அன்புள்ள ரஜினிகாந்த் 68 வது பிறந்தநாள் டிசம்பர் 12/2017.
*‘உங்க நட்சத்திரம் என்ன?’ மீனாட்சியம்மன் கோயில் குருக்களுக்கு ரஜினியின் பதில் !
நடிகர் திலகம் சிவாஜியின் 200-வது திரைப்படம் 'திரிசூலம்' வெற்றிவிழா மதுரையில் நடந்தது. அப்போது ரஜினியும் விழாவுக்கு போயிருந்தார். மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடப் போனார். ரஜினியின் அருகில்வந்த அர்ச்சகர் 'உங்களோட நட்சத்திரம் என்ன?' என்று கேட்க, மலங்க மலங்க விழித்து 'தெரியாது சாமீ' என்று பதில் சொல்லி இருக்கிறார். உண்மையில் ரஜினியின் நட்சத்திரம் 'சூப்பர் ஸ்டார்...' என்பது இப்போதுதான் தெரிகிறது என்று ரஜினிபற்றி பெருமையாகச் சொல்வார்கள்.
* 1975-ம் ஆண்டு 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தில் ஒப்பந்தமானார். அப்போது ரஜினியுடன் பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்த நண்பர் விட்டல் வீடு சென்னை மியூஸிக் அகாடமி பின்புறம் உள்ள புதுப்பேட்டை தெருவில் இருந்தது. அங்கேதான் ரஜினி வசித்துவந்தார். அந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அன்று விட்டலின் தாயார் அறுசுவை உணவை சமைத்து ரஜினிக்கு மகிழ்ச்சியுடன் பரிமாறினார்.
* 1982-ம் ஆண்டுமுதல் தனது பிறந்தநாளில் ரசிகர்களை சந்தித்து மகிழ்ச்சியாகக் கொண்டாடி வந்தார். அதன்பின் வருடா வருடம் தன் வீட்டுக்கு வரும் ரசிகர்களின் வாழ்த்துகளையும், அன்பையும் ஏற்றுக்கொண்டு வந்தார். சென்னை அல்லது வெளியூரில் இருக்கும் ரசிகர்களும் எப்போது டிசம்பர் 12-ம் தேதி வருமென்று காலண்டரையே கண்கொட்டாது பார்த்துக்கொண்டு இருந்தனர், இப்போதும் இருக்கின்றனர்.
* 1988-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி போயஸ்கார்டனில் பிறந்தநாள் விழா பிரமாதமாக கொண்டாடப்பட்டது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு முன் ஏற்பாடுகள் பிரமாதமாக செய்யப்பட்டன. ரஜினி வீட்டுக்கு வரும் ரசிகர்கள் வரிசையாக வருவதற்கு சவுக்கு கட்டைகளை கட்டிவைத்து ராணுவக் கட்டுப்பாட்டோடு ரசிகர்மன்ற நிர்வாகிகள் செயல்பட்டனர். ஒவ்வொரு ரசிகருடனும் போட்டோ எடுத்துக்கொண்டு அவர்களுக்கு தன் கையால் ஸ்வீட் - காரம் கொடுத்து வழியனுப்பி வைத்தார். ஆனால், சென்னைக்கு வந்து ரஜினியை சந்தித்துவிட்டு சேலத்துக்கு திரும்பியபோது சாலை விபத்தில் சிக்கி இரண்டு ரசிகர்கள் உயிரிழந்தனர். தனது ரசிகர்கள் இறந்த துயரமான சம்பவம் ரஜினியின் மனசுக்குள் காயத்தை ஏற்படுத்தின. அதன்பின் தனது பிறந்தநாளன்று ரசிகர்களை சந்திப்பதை தவிர்க்க ஆரம்பித்தார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12-ம்தேதி அன்று தினசரி பத்திரிகைகளில் 'நான் பிறந்தநாள் அன்று சென்னையில் இல்லை, ரசிகர்கள் என்னைத்தேடிவந்து ஏமாற வேண்டாம்' என்று விளம்பரம் கொடுத்து வந்தார்.
* 1990-ம் ஆண்டு 'தர்மதுரை' படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தது. ரஜினி பிறந்தநாள் அன்று படப்பிடிப்பில் இருந்ததால் அவருக்கே தெரியாமல் தயாரிப்பாளரும், டைரக்டரும் சேர்ந்து பிறந்தநாள் கேக் வரவழைத்து யூனிட்டில் கொண்டாடினர், ரஜினியும் மறுக்க முடியாமல் கலந்துகொண்டார். 'தர்மதுரை' படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடந்ததுபோது அங்கே டைரக்டர் ராஜசேகர் ரஜினி பிறந்தநாளை படயூனிட்டோடு கொண்டாடினார்.
* 1998-ம் ஆண்டு 'படையப்பா' படப்பிடிப்பு சென்னை ஏவி.எம்.ஸ்டுடியோவில் நடந்தது. தன்னுடன் நடித்த ரம்யாகிருஷ்ணன், செளந்தர்யா, மற்றும் 'படையப்பா' படத்தின் யூனிட்டோடு டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் ரஜினி பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது ரஜினியைத்தேடி ஏவி.எம்.ஸ்டுடியோவுக்கு வந்த விஜய் ரஜினிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்திவிட்டு மகிழ்ச்சியோடு புறப்பட்டுச் சென்றார்.
* 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரஜினி நடித்த 'சந்திரமுகி' திரைப்படம் வெளியானது. அந்த வருடம் டிசம்பர் 12-ம் தேதி அன்றைக்கு சென்னையில் இல்லை. தனது ஆன்மிக நண்பர்கள் குழுவோடு ரிஷிகேஷ் பறந்துவிட்டார். அங்கே இருக்கும் ஆசிரமங்களுக்குச் சென்று தனது பிறந்தநாளை ஆன்மிக உணர்வோடு கொண்டாடினார்.
* 2007-ம் ஆண்டு பிறந்தநாள் அன்று தனது நண்பர்கள் விட்டல், சுதாகர் ஆகியோருடன் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்குப் போனார். கிரிவலப் பாதையில் கால்வாசி தூரம்கூட சென்று இருக்கமாட்டார் அதற்குள் கூட்டம் மொய்த்துக்கொண்டதால் திடீரென காரில் புறப்பட்டு சென்னைக்கு திரும்பிவிட்டார்.
* 2010-ம் ஆண்டு ரஜினிக்கு 60-வது பிறந்தநாள் விழா முக்கியமான உறவினர்களையும், திரையுலகில் தனது உயர்வுக்கு காரணமான குறிப்பிட்ட பிரபலங்களை போயஸ் கார்டன் வீட்டுக்கு வரவழைத்து சஷ்டியப்தபூர்த்தி விழாவை சிம்பிளாகக் கொண்டாடினார். அதன்பின் ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டது சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக சென்றார். பெரும் ஆபத்தில் இருந்து மீண்ட ரஜினி தனது பிறந்தநாளை '12-12-12' என்று 2012-ம் ஆண்டு கொண்டாடினார். 29 ஆண்டுகளுக்குப் பிறகு தனது வீட்டு வாசலில் வெண்பட்டு வேஷ்டி, பட்டுச்சட்டை சகிதமாக ரசிகர்களையும், மீடியாக்களையும் சந்தித்தார். அப்போது 'சார் உங்களுக்கு மூன்று பிறப்பு ஒன்று பெங்களூருவில் சிவாஜிராவ், அடுத்து சென்னையில் ரஜினிகாந்த், இன்னொன்று சிங்கப்பூரில் மறுபிறப்பு உண்மையா?' என்று கேள்வி கேட்டேன் ' எஸ் தேங்யூ தேங்யூ...' என்று பதிலளித்தார்.
* 2011- ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஏவி.எம்.ஸ்டுடியோவில் பிரமாதமாக மேக்கப் போட்டுக்கொண்டு 'ராணா' படப்பிடிப்பில் கலந்து கொண்டார், ரஜினி. அப்போது திடீரென ஷூட்டிங்கில் மயக்கம் போட்டு விழுந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின் உடல்நிலை மோசமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்தகட்டமாக மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள எலிசெபத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்தபோது உலகெங்கும் உள்ள ரசிகர்கள் செய்த வேண்டுதல்களைப் பார்த்து கண்கலங்கினார், ரஜினி
* 2012 -ம் ஆண்டு ரஜினி சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பிறகு மறுபிறவி கண்ட ஆண்டு. உண்மையில் 12-12-12 பிறந்தநாள் விழாவை பிரமாண்டமாகக் கொண்டாட திட்டமிட்டிருந்தனர். டிசம்பர் 11-ம் தேதி அன்று ரஜினியின் நெஞ்சுக்கு நெருக்கமான நண்பர் காந்தி திடீரென இறந்துபோனது ரஜினியின் இதயத்தில் ரணவலியை ஏற்படுத்திவிட்டது. மறுநாள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த நிறைய நிகழ்ச்சிகளை ரத்துசெய்தார். அன்பான ரசிகர்களின் வேண்டுகோளுக்காக சென்னை ஒய்.எம்.சி.ஏவில் நடந்த பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு ரசிகர்கள் மேல் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்திப் பேசினார். அதன்பின் அடுத்தடுத்து பிறந்தநாள் வந்தபோது போயஸ்கார்டன் தேடிவரும் ரசிகர்களை ஏமாற்றாமல், மறக்காமல் சந்தித்து வருகிறார். சிவாஜி 3டியும் அன்றுதான் ரிலீஸ்...
* 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரஜினி, அவரது நண்பர்கள், விட்டல், நாகராஜராவ் உடன் விமானத்தில் புறப்பட்டு நாசிக் சென்றார். அர்த்த கும்பமேளா என்பது ஆறுவருடங்களுக்கு ஒரு தடவை நடக்கும், பூரண கும்பமேளா பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும். மகா கும்பமேளா 144 வருடங்களுக்கு ஒருமுறை வரக்கூடிய சிறப்பான திருவிழா. தனது பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி அன்று காவியுடை அணிந்துகொண்டு மகா கும்பமேளா திருநாளில் ரஜினி புனித நீராடினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஷீரடி சென்று சாய்பாபாவை வழிபட்டுவிட்டு மும்பையில் இருந்து சென்னைக்குத் திரும்பினார்.
* 2015-ம் ஆண்டு 'கபாலி' படத்தில் நடித்துக்கொண்டு இருந்தார். பெரும்பாலான படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. அதன்பின் டிசம்பர் மாதத்தில் மலேசியாவில் எடுக்கவேண்டிய ஒருசில காட்சிகளை கோவாவில் படமாக்கினார், ரஞ்சித். ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி அன்றைக்கு ரஜினிக்கே தெரியாமல் பிரமாண்டமான பிறந்தநாள் கேக்கை கொண்டுவந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் உற்சாகமாக பிறந்தநாள் நிகழ்ச்சியை கொண்டாடினார்கள்.
* 2016 -ம் ஆண்டு ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ம்தேதி அன்றைக்கு போயஸ் கார்டன் வீட்டில் இல்லை. ரஜினி எப்போதும் 'என்னுடைய பிறந்தநாள் அன்று நான் யாரையும் சந்திப்பது இல்லை. எங்கேயாவது தனியாக ஒரு இடத்துக்குச் சென்று விடுவேன் அங்கே அமர்ந்து இந்தப் பிறவியை நான் ஏன் எடுத்தேன்? என்ன செய்துகொண்டு இருக்கிறேன் என்று என்னை நானே தனிமையில் கேள்வி கேட்டுக் கொள்வேன்' என்று அடிக்கடி சொல்வார். அதுபோல சென்னை கேளம்பாக்கத்தில் இருக்கும் அவரது பண்ணை வீட்டுக்குச் சென்று தனியாக இருந்தார்.
* 2017-ம் ஆண்டு இந்த டிசம்பர் மாசம் ரஜினி வாழ்விலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் மாவட்டங்களில் இருக்கும் ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். அப்போது 'போருக்கு தயாராவீர்' என்று அரசியலுக்கு அச்சாரம் போட்டுப் பேசினார், ரஜினி.
அடுத்து நவம்பர் மாதம் சந்திக்கலாம் என்று பேசப்பட்டது, தமிழ்நாட்டில் பெருமழை கொட்டித்தீர்த்ததால் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இந்த டிசம்பர் 12-ம் தேதி பிறந்தநாள் அன்று சென்னையில் ரஜினி இருக்க மாட்டார் என்று சொல்கிறார்கள். டிசம்பர் 20-ம் தேதிக்குப் பிறகு போட்டோ எடுக்காமல் இருக்கும் ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்துக்கு வரவழைத்து சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளத் திட்டமிட்டு இருக்கிறார். மே மாதம் ரசிகர்கள் மத்தியில் 'போருக்கு தயாராவீர்' என்று சொன்ன ரஜினி, விரைவில் போருக்கான நாளை அறிவிக்க இருக்கிறார்.
*இதுவரை எந்த பிறந்தநாளிலும் இல்லாத எதிர்பார்ப்பு இப்போது ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக எகிறிக்கிடக்கிறது என்பது என்னவோ நூறு விழுக்காடு உண்மை.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக