திங்கள், 17 ஜூலை, 2017

பாரதிராஜாவின் படங்கள் - சில ஒப்பீடுகள்.




பாரதிராஜாவின் படங்கள் - சில ஒப்பீடுகள்.

16 வயதினிலே - சிகப்பு ரோஜாக்கள்

கடந்த 1977ம் ஆண்டு வெளியாகி, தமிழ் திரைத்துறையின் போக்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய படம்தான் 16 வயதினிலே. பாரதிராஜா என்ற மதுரை மாவட்ட(அன்றைய) இயக்குநர் அனைவரையும் ஆச்சர்யத்துடன் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தார். இயல்பான கிராமியச் சூழலை, தமிழில் முதன்முதலாக எடுத்துக்காட்டியப் படம் என்ற வகையில், இன்றளவும் அது தமிழின் சிறந்த படங்களில் ஒன்று.

அப்படத்தில், அன்றைய காலகட்டத்தில் வெகு பிரபலமாக இருந்த கமல்-ஸ்ரீதேவி இணையை பயன்படுத்தினார். அப்படத்தின் முடிவானது, கமலஹாசன், வில்லன் ரஜினியைக் கொலை செய்த வழக்கில் சிறை சென்றுவிட, அவர் வருவார் என்ற நம்பிக்கையில், நெடுங்காலம் காத்துக் கொண்டிருப்பார் சட்ட நுணுக்கங்கள் ஏதும் அறியாத அப்பாவி கிராத்து மயிலு (ஸ்ரீதேவி). இறுதியில் கமல் வந்தாரா, இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது.

ஆக, இந்தப் படத்தின் முடிவானது, நாயக - நாயகி இருவரும் இணை சேர்வதாக அமைந்திருக்காது.

சிகப்பு ரோஜாக்கள்

1978ம் ஆண்டின் பிற்பாதியில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ஒரு சிட்டி சப்ஜெக்ட் த்ரில்லர் படம் சிகப்பு ரோஜாக்கள். இதிலும், தான் பயன்படுத்திய முதல் ஜோடியான கமல்-ஸ்ரீதேவி இணையையே பயன்படுத்தியிருப்பார் பாரதிராஜா. ஆனால், 16 வயதினிலே போல் அல்லாமல் இதுவொரு நகரத்து கதை. அப்படத்திலே, இருவரும் இணைவதற்கு முன்னதாகவே பிரிந்து விடுவார்கள். ஆனால், இங்கே திருமணமெல்லாம் செய்து கொள்வார்கள். ஆனால், இறுதியில் பிரிந்து விடுவார்கள். சைக்கோ கமலின் தவறுகள் அனைத்தும் வெளியே தெரிந்து, அவர் சிறைக்கு சென்றுவிடுவார். அவர் மனதில் ஸ்ரீதேவியின் பெயரான சாரதா என்பது மட்டுமே எஞ்சியிருக்கும். அப்பெயரை சிறை சுவரில் எழுதிக் கொண்டேயிருப்பார். அவர் எப்போது மீண்டு வருவார் என்று ஸ்ரீதேவி காதலுடன் காத்துக்கொண்டே இருப்பார். இருவரும் மீண்டும் இணைந்தார்களா? என்பது தெரியாது.

ஆக, மயிலு போலவே, இந்த சாரதாவும் தன் நாயகனுக்காக இறுதியில் காத்துக்கொண்டே இருக்கிறாள். தனது 16 வயதினிலே மற்றும் சிகப்பு ரோஜாக்கள் ஆகிய 2 படங்களில் தான் பயன்படுத்திய ஒரே ஜோடியை, முடிவில் பிரிக்கும் வகையிலேயே திரைக்கதையை அமைத்திருக்கிறார் பாரதிராஜா...! 16 வயதினிலே அவரின் முதல் படம், சிகப்பு ரோஜாக்கள் அவரின் மூன்றாவது படம். இரண்டுமே மிகச் சிறந்த வெற்றிப் படங்கள்.

மண்வாசனை - புதுமைப்பெண்

பாண்டியன்-ரேவதி ஆகிய இருவரும் அறிமுகமான படம் மண்வாசனை. இதுவொரு கிராமியப் படம். இப்படத்தில், தொடக்கத்திலிருந்தே இருவரும் இணைவதில் பல பிரச்சினைகள். இடையில், பாண்டியன் வேறொரு வடக்கத்தியப் பெண்ணை திருமணம் செய்து கொள்வார். ஊர்க்காரர்கள், ரேவதியை இரண்டாம் தாரமாக, பாண்டியனுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சிக்கையில், ரேவதி அதற்கு மறுத்துவிடுவார். கடைசி சண்டைக் காட்சியில், அந்த வடக்கத்தியப் பெண் உயிர் தியாகம் செய்ய, ரேவதியோ, வில்லன் வினுசக்கரவர்த்தியை கொலைசெய்து விடுவார். அனைவரும் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், படம் நிறைவுறும். ரேவதி ஜெயிலுக்கு சென்றாரா? இருவரும் சுபமாக இணைந்தார்களா? இத்தகைய கேள்விகளோடு முடிவடையும் படம் இது.


புதுமைப் பெண்


இப்படம், ஒரு நகரத்துப் படம். அதே பாண்டியன்-ரேவதி ஜோடி. சில எதிர்ப்புகளுக்குப் பிறகு(பாண்டியன் தரப்பிலிருந்து), இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள். திருமண வாழ்வில், பாண்டியனின் மேலதிகாரி மூலமாக பிரச்சினை வர, பாண்டியன் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு சிறை சென்றுவிடுவார். அவரை மீட்பதற்காக கடுமையாக போராடும் ரேவதி, இறுதியில் தன் முயற்சியில் வெற்றியடைகிறார். ஆனால், பாண்டியனோ, ரேவதி குறித்தான தன் தாயின் அபாண்ட பழியால் மனம் மாறி, ரேவதியை சந்தேகப்படுகிறார். இதனால், மனம் வெறுத்து வெகுண்டெழும் ரேவதி, பாண்டியனைப் பிரிந்து வெளியேறும் நிலையில், படம் நிறைவடையும். ஆக, இப்படத்திலும், அவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா, இல்லையா? என்பது தெரியாமலே போய்விடும்.

ஆக, மேற்கண்ட 6 படங்களையும் அலசினால், சில விஷயங்கள் நமக்கு கிடைக்கின்றன. அவை;

கமல்-ஸ்ரீதேவி, சுதாகர்-ராதிகா மற்றும் பாண்டியன்-ரேவதி ஆகிய இணைகளை வைத்து எடுத்த முதல் படங்கள் கிராமத்துப் படங்களாகவும், அதே இணைகளை வைத்து எடுத்த இரண்டாவது படங்கள் நகரத்துப் படங்களாகவும் உள்ளன. இணைகள் தொடர்பான படங்களின் முடிவுகளும் ஏறக்குறைய ஒன்றாகவே உள்ளன.

 கிழக்கே போகும் ரயில் - நிறம் மாறாத பூக்கள்

சுதாகர் - ராதிகா ஆகிய இருவரும் அறிமுகமான படம்தான் கிழக்கே போகும் ரயில். இது பாரதிராஜாவின் இரண்டாவது படம். 16 வயதினிலே போலவே, இதுவும் ஒரு கிராமியப் படம்தான். இப்படத்தில், சுதாகரும், ராதிகாவும் ஜாதியப் பிரச்சினையால் சேர முடியாமல், இறுதியில் ஊரை எதிர்த்து ஓடிப்போய் சேர்ந்து கொள்வார்கள்.

அதே ஜோடியை தனது நான்காவது படமான நிறம் மாறாத பூக்கள் படத்திலும் பயன்படுத்தியிருப்பார் பாரதிராஜா. ஆனால், இதுவொரு சிட்டி சப்ஜெக்ட் படம். இதிலும், காதலர்களான சுதாகரும், ராதிகாவும் வர்க்கப் பிரச்சினையால் (பொருளாதார பேதம்) சேர முடியாமல், இறுதியில் இன்னொரு நாயகன் விஜயனின் உதவியால் ஓடிப்போய் சேர்ந்து கொள்வார்கள்.

ஆக, ஒரே ஜோடிகள் நடித்த இரண்டு படங்களிலும், முடிவு ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே அமைக்கப்பட்டிருக்கும்.

அலைகள் ஓய்வதில்லை - வாலிபமே வா வா

கார்த்திக் - ராதா ஜோடி முதன்முதலாக அலைகள் ஓய்வதில்லை படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். பின்னர், இதே ஜோடி, மீண்டும், வாலிபமே வா வா படத்தில் பாரதிராஜாவால் பயன்படுத்தப்படுகிறார்கள். ஆனால், நான் வாலிபமே வா வா படத்தைப் பார்த்ததில்லை என்பதால், என்னால் இரண்டு படங்களுக்குமிடையிலான ஒப்பீட்டை செய்ய முடியவில்லை.

கார்த்திக்-ராதா ஜோடி

தமிழில் பாரதிராஜாவின் 5வது சிறந்த மற்றும் வித்தியாசமான முயற்சிகளைக் கொண்ட படம் நிழல்கள். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இந்த விரக்தியில், அடுத்ததாக எடுக்கப்பட்ட கமர்ஷியல் படம்தான் அலைகள் ஓய்வதில்லை. இதன் ஜோடி கார்த்திக்-ராதா. பாரதிராஜா எடுத்த காதல் ஓவியம் ஒரு வித்தியாசமான படம். ஆனால் தோல்வியை சந்தித்தது. அந்த விரக்தியில் எடுக்கப்பட்ட அடுத்த கமர்ஷியல் படம்தான் வாலிபமே வா வா. இதன் ஜோடியும் கார்த்திக்-ராதா.

ஆக, வித்தியாசமான படங்களின் தோல்விக்குப் பிறகு, கமர்ஷியல் படம் எடுக்கும் வெறிகொண்ட பாரதிராஜாவுக்கு இரண்டுமுறை கிடைத்தவர்கள் கார்த்திக்-ராதா ஜோடிதான். விரக்தியில் எடுத்த ஒரு கமர்ஷியல் படமான அலைகள் ஓய்வதில்லை நன்றாக ஓட, இன்னொரு விரக்தி கமர்ஷியல் படமான வாலிபமே வா வா படம் ‍தோல்வி.

நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை மற்றும் காதல் ஓவியம் ஆகிய 3 படங்களுக்குமே திரைக்கதை வசனம் மணிவண்ணன் என்பது கவனிக்கத்தக்கது.
‬: குறிப்பு

பாரதிராஜாவின் படங்களைப் பற்றிய ஒரு மேலோட்டமான ஒப்பீடுதான் இப்படைப்பே தவிர, அவரின் படங்களைப் பற்றிய சமூக மற்றும் கலை விமர்சனங்கள் தொடர்பானதல்ல. இன்னும் யோசித்தால், நியை ஒப்பீடுகளை செய்யலாம்தான். ஆனால், போதும் என்று நினைக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக