ரஜினி மனம் கவரும் 25 சுவாரசியத் தகவல்கள்
எவ்வளவு பெரிய திரை நட்சத்திரமாக இருந்தாலும், ரசிகர்கள் மனங்களில் கொஞ்ச காலத்திற்குத்தான் மின்ன முடியும். ஆனால் திரையுலகில் கால் பதித்த காலம் தொட்டு, இன்றுவரை , ஏறத்தாழ 40 ஆண்டு காலம் துருவ நட்சத்திரமாக மின்னிக்கொண்டிருப்பவர் ....சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே!இன்று 67 வது வயதில் அடியெடுத்துவைக்கும் ரஜினியைப் பற்றிய சில சுவாரசியத் தகவல்கள் இங்கே;
1. பிறந்தநாள்
கொண்டாட்டத்தை தவிர்க்கும் ரஜினிரஜினி பிறந்தநாள் என்பது அவரது ரசிகர்களைப் பொறுத்தவரை தீபாவளியே. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக ரஜினி தனது பிறந்தநாளை வெளிப்படையாகக் கொண்டாடியதில்லை. 22 ஆண்டுகளுக்கு முன்பு, ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு சென்னையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மூன்று ரசிகர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அந்த துயர சம்பவத்திற்கு பிறகு பொதுவெளியில் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டார் ரஜினி.
2. எல்லா இடங்களிலும் எவர் க்ரீன் டிமாண்ட்ரஜினியின் செல்வாக்கு மாநிலம், தேச எல்லைகளைக் கடந்தது. எல்லா இடங்களிலும் இவருக்கு எவர் க்ரீன் டிமாண்ட் உண்டு. ஜாக்கி சானுக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் ஆசிய நடிகர் ரஜினிதான்.
3. பின்தொடரும் பெரும் படைரஜினி ட்விட்டரில் இணைந்த முதல் நாளிலேயே, 1.5 லட்சம் பேர் இவரை பின்தொடர ஆரம்பித்தனர். ஒரு இந்திய நடிகரை ட்விட்டரில் இணைந்த முதல் நாளில் இவ்வளவு பேர் பின்தொடர்ந்தனர் என்றால் அது ரஜினி மட்டும்தான்!
4. அனைத்து வகை படங்களிலும் பங்கேற்ற நடிகர்இந்தியாவில், கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் போன்ற அனைத்து வகையிலான படங்களிலும் நடித்த முதல் மற்றும் ஒரே நடிகர் என்ற பெருமை ரஜினிக்கு மட்டுமே உண்டு.
5. இயக்குநர் சிகரத்தின் தீர்க்கதரிசனம்இயக்குநர் சிகரம் பாலசந்தரிடம் ரஜினி முதன்முதலில் நடித்துக்காட்டியது கன்னட நாடகத்தில் இருந்து ஒரு பகுதியைத்தான். ’’நன்றாக தமிழ்பேச கற்றுக்கொள்’’ என்று சொன்ன பாலசந்தர் ரஜினியை ஒப்பந்தம் செய்தது ‘அபூர்வ ராகங்கள்’ படத்திற்கு மட்டுமல்ல.. ‘மூன்று முடிச்சு’, ‘அவள் ஒரு தொடர்கதை’ (தெலுங்கு) என மூன்று படங்களுக்கும் சேர்த்துதான். ஒரு நடிகனாக இவர் தேறிவிடுவார் என மூன்று படங்களுக்கும் சேர்த்து ஒப்பந்தம் செய்தது பாலசந்தரின் தீர்க்கதரிசனம்.
6. மஞ்சுளாவுடனும் ஜோடி போட்ட ரஜினி1962ல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படம் பதினைந்து வருடம் கழித்து கன்னடத்தில் ரீமேக் செய்யப்படபோது அதில் ஹீரோவாக நடித்தார் ரஜினி. இதில் ரஜினிக்கு ஜோடி மஞ்சுளா. இந்தப்படம் பின்னர் தமிழில் ‘குறிஞ்சி மலர்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
7. தேங்காய் சீனிவாசன் வேடத்தில் ரஜினிமுத்துராமன் நடித்த ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டபோது தமிழில் தேங்காய் சீனிவாசன் நடித்த கதாபாத்திரத்திற்கு கன்னடத்தில் நடித்தவர் நம்ம சூப்பர் ஸ்டார்தான். இதில் நடித்தபோது ரீடேக் இல்லாமல் எல்லா ஷாட்டுகளையும் ஒரே டேக்கில் ஓ.கே. வாங்கினாராம் ரஜினி!
8. முதல் கறுப்பு வெள்ளை சினிமாஸ்கோப்பில் சூப்பர்ஸ்டார்தென்னிந்தியாவில் முதன் முதலில் கறுப்பு வெள்ளையில் சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்ட படம் ‘ஒந்து பிரேமட கதே’ என்கிற கன்னடப்படம். இதில் கதாநாயகனாக நடித்தவர் ரஜினி!
9. ரஜினி வாயசைத்த முதல் பாடல்‘மூன்று முடிச்சு’ திரைப்படத்தில் ‘‘மண வினைகள் யாருடனோ? மாயவனின் விதிவலைகள்…’’ பாடல்தான் ரஜினி வாயசைத்த முதல் திரையிசைப் பாடல். ரஜினியின் முதல் திரைப்படமான ‘அபூர்வராகங்கள்’ திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த எம்.எஸ்.விஸ்வநாதன்தான் ரஜினியின் முதல் வாயசைவிற்கு இசையும் குரலும் கொடுத்தவர். .
10. நடிகர்திலகத்துடன் மட்டும் சேர்ந்து நடித்த ரஜினிமக்கள்திலகம் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு ரஜினிக்கு கிடைக்கவில்லை. ஆனால் நடிகர்திலகத்துடன் சேர்ந்து ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’, ‘நான் வாழவைப்பேன்’, ‘நட்சத்திரம்’, ‘படிக்காதவன்’, ‘உருவங்கள் மாறலாம்’, ‘விடுதலை’, ‘படையப்பா’ என ஆறு படங்களில் நடித்துள்ளார்.
11. 50 வது படத்தில் என்.டி ராமாராவுடன்ஆந்திர சூப்பர்ஸ்டாரும், மறைந்த முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவுடன் இணைந்து ரஜினி நடித்த ஒரே படம் ‘டைகர்’. இது ரஜினியின் ஐம்பதாவது படம் என்பது இன்னுமொரு சிறப்பு.
12. ரஜினி, ரஜினியாகவே நடித்த படங்கள்‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘அக்னி சாட்சி’, ‘நட்சத்திரம்’, ‘நன்றி மீண்டும் வருக’, ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘யார்’ ஆகிய படங்களில் நடிகர் ரஜினியாகவே நடித்திருக்கிறார் ரஜினி. .
13. ஹிந்தியிலும் கலக்கிய மூன்றுமுகம்1982ல் ரஜினி மூன்று வேடங்களில் நடித்த சூப்பர்ஹிட் படமான ‘மூன்று முகம்’, 1984ல் ஹிந்தியில் ‘ஜான் ஜானி ஜனார்தன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அங்கேயும் ரஜினிதான் ஹீரோவாக நடித்தார்.
14. தலைவர் படத்தில் இளைய தளபதி29 வருடங்களுக்கு முன்பு எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ஷனில் ரஜினி நடித்து வெளியான ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தில் சிறுவனாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இளைய தளபதி விஜய். .
15. அமிதாப்,கமலுடன் இணைந்து கலக்கிய ரஜினிதிரையுலக ஜாம்பவான்களான ரஜினி, கமல், அமிதாப் மூன்றுபேரும் இணைந்து நடித்தது ஒரே ஒரு ஹிந்திப்படத்தில் தான். படத்தின் பெயர் ‘கிராஃப்தார்’. இதில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் ரஜினி நடித்திருந்தார். அமிதாப்பின் சகோதரராக நடித்திருந்தார் கமல்.
16. ரித்திக் ரோஷனை களமிறக்கிய ரஜினி1986ல் ரஜினி ஹீரோவாக நடித்த ஹிந்திப்படம் ‘பகவான் தாதா’. இந்தப் படத்தில் ரஜினியின் வளர்ப்பு மகனாக நடித்த சிறுவன்தான் இன்று 300கோடிகளுக்கு மேல் வசூலித்து கலக்கிக் கொண்டிருக்கும் ‘க்ரிஷ் -3’ படத்தின் ஹீரோவான ரித்திக் ரோஷன்.
17.முதல் 70 எம்.எம் திரைப்படத்தில் ரஜினி.தமிழ் சினிமாவில் அகன்றதிரை எனப்படும் 70 எம்.எம்-ல் திரையிடப்பட்ட முதல் படம் ரஜினி நடித்த ‘மாவீரன்’. இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் ரஜினிதான். ஒருவகையில் இதுதான் அவரது முதல் தயாரிப்பும்கூட. கமலின் ‘புன்னகை மன்னனும்’ இந்தப் படமும் ஒரே சமயத்தில் தீபாவளி தினத்தன்று வெளியாகின. .
18. ஆங்கிலப் படத்தில் அசத்திய சூப்பர்ஸ்டார்1988ல் ரஜினி ‘பிளட் ஸ்டோன்’ என்ற ஆங்கிலப் படத்தில் நடித்தார். பாலிவுட் நடிகர்களுக்குக் கூட கிடைக்காத இந்த அரிய வாய்ப்பு ரஜினியை தேடி வந்தது அவரது ஸ்டைலுக்காகத்தான். இந்தப் படத்தில் அவர் பேசிய ‘மணி மணி மணி’ என்ற வசனத்தை அஜித், தான் நடித்த ‘மங்காத்தா’ படத்தில் கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் பேசியிருந்தார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்!
19. வெற்றிநாயகன் ரஜினி‘எந்திரன்’ வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை ரஜினியின் புதிய படம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் 1977 முதல் 1979 வரை 48 திரைப்படங்களில் நடித்துள்ளார் ரஜினி. குறிப்பாக 1980ல் 20 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார், அவற்றில் பெரும்பாலானவை நூறு நாட்கள் தாண்டி ஓடிய படங்கள்.
20. மாதம் ஒரு திரைப்படம்1988-ல் ஒவ்வொரு மாத இடைவெளியில் ரஜினியின் படங்கள் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. ‘தர்மத்தின் தலைவன்’ (24.9.88), ‘பிளட் ஸ்டோன்’ (7.10.88), ‘கொடி பறக்குது’ (8.11.88) ஆகிய படங்கள் இதற்கு உதாராணம். .
21. மணிவண்ணனுக்கு அரிதாரம் பூசச் செய்த ரஜினி‘கொடி பறக்குது’ படத்தில் ரஜினிக்கு சவால் விடுகிற மாதிரியான ஒரு வில்லனை பாரதிராஜா தேடிக்கொண்டிருந்தபோது “எதுக்கு பாரதி வெளியில அலைஞ்சுட்டு இருக்கீங்க? அதான் நம்ம மணிவண்ணன் இருக்காரே… அவரையே வில்லன் ஆக்கிடுங்க”ன்னு சொல்லி, அவரை ஒரு நடிகனாக அரிதாரம் பூச வைத்தது ரஜினிதான்.
22. மணிவண்ணன் தந்த முதல் மரியாதைமணிவண்ணனின் மகள் திருமணத்துக்கு அவரது குருவான பாரதிராஜா வந்திருந்து மணமக்களை வாழ்த்தினாலும், மாப்பிள்ளை கையில் தாலி எடுத்துக் கொடுத்தவர் ரஜினிதான். இத்தனைக்கும் மணிவண்ணனின் திருமணத்தை நடத்தி வைத்தது பாரதிராஜாதான். ஆனாலும் தன் குருநாதரைவிட ஒருபடி மேலாக ரஜினியை மரியாதையான ஸ்தானத்தில் வைத்து நட்பு பாராட்டினார் மணிவண்ணன்.
23. 25 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் நடித்த நடிகர்1986ல் ‘பகவான் தாதா’ என்ற ஹிந்திப் படத்தில் ரஜினியுடன் நடித்திருந்த டேனி டென்சொங்போ தான் 25 வருடம் கழித்து ‘எந்திரன்’ படத்தில் புரஃபெஸர் போராவாக மீண்டும் ரஜினியுடன் நடித்தார். .
24. வங்காள மொழி படத்தில் ரஜினி ‘பாக்ய தேவதா’ என்ற வங்காள மொழிப் படத்திலும் நடித்திருக்கிறார் ரஜினி. மிதுன் சக்கரவர்த்தி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை இயக்கிவர் நம் தமிழ் சினிமா டான்ஸ் மாஸ்டர் ரகுராம்தான்.
25. பணத்துக்கு கடைசி இடம்தரும் அபூர்வ மனிதர்ரஜினி வளர்ந்து ‘சூப்பர்ஸ்டார்’ ஆன காலகட்டத்தில் செலக்டிவான படங்களில் மட்டுமே நடிக்க ஆரம்பித்தார். அதற்கு காரணமாக மூன்று விஷயங்களை வரிசைப்படுத்தினார். முதலாவது தயாரிப்பு நிறுவனத்தின் தரம், இரண்டாவதாக கதை, மூன்றாவது (தான்) பணம். அளவான படங்களில் நடித்ததுபோக மீதம் இருந்த நேரத்தைத்தான் ஹிந்திப்படங்களுக்கு ஒதுக்கினார்.
ஹேப்பி பெர்த் டே ரஜினி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக