*ரஜினிகாந்த் நடித்து,எழுபதுகளில் வெளிவந்த "தர்மயுத்தம்" என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்து வெளிவந்த சூப்பர் ஹிட் பாடல் இது.*
*பாடலின் சூழல்:*
திருமணத்திற்கு ஆயத்தமாகும் காதலனும் காதலியும் களிப்புடன் பாடும் இளமை ததும்பும் பாடல் இது.
*இசையமைப்பு:*
இளையராஜாவின் மெருகேறிய காதல் ததும்பும் பாடல் இது.
அந்தச் சமயத்தில், ஏன் இந்தச் சமயத்தில் கூட எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத மெட்டும் இசையமைப்பும் குளிர்விக்கின்றன.
கொஞ்சமும் எதிர்பாராத நேரத்தில் பெண் குரலின் ஹம்மிங்கோடும் காங்கோ டிரம்ஸ் கலவையோடும் ஒன்று சேர்ந்து சடுதியில் பாடல் ஆரம்பிக்கிறது.
ஹம்மிங் முடிந்து ஒரு லீட் வந்து முடிய, ஆண்குரலில் ‘ஆகாய கங்கை’ என்று ஆரம்பிக்கிறது.
ஆண்குரல் ஒலித்து முடிய பெண்குரல் அதற்குப்பதில் சொல்லி முடிய, சரணம் முடிய முதல் BGM ஆரம்பிக்கிறது.
கீபோர்டு, புல்லாங்குழல்,வயலின் கோரஸ் போன்ற இசைக் கலவை இசைத்து முடிய வயலின் சோலா உருகிமுடிக்க மீண்டும் ஆண் குரலில் "காதல் நெஞ்சில்" என்று சரணம் ஆரம்பிக்கிறது.
இரண்டாவதுBGM-ல் பெண்குரல் ஹம்மிங் ஒலித்து வயலின் சோலோ முடித்து 2-ஆவது சரணம் பெண்குரலில் ஆரம்பித்து ஆண்குரலில் முடிகிறது.
டிரம்ஸ், காங்கோ, கீபோர்டு, பேஸ் கிட்டார், ரிதம் கிட்டார்,வயலின்கள், வயலின் சோலோ,காங்கோ போன்ற பலவித இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்ட அருமையான பாடலிது.
*பாடல் வரிகள்:*
ஆகாய கங்கை
பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்
குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்
காதல் நெஞ்சில்..ஹேஏஏஎ
மேள தாளம்..ஹோஓஒ (2)
காலை வேளை பாடும் பூபாளம்
மன்னா இனி உன் தோளிலே
படரும் கொடி நானே
பருவப் பூ தானே
பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ
(குங்கும தேரில்)
தேவை யாவும் ஹேஏஏஏ
தீர்ந்த பின்னும் ஹோஓஒ (2)
பூவை நெஞ்சில் நாணம் போராடும்
ஊர்கூடியே உறவானதும்
தருவேன் பலநூறு
பருகக் கனிச்சாறு
தளிராடும் என் மேனி தாங்காது உன் மோகம்
(ஆகாய கங்கை)
*பாடல் வரிகளை எழுதியவர்M.G. வல்லவன் அவர்கள்.*
இளையராஜாவுக்கு சுமார் 200பாடல்களை எழுதியிருந்தாலும் இவரை அவ்வளவாய் நமக்குத் தெரியாது.
*கரும்புவில் என்ற திரைப் படத்தில் வரும், 'மீன் கொடித்தேரில் மன்மத ராஜன்'*
*மண் வாசனையில் வரும் "அரிசி குத்தும் அக்காமார்களே"*
*பொண்ணு ஊருக்குப்புதுசு படத்தில் அமைந்த" சோலைக்குயிலே பாடும் மயிலே",*
*மலர்களே மலர்களே படத்தில் உள்ள "இசைக்கவோ உன் கல்யாணிராகம்" போன்ற பல பாடல்களை எழுதியுள்ளார்.*
மேலும் உதயகீதம், இதயக்கோயில் போன்ற சில படங்களுக்கு திரைக்கதை வசனம் இவரே.
அது மட்டுமல்ல, பிலிமாலயா, பேசும்படம், பெண்மணி போன்ற பல பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார்.
2003ல் இறந்துபோனார். இந்தப் பாடலில் மெட்டுக்குத் தகுந்த கச்சிதமான வரிகளை எழுதியுள்ளார்.
*பாடலின் குரல்கள்:*
பாடலைப் பாடியவர்கள் மலேசியா வாசுதேவன், மர்றும் ஜானகி.
SPB வராததால் "பதினாறு வயதினிலே படத்தில்" ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்று பாட ஆரம்பித்து அது சூப்பர் ஹிட் ஆகிவிட எல்லோரும் அவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
தர்மயுத்தம் படத்தில் ரஜினிக்குப் பாடிய இந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆகியதோடு குரலும் ரஜினிக்குப் பொருத்தமாக இருந்ததால் ரஜினிக்கு நிறைய பாடல்களை மலேசியா பாடினார்.
SPB இளையராஜாவின் பழைய ஆர்க்கெஸ்ட்ராவில் TMS திருச்சி லோகநாதன் குரலில் அருமையாக பாடுபவராம்.
“ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே”,
“பூங்காற்று திரும்புமா” என்ற பாடல்கள் திருச்சி லோகநாதனையும் TMS-யையும் நினைவு படுத்தும்.
ஜானகி குரலில் சொல்லவே வேண்டாம்.
அவ்வளவு இளமை,காதல், சென்சுவாலிட்டியை எப்படித்தான் பாடலில் கொண்டுவருகிறாரோ.
குறிப்பாக சரணத்தில் வரும் ஒரு சிறு சிரிப்பு, இருவரும் இந்தப் பாடலின் வெற்றிக்கு முக்கிய பங்காளர்கள் ஆவார்கள்.
*இளையராஜாவின் மணிமகுடத்தில் மின்னும் இன்னுமொரு வைரம் இது.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக