நரிக்குறவர்கள் மீது அன்பு காட்டும் எம்.ஜி.ஆர்.
M.G.R. மீது ரசிகர்களும் அடித்தட்டு மக்களும் தங்கள் உயிரையே வைத்திருந்தனர். இது ஏதோ கண்மூடித்தனமான பக்தியால் திடீரென ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல. அந்த அளவுக்கு ரசிகர்களையும் சாதாரண மக்களையும் எம்.ஜி.ஆர். நேசித்தார். சில நேரங்களில் அவர்கள் தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டாலும் அதை அவர்களின் அன்பின் வெளிப்பாடாகவே எடுத்துக் கொள்வார்.
எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் முகத் துவார பகுதியில் எடுக்கப்பட்டன. அது வரை எந்தப் படங்களிலும் இடம்பெறாத அபூர்வ லொகேஷன் அது. அதேநேரம், மனித நடமாட்டத்தை அதிகம் பார்க்க முடியாத, மீனவர்களேகூட அப்போது போக அஞ்சிய இடம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து அங்கும் மக்கள் வந்துவிட்டனர்.
அந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர். மாறு வேடத்தில் இருப்பார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர் கள் எம்.ஜி.ஆரை காண வேண்டும் என்ற ஆவலில் தண்ணீரில் குதித்து நீந்தி அவர் இருந்த இடத்துக்கு வந்துவிட்டனர். அந்த இளைஞர்களை அழைத்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் நலம் விசாரித்தார். அப் போது, ஒரு இளைஞர் எதிர்பாராமல் எம்.ஜி.ஆரை கட்டிக்கொண்டு முத்தமிட்டார். கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் அந்த இளைஞரின் அன்பை எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண்டார்.
அந்தப் புகைப்படம்தான் எத்தனை உணர்வுகளை வெளிப்படுத்துகிறது! எம்.ஜி.ஆரை முத்தமிடும் இளைஞரின் முகமே தெரியவில்லை. அந்த அளவுக்கு அன்பின் வெளிப்பாடாய் ஆழமாக தன் முத்தத்தை பதிக்கிறார். அருகில் நிற்கும் இளைஞர் எம்.ஜி.ஆரைப் பார்த்த பரவசததில் கும்பிட்ட கையை கீழிறக்காமல் சிரித்தபடி அவரை பார்த்துக் கொண்டே நிற்கிறார். நீரில் நீந்தி வந்த தன் அடையாளமாக அவர் அணிந்துள்ள டிராயர் தண்ணீரில் நனைந்து உடலோடு ஒட்டியுள்ளது. முத்தமிடும் ரசிகரை அணைத்தபடி அவரது அன்பு மழையில் திளைக்கும் எம்.ஜி.ஆரின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம். அன்பு மனங்களின் சந்திப்பு, சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி; பார்ப்பவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து சமீபத்தில்தான், நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நரிக்குற வர் இன மக்கள் மீது எம்.ஜி.ஆர். மிகுந்த அன்பு கொண்டவர். ‘ஒளி விளக்கு’ படத் தில் ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க…’ பாடலில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நரிக்குறவர்கள் வேடத்தில் ஆடிப் பாடுவர்.
அந்தப் பாடலின்போது நடனத்தில் எம்.ஜி.ஆர். கலக்கியிருப்பார். தியேட்ட ரில் ஆடாதவர்கள் குறைவு. அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக நரிக்குறவர் இன மக்களை வரவழைத்து, அவர்களை ஆடச் சொல்லி கவனித்து எம்.ஜி.ஆர். பயிற்சி எடுத்துக் கொண்டார். ‘நவரத் தினம்’ படத்தில் ‘குருவிக்கார மச்சானே…’ பாடல் காட்சியிலும் எம்.ஜி.ஆரின் மூவ்மென்ட்ஸ் அற்புதமாக இருக்கும்.
எம்.ஜி.ஆர். கொண்டாடிய ஒரே பண்டிகை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை. அன்றைய தினம், கட்டுக் கட்டாக பணத்தை வைத்துக் கொண்டு, தன்னைக் காண வருவோருக்கெல்லாம் கைக்கு வரும் பணத்தைக் கொடுத்து மகிழ்வார். ஒருமுறை பொங்கல் நாளில் ஏராளமான நரிக்குறவர்கள் எம்.ஜி.ஆரை காண, அவரது ராமாவரம் தோட்டத்துக்கு வந்தனர். எம்.ஜி.ஆரை கண்டதும் உற்சாகக் கூச்சலிட்டனர். அவர் களை அருகே வருமாறு அழைத்த எம்.ஜி.ஆர்., கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் பணம் கொடுத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள், அவர் எவ்வளவோ தடுத்தும் அவரது காலில் விழுந்து வணங்கினர்.
நரிக்குறவர் இன மக்களை எந்தவித பேதமும் இல்லாமல் எம்.ஜி.ஆர். கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களது குழந்தைகளை வாங்கிக் கொஞ்சினார். சமூகத்தில் அடித்தளத்தில் இருக்கும் தங்கள் மீது அவர் காட்டிய பாசத்தையும் அன்பையும் பார்த்து வந்தவர்கள் கண்கலங்கினர்.
வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரை கட்டியணைத்து முத்தமிட் டார். அவரது உதடுகளின் அடையாளம் எம்.ஜி.ஆரின் கன்னத்தில் பதிந்துவிட் டது. இதை எதிர்பாராத எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் வேகமாகப் பாய்ந்து அவரை விலக்க முற்பட்டனர். அவர் களைத் தடுத்த எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘விடுங்கப்பா, அவங்க அன்பை இப்படிக் காட்டுறாங்க. இதில் தவறு ஒன்றுமில்லை’’ என்று சாதாரண மாகக் கூறினார். இதன் தொடர்ச்சி யாக மறுநாள் நடந்ததுதான் வேடிக்கை.
முதல்நாள் எம்.ஜி.ஆரை பார்த்துவிட் டுச் சென்ற நரிக்குறவ சமூக மக்கள் மறுநாளும் கூட்டமாக வந்துவிட்டனர். படப்பிடிப்புக்கு கிளம்பிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் விசாரித்தார். முதல்நாள் அவரை முத்தமிட்ட அந்த நரிக் குறவர், ‘‘உங்க தயவால என் சபதம் நிறை வேறிடுச்சு சாமி’’ என்றார். ‘‘என்ன சபதம்?’’ என்று என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு, ‘‘உங் களை யாரும் தொடமுடியாதுன்னு எங்க கூட்டத்தினர் சொன்னாங்க. அவர்களிடம் உங்களை முத்தமிட்டு காட்டுறேன்னு சபதம் செய்தேன். ஜெயிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சாமி’’ என்று கூறினார்.
அதைக் கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர்., ‘‘பரவாயில்லை. இனிமேல் இதுபோன்று வேறு யாரையும் முத்தமிடுவதாக சபதம் செய்யாதே. வம்பா போயிடும்’’ என்று சொல்லி, பணியாளர்களை அழைத்து, வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு போடச் சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கு புறப்பட்டார்.
மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளின் போதும் எம்.ஜி.ஆர். முதல்வராக வில்லை. தமிழ்த் திரையுலகின் நம்பர் ஒன் ‘ஹீரோ’வாக இருந்தார். என்றாலும் புகழ்மிக்க ஒரு நடிகரிடம் ரசிகர்களும் மக் களும் இந்த அளவுக்கு உரிமை எடுத்துக் கொள்ள முடியுமா? முதல்வரான பிறகும் அவரது இந்த எளிமையாக பழகும் குணம் மாறவில்லை என்பதுதான் எம்.ஜி.ஆரின் தனிச்சிறப்பு.
‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் பாடல் இது:
‘உலகமெனும் நாடக மேடையில்
நானொரு நடிகன்;
உரிமையுடன் வாழ்ந்திடும் வாழ்க்கையில் உங்களில் ஒருவன்!’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக