கவியரசரும் மெல்லிசை மன்னரும் உதயமான திரையிசைத் திருநாள் ஜூன் 24 .
*மெல்லிசை மன்னரே !* உன் இசையைக் கேட்டோம். -அது இதயத்திற்கு செவிகள் தரும் கௌரவம். *கவியரசே !* உன் கவிதைகளைப் படித்தோம். - அது இதயத்திற்கு கண்கள் தரும் கௌரவம்.
வண்டு வந்து அமர தேன்மலர்கள்தவிக்கும்.
*கவியரசர்* கவிதைக்கு வார்த்தைகள் தவிக்கும். *மாமன்னர்* இசைக்கு வாத்தியங்கள் தவிக்கும்- எத்தனை முறை கேட்டாலும் உன் இசைக்கு எங்கள் மனம் தவிக்கும்!!!
காற்றை சுவாசிப்பதால் உடலைப் புதுப்பிக்கிறோம் – *மாமன்னரே !* உன் இசையை சுவாசிப்பதால் எங்கள் ஆன்மாவை புதுப்பிக்கிறோம்.
மெட்டும் பாட்டும் ஒன்றாய் இருந்தால் கானம். அதனால்தானோ கவியரசர் அவதரித்த அதேநாளில் மாமன்னரும்.. *(24 ஜூன்)*
மன்னரின் மெட்டுக்குப் பின் கவியரசரின் பாட்டுண்டு. கவியரசரின் பாட்டுக்குப் பின் மன்னரின் மெட்டுமுண்டு. இருவர் பிறப்பை வைத்து பார்க்கும்போது ஒரே நாளானாலும் பாட்டுக்குப் பின்தான் மெட்டென்பது சரியோ?
( கவியரசர் 1927
மன்னர் 1928).
*கவியரசே !* உன் எழுத்துகள் சிறந்த புத்தகம் உன் வாழ்வோ திறந்த புத்தகம் – நாங்கள் வாசித்து அறிந்திருக்கிறோம். மாமன்னா ! நீ அவரை நேசித்து அறிந்திருப்பாய் !
தவறான இலக்கில் கணைதொடுத்த இந்திரனுக்கு உடம்பெல்லாம் குறிகளானது முனிவன் சாபத்தால்! தவமென நேசிக்கும் இசையால் எங்களுக்கு உடம்பெல்லாம் செவிகளானதோ! *மன்னரே!* உன் (ஸ்)வரத்தால்!!
*கவியரசே!* நீ காதலைப் பாடினாய் - அன்பு வந்தது கேளிக்கைகளைச் சொன்னாய் – உற்சாகம் பிறந்தது செப்புமொழிகளை வழங்கினாய்– நகைச்சுவை வந்தது எதையும் எளிமையாகத் தந்தாய்-எல்லோர்க்கும் புரிந்தது.
நல்லவற்றை விதைத்தாய் – நம்பிக்கை வளர்ந்தது. அர்த்தமுள்ளதென ஆய்ந்துரைத்தாய்–ஆன்மீகம் தெளிந்தது. தத்துவம் போதித்தாய் – வாழ்க்கை புரிந்தது. எழுதுகோலை எடுத்தாய்- *எழில் தமிழ் இன்னும் சிறந்தது.*
கடவுளை ஏகவசனத்தில் பேசினோம் பக்தியால். கவிஞனை ஏகவசனத்தில் பேசினோம் தமிழால். கடவுளுக்கும் கவின்மிகு தமிழுக்கும் மறைவென்பது இல்லை. *மாமன்னரே!* அதுபோல்உன்னையும் ஏக.........இசையால்!
கண்ணன் கையில் குழலுக்குத் தனி அழகு! கங்காதரன் கையில் உடுக்கைக்குத் தனி அழகு! கலைமகள் கையில் வீணைக்குத் தனி அழகு! மெல்லிசைதெய்வமே! *உன் கையில் ஹார்மோனியத்திற்கு தனி அழகு!!*
*இயற்றமிழுக்கு* கவியரசர் கண்ணதாசன் *இசைத்தமிழுக்கு* மெல்லிசை மாமன்னர் எம் எஸ் வி *நாடகத்தமிழுக்கு* நடிகர்திலகம் சிவாஜிகணேசன். ஆக திரைமொழியால் *முத்தமிழுக்கும்* பெருமை!
கல்வியில் சிறந்தவர் பிறந்ததை ஆசிரியர் தினமென்றோம். கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்ததை கல்வி தினமென்றோம். கணிதமாமேதை ராமானுஜர் பிறந்தததை கணித தினமென்றோம். வீரத்துறவி விவேகானந்தர் பிறந்ததை இளைஞர் தினமென்றோம்.
கவிதைக்காய் அவதரித்தவர் *கண்ணதாசன்* கவிதைகளை மெல்லிசையால்அலங்கரித்தவர் *எங்கள் எம் எஸ் வி* *கவிதைக்கும்இசைக்குமாய்* இருவரும்பிறந்த ஜூன் 24 *திரையிசைத் திருநாள்* எனக் கொண்டாடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக