மக்கள் திலகத்தை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு. நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை.
மக்கள் திலகத்தை வைத்து அன்று சிந்திய ரத்தம் என்ற பெயரில் டைரக்டர் ஸ்ரீதர் படம் தொடங்கினார். கருப்பு வெள்ளையில் எடுத்தார். அதே சமயம் இந்த பட பூஜை போட்டு விநியோகஸ்தர்களிடம் வாங்கிய பணத்தில் புதுமுகங்களைப் போட்டு காதலிக்க நேரமில்லை படத்தை கலரில் எடுத்தார்.
மக்கள் திலகம் அன்று சிந்திய ரத்தம் படத்தில் இருந்து விலகிக் கொண்டார். அந்தப் படத்தில் நடிக்க 25,000 அட்வான்ஸ் வாங்கினார். சில நாட்கள் நடித்ததற்கே அந்தத் தொகை குறைவுதான். ஸ்ரீதரும் அதைக் கேட்கவில்லை.
பின்னர், சிவாஜி கணேசனை வைத்து போட்டிக்காக சிவந்த மண் படத்தை கலரில் அதுவும் வெளிநாட்டில் ஸ்ரீதர் எடுத்து வெளியிட்டார். ஆனால், அந்த சமயத்தில் வெளியான நம்நாடு திரைப்படம்தான் சிவந்த மண்ணை விட அதிக வசூல் கொடுத்தது.
பின்னர், சில படங்களை எடுத்து ஸ்ரீதர் நஷ்டம் அடைந்தார். சிவாஜி கணேசனை வைத்து வைரநெஞ்சம் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். பாதி படம் வளர்ந்த நிலையில், வியாபாரம் ஆகாததால் மேற்கொண்டு படம் வளரவில்லை. அந்தப் படம் பின்னர் வெளியாகி தோல்வி அடைந்தது வேறு விஷயம்.
அந்த சமயத்தில் சிவாஜி கணேசன் ஸ்ரீதருக்கு உதவி செய்யவில்லை. தன் கையில் இருந்து பணம் கொடுக்கவோ, பாதி நின்றிருந்த வைரநெஞ்சம் படத்தில் மேற்கொண்டு நடிக்கவோ இல்லை.
வேறு வழி தெரியாத நிலையில், மக்கள் திலகத்திடம் ஸ்ரீதர் தஞ்சமடைந்தார். அவருக்கு உதவ மக்கள் திலகம் நடித்துக் கொடுத்து ஸ்ரீதரை கைதூக்கி விட்ட படம்தான் வெள்ளிவிழா படமான உரிமைக்குரல். அதன் பின்னர்தான் ஸ்ரீதர் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு மறுபடியும் படத்தயாரிப்புகளை தொடங்கினார். மக்கள் திலகத்தின் மீனவ நண்பன் வெற்றிப் படத்தையும் ஸ்ரீதர் பின்னர் இயக்கினார்.
மறுபடியும் மோகனப் புன்னகை என்ற சிவாஜி கணேசன் நடித்த படத்தின் மூலம் ஸ்ரீதர் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டார் என்பது தனிக்கதை.
மக்கள் திலகத்தின் மாண்புக்கு ஒரு உதாரணம். உரிமைக்குரல் படத்தில் பேசிய சம்பளத்தில் இருந்து அன்று சிந்திய ரத்தம் படத்துக்காக வாங்கிய அட்வான்ஸ் தொகை 25,000 –த்தை புரட்சித் தலைவர் கழித்துக் கொண்டார். பின்னர், ஸ்ரீதரே இதை தெரிவித்தார்.
இந்தப் படத்தில் மக்கள் திலகம் நடித்திருந்தால் ஸ்ரீதருக்கு இடையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே வந்திருக்காது.
மக்கள் திலகத்தை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு. நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக