிக்க ஒரு நடிகரிடம் ரசிகர்களும் மக் களும் இந்த அளவுக்கு உரிமை எடுத்துக் கொள்ள முடியுமா? முதல்வரான பிறகும் அவரது இந்த எளிமையாக பழகும் குணம் மாறவில்லை என்பதுதான் எம்.ஜி.ஆரின் தனிச்சிறப்பு.
‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் பாடல் இது:
‘உலகமெனும் நாடக மேடையில்
நானொரு நடிகன்;
உரிமையுடன் வாழ்ந்திடும் வாழ்க்கையில் உங்களில் ஒருவன்!’

அதிசயமே அசந்து போகும் அதிசயம் எம்.ஜி.ஆர்.



அதிசயமே அசந்து போகும் அதிசயம் எம்.ஜி.ஆர்.

M.G.R. தமிழர்களைப் பொறுத்த அளவில் தமிழாகி விட்ட ஆங்கில எழுத்துக்கள்.
ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெறுவதே கடினம். அதிலும் முதலிடம் பெறுவது இன்னும் கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது அதைவிட கடினம். சினிமா, அரசியல் இரண்டு துறைகளிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், முதலிடம் பெற்று, அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்ட அதிசயமே அசந்து போகும் அதிசயம் எம்.ஜி.ஆர்.
தமிழர்களை மயக்கும் மந்திரச் சொல்லாக அவர் பெயர் ஆனது ஏதோ மாயா ஜாலத்தால் அல்ல. அதற்கு பின்னணியில் இருக்கும் அவரது திட்டமிட்ட கடும் உழைப்பு. அவருக்கே அமைந்த வசீகரம். இந்த இரண்டும் கூட எல்லா நடிகர்களுக்கும் இருந்து விடலாம். ஆனால், மற்றவர்களுக்கு இல்லாத புகழும் பெருமையும் மக்கள் ஆதரவும் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே ஏன்? இவற்றை எல்லாம் தாண்டிய மனிதாபிமானம் என்பதே பதிலாக இருக்கும். இந்த குணத்தால் மக்களை அவர் நேசித்தார். அதனால்தான் மக்கள் அவரை நேசித்தனர். அதனால்தான், இதுவரை எந்த தமிழக முதல்வரும் செய்யாத சாதனையாக அடுத்தடுத்து மூன்று முறை ஆட்சியைக் கைப்பற்றினார்.
1917-ம் ஆண்டு ஜனவரி 17ல் பிறந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கியுள்ளது. இலங்கையில் கண்டியில் பிறந்து, தந்தையை இழந்து, தாய் மற்றும் தமையனுடன் தமிழகம் வந்து நாடகத்தில் சேர்ந்து சினிமாவில் சிறிய வேடங்களில் தலைகாட்டி, கதாநாயகனாக உயர்ந்து, பொதுவாழ்வில் ஈடுபட்டு, கட்சியின் தலைவராகி, அவர் தமிழக முதல்வரானது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.
ஆனால், எம்.ஜி.ஆரின் இந்த நெடிய சாதனை வாழ்வில் ஊடாடி இருக்கும் சினிமா, அரசியல், தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது அருங்குணங்களை, திறமைகளை, சாதுர்யங்களை, மனிதாபிமானத்தை, பண்பு நலன்களை விளக்கும் வகையில், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். 100 என்ற பெயரில் 100 முத்துக்களை தொகுத்து வாசகர்களுக்கு அளிக்கிறோம்.
‘‘மரத்திலே பழுத்த கனி தங்கள் மடியிலே விழாதா? என்று பலர் ஆவலாக காத்திருந் தனர். நல்லவேளையாக அது எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன். அந்த இதயக்கனிதான் எம்.ஜி.ஆர்.’’
எம்.ஜி.ஆரைப் பாராட்டி அறிஞர் அண்ணா கூறியதுதான் இது. அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’நாடகத்தில் நடிப்பதற்காக நடிகர் டி.வி.நாராயணசாமியால் அண்ணாவிடம் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தப்பட்டார். சினிமா வில் துணை வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க முதலில் ஒப்பந்தமான படம் ‘சாயா'. படத்தின் கதாநாயகி டி.வி. குமுதினி. அப்போதே அவர் புகழ் பெற்ற நடிகை. புதுமுக நடிகரான எம்.ஜி.ஆருடன் நடிப்பதற்கு குமுதினியின் கணவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதுபோன்ற சில காரணங்களால் ‘சாயா' படம் நின்று போனது.
பின்னர், தீவிர முயற்சிக்குப் பிறகு வாராது வந்த மாமணிபோல, ஜூபிடர் நிறுவனத்தின் ‘ராஜகுமாரி’ படத்தில் கதாநாயகனாக நடிக்க எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடிக்க வேண்டி இருந்ததால் நாடகத்தில் நடிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால், அந்த நாடகத்தில் எம்.ஜி.ஆரால் நடிக்க முடியாமல் போனது. என்றாலும் அண்ணாவோடு எம்.ஜி.ஆருக்கு பழக்கம் தொடர்ந்தது. அவரது பணத்தோட்டம், சந்திரோதயம் புத்தகங்களைப் படித்து அண்ணாவாலும் அவரது கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.
திமுக கொடியை முதன்முதலாக திரையில் காட்டியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரே தயாரித்து இயக்கி நடித்த ‘நாடோடி மன்னன்' படத்தில் ஆணும் பெண்ணும் இருவண்ணக் கொடியை ஏந்தியபடி திரும்புவது போன்ற எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் இலச்சினை (லோகோ) படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் காட்டப் பட்டது. எம்.ஜி.ஆரின் படங்களில் அண்ணாவைப் பற்றியும் திமுக கொள்கைகளைப் பற்றிய வசனங் களும் பாடல்களும் கட்டாயம் இடம்பெற்றன.
அண்ணா தமிழக முதல்வரானதும் சென்னையில் 1968-ம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அப்போது, சென்னையில் மையப் பகுதியான அண்ணா சாலையில் (அப்போது மவுண்ட் ரோடு) ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் அலுவலகம் எதிரே கையை உயர்த்தியபடி கம்பீரமாக நிற்கும் அண்ணாவின் சிலையை தனது சொந்த செலவில் எம்.ஜி.ஆர். நிறுவினார். சர்.ஏ.ராமசாமி முதலியார் சிலையை திறந்து வைத்தார்.
உலகத் தமிழ் மாநாட்டில் கருத்தரங்கு ஒன்றில் எம்.ஜி.ஆர். பேசினார். கவிதையைப் பற்றிய நயமான விளக்கம் அளித்தார். ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை ’ என்று கூறினார். கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பினர்.
பின்னர், அண்ணா பேச வந்தார். எம்.ஜி.ஆருக்கே குருவாயிற்றே? கேட்க வேண்டுமா? கவிதை பற்றி அவர் கூறும்போது,
‘அறிந்ததனை அறிந்தோர்க்கு

அறிவிக்கும் போதினிலே

அறிந்ததுதான் என்றாலும்

எத்துணை அழகம்மா? என்று

அறிந்தோரையும் வியக்க வைக்கும்

அருங்கலையே கவிதையாகும்’
... என்று கவிதையாலேயே கவிதைக்கு விளக்கம் அளித்தார் அறிஞர் அண்ணா. மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேர மாயிற்று.
தொடர்ந்து அண்ணா பேசும்போது, ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று எம்.ஜி.ஆர். கூறினார். நீங்கள் கைதட்டினீர்கள். எதற்கு என்று யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது. அவர் தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார். ஆம். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்.ஜி.ஆரே ஒரு கவிதைதானே...’ என்றார் அண்ணா.
மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. இதயக்கனியின் ஈர்ப்பு ரகசியம் அறிந்தவர் அண்ணா!

செவ்வாய், 27 ஜூன், 2017

M.G.R. படங்களில் பாடல்களும் சரி, பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் சரி. ரசிகர்களுக்கு விருந்துதான்.


M.G.R. படங்களில் பாடல்களும் சரி, பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் சரி. ரசிகர்களுக்கு விருந்துதான். 

M.G.R. படங்களில் பாடல்களும் சரி, பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் சரி. ரசிகர்களுக்கு விருந்துதான். ஆனால், ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர். படங்களின் பாடல் வரிகள் சென்சாரின் பிடியில் இருந்து தப்பி வருவதற்குள் போதும், போதும் என்றாகிவிடும். சென்சார் அதிகாரிகளின் கட்டுப்பாடுகள் காரணமாக பல பாடல்களில் வரிகள் மாற்றப்பட்டன.

‘பெற்றால்தான் பிள்ளையா?’ படத் தில் ‘நல்ல நல்ல பிள்ளை களை நம்பி…’ பாடலில் கடைசி யில் ‘மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்’ என்றுதான் காட்சி படமாக்கப்பட்டது. அண்ணா பெயர் இடம் பெறுவதற்கு சென்சார் அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால், அந்த வரி ‘மேடையில் முழங்கு திரு.வி.க.போல்’ என்று மாற்றப்பட்டு ஒலி மட்டும் படத்தில் சேர்க்கப்பட்டது.

ஆனால், எம்.ஜி.ஆரின் வாயசைப்பு ‘அறிஞர் அண்ணா போல்’ என்றுதான் படத்தில் இருக்கும். இசைத்தட்டிலும் அப்படியேதான் இருக்கும். ‘அண்ணா போல்’ என்ற வார்த்தை மாறி ஒலித்தா லும் படம் வெளியானபோது திரையரங்கு களில் கைதட்டலும் விசிலும் காதைப் பிளந்தது. ‘திரு.வி.க. போல்’ என்ற வார்த்தைகள் ‘திமுக போல்’ என்று ஒலித்ததுதான் காரணம்.

‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் ‘புதிய வானம் புதிய பூமி…’ பாடலின் ஒரு வரியில் முதலில் ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்று தான் வாலி எழுதியிருந்தார். படத் தயாரிப்பாளரான ஏவி.எம். செட்டியார் அதை சென்சார் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் வார்த் தையை மாற்றும்படியும் வாலியிடம் கூறினார். வாலி அதைக் கேட்கவில்லை. கடைசியில் செட்டியார் சொன்னது போலவே நடந்தது. பின்னர், ‘உதய சூரியனின்‘ என்பதற்கு பதிலாக ‘புதிய சூரியனின்’ என்று ஓரளவு ஒலி ஒற்றுமை யோடு மாற்றி எழுதினார் வாலி. இன் னும்கூட பாடலைக் கேட்பவர்கள் பலர் அதை ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்றுதான் நினைப்பார்கள்.

இந்தப் பாடலைப் பற்றி சொல்லும் போது ஒரு சம்பவம். பாடல் காட்சி சிம்லாவில் படமாக்கப்பட்டது. பத்திரிகை யாளர் சாவி அப்போது சிம்லாவில் இருந் தார். ‘எந்த நாடு என்ற கேள்வி இல்லை...’ என்று வரும் வரிகளின்போது எம்.ஜி.ஆர். அருகே நிற்பவர்களோடு சாவியும் சில விநாடிகள் நின்றுவிட்டுச் செல்வார். படம் வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து ஓடியது. பின்னர், எம்.ஜி.ஆரை சந்தித்த சாவி, ‘‘நான் நடித்ததால்தான் ‘அன்பே வா’ படம் 100 நாள் ஓடியது’’ என்று சொல்லி எம்.ஜி.ஆரை வெடிச் சிரிப்பு சிரிக்கச் செய்திருக்கிறார். அநேகமாக, சாவி நடித்த ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும்.

பாரதியார் பாடலான ‘சின்னஞ்சிறு கிளியே...’ பாடல் ஏற்கெனவே ‘மணமகள்’ படத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் வரும் ‘கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள் வெறி கொள்ளுதடி…’ என்ற வரிகளை சென்சார் அனுமதித்தது. ‘தெய்வத்தாய்’ படத்தில் ‘வண்ணக்கிளி சொன்ன மொழி…’ பாடலில் ஒரு இடத்தில் ‘அத்திப்பழ கன்னத்திலே முத்தமிடவா?’ என்று இருந்தது. சென்சார் கெடுபிடி காரணமாக ‘முத்தமிடவா?’ என்ற வார்த்தை ‘கிள்ளிவிடவா?’ என்று மாற்றப்பட்டது.

‘நாடோடி மன்னன்’ படம் தயாரிக் கப்படும்போதே சென்சாருக்கு ஏராள மான புகார்கள். அப்போதிருந்த தணிக் கைக் குழு அதிகாரி ஜி.டி.சாஸ்திரி கண் டிப்பானவர். படத்தை அவருக்கு போட் டுக் காட்டி அவரும் ‘நோ கட்ஸ்’ என்று கூறிவிட்டார். அதன் பிறகு அவர் கேட்ட கேள்வி, ‘‘ஆமாம். எங்கே அந்த ‘காளை மாட்டை பால் கறக்க பாக்கறாங்க’ பாடல் காட்சியைக் காணோம்?’’

படத்தில் அப்படிப்பட்ட வரிகளோடு கண்ணதாசன் ஒரு பாடலை எழுதி யிருந்தார். சென்சாரில் அது எப்படியும் தப்பாது என்று அந்தப் பாடலை படத்தில் பயன்படுத்தவே இல்லை. ‘காங்கிரஸைத் தாக்கி படத்தில் பாடல் காட்சி ஒன்று இருக்கிறது’ என்று முன்பே யாரோ புகார் செய்திருக்கின்றனர். அதனால்தான் சாஸ்திரி அதைக் கேட்டிருக்கிறார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னம் காளை மாடு.

சென்சார் கெடுபிடிகளில் இருந்து தப்பிக்க படங்களில் புதிய உத்திகளை எம்.ஜி.ஆர். பயன்படுத்துவார். நெற்றியில் திமுகவின் சின்னமான உதய சூரியன் திலகம் வைத்துக் கொள்வார். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் காவிரிப் பூம்பட்டினத்தின் இளவரசராக வரும் எம்.ஜி.ஆரின் பெயர் ‘உதய சூரியன்’. ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் எம்.ஜி.ஆர். காளை மாட்டை அடக்குவார். 1957-ம் ஆண்டு தேர்தலில் காளை மாட்டை எம்.ஜி.ஆர். அடக்குவது போன்ற சுவரொட்டிகள் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.

சென்சார் கெடுபிடி ஒருபுறம் இருக்கட் டும், எம்.ஜி.ஆரே தன் படங்களின் பாடல் வரிகளில் அக்கறை செலுத்துவார். தவறான அர்த்தம் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில், ‘கண்ணை நம்பாதே…’ என்ற கருத்தாழம் மிக்க சூப்பர் ஹிட் பாடல் உண்டு. பாடலை எழுதியவர் கவிஞர் மருதகாசி. ஒரு இடத்தில் ‘பொன் பொருளைக்ஒரு இடத்தில் ‘பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டுத் தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்று மருதகாசி எழுதியிருந்தார்.

அவரை எம்.ஜி.ஆர். அழைத்து, ‘‘தன் வழியே என்று சொல்லியிருக்கிறீர்கள். அது ஏன் நல்ல வழியாக இருக்கக் கூடாது? நல்ல வழியாக இருந்தால் ஒருவர் ஏன் தன் வழியே போகக் கூடாது?’’ என்று கேட் டார். மருதகாசி அசந்துபோய் விட்டார். பின்னர், எம்.ஜி.ஆரின் விருப்பத்துக் கேற்ப, ‘தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்பதற்கு பதிலாக ‘கண்மூடிப் போகிறவர் போகட்டுமே’ என்று மருதகாசி மாற்றி எழுதினார்.

அந்தப் பாடலில்,

‘நன்றி மறவாத நல்ல மனம் போதும்

என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்’

என்ற வரிகளை படத்தில் எம்.ஜி.ஆர். பாடுவார்.

எம்.ஜி.ஆரின் மூலதனத்துக்கு என்றுமே குறைவில்லை...

சனி, 24 ஜூன், 2017

கவியரசரும் மெல்லிசை மன்னரும் உதயமான திரையிசைத் திருநாள் ஜூன் 24 .



கவியரசரும் மெல்லிசை மன்னரும் உதயமான திரையிசைத் திருநாள் ஜூன் 24 .

*மெல்லிசை மன்னரே !* உன் இசையைக் கேட்டோம். -அது இதயத்திற்கு செவிகள் தரும் கௌரவம். *கவியரசே !* உன் கவிதைகளைப் படித்தோம். - அது இதயத்திற்கு கண்கள் தரும் கௌரவம்.

வண்டு வந்து அமர          தேன்மலர்கள்தவிக்கும்.
 *கவியரசர்* கவிதைக்கு வார்த்தைகள் தவிக்கும்.      *மாமன்னர்* இசைக்கு வாத்தியங்கள் தவிக்கும்- எத்தனை முறை கேட்டாலும் உன் இசைக்கு எங்கள் மனம் தவிக்கும்!!!

காற்றை சுவாசிப்பதால் உடலைப் புதுப்பிக்கிறோம் – *மாமன்னரே !* உன் இசையை சுவாசிப்பதால் எங்கள் ஆன்மாவை புதுப்பிக்கிறோம்.

மெட்டும் பாட்டும் ஒன்றாய் இருந்தால் கானம். அதனால்தானோ கவியரசர் அவதரித்த அதேநாளில் மாமன்னரும்.. *(24 ஜூன்)*

மன்னரின் மெட்டுக்குப் பின் கவியரசரின் பாட்டுண்டு. கவியரசரின் பாட்டுக்குப் பின் மன்னரின் மெட்டுமுண்டு. இருவர் பிறப்பை வைத்து பார்க்கும்போது ஒரே நாளானாலும் பாட்டுக்குப் பின்தான் மெட்டென்பது சரியோ?
( கவியரசர் 1927
  மன்னர் 1928).

*கவியரசே !* உன் எழுத்துகள் சிறந்த புத்தகம் உன் வாழ்வோ திறந்த புத்தகம் – நாங்கள் வாசித்து அறிந்திருக்கிறோம். மாமன்னா ! நீ அவரை நேசித்து அறிந்திருப்பாய் !

தவறான இலக்கில் கணைதொடுத்த இந்திரனுக்கு உடம்பெல்லாம் குறிகளானது முனிவன் சாபத்தால்! தவமென நேசிக்கும் இசையால் எங்களுக்கு உடம்பெல்லாம் செவிகளானதோ! *மன்னரே!*  உன் (ஸ்)வரத்தால்!!

*கவியரசே!* நீ காதலைப் பாடினாய் - அன்பு வந்தது கேளிக்கைகளைச் சொன்னாய் – உற்சாகம் பிறந்தது செப்புமொழிகளை வழங்கினாய்– நகைச்சுவை வந்தது எதையும் எளிமையாகத் தந்தாய்-எல்லோர்க்கும் புரிந்தது.

நல்லவற்றை விதைத்தாய் – நம்பிக்கை வளர்ந்தது. அர்த்தமுள்ளதென ஆய்ந்துரைத்தாய்–ஆன்மீகம் தெளிந்தது. தத்துவம் போதித்தாய் – வாழ்க்கை புரிந்தது. எழுதுகோலை எடுத்தாய்- *எழில் தமிழ் இன்னும் சிறந்தது.*

கடவுளை ஏகவசனத்தில் பேசினோம் பக்தியால்.      கவிஞனை ஏகவசனத்தில் பேசினோம் தமிழால். கடவுளுக்கும் கவின்மிகு தமிழுக்கும் மறைவென்பது இல்லை. *மாமன்னரே!* அதுபோல்உன்னையும் ஏக.........இசையால்!

கண்ணன் கையில் குழலுக்குத் தனி அழகு! கங்காதரன் கையில் உடுக்கைக்குத் தனி அழகு! கலைமகள் கையில் வீணைக்குத் தனி அழகு! மெல்லிசைதெய்வமே!  *உன் கையில் ஹார்மோனியத்திற்கு தனி அழகு!!*

*இயற்றமிழுக்கு* கவியரசர் கண்ணதாசன் *இசைத்தமிழுக்கு* மெல்லிசை மாமன்னர் எம் எஸ் வி *நாடகத்தமிழுக்கு* நடிகர்திலகம் சிவாஜிகணேசன். ஆக திரைமொழியால் *முத்தமிழுக்கும்* பெருமை!

கல்வியில் சிறந்தவர் பிறந்ததை ஆசிரியர் தினமென்றோம். கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்ததை கல்வி தினமென்றோம். கணிதமாமேதை ராமானுஜர் பிறந்தததை கணித தினமென்றோம். வீரத்துறவி விவேகானந்தர் பிறந்ததை இளைஞர் தினமென்றோம்.

கவிதைக்காய் அவதரித்தவர் *கண்ணதாசன்* கவிதைகளை மெல்லிசையால்அலங்கரித்தவர் *எங்கள் எம் எஸ் வி* *கவிதைக்கும்இசைக்குமாய்* இருவரும்பிறந்த ஜூன் 24 *திரையிசைத் திருநாள்* எனக் கொண்டாடுவோம்.

செவ்வாய், 20 ஜூன், 2017

இசைஞானியும் கலைஞானியும்...



இசைஞானியும் கலைஞானியும்...

நான் குளிக்காமல் கூட ரிக்காடிங் சூட்டிங் வருவேன் நான் எல்லாவிதமான அசைவ உணவுகளையும் சாப்பிடுவேன் நான் பிரமணன் என்பதற்காக  என்னை உயர்ந்தவன் என்றும்,

இளையராஜா குளிக்காமல் ரிக்காடிங் தியேட்டர் வரமாட்டார், சாமி கும்பிட்டு விட்டுதான் தன் அறைகுள்ளே நுழைவார், சைவம் மட்டுமே சாப்பிடுவார் ஆனால் அவர் பறையர் என்பதால் தாழ்ந்தவர் என சொல்லுவதும் எவ்வளவு பெரிய அயோக்கியதனம்!!

#கமல்ஹாசன்

திங்கள், 19 ஜூன், 2017

*காதலில் மலர்ந்து விவாகரத்தில் முடிந்த திரை பிரபலங்களின் திருமணங்கள்!!*



காதலில் மலர்ந்து விவாகரத்தில் முடிந்த பிரபலங்களின் திருமணங்கள்!!*


திரையில் தொடங்கி நிஜத்தில் முடிந்த பல காதல் கதைகள் சினிமா பிரபலங்களிடையே அரங்கேறியுள்ளது. இவ்வாறு காதலிக்கும் பொழுது ஊடகங்களுக்கு கிசுகிசுக்களையும், செய்திகளையும் வாரி வாரி வழங்கிய பிறகு.

பல சர்ச்சைகளையும், தடைகளையும் தாண்டி திருமணம் செய்த இவர்களது உறவு எதிர்பாராமல் உடைந்துவிடுகிறது.

பல பிரபல திரை நட்சத்திரங்களின் வாழ்க்கையில் காதல் திருமணம் முறிவில் முடிந்திருக்கின்றன. அவர்களை பற்றி தான் இனி பார்க்கவிருக்கிறோம்

*அரவிந்த்சாமி - காயத்திரி ராமமூர்த்தி*

இவர்களது 16 ஆண்டு கால திருமண பந்தம் கடந்த 2010 ஆண்டுடன் முற்றுப் பெற்றது. சமரசத்திற்கு இடமில்லாத வேறுபாடுகளைக் காரணம் காட்டி இவர்கள் விவாகரத்துப் பெற்றுக்கொண்டனர். இந்த ஜோடிக்கு ஆதிரா, ருத்ரா என்ற இரு குழந்தைகள் இருக்கின்றனர்.

*கமல்ஹாசன் - சரிகா*

இந்தியாவின் முன்னணி திரை நட்சத்திரங்களாக திகழ்ந்த இவர்கள் இருவரும். காதலித்த போதிலிருந்தே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதன் காரணத்தினால் குழந்தைகளும் பிறந்தனர். பின்பு, திருமணமும் செய்துக் கொண்டனர். ஆனால், கடந்த 2002 ஆண்டு சரிகாவை விவாகரத்து செய்துவிட்டார் கமல். கருத்து வேறுபாடு தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.


*பார்த்திபன் - சீதா*

தமிழகத்தின் முன்னணி நடிகர்கள். காதலித்து திருமணம் செய்து இன்பமாக தான் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன், ஓர் மகள் இருந்தனர். திடீரென பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதாக கூறி விவாகரத்து வாங்கிக் கொண்டனர்.

*பிரபு தேவா - ராமலதா*

பிரபுதேவாவும் ராமலாதவும் கடந்த 2011 ஆண்டு விவாகரத்து வாங்கிக்கொண்டனர். இவர்களது பிரிவுக்கு, நயன்தாரா தான் காரணம் என்று பலத்தரப்பட்ட மக்களிடையே செய்திகள் கிளம்பின. இதற்கு முன்பு தான் இவரது ஒரு மகன் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

*பிரகாஷ்ராஜ் - லலிதா குமாரி*

பிராகாஷ் ராஜ் மற்றும் லலிதா குமாரி கடந்த 2009ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்களது விவாகரத்திற்கு காரணம். இவருக்கு பாலிவுட் நடன இயக்குனர் போனி வர்மாவுடன் இருந்த உறவு தான் காரணம் என்று கூறப்பட்டது.

*ரகுவரன் - ரோகினி*

ரகுவரனும், ரோகிணியும் நல்லபடியாக தான் வாழ்ந்து வந்தனர். ஆனால், ரகுவரனின் குடிப்பழக்கம் தான் இவர்களது பிரிவிற்கு காரணம் என்று கூறப்பட்டது. ரகுவரனை மிக விரும்பியவர் ரோகினி, விவாகரத்து கூட விரும்பாமல் தான் வாங்கினார் என்று கூறப்பட்டது. பின்பு குடிப்பழக்கத்தில் இருந்த மீண்டு வந்த தருணத்தில் தான் ரகுவரன் காலமானார்.

*ராமராஜன் - நளினி*

ராமராஜன், நளினி காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். 13 ஆண்டு கால இல்லற வாழ்க்கை கடந்த 2000 ஆண்டு முடிவுப்பெற்றது. இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

*செல்வராகவன் - சோனியா அகர்வால்*

செல்வாராகவனின் திரைப்பட நடிகையான சோனியாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே நிலைத்த இவர்களது திருமண வாழ்க்கை முறிவில் முடிந்தது.

*ஊர்வசி - மனோஜ் ஜெயன்*

இவர்கள் இருவரும் கடந்த 2008 ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர்.

பெண் வேடத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யார்னு தெரியுதா?


பெண் வேடத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யார்னு தெரியுதா?

நடிகர் ரஹ்மான் படத்திற்காக பெண் வேடம் போட்டபோது எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் கேரளாவை சேர்ந்த ரஹ்மான். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சகலை. கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரஹ்மான் நடித்த துருவங்கள் 16 படம் ஹிட்டானது.

ரஹ்மானின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. 1984ம் ஆண்டு வெளியான இத்திரி பூவே சுவன்னபூவே மலையாள படத்தில் ரஹ்மான் பெண் வேடம் போட்டிருந்தார்.

அவர் பெண் வேடம் போட்டது போன்றே இல்லை நிஜமாகவே பெண் போன்று அழகாக இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


புகைப்படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் ரஹ்மானா இது என்று ஆச்சரியப்படுகிறார்கள்.

செவ்வாய், 13 ஜூன், 2017

"தர்மயுத்தம்" என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்து வெளிவந்த சூப்பர் ஹிட் பாடல் இது ஆகாய கங்கை



*ரஜினிகாந்த் நடித்து,எழுபதுகளில் வெளிவந்த "தர்மயுத்தம்" என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்து வெளிவந்த சூப்பர் ஹிட் பாடல் இது.*


*பாடலின் சூழல்:*

திருமணத்திற்கு ஆயத்தமாகும் காதலனும் காதலியும் களிப்புடன் பாடும் இளமை ததும்பும் பாடல் இது.

*இசையமைப்பு:*

இளையராஜாவின் மெருகேறிய காதல் ததும்பும் பாடல் இது.

 அந்தச் சமயத்தில், ஏன் இந்தச் சமயத்தில் கூட எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத மெட்டும் இசையமைப்பும் குளிர்விக்கின்றன.

கொஞ்சமும் எதிர்பாராத நேரத்தில் பெண் குரலின் ஹம்மிங்கோடும் காங்கோ டிரம்ஸ் கலவையோடும் ஒன்று சேர்ந்து சடுதியில் பாடல் ஆரம்பிக்கிறது.

 ஹம்மிங் முடிந்து ஒரு லீட் வந்து முடிய, ஆண்குரலில் ‘ஆகாய கங்கை’ என்று ஆரம்பிக்கிறது.

 ஆண்குரல் ஒலித்து முடிய பெண்குரல் அதற்குப்பதில் சொல்லி முடிய, சரணம் முடிய முதல் BGM ஆரம்பிக்கிறது.
 கீபோர்டு, புல்லாங்குழல்,வயலின் கோரஸ் போன்ற இசைக் கலவை இசைத்து முடிய வயலின் சோலா உருகிமுடிக்க மீண்டும் ஆண் குரலில் "காதல் நெஞ்சில்" என்று சரணம் ஆரம்பிக்கிறது.

 இரண்டாவதுBGM-ல் பெண்குரல் ஹம்மிங் ஒலித்து வயலின் சோலோ முடித்து 2-ஆவது சரணம் பெண்குரலில் ஆரம்பித்து ஆண்குரலில் முடிகிறது.

டிரம்ஸ், காங்கோ, கீபோர்டு, பேஸ் கிட்டார், ரிதம் கிட்டார்,வயலின்கள், வயலின் சோலோ,காங்கோ போன்ற பலவித இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்ட அருமையான பாடலிது.


*பாடல் வரிகள்:*


ஆகாய கங்கை

பூந்தேன் மலர் சூடி

பொன்மான் விழி தேடி

மேடை கட்டி மேளம் தட்டி

பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்


குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்

சீதா புகழ் ராமன்

தாளம் தொட்டு ராகம் தொட்டு

பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்

காதல் நெஞ்சில்..ஹேஏஏஎ

மேள தாளம்..ஹோஓஒ (2)

காலை வேளை பாடும் பூபாளம்

மன்னா இனி உன் தோளிலே

படரும் கொடி நானே

பருவப் பூ தானே

பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ

(குங்கும தேரில்)

தேவை யாவும் ஹேஏஏஏ

தீர்ந்த பின்னும் ஹோஓஒ (2)

பூவை நெஞ்சில் நாணம் போராடும்

ஊர்கூடியே உறவானதும்

தருவேன் பலநூறு

பருகக் கனிச்சாறு

தளிராடும் என் மேனி தாங்காது உன் மோகம்

(ஆகாய கங்கை)

*பாடல் வரிகளை எழுதியவர்M.G. வல்லவன் அவர்கள்.*

 இளையராஜாவுக்கு சுமார் 200பாடல்களை எழுதியிருந்தாலும் இவரை அவ்வளவாய் நமக்குத் தெரியாது.

 *கரும்புவில் என்ற திரைப் படத்தில் வரும், 'மீன் கொடித்தேரில் மன்மத ராஜன்'*

*மண் வாசனையில் வரும் "அரிசி குத்தும் அக்காமார்களே"*

*பொண்ணு ஊருக்குப்புதுசு படத்தில் அமைந்த" சோலைக்குயிலே பாடும் மயிலே",*

*மலர்களே மலர்களே படத்தில் உள்ள "இசைக்கவோ உன் கல்யாணிராகம்" போன்ற பல பாடல்களை எழுதியுள்ளார்.*

 மேலும் உதயகீதம், இதயக்கோயில் போன்ற சில படங்களுக்கு திரைக்கதை வசனம் இவரே.

அது மட்டுமல்ல, பிலிமாலயா, பேசும்படம், பெண்மணி போன்ற பல பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார்.

 2003ல் இறந்துபோனார். இந்தப் பாடலில் மெட்டுக்குத் தகுந்த கச்சிதமான வரிகளை எழுதியுள்ளார்.


*பாடலின் குரல்கள்:*

பாடலைப் பாடியவர்கள் மலேசியா வாசுதேவன், மர்றும் ஜானகி.

SPB வராததால் "பதினாறு வயதினிலே படத்தில்" ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்று பாட ஆரம்பித்து அது சூப்பர் ஹிட் ஆகிவிட எல்லோரும் அவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

 தர்மயுத்தம் படத்தில் ரஜினிக்குப் பாடிய இந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆகியதோடு குரலும் ரஜினிக்குப் பொருத்தமாக இருந்ததால் ரஜினிக்கு நிறைய பாடல்களை மலேசியா பாடினார்.

SPB இளையராஜாவின் பழைய ஆர்க்கெஸ்ட்ராவில் TMS  திருச்சி லோகநாதன் குரலில் அருமையாக பாடுபவராம்.

 “ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே”,

 “பூங்காற்று திரும்புமா” என்ற பாடல்கள் திருச்சி லோகநாதனையும் TMS-யையும் நினைவு படுத்தும்.

ஜானகி குரலில் சொல்லவே வேண்டாம்.

 அவ்வளவு இளமை,காதல், சென்சுவாலிட்டியை எப்படித்தான் பாடலில் கொண்டுவருகிறாரோ.

குறிப்பாக சரணத்தில் வரும் ஒரு சிறு சிரிப்பு, இருவரும் இந்தப் பாடலின் வெற்றிக்கு முக்கிய பங்காளர்கள் ஆவார்கள்.

*இளையராஜாவின் மணிமகுடத்தில் மின்னும் இன்னுமொரு வைரம் இது.*

திங்கள், 12 ஜூன், 2017



பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல் 2017.
 
தென்னிந்திய சினிமாவில் சிறந்த திறமைகளை அங்கீகரிப்பதற்காக 64 வது ஜியோ ஃபிலிம்ஃபேர் 2017 ஆம் ஆண்டிற்குரிய விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்த விழா வரும், ஜூன் 17ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள எச்.ஐ.சி.சி. காம்ப்ளக்ஸில் நடைபெறவுள்ளது. அதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளோரின் பட்டியல் இதோ,
💥சிறந்த🎬இயக்குனருக்கான விருது,
⭐கவுதம் வாசுதேவ் மேனன் - அச்சம் என்பது மடமையடா  
⭐சுதா கே.பிரசாத் - இறுதிச்சுற்று  
⭐பா.ரஞ்சித் - கபாலி  
⭐ராஜு முருகன் - ஜோக்கர்  
⭐அட்லீ - தெறி  
⭐வெற்றிமாறன் - விசாரணை  
 
💥சிறந்த 🎥படத்திற்கான விருது,
🔰அச்சம் என்பது மடமையடா - கவுதம் வாசுதேவ் மேனன்  
🔰இறுதிச்சுற்று - சுதா கே.பிரசாத்  
🔰கபாலி - பா.ரஞ்சித்  
🔰ஜோக்கர் - ராஜு முருகன்  
🔰தெறி - அட்லீ  
🔰விசாரணை - வெற்றிமாறன்  
 
💥சிறந்த ⭐நடிகருக்கான விருது,
⭐தனுஷ் - கொடி  
⭐மாதவன் - இறுதிச்சுற்று  
⭐ரஜினிகாந்த் - கபாலி  
⭐சூர்யா - 24
⭐விஜய் - தெறி  
 
💥சிறந்த 💃நடிகைக்கான விருது,  
💃நயன்தாரா - இருமுகன்  
💃ரித்திகா சிங் - இறுதிச்சுற்று  
💃சமந்தா - 24
💃சமந்தா - தெறி  
💃தமன்னா - தேவி  
💃திரிஷா - கொடி  
 
💥சிறந்த குணச்சித்திர ⭐நடிகருக்கான விருது,
⭐மஹேந்திரன் மற்றும் ராஜேந்திரன் - தெறி  
⭐சமுத்திரக்கனி - விசாரணை  
⭐சதிஷ் கிருஷ்ணன் - அச்சம் என்பது மடமையடா  
⭐சதிஷ் - ரெமோ  
💥சிறந்த குணச்சித்திர 💃நடிகைக்கான விருது,
💃ஐஸ்வர்யா ராஜேஷ் - தர்மதுரை  
💃அனுபமா பரமேஸ்வரன் - கொடி  
💃தன்ஷிகா - கபாலி  
💃நித்யா மேனன் - 24
💃ராதிகா சரத்குமார் - தெறி  
💃சரண்யா பொன்வண்ணன் - கொடி  
 
💥சிறந்த 🎹இசையமைப்பாளர் விருது,
🎹ஏ.ஆர்.ரகுமான் - 24, அச்சம் என்பது மடமையடா  
🎹அனிருத் ரவிச்சந்தர் - ரெமோ  
🎹ஜி.வி.பிரகாஷ் - தெறி  
🎹ஹாரிஸ் ஜெயராஜ் - இருமுகன்
💥சிறந்த ✍பாடலாசிரியருக்கான விருது,  
✍அருண்ராஜா காமராஜ் - 'நெருப்புடா', கபாலி  
✍மதன் கார்க்கி - 'நான் உன்', 24
✍தாமரை - 'தள்ளி போகாதே', அச்சம் என்பது மடமையடா  
✍வைரமுத்து - 'எந்த பக்கம்', தர்மதுரை  
✍விவேக் - 'என் சுழலி', கொடி  
 
💥சிறந்த பின்னணி 👨பாடகருக்கான விருது,
🎤அனிருத் ரவிச்சந்தர் - 'செஞ்சிட்டாலே', ரெமோ  
🎤அருண்ராஜா காமராஜ் - 'நெருப்புடா', கபாலி  
🎤ஜித்தின் ராஜ் - 'ஏதோ மாயம் செய்கிறாய்',வாகா  
🎤சித் ஸ்ரீராம் - 'மெய் நிகர', 24
🎤சுந்தரய்யர் - 'ஜாஸ்மின்', ஜோக்கர்  
 
💥சிறந்த பின்னணி👩 பாடகிக்கான விருது,
🎤சின்மயி - 'நான் உன்', 24  
🎤கே.எஸ்.சித்ரா - 'கொஞ்சி பேசிட வேண்டாம்', சேதுபதி  
🎤மஹாலக்ஷ்மி ஐயர் - 'உன் மேல ஒரு கண்ணு', ரஜினிமுருகன்  
🎤நீத்தி மோகன் - 'செல்ல குட்டி', தெறி  
🎤ஸ்வேதா மோகன் - 'மாய நதி', கபாலி  
 
மேலும், இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால்,⭐சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' ஆகிய இரண்டு படங்களும் 🏆பிலிம்பேர் சவுத் விருதுகளுக்கு 8⃣பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


சனி, 3 ஜூன், 2017

கருணாநிதிக்காக ஒரு நாள் முன்கூட்டியே தன் பிறந்தநாளைக் கொண்டாடிய இசைஞானி. இளையராஜா



கருணாநிதிக்காக ஒரு நாள் முன்கூட்டியே தன் பிறந்தநாளைக் கொண்டாடிய இசைஞானி.
இளையராஜா...

எத்தனை பேருக்குத் தெரியும்?
கருணாநிதிக்காக ஒரு நாள் முன்கூட்டியே தன் பிறந்தநாளைக் கொண்டாடிய இசைஞானி.
திமுக தலைவரும் தனது நண்பருமான கருணாநிதிக்காக ஒரு நாள் முன்பாகவே தன் பிறந்தநாளைக் கொண்டாடினார் இசைஞானி இளையராஜா. இளையராஜாவின் பிறந்தநாள் ஜீன்2 என பலரும் நினைத்துக் கொண்டுள்ளனர். இணையத்தளக் குறிப்புகளிலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளன.ஆனால் அது உண்மையல்ல.
      உண்மையில் இளையராஜா பிறந்தது ஜுன்3ம் தேதி தான்.இதே தேதியில் தான் கருணாநிதியின் பிறந்தநாளும் வருகிறது. முன்பெல்லாம் இளையராஜா தன் பிறந்தநாளை பொதுவில் கொண்டாடாமல் இருந்தார்.அந்தநாளில் அவர் திருவண்ணாமலையிலோ, மூகாம்பிகை கோயிலிலோ இருப்பார். ஆனால் திரையுலகினரும் அவரது நண்பர்களும் அவர் பிறந்தநாளைக் கொண்டாட விரும்பிய போது அதற்கு ஒப்புக் கொண்டார்.ஆனால் ஒரு நிபந்தனையுடன் அப்போது கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த நேரம் அவருக்கும் ஜீன்3ம் தேதி தான் பிறந்தநாள். அவரது பிறந்தநாளுக்கான முக்கியத்துவம் குறைந்து விட வேண்டாம் என்ற நோக்கில் தன் பிறந்தநாளை முன் கூட்டியே கொண்டாடி விடலாம் என்ற யோசனை சொன்னார். இளையராஜா அன்றிலிருந்து ஆண்டுதோறும் ஒரு நாள் முன்பே தன் பிறந்தநாளைக் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இளையராஜா கருணாநிதி முதல்வர் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த வழக்கத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை. கடந்த ஆண்டு பிறந்தநாளன்று இது பற்றி இளையராஜா கூறியதை இங்கே தருகிறோம்.'உண்மையில் இன்று எனக்குப் பிறந்தநாள் கிடையாது. ஒரு நாள் முன்கூட்டியே கொண்டாடுகிறேன்.
ஜீன்3ம் தேதி தான் எனக்குப் பிறந்தநாள். ஆனால் அன்று முதல்வர் கருணாநிதி பிறந்த தினம் வருகிறது. அந்த தினத்தில் கொண்டாட வேண்டாமே என்பதற்காகத் தான் ஒரு நாள் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டுக் கிளம்பி விடுவேன். இந்த முறை உங்கள் அன்பு இங்கே இருக்கும்படி ஆகிவிட்டது' என்றார்.

வெள்ளி, 2 ஜூன், 2017

இசைஞானி இளையராஜா .பற்றிய சில குறிப்புகள்



இசைஞானி. இளையராஜா. 74வது பிறந்த தினவிழா
==================================

இசைஞானி இளையராஜா .பற்றிய சில குறிப்புகள்

1. இயற்பெயர் : டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன்.

2. பிறந்த தேதி : 2.6.1943

3. தந்தை : டேனியல் ராமசாமி

4. தாய் : சின்னத்தாய்

5. சொந்த ஊர் : பண்ணைபுரம், தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

6. கல்வி : எட்டாம் வகுப்பு

7. மனைவி : ஜீவா ( சொந்த சகோதரியின் மகள் )

8. குழந்தைகள் : கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா, பவதாரணி

9. சகோதரர்கள் : பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் (கங்கை அமரன்)

10. இளையராஜாவின் தந்தை தேயிலை தோட்டத்தில் கங்காணியராக பணியாற்றியவர். அவருக்கு 25
ஏக்கர் பரப்பு உள்ள எஸ்டேட் சொந்தமாக இருந்தது

11. 1958-ல் திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாவலர் வரதராஜனின் உடல்நிலை சரியில்லாததால்
அம்மா சின்னத்தாய், இளையராஜாவை வேண்டுமானால் அழைத்துக் கொண்டு போ, இடையிடையே
ஒரு பாடலை அவன் பாடினால் உனக்குக் கொஞ்சம் ஓய்வாக இருக்குமே என்று கூறியிருக்கிறார்.

“என் அன்னையின் திருவாக்கில்தான் என் கலை வாழ்க்கை ஆரம்பமானது. அன்று பொன்
மலையிலும், திருவெரும்பூரிலும் நடந்த அந்த இசை நிகழ்ச்சிகளில் என் பாட்டுக்கு அவ்வளவு பெரிய
வரவேற்பு கிடைத்ததாக இளையராஜா அடிக்கடி நினைவு கூறுவார்.

12. ஹார்மோனியத்தை தலையில் சுமந்தபடி பாவலர் வரதராஜன் போன பாதையில்
தென்னிந்தியாவின் பல்வேறு கிராமங்களுக்கு கால்நடையாகவும், மாட்டு வண்டிகளிலும்,
பயணம் செய்து வாசித்துப்பாடி மிக இளம் வயதிலேயே லட்சோப லட்சம் மக்களை சந்தித்து
இசையின் நாடித்துடிப்பை அறிந்தவர்.

13. கம்யூனிஸ்ட் கட்சிப் பிராச்சார பாடகராக அண்ணன் பாவலர் வரதராஜனுடன் இளையராஜா
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். இன்றும்
கம்யூனிஸ்ட் தலைவர்கள் இவர்களது பாடல்கள் கம்யூனிஸ்ட் கட்சி வளர்வதற்கு உதவியாய்
இருந்ததை அன்போடு சொல்லிக் கொண்டிருக்கிரார்கள்.

14. ஆரம்ப காலங்களில் இளையராஜா பெண்குரலில் மட்டுமே பாடி வந்திருக்கிறார்.

15. வானுயுர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடுகின்றேன் நா வறண்டு
பாடுகின்றேன் என்று சொத்து பத்துக்களை நாடகம் போட்டு இழந்திருந்தாலும் லட்சியத்தை இழக்காத
அண்ணனின் பாதையில் நடந்தது ஒரு பாடமாக மட்டுமில்லாமல் ஒரு தவமாக பரிணமித்திருக்கிறது
என்று கூறியிருக்கிறார் இளையராஜா.

16. பாட்டு கேட்பதற்காக வாங்கியிருந்த ரேடியோவை விற்றுவிட்டு இளையராஜா தன் சகோதரர்கள்
ஆர்.டி.பாஸ்கர், கங்கை அமரன் ஆகியோரோடு இசையமைப்பாளராக வேண்டும் என்று சென்னைக்கு
ரயில் ஏறினார்.

17. மேற்கத்திய இசைக்கு இளையராஜாவின் குருநாதர் மாஸ்டர் தன்ராஜ்

18. வருமானம் குறைவாக இருந்த இளையராஜாவிடம் பணமே வாங்காமல் இசையின் அடிப்படை
நுணுக்கங்களைக் கற்றுத் தந்தார் தன்ராஜ் மாஸ்டர்.

19. பியானோ கற்று கொள்வதற்காக சென்ற இளையராஜாவின் ஆர்வத்தைப் பார்த்து அதைக்
கற்றுக்கொள், இதைக் கற்றுக்கொள் என்று கொஞ்சம் கொஞ்மாக எல்லாவற்றையும் கற்றுக்
கொடுத்தார் தன்ராஜ் மாஸ்டர்.

20. வாரத்தின் இரண்டுநாள் இரண்டு மணிநேரம் பயிற்சி பெற்று வந்த இளையராஜா தினமும்
அங்கேயே பயிற்சி பெறலானார்.

21. ஹார்மோனியம், கிட்டார், பியானோ, கீபோர்ட், புல்லாங்குழல் என்று பல்வேறு இசைக்கருவிகளை
வாசிப்பதில் தேர்ந்தவர்.

22 .க்ளாசிக்கல் கிட்டார் இசையில் லண்டன் ட்ரினிட்டி இசைக்கல்லூரியின் பாடத்திட்டத்தில் 8வது
கிரேட் வரை முடித்து அதில் தங்கப்பதக்கம் பெற்றவர்.

23. திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன் மேடை நாடகங்களுக்கு இசையமைத்து வந்தார். அதாவது
1961 ஆம் ஆண்டில் தனது சகோதரர்களுடன் நாடகக்குழுவில் சேர்ந்து, இந்தியாவில் உள்ள பல
இடங்களுக்கு சென்று சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட  கச்சேரிகளிலும், நாடகங்களிலும் கலந்து
கொண்டார்.

24. சகோதரர்கள் மூவரும் இணைந்து ”பாவலர் பிரதர்ஸ்” என்ற இசைக்குழுவும் நடத்தி
வந்துள்ளார்கள்.

25. இசையமைப்பதற்கு இசையை முறையாக கற்க வேண்டும் என்பதால் தங்களிடம் இருந்த
ஆம்ப்ளிஃபயரை அடகு வைத்து வெஸ்டர்ன் க்ளாசிக்கல் இசை பயின்றார் இளையராஜா. ஆனால்
அந்த ஆம்ப்ளிஃபயரை திரும்ப மீட்டெடுக்க சென்றபொழுது அந்த இடத்தில் வேறொரு கடை
இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டார்.

26. ஆரம்ப காலங்களில் தான் பணியாற்றும் இசையமைப்பாளர் தயாரிப்பாளருடனும்,
இயக்குனருடனும் உட்கார்ந்து மெட்டு அமைக்கும்போது மெட்டுக்களை நோட்ஸ் எடுக்கும் கம்போசிங்
அசிஸ்டென்ட்டாக இளையராஜா பணியாற்றினார்.

27. 1970 களில் பகுதிநேர வாத்தியக்கலைஞராக இசையமைப்பாளர் ”சலீல் சௌத்ரி”யிடம் பணியில்
சேர்ந்தார்.

28. சலீல் சௌத்ரிக்கு பின்னர், கன்னட இசையமைப்பாளரான ஜி. கே. வெங்கடேஷ் அவர்களின்
உதவியாளராக சேர்ந்த அவர், அவரது இசைக்குழுவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்தார்.

29.. முதல் படம் “அன்னக்கிளி”
தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர்
பஞ்சு அருணாச்சலத்தால் 1976 ல் அறிமுகம் செய்யப்பட்டார்.

30. அன்னக்கிளி படத்திற்காக அவர் தேர்வானபொழுது சற்றே புருவம் உயர்த்திய  அனைவருக்கும்
பதிலடி தர இயக்குனர் பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி படப்பாடல்களை இசையமைத்துக் காட்டு
எனக்கூற, அங்கிருந்த திருமண மண்டபத்திலேயே அத்தனை பாடல்களுக்கும் இசையமைத்துத் தனது
திறமையை நிரூபித்தார் இளையராஜா.

31. இசைக்கருவி இல்லாமல் தாளம் போட்டு வாய்ப்பு பெற்ற ராசையாவினை என்ன பெயரில்
அறிமுகம் செய்யலாம் எனக்கேட்க ”பாவலர் பிரதர்ஸ்” என்றார் இசைஞானி.. இது சற்று பழையதாய்
உள்ளது என்று யோசித்த இயக்குனர் பஞ்சு அருணாச்சலம் வைத்த பெயரே ”இளையராஜா”.

32. சினிமாவிற்கு பின் ராசையா இளையராஜா ஆனது அனைவரும் அறிந்தது.ஆனால் சினிமாவில்
சேருவதற்கு முன் டேனியல் ராசைய்யா என்றே அழைக்கப்பட்டார்.

33. கதை கவிதை கட்டுரை எழுதுவதும் , பென்சில் ட்ராயிங் வரைவதும், தான் எடுத்த
புகைப்படங்களை ப்ரேம் செய்து தன் வீட்டில் மாட்டுவதும் இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த
பொழுதுபோக்கு.

34. சிபாரிசு சுத்தமாக பிடிக்காது.ஆனால் ஒரே முறை சிபாரிசு கருதி நடிகர் சங்கிலிமுருகனுக்கு
கால்ஷீட் தந்தார். சிபாரிசு செய்தவர் இளையராஜாவின் தாயார் சின்னத்தாய் அம்மாள்.

35. அன்னையின் மீது அவர் பாசம் அதிகம். சின்னத்தாய் அம்மாள் சென்னை வந்தால் ராசய்யாவின்
வீட்டிலே தான் தங்குவார். காரணம் கேட்டதற்கு "ராஜா இன்னும் குழந்தையாவே இருக்கான். அவன்
காலையிலேயே வேலைக்குப் போகும்போது நான் போய் டாட்டா காட்டணும். சாயங்காலம் அவன்
வரும்போது நான் இங்க இருக்கனும்" என நெகிழ்ச்சியாய் சொன்னார்.

36. எத்தனை பட்டங்கள் பெற்றாலும் எத்தனை விருதுகள் பெற்றாலும் மேஸ்ட்ரோ, இசைஞானி என்று
புனைப்பெயரிட்டு அழைத்தாலும் பண்ணைபுரத்துக்காரர் என்பதே எனக்கு பெருமை என்பார்.  

37. கொஞ்சம் பரபரப்பு குறைந்திருந்த தாய் வழிப்பாட்டு பாடல்கள் இளையராஜா காலத்தில் தான்
புத்துயிர் பெற்றன.

38. கவிஞர் கண்ணதாசனால் திரையுலகத்தில் இசையமைக்கத் தொடங்கிய இளையராஜா தான்
கண்ணதாசன் அவர்களின் கடைசி பாடலுக்கும் இசையமைத்தார்.

39. பண்ணைபுரத்தில் ஒரு இடம் வாங்கி அதில் அவர் சின்னத்தாய் அம்மாளின் இறப்பிற்கு பிறகு
அங்கு ஒரு கோவில் எழுப்பினார். அங்கு அமர்ந்து தியானம் செய்வது அவருக்கு மிகவும் பிடித்தமான
ஒன்று.

40. பின்னணி இசை சேர்ப்பின்போது இளையராஜா காட்சியை ஒருமுறை பார்த்ததுமே, தாளில்
இசைக்குறிப்புகளை எழுதிக் கொடுத்து உடனடியாகவே ஒலிப்பதிவுக்குச் சென்றுவிடுவார் என்பதை
ஒரு ஐதீகக்கதைப்போல சொல்லிக் கொள்கிறார்கள்.

வாத்தியத்தில் வாசித்துப்பார்ப்பதோ இசைவரிசையை காதால்கேட்டு சரிசெய்வதோ இல்லை.
இசைக்குழு அந்த இசைக்குறிப்புகளை வாசிக்கும்போது அவை மிகக் கச்சிதமாக இணைந்து ஒரே
இசையோட்டமாக சிறப்பாக வெளிப்படும்.
ஒத்திசைவிலும் காலக்கணக்கிலும் அவை கச்சிதமாக இருக்கும். பின்னணி இசை எங்கே தொடங்க
வேண்டுமோ அங்கே தொடங்கி அக்காட்சிக்கு இசை எங்கே முடியவேண்டுமோ அங்கே கச்சிதமாக
முடிந்துவிடும்.

சரிபார்த்துக் கொள்வதற்காக ஒருமுறைகூட அவர் வாத்தியங்களை தொட்டுப்பார்க்கவேண்டியதில்லை.
அனைத்துமே அவரது மனதில் மிகச்சரியாக உருக்கொண்டிருக்கும்.

41.காட்சியை ஒருமுறை பார்க்கும் போதே மனதிற்குள் இசைவடிவத்தை யோசித்து, அடுத்த விநாடியே
கைகளால் இசைக்குறிப்பை வாசித்துப் பார்க்காமல் எழுதி முடித்து, மற்றவர்களை வாசிக்கச் செய்வார்.
மிகத்துல்லியமாக வரும் அந்த இசை பார்ப்போரை வியக்க வைப்பதோடு கற்பனாசக்தியின் உச்சம்
என்று பிரமித்து அவரது நண்பர் இயக்குநர் பாரதிராஜா அடிக்கடி சொல்வார்.

42. பஞ்சமுகி என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை இளையராஜா உருவாக்கினார்.

43. ஆதி சங்கரர் எழுதிய “மீனாக்ஷி ஸ்தோத்திரம்” என்ற பக்திப்பாடலுக்கு இசையமைத்தார்.

44. 2010 ல் இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷண்’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

45. 2012 ல்‘சங்கீத நாடக அகாடமி விருது’ வென்றார்

46. இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறை பெற்றுள்ளார்.
1985  - சாகர சங்கமம் (தெலுங்கு)
1987  - சிந்து பைரவி (தமிழ்)
1989  - ருத்ர வீணை (தெலுங்கு)
2009  - பழஸிராஜா (மலையாளம்)
2016 - தாரை தப்பட்டை (பின்னணி இசை) (தமிழ்)

47. லண்டன் ராயல் ஃபில் ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவினைக் கொண்டு, அவர் ‘சிம்பொனி’
ஒன்றை இசையமைத்தார். அந்த ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்களை “மேஸ்ட்ரோ” என்று
அழைப்பர். அந்த சாதனையை முதலில் நிகழ்த்தியுள்ள ஆசியக் கலைஞர் இவரே.

48. மகாத்மா காந்திஜி எழுதிய கவிதையை  ‘ஆதித்ய பிர்லா’ நிறுவனத்தினர்  ‘இளையராஜா
இசையில்’ பாடலாக்க திட்டமிட்டனர். பண்டிட் பீம்ஸென் ஜோஷி,
பண்டிட் அஜய் சக்ரவர்த்தி, பேகம் பர்வீன் சுல்தானா ஆகிய மேதைகளைப் பாட வைத்து
அப்பாடலை உருவாக்கினார். இந்திய இசை மேதை  ‘நவ்ஷத்’ அப்பாடலை மிகவும்
பாராட்டிப் பேசினார்.

49. கோவையில்தான் எனது ஹார்மோனியத்தை 85 ரூபாய்க்கு இங்குள்ள சுப்பையா ஆசாரியாரிடம்
வாங்கினேன்.அந்த ஹார்மோனியம்தான் இன்றும் என்னிடம் உள்ளது
என்று அடிக்கடி சொல்வார்.

50. கமல்ஹாசன் குரலில் இருக்கும்  ‘பிட்ச்’ அபூர்வமானது.ஒரே நாளில் இரண்டு பாடல் கம்போஸ்
செய்து அவரை பாட வைத்துள்ளார் ஒன்று... ‘சிகப்பு ரோஜாக்களில்’ வரும் ‘நினைவோ ஒரு
பறவை’மற்றொன்று...அவள் அப்படித்தான் படத்தில் வரும்
‘பன்னீர் புஷ்பங்களே...ராகம் பாடுங்கள்’ என்ற பாடல்.

51. நான் இசையமைப்பாளராக இருந்து எனக்கு போட்டியாளராக இளையராஜா இருந்திருந்தால்
பொறாமையால் என்ன செய்திருப்பேன் என்று எனக்கே தெரியாது என கமல்ஹாசன் குமுதம் புத்தக
வெளியீட்டு விழாவில் பேசினார். அப்படி ஒரு திறமை படைத்தவர் இளையராஜா அவரைப் பார்க்கும்
போதெல்லாம் அவர் திறமையின் உயரம் கண்டு பிரமிக்கிறேன் என்று பெருமை கொள்வார்.

52."How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை
ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்த இந்த இசைத் தொகுப்பினை இசை
மும்மூர்த்திகளில் ஒருவரான ”
தியாகராஜ சுவாமிகள்” மற்றும் மேற்கத்திய இசைமேதை ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும்
காணிக்கையாக்கினார்.

53. "Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர்
ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.

54. "ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார்.
இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.

55. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசையுடன் கூடிய சிம்பொனி வடிவில்
இசையமைத்து வெளியிட்டுள்ளார்.

56. 1994ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர்
பல்கலைக்கழகத்தினாலும் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டவர் இளையராஜா.

57. இளையராஜா புகைப்படக்கலையில் மிகத்திறமை படைத்தவர்,

58. பாரதிராஜா போன்ற நெருங்கிய இயக்குனர்களுக்கு புதிய ட்யூன்களைக்கொடுத்து இதற்கு
காட்சியமைப்பை உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி பல பாடல்களை ஹிட்டாகக்
கொடுத்திருக்கிறார்.

59.  பாடலாசிரியர் வைரமுத்து இளையராஜாவைப் பற்றி பேசும் போது இசையின் காட்டாற்று
வெள்ளம் என்று வர்ணிப்பார்.

60.அரசியல் தலைவர்கள் முதல் அன்றாடக் கூலிதொழிலாளி வரை சமுதாயத்தின் எல்லா
மட்டத்திலும் அவரின் ரசிகர்கள் பரந்து விரிந்து கிடக்கிறார்கள்.

61. இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்தில் இருந்த போது, அதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் கூட
தமிழகத்தில் ஹிந்தி பாடல்களின் ஆதிக்கம் மறையவில்லை. ஹிந்தி பாடல்களை கேட்பதையும்
பாடுவதையும் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் அந்த அலையை ஓய வைத்து
தமிழ் பாடல்களை தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தவரும் விரும்பிக் கேட்கும்படியான
சாதனையை செய்தவர் இளையராஜா.

62. முதல் படம் இசையமைக்கும் போது இளையராஜாவின் வயது 33.

63. பெல்பாட்டம், விதவிதமான கலர் சட்டைகள், கருப்பு கண்னாடிகள் என்றெல்லாம் இருந்த
இளையராஜா திரையுலகமே தன் பக்கம் திரும்பிய போது எளிமையான தோற்றத்திற்கு மாறிவிட்டார்.

64. இளையராஜாவின் இசைக்குறிப்புகள் இன்னும் சில ஆண்டுகளில் இசைக்கல்லூரிகளின் பாடப்
புத்தகங்களில் இடம்பெறும் என்று பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் கூறியுள்ளார்.

65. ஒரே ஆண்டில் இளையராஜா 56 படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசை உட்பட இசையமைத்து
சாதனை படைதுள்ளார்.

66. ஆழ்ந்த ஞானம், நேரம் தவறாமை, இசைமேல் கொண்ட பற்று, கடின உழைப்பு, கவனம் சிதறாமை
என்று பல்வேறு உயர் எண்ணங்களால் பல கோடி இதயங்களைக் கவர்ந்துள்ளார்.

67. திரையிசையில் இதுவரை தன்னுடைய இசையமைப்பு மற்றும் பிற இசையமைப்பளர்களின்
இசையிலும் சேர்த்து 450 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

68. திரைப்படம் தவிர பல்வேறு ஆல்பங்களில் 100 பாடல்களுக்கு மேல் இசையமைத்துப் பாடியுள்ளார்.

69. இசைஞானி என்ற பட்டம் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது.

70. உலகின் தலைசிறந்த 25 இசையமைப்பளர்களை வரிசைப்படுத்திய மிகப் புகழ்பெற்ற அமெரிக்க
இணையதளம் இளையராஜாவுக்கு 9 வது இடம் அளித்துள்ளது. அதே இணையதளம்
இளையராஜாவை முதல் இடத்திற்கும் அவரே என்று அறிவிக்கும் நாள் வெகு சமீபத்திலிருக்கிறது.

71. சில வருடங்களுக்கு முன் லண்டன் பிபிசி வானொலி நடத்திய கருத்துக்கணிப்பில் கடந்த 75
ஆண்டுகளில் மிகச்சிறந்த பாடலாக இளையராஜா இசையமைத்த ’தளபதி’ திரைப்படத்தின்
“ராக்கம்மா கையத்தட்டு”ப் பாடலை மிக சிறந்த பாடலாக அறிவித்துள்ளது.

72. இளையராஜா எழுதிய புத்தகங்கள் :

1. சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்)
2. வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு)
3. வழித்துணை
4. துளி கடல்
5. ஞான கங்கா
6. பால் நிலாப்பாதை
7. உண்மைக்குத் திரை ஏது?
8.யாருக்கு யார் எழுதுவது?
9. என் நரம்பு வீணை
10. நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை,
இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு)
11. பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்
12. இளையராஜாவின் சிந்தனைகள்.

73. 1000 படங்களைத்தாண்டி தன் இசைப்பயணத்தை தொடரும் பெருமைக்குரிய இந்திய
இசையமைப்பாளராக உலகை வலம் வரும் இமாலய மனிதர் ”இசைஞானி இளையராஜா”

74 வது பிறந்த நாளை இன்று கொண்டாடும் ”இசைஞானி. இளையராஜா”.அவர்கள் நூறாண்டு
வாழ்ந்து இன்னும் be ஆயிரம் படங்களுக்கு இசையமைக்க இறைவன் அருள் வேண்டி வாழ்த்தி வணங்குகின்றேன்