பி.எஸ்.சசிரேகா
எழுபதுகளின் தொடக்கத்தில் அறிமுகமாகி தொண்ணூறுகளின் முற்பகுதி வரை தமிழ்த் திரையுலகில் ஏறக்குறைய இருபது ஆண்டுகள் பின்னணி பாடும் வாய்ப்புகளைப் பெற்றவர் பி.எஸ்.சசிரேகா.தீவிர இசை ரசிகர்கள் தாண்டி அத்துனை பெரிதாய் அறியப்படாத பின்னணிப் பாடகியான இவரின் பாடல்களைப் பற்றிச் சொன்னால் இதுவரை இவரைக் குறித்து அறியாதோருக்கு நிச்சயமாக வியப்பாக இருக்கும்.
சிறுமியாக இருந்த போதே, கேட்கிற பாடல்களை அப்படியே திரும்பப் பாடும் இவரின் கேள்வி ஞானத்தை வியந்த பலரும் ’சினிமாவில் பாட முயற்சிக்கலாம், அத்தனை அழகான குரல் வளம்’ என தொடர்ந்து ஊக்கப்படுத்த பதின்மத்தின் தொடக்கத்தில் இருந்த போதே, திரைப்பாடல் பாடுகிற வாய்ப்புத் தேடி பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்தவர்.
முறையான சங்கீதப் பயிற்சி இல்லாத ஒருவர் பின்னணி பாடும் வாய்ப்புப் பெறுவதென்பது எழுதுகளில் எல்லாம் யோசித்திரவே முடியாத விஷயம். அந்த அளவிற்கு பர்பெக்ஷனிஸ்ட் இசையமைப்பாளர்கள் உலவிய நேரம். இப்போதுள்ளது போல இலகுவான மெட்டமைப்புகளோ, டிராக்கில் பாடுவதோ, சுமாராக பாடினாலும் பூசி மெழுகி அழகாக்கிக் காட்டும் சாஃப்ட்வேர் சாகசங்களோ இல்லாத காலக் கட்டத்தில் கேள்வி ஞானத்தால் பாடுகிற திறமையைக் கொண்டு திரையுலகில் நுழைந்து வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார் என்கிற இடத்தில் பி.எஸ்.சசிரேகாவின் திறமையை நாம் உள்வாங்கிக் கொண்டு இந்தக் கட்டுரையை தொடரலாம்.
1973 ல் ஜி.கே.வெங்கடேஷ் அவர்களின் இசையமைப்பில் வெளியான பொண்ணுக்கு தங்க மனசு படத்தில் ‘தஞ்சாவூரு சீமையில’ என்ற பாடலை சீர்காழி கோவிந்தராஜன், ஜானகி ஆகியோருடன் இணைந்து பாடும் வாய்ப்பினைப் பெற்று தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கியவருக்கு, அடுத்து அபூர்வ ராகங்கள் படத்தில் எம்.எஸ்.வியின் இசையில் வாணி ஜெயராமுடன் இணைந்து பாடிய ‘கேள்வியின் நாயகனே’ பாடல் எழுபதுகளின் முற்பாதியில் சொல்லிக் கொள்கிறார் போல அமைந்த பாடல். கர்னாட்டிக் இசையில் முறையான பயிற்சி பெற்ற வாணி ஜெயராமுடன் கர்னாட்டிக் இசையின் ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடலொன்றில் சசிரேகா மோதுவதே அவரின் திறமையை பறைசாற்றுவது போல இருக்கும். இப்பாடலை பொறுத்தவரை வாணி ஜெயராம் டாமினேட்டிங் செய்திருப்பார். ஆனாலும் கேள்வி ஞானத்தை மட்டுமே வைத்து அந்த அளவிற்கு போட்டியை கடுமையாக்கிய வகையில் சசிரேகா வியப்பிற்குரியவராகவே தெரிவார்.
1997ல் வெளிவந்த இன்று போல் என்றும் வாழ்க படத்தில் டி.எம்.எஸ்,பி.சுசீலா ஆகியோருடன் இணைந்து பாடிய ‘வெல்கம் ஹீரோ’,1978 ல் ‘ஒரு வீடு ஒரு உலகம்’ படத்தில் டி.எல்.மகாராஜனுடன் இணைந்து பாடிய ‘ரதிதேவி சன்னதியில் ரகசிய பூஜை’ ஆகியவை எம்.எஸ்.வியின் இசையில் சசிரேகாவின் பேர் சொல்லும் பாடல்கள். இந்தப் பாடல்களில் பி.சுசீலாவின் பாடும் முறையினை பிரதியெடுத்தார்போல பாடியிருப்பதையும், சில இடங்களில் சுசீலாவின் குரல் போலவே ஒலிப்பதையும் சசிரேகாவின் குரலில் கவனிக்கலாம்.சசிரேகாவின் ஆரம்ப கால குரலில் இப்படி சுசீலாவின் சாயல் நிறையவே தென்படும்.
எழுபதுகளின் பிற்பகுதியில் ராஜாவின் திரைப்பயணம் தொடங்கிய பிறகு சசிரேகாவிற்கு நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின. சசிரேகா அறிமுகமான ’பொண்ணுக்கு தங்க மனசு’படத்தின் பாடல் கூட ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராக இருந்த போது ராஜாவின் கை வண்ணத்தில் உருவான பாடல் என்று வாசித்த நினைவு. அவ்வகையில் நோக்க சசிரேகாவின் திறமை மீது ‘பொண்ணுக்கு தங்க மனசு’ காலத்திலிருந்தே ராஜாவிற்கு நம்பிக்கை இருந்திருக்க வேண்டும். அதன் வெளிப்பாடாகவே எழுதுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் ராஜா சசிரேகாவிற்கு வழங்கியிய வாய்ப்புகளைப் பார்க்கத் தோன்றுகிறது. அவற்றில் வட்டத்திற்குள் சதுரம் படத்தில் ஜானகியுடன் இணைந்து பாடிய ‘இதோ இதோ என் நெஞ்சிலே, காயத்ரி படத்தின் ‘வாழ்வே மாயமா, நல்லதொரு குடும்பம் படத்தின் ‘செவ்வானமே பொன்மேகமே’, லட்சுமி படத்தின் ‘மேளம் கொட்ட நேரம் வரும்’, ஒரு கிராமத்து அத்தியாயம் படத்தின் ‘பூவே இது பூஜைக் காலமே’ ஆகிய பாடல்கள் ராஜாவின் ஆரம்பகால இசையில் சசிரேகாவிற்கு அமைந்த ஹிட் பாடல்கள்.
பி.எஸ்.சசிரேகாவின் குரலை சட்டென அடையாளம் காணுவதில் சிரமம் இருக்கும். சுசீலா,ஜானகி,ஜென்சி மற்றும் எஸ்.பி.ஷைலஜா ஆகிய நால்வரின் குரலின் சாயலையும் கொண்டிருக்கும் ஒரு வித்யாசமான குரல்வளம் சசிரேகாவிற்கு. எனினும் அதைத்தாண்டிய ஒரு தனித்துவமான அடையாளமும் அதில் இருக்கும். ’ங்’,’ஞ்’,’ந்’ மற்றும் ‘ம’வரிசை என மெல்லினம் கலந்த சொற்களில் சசிரேகாவின் குரல் தனித்து அடையாளப்படும். இந்த மெல்லின சொற்கள் உச்சரிப்பின்படி பார்க்கும் போது தொண்ணூறுகளின் மின்மினியையும் சசிரேகாவோடு ஒப்பிடலாம். மின்மினிக்கும் சசிரேகாவிற்கும் குரலின் சாயலில் ஒற்றுமை இருக்காது. ஆனால் மின்மினியின் குரல் தனித்து அடையாளப்படுவதும் மெல்லின சொற்களின் போது உண்டாகும் அழகிய ஒலியில்தான். அவ்வகையில் இவ்விருவரின் குரலையும் ஒப்பிட்டு ஒரு சிந்தனை உள்ளோடும்.
சசிரேகாவிற்கு பிறகு பாட வந்தவர் எஸ்.பி.ஷைலஜா என்றாலும் ஷைலஜாவின் குரலை அடையாளம் தெரிந்து வைத்திருப்போருக்கு சசிரேகாவின் சில பாடல்களும் ஷைலஜாவினுடையதோ என குழப்பவும் செய்யும். காயத்ரி படத்தின் ‘வாழ்வே மாயமா’பாடல்கூட அப்படி ஒரு குழப்பத்தை உண்டு பண்ணும். இவ்விரு குரலிற்கும் இருக்கும் மெல்லிய வேறுபாட்டை பிரித்தறிய கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் ‘எம் புருஷந்தான் எனக்கு மட்டும்தான்’பாடல் உதவி புரியும். இவ்விருவரும் இணைந்து பாடியிருக்கும் இப்பாடல் சட்டென கேட்க ஒரே ஆள் பாடுவது போலவே ஒலிக்கும்.சற்றே கூர்ந்து கவனித்தால் ஷைலஜாவின் குரலைவிட சசிரேகாவின் குரல் Base தன்மை கூடுதலாக இருப்பது பிடிபடும். போலவே மெல்லின சொற்களின் உச்சரிப்பிலும் சசிரேகா தனித்துத் தெரிவதையும் அடையாளம் காணலாம்.சங்கர் கணேஷின் இசையமைப்பில் கானலுக்குக் கரையேது என்கிற படத்தில் இவ்விருவரும் இணைந்து பாடியிருக்கும் ‘ஒனக்கொரு புருஷன் வருவானா’என்கிற பாடலில் இவ்விரு குரலும் தனித்தனியே அடையாளப்படும் அளவிற்கு பதிவாகியிருக்கும். சங்கர் கணேஷின் இசையில் ‘ஒரு குடும்பத்தின் கதை’ படத்தில் ‘மலைச்சாரலில் இளம் பூங்குயில்’ பாடலில் ஒலித்த சசிரேகாவின் ஹம்மிங்கையும் இந்த இடத்தில் நினைவுப்படுத்துவதன் வழி எழுபதுகளின் மையத்தில் ஹம்மிங்கில் சசிரேகாவிற்கென்று ஓர் இடம் இருந்ததையும் பதிவு செய்ய தோன்றுகிறது.
மேற் சொன்ன பாடல்கள் பிரபலமானவை எனினும் எண்பதுகளின் ராஜாவின் பாடல்கள் வழி சசிரேகாவைப் பற்றி சொல்லும் போதே சசிரேகாவினைக் குறித்த ஆச்சர்யங்கள் உள்வாங்கக் கிடைக்கும். அப்படி ஓர் ஆச்சர்யத்தை அலைகள் ஓய்வதில்லை படத்தின் ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்தே உறவே’ பாடல் நிச்சயம் கொடுக்கும். மிகச் சிறிய இப்பாடல் விதவிதமான மாடுலேஷன்களை சசிரேகாவின் குரல் தரிசிக்கக் கொடுக்கும். வேகமான தாளக்கட்டில் சொற்களை அடுக்கிக் கொண்டே குதூகலமாகப் பாடிக்கொண்டு போகிற போதும், தனன நனன நனன என ஜதி சொல்லி தத்தி தத்திப் பாடுகிற போதும் கேட்போரின் நெஞ்சத்தில் மகிழ்ச்சியை பரவவிடும் அக்குரல் பாடலின் இறுதியில் சோகமாக வெளிப்படும் போதும் நம்மையும் சோகத்தில் தள்ளும்.மென் சோகத்தை இயல்பிலேயே கொண்டிருக்கும் சசிரேகாவின் குரல் இந்தப் பாடலில் இறுதியில் இந்த மெட்டிற்கு அத்துனை வலிமை சேர்த்திருக்கும். பின்னணி இசையில்லாமல் ‘ கல்வி கற்க நாளை செல்ல அண்ணன் ஆணையிட்டார்’ என்கிற போது அவரின் குரலில் வெளிப்படும் எக்ஸ்பிரஷன் இவர் கேள்வி ஞானத்தால் பாடுகிறவர் என்பதை நம்பவே முடியாத படி இருக்கும். ஜென்சியின் குரலோடு ஒப்பிட்ட விஷயத்திற்கு இப்பாடலை ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.
இதே படத்தில் ‘தோத்திரம் பாடியே போற்றிடுவேன்’ என்கிற பிரார்த்தனைப் பாடலில் கோரஸோடு பாடிக்கொண்டே வந்து சட்டென தனித்து ‘தியாகமான தேவ அன்பே’ என்கிற இடத்தில் ஜென்சியின் சாயலை சசிரேகாவின் குரல் வாரி வழங்குவதை கவனிக்கலாம்.ஆனாலும் அது சட்டென தோன்றும் ஓர் ஒலிப்பிழையே, இருவரின் குரலின் அடையாளங்களும் பழகிவிட்ட பிறகு இந்த ஒலி மயக்கம் நிகழாது.
எண்பதுகளில் ராஜாவிடம் பி.எஸ்.சசிரேகா பாடிய அட்டகாசமான பாடல்கள் வரிசையில் எப்போதும் தனியிடம் பிடிக்கும் பாடல் ஒரு ஓடை நதியாகிறது படத்தின் ‘தென்றல் என்னை முத்தமிட்டது’பாடல். கே.ஜே.ஜேசுதாஸ், பி.ஜெயச்சந்திரன்,தீபன் சக்கரவர்த்தி,எஸ்.என்.சுரேந்தர் என அதிராத குரல் வளம் கொண்டோருடன் டூயட் பாடுகிற போது சசிரேகாவின் குரல் மிக நேர்த்தியான ஜோடிக்குரலாய் மின்னும். இந்த வரிசையில் இப்பாடலில் கிருஷ்ண சந்தரின் குரலோடு இணைந்து ஒலிக்கும் சசிரேகாவின் குரல் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கும். ராஜாவின் இசையில் சசிரேகா பாடிய மற்ற எந்தப் பாடலையும் விட இந்தப் பாடல் சசிரேகாவின் குரலின் தனித்துவத்தையும் , திறமையையும் பிரமாதமாக வெளிக்கொணர்ந்த பாடலாக எனக்குப் படும்.
1983யில் வெளிவந்த எத்தனை கோணம் எத்தனை பார்வை படத்தில் தீபன் சக்கரவர்த்தியுடன் இணைந்து பாடிய ‘விதைத்த விதை தளிர்த்து’ பாடல் பெரிய அளவில் ஹிட் ஆகாத பாடல் எனினும் ராஜாவின் ஆர்க்கஸ்ட்ரேஷன் சிறப்பாக அமைந்த இப்பாடலில் இந்த ஜோடிக்குரல் ஆங்காங்கே சிந்திச் செல்லும் ஹம்மிங் போர்ஷன்கள் அதிராத குரல் வளம் கொண்டோருடன் சசிரேகாவின் குரல் எத்துனை அழகுடன் மிளிரும் என்பதற்கு சான்றான ஒரு பாடல்.
இதே காலகட்டத்தில் ராஜாவின் இசையில் சசிரேகாவின் குரல் அழகுடன் வெளிப்பட்ட இன்னொரு பாடல் பகவதிபுரம் ரயில்வே கேட் படத்தின் ‘தென்றல் காற்றும் அன்புப் பாட்டும்’என்கிற தனிப்பாடல். மெல்லிய சோகம் கலந்து பயணிக்கும் இப்பாடலை ஜென்சியின் ‘தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல், எஸ்.பி.ஷைலஜாவின் ‘சோலைக்குயிலே காலைக் கதிரே’ வகைமையில் வைத்து சிலாகிக்க வேண்டிய பாடல்.
எண்பதுகளின் தொடக்கத்தில் இப்படியான அற்புதமான பாடல்களை ராஜா வழங்கியிருந்தாலும் அதன் பிறகு 1987ல் வேலைக்காரன் படத்தின் ‘எனக்குத் தா உன் உயிரை எனக்குத் தா’ போல ஒன்றோ இரண்டோ பாடல்களைத்தான் கொடுத்திருந்தார். ஆனாலும் சசிரேகா என்னும் பாடகியின் திரைப்பயணத்தில் பெரிய இடைவெளி நிகழாத வகையில் எண்பதுகளில் பீக்கில் இருந்த டி.ஆரின் இசையில் பாடுகிற வாய்ப்பினையும் பெற ஆரம்பித்தார் சசிரேகா. டி.ஆரின் இசையிலும் சொற்ப எண்ணிக்கையிலான பாடல்களையே அவர் பாடியிருப்பினும் மிகவும் அட்டகாசமான பாடல்களாக அவை அமைந்திருந்தன.
தங்கைக்கோர் கீதம் படத்தின் ‘இது ராத்திரி நேரம் அம்மம்மா அம்மம்மா’ பாடலில் எஸ்.பி.பியின் விரக சேட்டையை அத்துனை எளிதில் மறக்க இயலுமா?. அப்பாடலில் ‘என்னங்க ம்ஹூம் என்னங்க’ என்று சரசமாடி சசிரேகாவும் போட்டி போட்டுக்கொண்டு ரசிக்க வைத்திருப்பார்.இதே படத்தின் ‘பகலென்றும் இரவென்றும்’டி.ஆரின் அற்புத கம்போசிஷன்களில் ஒன்று. இப்பாடலில் ‘நீ பௌர்ணமி என் காதலி’போல யார் சாயலும் தொனிக்காத தனித்துவமான டி.ஆரின் பாடல் வரிகளை எஸ்.பி.பி கையாள்கிற அழகே பெரிய சுவாரஸ்யத்திற்குரியது. மெலடியாக பயணிக்கும் அந்த மெட்டில் ‘ஜிலு ஜிலு ஓடையிலே செவ்வந்தி ஆடையிலே’ என்று சசிரேகா எண்ட்ரி கொடுக்கையில் அப்படியே அள்ளிக்கொண்டு போவார்.அத்துனை அழகான குரலாக வெளிப்படும் அந்த ‘ஜிலு ஜிலு ஓடையிலே’ வரியில் சசிரேகாவின் குரல்.
டி.ஆரின் இசையில் மிகச் சிறந்த மெலடிகளாக நினைவு கூறத் தகுந்த பாடல்கள் வரிசையில் முன் வரிசையில் அமரும் தகுதியுடைய பாடல்களான உயிருள்ள வரை உஷாவின் ‘இந்திர லோகத்து சுந்தரி’மற்றும் உறவைக் காத்த கிளியின் ‘எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி’இரண்டும் டி.ஆரின் இசையில் சசிரேகாவிற்குக் கிடைத்த பொன்னான வாய்ப்புகள்.குறிப்பாக ‘இந்திர லோகத்து சுந்தரி’பாடலின் தொடக்கத்தில் வரும் ‘ஏலே லம்பரோ ஏலே லம்பரோ ஹோய்’என்று தொடங்கும் சசிரேகாவின் குரலை ரசிக்காத திரையிசை ரசிகர்களே இருக்க இயலாது. என் தங்கை கல்யாணியின் ‘போட்டானே மூணு முடிச்சித்தான்’ என்ற சோகப்பாடலும் டி.ஆரின் இசையில் சசிரேகா பாடியவற்றில் குறிப்பிடத் தகுந்த பாடல்.
எம்.எஸ்.வி, இளையராஜா உட்பட அன்றைய முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையிலும் இப்படியான ஹிட் பாடல்கள் பாடும் வாய்ப்பினைப் பெற்றிருந்தாலும் அவை மிக அரிதாக அங்கொன்றும் இங்கொன்றும் என கிட்டிய வாய்ப்புகளாகவே இருந்ததால் சசிரேகாவின் பாடல்கள் நினைவில் நின்ற அளவிற்கு அவரின் பெயர் ரசிகர்களிடம் அத்தனை ரெஜிஸ்ட்டர் ஆகியிராத ஒரு நிலையே இருந்தது. அந்தச் சூழலில்தான் எண்பதுகளின் மையத்தில் இசையமைப்பாளர்கள் மனோஜ் - கியானின் வருகை தமிழ்த்திரையில் நிகழ்ந்தது. அதன் பிறகே பி.எஸ்.சசிரேகா என்கிற பெயர் தினமும் வானொலிகளில் ஒலிக்கப் பெறுகிற பெயராக மாறியது என்றால் மிகையில்லை. அதுவரை எந்த இசையமைப்பாளருக்கும் ஆஸ்தான பாடகி என்கிற அந்தஸ்த்தை அடைந்திராத சசிரேகா, மனோஜ் - கியானின் ஆஸ்தான பாடகி என்கிற அளவிற்கு அவர்களின் இசையில் தொடர் வாய்ப்புகளைப் பெற்று ஹிட் மேல் ஹிட்டாக கொடுக்க ஆரம்பித்தார். குறிப்பாக ஆபாவாணன் திரைக்கதை அமைப்பில் வந்த அநேக படங்களில் இவரின் குரல் பிரதான இடத்தைப் பிடித்தது.
ஊமை விழிகள் படத்தின் 'மாமரத்து பூவெடுத்து', 'ராத்திரி நேரத்து பூஜையில்', 'கண்மணி நில்லு காரணம் சொல்லு' என ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட ஜானர்களில் தனது வெர்சட்டாலிட்டியை மனோஜ் கியானின் இசை வழி நிரூபித்து பிரகாசிக்க ஆரம்பித்த சசிரேகா, தொடர்ந்து உழவன் மகன் படத்திலும் 'உன்னை தினம் தேடும் தலைவன்', 'சொல்லித் தரவா' ,'ஏறா மலைதனிலே குறிஞ்சிப் பூவு' என மூன்று கலக்கலான பாடல்களைப் பாடும் வாய்ப்பினைப் பெற்று கலக்கியிருந்தார். இவற்றில் டி.எம்.எஸ் உடன் பாடிய 'உன்னை தினம் தேடும் தலைவன்' பாடலில் 'துணிவிருந்தால் பாட முடியும்' என்று மேற்கத்திய சாயலில் ஒலிக்கிற சசிரேகாவின் குரல் ஆச்சர்யப்படுத்தும். இதே படத்தின் 'ஏறா மலைதனிலே' பாடலில் 'வரகுச் சம்பா கெடைக்கலே ஓ ஓ ஓ' என்கிற வரியில் இறுதியில் 'ஓ ஓ ஓ' என்கிற போது சசிரேகா பாடும் தொனி அத்துனை வசீகரமாக இருக்கும். இப்படியெல்லாம் வித்தியாசமான இசைக்குறிப்புகள் அமைகிற இடத்தில் ஒரு பாடகரிடமோ பாடகியிடமோ வெளிப்படுகிற தனித்தன்மைகளில்தான் ஒரு பாடகனுக்கோ பாடகிக்கோ ரசிகன் ஆகி விடுகிற ரசவாதம் நிகழ்வதாக என்னளவில் ஓர் எண்ணம் உண்டு.
மனோஜ் - கியானின் இசையில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ஆல்பம் செந்தூரப் பூவே. இப்படத்தில் 'செந்தூரப் பூவே இங்கு தேன் சிந்த வா' , 'ஆத்துக்குள்ள ஏலேலோ அத்தி மரம்' , ' யாரு அடிச்சா சொல்லி அழு' ,'முத்துமணி பல்லாக்கு' என சசிரேகாவின் குரலே மொத்த ஆல்பத்திலும் பிரதானமாக அமைந்திருந்தது. இப்படம் ரிலீஸான போது ஆரம்பப் பள்ளிச் சிறுவன் நான். முதன் முதலில் பிரமாண்டம் என்கிற விஷயத்தை திரையில் பார்த்து வியந்த இந்தப் படத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிக்கு எதிரே இருக்கும் நீர் பரப்பில் நீராடியபடி 'செந்தூரப் பூவே' என்று நிரோஷா பாடுகிற போது அந்தத் தியேட்டர் எங்கும் ஒலித்த கணீர் ஒலி இப்பவும் உணர முடிகிறது. அந்தப் படத்தில் கிளைமேக்ஸில் ரயிலைப் பிடித்துவிட விஜயகாந்த் ஓடி வருகிற காட்சியும், இந்த செந்தூரப் பூவே பாடலில் ஒலித்த கணீர் குரலுமே அப்படத்தினை ஒட்டிய நாஸ்ட்டால்ஜியாவில் சட்டென நினைவில் வருபவையாக இருக்கின்றன. இதே படத்தின் 'ஆத்துக்குள்ள ஏலேலோ' பாடலில் 'சேத்துக்குள்ள ஏலேலோ செம்பகப் பூ' என்று பாடுகிற சசிரேகாவின் குரலைக் கவனித்தால் அவருக்கென்று ஒரு தனித்த ஐடெண்ட்டிடியை இந்தக் காலகட்டத்தில் அந்தக் குரல் தகவமைத்துக் கொண்டுவிட்ட அம்சத்தைக் கவனிக்கலாம்.
மனோஜ் - கியான் இருவரும் மனோஜ் சரண், கியான் வர்மா என தனித்தனியே பிரிந்த பிறகும் இருவரின் இசையிலும் பாடுகிற வாய்ப்புகளையும் சசிரேகா பெற்றுக்கொண்டிருந்தார். கியான் வர்மாவின் இசையில் இணைந்த கைகள் படத்தின் ’இது என்ன முதலிரவா’, சத்தியவாக்கு படத்தின் ’வா மாமா ஒண்ணு தா மாமா’ ஆகியவை கியான் வர்மாவின் இசையில் சசிரேகா பாடிய குறிப்பிடத் தகுந்த பாடல்கள்.
1992ல் வெளிவந்த ’அண்ணன் என்னடா தம்பி என்னடா’ படத்தில் கியான் வர்மா சசிரேகாவிற்கு மூன்று பிரமாதமான மெலடிகளை வழங்கியிருந்தார். ‘ஆச மேல ஆச வச்சி’ என்ற விரகதாப டூயட், கும்மி வகை மெட்டில் கதை சொல்லுவதைப் போல அமைந்த ’நான் என்ன சொல்ல’ மற்றும் ‘சின்ன சின்னமணி’ என்ற தாலாட்டு வகை பாடல் என மூன்றும் மிகப் பிரமாதமான மெட்டமைப்பாக, கேட்டதும் ஈர்க்கும் வகையில் அமைந்தும் இந்தப் படம் பெரிய ரீச் ஆகாததால் பெரிதாக அடையாளம் காணப்படாமல் போன நல்ல பாடல்கள்.
இந்தப் படத்தின் ‘ஆச மேல ஆச வச்ச மச்சான்’ பாடலை சசிரேகாவுடன் இணைந்து பாடியிருப்பது பாடகர் ஹரிஹரன். ரோஜாவின் ’தமிழா தமிழா’விற்குப் பிறகு பம்பாயின் ’உயிரே உயிரே’ விலேயே கவனித்த ஹரிஹரனிடம் இடையில் இப்படி ஒரு தெம்மாங்கு மெட்டு வந்திருப்பது அநேகருக்குத் தெரியாத விஷயம். நாட்டுப்புற சாயலில் ‘மாரியம்மே தேரு’ என்று ஹரிஹரன் உச்சரிப்பதிலேயே வித்யாசமான அழகினைக் கொண்டிருக்கும் இப்பாடல். ரோஜாவும், அண்ணன் என்னடா தம்பி என்னடாவும் 1992 ல் ஒரு சில மாதங்கள் இடைவெளியில் வெளியானவை. இப்பாடலைக் கேட்கிற போது இதில் ஒலிக்கிற ஹரிஹரன் குரலின் இளமைத் தன்மையை ஒப்பு நோக்க தமிழில் ஹரிஹரனுக்கு இதுகூட முதல் பாடலாக இருந்திருக்கலாம் என்கிற ஓர் ஐயமும் உண்டு.
இதே படத்தின் ‘சின்ன சின்னமணி’பாடலின் வழியாக இன்னொரு சுவாரஸ்யமும் நினைவில் எட்டிப்பார்க்கிறது. பல பின்னணிப் பாடகிகளின் குரலின் சாயலை தரிசிக்கக் கொடுக்கும் தன்மை கொண்ட சசிரேகாவின் குரலினை பிரித்து அடையாளம் கண்டுவிட்ட பிறகும் ஒரே ஒரு பின்னணிப் பாடகியின் குரலோடு இப்பவும் மிகச் சரியாகப் பிரித்து அடையாளம் காண முடியா நிலை நீடிக்கிறது. கிட்டத்தட்ட சசிரேகாவின் குரலை குளோன் செய்தது போல ஒலிக்கும் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் பின்னணிப் பாடகி வித்யா.
சசிரேகாவிற்கு வாய்ப்புகளை வழங்கியது போல வித்யாவிற்கும் சொல்லிக்கொள்கிறார் போன்ற பாடல்களை வழங்கியிருக்கிறார்கள் மனோஜ்-கியான். மேற்சொன்ன இவ்விரு குரல்களின் அடையாளக் குழப்பத்தை உணர வித்யாவின் குரலில் வந்த உரிமை கீதம் படத்தின் ‘மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்’மற்றும் உழவன் மகனின் ‘செம்மறி ஆடே செம்மறி ஆடே’ சிறந்த உதாரணங்கள். இணைந்த கைகள் படத்தின் ‘மலையோரம் குயில் கூவக் கேட்டேன்’ மற்றும் ‘சின்னப்பூவே சின்னப்பூவே கோபம் கொள்ளாதே’ஆகிய பாடல்களில் ஒலிப்பதும் வித்யாவின் குரலே.
இப்படி ஒரு குழப்பத்தினை உண்டு பண்ணும் இக்குரல்களை வைத்து கியான் வர்மா கொடுத்த ஃபீமேல் டூயட்தான் இந்தச் ‘சின்ன சின்னமணி’ பாடல். இருவர் பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னாலுமே நம்ப முடியாத ஒரு பாடல் இது. இப்படி ஒரே பாடலில் இக்குரல்களை ஒலிக்கக் கேட்கையில் ‘மீசை வச்சா சந்திரன், மீசையில்லாட்டி இந்திரன்’வகையில் கவனித்த வேறுபாடு எஸ்.பி.ஷைலஜாத்தனம் தூக்கலாக அதாவது கீச் தன்மை அதிகமாக தென்பட்டால் வித்யா, போல்டாக ஒலித்தால் சசிரேகா என்று ஒரு மெல்லிய வித்தியாசம் உணரக் கிடைத்தது.சசிரேகாவின் குரல் எந்தக் குரல்களில் சாயல்களையெல்லாம் கொண்டிருந்ததோ கிட்டத்தட்ட அந்தக் குரல்கள் அநேகருடனும் இணைந்து பாடியிருக்கும் ஒரு விஷயமும் ஒரு சுவாரஸ்யத்திற்காக இந்த இடத்தில் நினைவு கூறத் தோன்றுகிறது.
மனோஜ் சரணின் இசையில் ஊழியன் படத்தில் ‘எல்லோருக்கும் நல்லவன்’ என்ற பாடலில் எஸ்.பி.பி பெரும்பகுதியை கையாள சசிரேகாவும், மின்மினியும் ஆளுக்கொரு சரணத்தில் இரண்டு வரிகளில் எட்டிப் பார்ப்பார்கள். மெல்லின சொற்களின் உச்சரிப்புகள் வழி சசிரேகாவையும் மின்மினியையும் ஒப்புமைப்படுத்திய விஷயத்தை ஒப்பிட்டுப் பார்க்க இப்பாடலைக் கேட்கலாம். (மனோஜ் சரண் பின்னாளில் மனோஜ் பட்நாகர் என்ற பெயரில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தது நினைவிருக்கலாம்).
1985 ல் சிவாஜி – பிரபு இணைந்து நடித்த வெளிவந்த ’நாம் இருவர்’ படத்தில் கங்கை அமரன் இசையில் பி.ஜெயச்சந்திரனுடன் இணைந்து பாடிய அழகிய மெலடியான ‘திருவிழா திருவிழா இளமையின் தலைமையில் ஒரு விழா’, 1986ல் எம்.எஸ்.வியின் இசையில் வெளிவந்த ’கண்ணே கனியமுதே’ படத்தில் கே.ஜே.ஏசுதாசுடன் பாடிய ‘நின்னையே ரதியென்று’ மற்றும் ராமராஜன் நடிப்பில் உருவான ‘காவலன்’ படத்தில் ராஜேஷ் கண்ணாவின் இசையில் மலேசியா வாசுதேவனுடன் இணைந்து எரோட்டிக் ஃபீலில் புகுந்து விளையாடிய ‘அள்ளி அள்ளி தெளிக்குதே மழதான் மழதான்’ ஆகியவை சசிரேகாவின் குரலில் வந்த கவனிக்கத் தகுந்த பாடல்கள்.
சித்தார்த்தா என்ற அறிமுக இசையமைப்பாளரின் இசையில் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வெளியான முற்றுகை திரைப்படத்தில் இவர் பாடிய 'கன்னி மனம் ஒண்ணு இங்கே கலங்கி நிக்குது தந்தானே' பாடலை அன்றைய தொண்ணூறுகளின் இசையமைப்பாளர்கள் கவனித்திருந்தால் இன்னும் பல பாடல்கள் அக்குரலில் தொண்ணூறுகளிலும் கிடைத்திருக்கும். அத்தனை இளமையோடும் தனித்துவமான அடையாளத்தோடும் இப்பாடலில் ஒலித்திருக்கும சசிரேகாவின் குரல். ஆபாவாணன் திரைக்கதையிலான படம் என்பதால் செண்டிமெண்டாக சசிரேகாவின் குரலை அவர் இப்படத்திற்கு பரிந்துரை செய்திருப்பாரோ என்று கூட ஓர் எண்ணம் இப்பாடல் குறித்த நினைவுடன் எட்டிப் பார்க்கும்.
மனோஜ், கியான் இருவரின் வாய்ப்புகள் தமிழில் குறைந்த பிறகு சசிரேகாவிற்குமான வாய்ப்புகளும் குறைந்துவிட்டிருந்த நிலையில் கிட்டத்தட்ட அவரை மறந்தே விட்ட சூழலில் 1993 ல் கிழக்குச் சீமையிலே படத்தில் ‘மானூத்து மந்தையில’பாடலினைப் பாடும் வாய்ப்பினை ரஹ்மான் சசிரேகாவிற்குக் கொடுத்திருந்தார். என் நினைவின்படி அதுவே திரையில் பாடிய அவரின் இதுவரைக்குமான கடைசி பாடல். மிக சிறிய வயதிலேயே பாடல் பாட வந்த இவர், தனது வயது முப்பதுகளில் இருந்த போதே வாய்ப்பின்றி போனது சோகம்.
சசிரேகா, பின்னணி பாடிய காலத்திலும் பெரிய அளவில் பிஸியான பாடகி என்கிற இடத்தில் இல்லாததால் திரைத்துறையில் இயங்கிய அதே நேரத்தில் மெல்லிசை குழுக்களிலும் நட்சத்திரப் பாடகியாக பாடிக்கொண்டிருந்தார். அவரின் வருமானத்திற்கு உதவி புரிந்தது இந்த மேடை பாடகி அவதாரம்தான் என்றால் மிகையில்லை. சில வருடங்களுக்கு முன், கலைஞர் தொலைக்காட்சியில் வானம்பாடி என்னும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியின் நடுவரான எஸ்.பி.பி சசிரேகாவிடம் ”இப்போது பாடுகிறவர்களை ஒப்பிட உன் திறமைக்கு குறைந்த பட்சம் இன்னும் ஐநூறு பாடல்களாவது கிடைத்திருக்கணும்” என்றார். இதைக் கேட்டதும் “உங்களிடமிருந்து வந்த இந்த வார்த்தைகள் போதும் அண்ணா, பெரிய விருது வாங்கிய சந்தோஷம்” என்று சிரித்தார். ஆனாலும் அந்த சிரிப்பில் வேதனையே மேலோங்கியிருந்தது.
தற்போது, ஏசுவின் புகழ் பரப்பும் தொலைக்காட்சிகளில் சசிரேகாவை அடிக்கடி காணலாம். இப்பவும்கூட அதே குரல்வளத்தோடு பாடிக்கொண்டிருக்கிறார். இன்றைய ட்ரெண்டிற்கு இவரால் பாட இயலுமா தெரியாது, ஆனாலும் இமான் போன்ற இசையமைப்பாளர்களின் எண்பது பாணி பாடல்களில் இவரை பயன்படுத்தலாம், இன்றைய சூழலில் வித்யாசமான குரலாக அடையாளப்படுவதற்காக வாய்ப்புகளை இப்பவும் இவரின் குரல் கொண்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக