எஸ்.ஜானகி அம்மாவை கண்ணீர் விட வைத்த இசைஞானி இளையராஜா !
இசைஞானி இளையராஜா இசையில் பாடிக்கொண்டிருந்த
எஸ்.ஜானகி அம்மா திடீரென பாட முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். இசைக்குழுவினர் திகைத்துப் போனார்கள்.
இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
காரைக்குடி நாராயணன் கதை வசனம் எழுதிய படங்கள் அப்போது நன்றாக ஓடிக்கொண்டிருந்தன. இதனால் அவரே ஒரு படம் தயாரிக்க முன்வந்தார். படத்துக்கு "அச்சாணி'' என்று பெயர் வைத்தார். படத்துக்கு இசையமைக்க என்னைக் கேட்டுக்கொண்டார்.
கதை சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது. பூஜையன்றே பாடல் பதிவு.
பாடல்களை கவிஞர் வாலி எழுதினார். கம்போசிங்கும் நடந்து முடிந்தது. இதில் "மாதா உன் கோவிலில் மணித்தீபம் ஏற்றினேன்'' என்ற பாடல், படத்தின் அச்சாணி போல. ஆனால் பூஜைக்கு முதல் பாடலாக வேறு பாடலை தேர்வு செய்திருந்தேன். பிரசாத் ஸ்டூடியோவில் பூஜை என்று முடிவானது. பூஜை தினத்தில் சவுண்டு என்ஜினீயர் எஸ்.பி.ராமநாதன் ஒரு சிறிய தவறு செய்ய, அது குழப்பமாகி பூஜையன்று எல்லாருக்குமே டென்ஷன்.
எங்களுக்கு கொடுத்த பூஜை தினத்திலேயே உபேந்திரகுமார் என்ற கன்னட இசையமைப்பாளருக்கும் பூஜை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார். அதாவது இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில். பூஜைக்காக காலை 7 மணிக்கு பிரசாத் ஸ்டூடியோ போனால் அங்கே வேறு ஆர்க்கெஸ்ட்ரா (இசைக்குழு) இருந்தது. "இதென்ன! இவர்கள் எங்கள் ரெக்கார்டிங்கில் வாசிப்பவர்கள் இல்லையே?'' என்று கேட்டால், அப்புறம்தான் உண்மை தெரிந்தது.
எஸ்.பி.ராமநாதன் இரண்டு பூஜைகளுக்கும் ஸ்டூடியோவை கொடுத்து இருப்பது! ஞாபக மறதியாலோ அல்லது காலை 10 மணிக்குள் ஒரு பாடலை யாராவது முடித்து விட்டால், அடுத்த பாடலை மதியம் ஒரு மணிக்குள் எடுத்து விடலாமே என்று அவரே ஒரு தப்புக்கணக்குப் போட்டிருந்தாரோ என்னவோ தெரியவில்லை.
இப்போது யார் ரெக்கார்டிங் வைத்துக் கொள்வது என்று நான் எஸ்.பி.ராமநாதனைக் கேட்க, அவர் சமாளித்துப் பார்த்தார். பதில் சொல்ல முடியவில்லை.
இதற்குள் நேரம் மதியம் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. இதே நேரம் பிரசாத் ஸ்டூடியோவில் நடந்த 'ரெக்கார்டிங்' முடிந்து எல்லாரும் போய்விட்டார்கள். அங்கே மாலையில் வேறு ரெக்கார்டிங் இல்லாததால் 2 மணிக்கு மறுபடியுமாக அங்கேயே போனோம். ஆர்க்கெஸ்ட்ரா தயாரானது.
ஜானகி வந்தார். 'மாதா உன் கோவிலில்' பாடலையே எடுத்துவிட, ஒத்திகை பார்த்து 'டேக்' போகலாம் என்று தொடங்கினோம். இரண்டு மூன்று டேக் சரியாக வரவில்லை. நானோ இந்தப்பாடல் முடிந்து இன்னும் ஒரு பாடல் எடுக்க வேண்டும் என்ற டென்ஷனில் இருந்தேன்.
இந்தப் பாடலை எடுத்துக் கொண்டிருக்கும்போதே நிறைய சங்கதிகள் கற்பனையில் வர, ஜானகியிடம் அவ்வப்போது சென்று மாற்றிக்கொண்டே இருந்தேன். ஒரு டேக் நன்றாக வந்து கொண்டிருந்தது. அடுத்து மூன்றாவது பின்னணி இசை சேர்ப்பு தொடங்கவேண்டும். ஆனால் யாரும் வாசிக்கவில்லை. காரணம், 'கண்டக்ட்' செய்த கோவர்த்தன் சார் கைகாட்ட மறந்துவிட்டார்.
எனக்கு கோபம். "என்னண்ணே! டேக் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. பேக்ரவுண்டு மியூசிக்கிற்கு ஏன் கை காட்டவில்லை?'' என்று கேட்டேன். அவரோ, "பாட்டில் மெய் மறந்துட்டேன்யா'' என்றார், கூலாக. எனக்கோ, அடடா! இவ்வளவு ஒன்றிய நிலையில் கண்டக்ட் செய்பவரை திட்டிவிட்டோமே என்று வருத்தம் ஆனது.
அடுத்த டேக். மூன்றாவது சரணத்தில் ஜானகி பாடும்போது,
"பிள்ளை பெறாத பெண்மை தாயானது
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது''
- என்ற வார்த்தைகளை அழகாகப் பாடியவர் அதற்கப்புறம் தொடர்ந்து பாடாமல் விட்டு விட்டார். "ஐயோ நன்றாக இருந்ததே! ஏன் அடுத்த அடியை விட்டு விட்டீர்கள்?'' என்று ஜானகியை கேட்டேன். ஆர்க்கெஸ்ட்ராவிலோ யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.
பொதுவாக 'டேக்' கட் ஆனாலே "பேன் போடு'' என்று சத்தம் போடுபவர்கள், சத்தமே இல்லாமல் இருக்கிறார்களே என்று பார்த்தால், கோவர்த்தன் சார் 'வாய்ஸ் ரூமை' கைகாட்டி ஏதோ சொன்னார். என்னவென்று புரியாமல் 'வாய்ஸ் ரூமை' பார்த்தால், கண்ணாடி வழியே ஜானகி கர்ச்சிப்பால் கண்களை துடைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
விஷயம் என்னவென்று பார்த்தால், ஜானகி இப்படிச் சொன்னார்: "டியூனும் வார்த்தையும் கலந்து 'பாவத்தில்' ஏதோ ஒன்றை உணர்த்திவிட, அழுகை வந்துவிட்டது. அழுகையோடு பாடவும் முடியாமல், அழுகையை நிறுத்தவும் முடியாமல் விட்டுவிட்டேன்.'' ஜானகி இப்படிச் சொல்லி முடித்ததும் எல்லாரும் உருகி விட்டார்கள்.
https://www.youtube.com/watch?v=ZU44WTr0aeo
மாதா உன் கோவிலில்
மணிதீபம் ஏற்றினேன்
தாய் என்று உன்னைத் தான்
மாதா உன் கோவிலில்
மணிதீபம் ஏற்றினேன்
தாய் என்று உன்னைத் தான்
தாய் என்று உன்னைத் தான்
பிள்ளைக்குக் காட்டினேன் மாதா
மாதா உன் கோவிலில்
மணிதீபம் ஏற்றினேன்
மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே
மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே
மேரி உன் ஜோதி கொண்டால் விதிமாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா - மாதா
மாதா உன் கோவிலில்
மணிதீபம் ஏற்றினேன்
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
கரை கண்டிலாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ - மாதா
பிள்ளை பெறாத பெண்மை தாயானது
பிள்ளை பெறாத பெண்மை தாயானது
அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா
மாதா உன் கோவிலில்
மணிதீபம் ஏற்றினேன் .
ருத்ரையா இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த படம் `அவள் அப்படித்தான்.' இதில் என் இசையில் கமல் ஒரு பாட்டு பாடியிருப்பார். கமல் அப்போது மலையாளப்படம் ஒன்றில் நடித்து வந்தார்.
ரெக்கார்டிங்கின்போது ஸ்டூடியோவுக்கு வந்தார். பாடலை பாடிக்காட்டினேன். கேட்டு அவரும் பாடிப்பார்த்தார். நன்றாக வந்தது. அப்படியே பாடவைத்து ரெக்கார்டு செய்து விட்டோம். அது `பன்னீர் புஷ்பங்களே' என்ற பாடல். அமர் (கங்கை அமரன்) எழுதியது.
கோவையில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இந்தப் பாடலுக்கான மெட்டு உதயமானது.
அந்த விழா மேடையில் பஞ்சு சாரும், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சாரும் மேடையிலேயே வந்து பாடலுக்கான `சிச்சுவேஷன்' சொல்ல, மேடையிலேயே கம்போஸ் செய்து ஆர்க்கெஸ்ட்ராவோடு பாடியது.
அந்தப் பாடலுக்கு வேறு வார்த்தைகளை போட்டு அமர் எழுதியதுதான் `பன்னீர் புஷ்பங்களே' பாட்டு.
இந்தப் பாடலை கமல் பாடி முடித்து ரொம்ப நாள் கழித்துத்தான் அதில் இருந்த தவறு ஒன்று எனக்குத் தெரிந்தது.
கமல் `பன்னீர் புஷ்பங்களே' என்ற வார்த்தையை `பன்னீர் புஷ்பங்ஙளே' என்று பாடிவிட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, "அப்போது மலையாளப் படத்தில் நடித்து வந்ததால் தமிழை மலையாளம் போல பாடிவிட்டேன்'' என்றார்.
ஒருநாள் டைரக்டர் ஸ்ரீதர் என்னைப் பார்க்க வந்தார்.
யார் மேல் எங்களுக்கு பிரியம் அதிகமோ, யாரை நாங்கள் ஹீரோவாக நினைத்தோமோ, யாரை `தென்னாட்டு சாந்தாராம்' என்று மக்கள் அழைத்தார்களோ, அந்த ஸ்ரீதர் என்னைப் பார்க்க வந்ததில் அளவு கடந்த மகிழ்ச்சி எனக்கு.
ஸ்ரீதர் சார் இயக்கிய 48 படங்களுக்கு மேல் அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருக்கிறார். ஒரு படத்தில் கூட அவர் இசையமைத்த பாடல் சோடை என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட அவரையே விட்டு விட்டு, ஸ்ரீதர் சார் நம்மிடம் வருகிறாரே, இதுதான் சினிமா உலகமா? இவரும் சாதாரண சினிமாக்காரர்தானா? இந்த சினிமா உலகம் நாளைக்கு இதுபோல் தான் நம்மையும் விட்டு விடுமோ என்ற எண்ணமும் ஒரு கணம் மனதில் ஓடியது.
ஸ்ரீதர் தனது படத்துக்கு "இளமை ஊஞ்சலாடுகிறது'' என்று பெயர் வைத்திருந்தார்.
அப்போது காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரு படத்தின் பின்னணி இசை வேலை நடந்து கொண்டிருந்தது. அதனால் கம்போசிங் காலை 7 மணியில் இருந்து 9 மணி வரைக்கும், இரவு 10 மணியில் இருந்து விடியும் வரைக்கும் நடந்தது.
"ஒரே நாள் உனை நான்நிலாவில் பார்த்தது''
- என்ற பாடல் படத்தின் "தீம் ஸாங்.''
"நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா?'' என்ற இரண்டு பாடல்களையும் முதலில் பதிவு செய்தோம்.
மூன்றாவதாக "தண்ணி கருத்திருச்சு'' என்ற கிராமியப்பாடல் வார்த்தையை வைத்து இசையமைத்தேன். தொடக்கம் மட்டும் அதை வைத்துக்கொண்டு மற்ற வரிகளை கவிஞர் வாலி மாற்றிவிட்டார்.
இந்தப் பாடலை யாரைப் பாட வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தபோது, சட்டென ஜி.கே.வெங்கடேஷ் நினைவுக்கு வந்தார். அவரையே பாட வைக்கலாம் என முடிவு செய்தோம்.
அடுத்த நாள் ஏவி.எம்.மில் ரெக்கார்டிங்.
ஜி.கே.வி. பாடலை கற்றுக்கொண்டார். டைரக்டர் ஸ்ரீதர், உதவி டைரக்டர்கள் கோபு, வாசு, சந்தானபாரதி என எல்லோரும் இருந்தார்கள். பல ஒத்திகைகள் நடந்தது. பாடுவதற்கு மைக் முன்னால் போனால், ஒரு அடி பாட, அடுத்த அடியின் டிïன் மறந்து போகும். மறுபடி நினைவுபடுத்திப்பாட, இரண்டாவது ரிகர்சலில் வேறு ஒரு இடத்தில் மறந்து போகும்.
இப்படியே பஸ் ஒவ்வொரு அடி நகரும்போதும் பிரேக் போட்டு பிரேக் போட்டு போவது போல ஆயிற்று. அங்கேயே நின்று கொண்டிருந்தது பாட்டு.
"சரி டேக்கில் வந்து விடும். டேக்கில் `ட்ரை' பண்ணலாம்யா'' என்று கோவர்த்தன் சார் சொல்ல, டேக் தொடங்கினோம். அது பல்லவியோடு கட் ஆகிவிட்டது!
இப்படியே ஒரு லைன் - பாதி வரி - அடுத்த லைன் - இன் னொரு பாதி வரி என்று 62 டேக்குகளுக்கும் மேலாகிவிட்டது. மணியோ மதியம் இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது.
மதியம் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணன் ரெக்கார்டிங். அவர் வேறு வந்துவிட்டார். வந்தவர் ஜி.கே.வி. பாடுவதைக் கேட்டு, "டேய் வெங்கடேசா! நல்லாப் பாடுடா!'' என்று தான் வந்திருக்கிறதையும் அறிவித்து உற்சாகப்படுத்தவும் செய்தார்.
ஜி.கே.வி. இன்னும் டென்ஷனாகி விட்டார். `டேக்' தொடக்கத்தில் ஏற்கனவே அவருக்கு டென்ஷன்.
அப்போது டைரக்டர் ஸ்ரீதர், "இவ்வளவு கஷ்டமாக இருந் தால் இந்தப் பாடல் எதற்கு? வேண்டாம், ராஜா! கேன்சல் செய்து விடுவோம். வேறு டிïன் போட்டுக் கொள்ளலாம்'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக