வியாழன், 3 ஆகஸ்ட், 2017

ஜல்லிக்கட்டு அரசியலைப் பற்றிய படம்தான் 'மதுரவீரன்'..!’’ - இயக்குநர் பி.ஜி.முத்தையா அவர்களின் சிறப்பு பேட்டி



ஜல்லிக்கட்டு அரசியலைப் பற்றிய படம்தான் 'மதுரவீரன்'..!’’ - இயக்குநர் பி.ஜி.முத்தையா அவர்களின் சிறப்பு பேட்டி
*************

ஒளிப்பதிவாளராக இருந்து தமிழ் சினிமாவுக்கு இயக்குநர் அவதாரம் எடுத்திருப்பவர் பி.ஜி.முத்தையா. இவரது ஒளிப்பதிவில் 'பூ', 'கண்டேன் காதலை', 'சகுனி' என பல படங்கள் திரைக்கு வந்துள்ளன.
தற்போது இவர் இயக்கும் முதல் படமான 'மதுரவீரன்' படத்தை, விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியனை வைத்து எடுத்துக்கொண்டிருக்கிறார். இவர் ஏற்கெனவே 'சகாப்தம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜயகாந்த் வெளியிட்டார். இரண்டாம் கட்டப் படப்பிடிப்பைத் தொடங்க இருக்கும் இயக்குநர் பி.ஜி.முத்தையாவைப் படத்தின் அப்டேட்ஸ்காகத் தொடர்புகொண்டோம்.
''என்னுடைய ஒளிப்பதிவில் நிறைய படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், நான் யார் என்பதை நான் இயக்கும் படங்களின் மூலமாகவே இந்த உலகுக்குச் சொல்ல முடியும். அதனால்தான் நான் இயக்குநர் அவதாரம் எடுத்தேன். 'ஜல்லிக்கட்டு' போராட்டம் தமிழகமெங்கும் தொடங்குவதற்கு முன்பாகவே 'ஜல்லிக்கட்டு' பற்றிய இந்த ஸ்க்ரிப்ட்
நான் ரெடியாக எழுதி வைத்திருத்தேன். படத்தில் நடிக்க பல ஹீரோக்களிடம் கதை சொல்லியிருந்தேன். எல்லோருக்கும் பிடித்திருந்தது. ஆனால், கால்ஷீட் பிரச்னை காரணமாக இந்தப் படத்தில் அவர்களால் நடிக்க முடியவில்லை.
அப்போதுதான் இந்தக் கதை சண்முகபாண்டியனிடம் சென்றது. முதலில் இந்தக் கதையை பிரேமலதா கேட்டார். அவருக்குப் பிடித்திருந்தது. அடுத்த நாள் விஜயகாந்த், சண்முக பாண்டியன், பிரேமலதா மூவரும் ஒன்றாக அமர்ந்து கதை கேட்டார்கள். ஒரு இரண்டு மணிநேரம் ஸ்க்ரிப்ட் முழுவதையும் விஜயகாந்த் அமைதியாகக் கேட்டார். கதை கேட்டவுடன், கதையில் எந்தவொரு குறுக்கீடும் அவர் செய்யவில்லை. 'தம்பி உங்கள் படத்தில் நடிப்பார்' என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் இந்தக் கதையில் நல்ல கம்பீரமான ஒருவர் நடித்தால் நன்றாகயிருக்கும் என்று நினைத்தேன். சண்முகபாண்டியன் நல்ல உயரமான மனிதர். தமிழ் சினிமாவில் சமீபத்தில் இவர் உயரத்துக்குச் சமமான மனிதர் யாரும் இல்லை. அவரது உயரம் 6.4.
இந்தப் படத்தில் ஜல்லிக்கட்டு பற்றிய ஒரு அரசியல் இருக்கும். ''அப்பனுக்குப் பிறகு பிள்ளை என்பது அரசியலில் வேண்டுமானால் ஒத்து வரலாம் தம்பி, அம்புட்டுக்கும் ஒத்து வராது'' என்று படத்தில் வசனம் வரும். ஆனா, இதற்கெல்லாம் விஜயகாந்த் எதுவும் சொல்லவில்லை. படத்தோட கதையை விஜயகாந்த்திடம் சொல்லப்போறேன்னு சொன்னபோது, கதையில் நிறைய குறுக்கீடு இருக்கும்னு நிறைய பேர் பயமுறுத்துனாங்க. ஆனால், அப்படியெல்லாம் எதுவும் அவர் செய்யவில்லை.
படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். மதுரையைச் சுற்றி படத்தோட படப்பிடிப்பு நடந்தது. தினமும் நூறு பேராவது வந்து உங்கள் அப்பா எங்களுக்குச் சொந்தக்காரர் என்று பேசுவார்கள். படப்பிடிப்பு நடக்கும்போதுகூட பக்கத்தில் இருக்கும் கோயில்கள், டீ கடையில் விஜயகாந்த் சார் நடித்த படங்களின் பாடல்களைத்தான் அந்த ஊர் மக்கள் போடுவார்கள். நாளை படத்தின் டீசரை 'சென்னை 28 ' டீம்
 ட்விட்டரில் வெளியிடவுள்ளனர்’’ என்று முடித்தார் இயக்குநர் பி.ஜி.முத்தையா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக