ராஜாவின் ராக ராஜாங்கம் இது எப்படி இருக்கு.
**********************
திரைப்படங்கள் அடைந்த தோல்வி காரணமாகப் பரவலாக அறியப்படாமல் போன நல்ல பாடல்கள் பல உண்டு. குறிப்பாக, பெயர் தெரியாத படங்களின் பாடல்களாக நினைவுகளில் பதிவாகிவிட்ட இளையராஜாவின் அற்புதமான பாடல்கள் ஏராளம். இதுபோன்ற பாடல்களைக் கேட்கும்போது, யாரும் அறியாத ரகசிய வனத்தைக் கண்டடையும் மனக்கிளர்ச்சி நம்முள் ஏற்படும். நூலகத்தில் பலர் கண்ணிலும் படாத அலமாரியில் வாசகர்களுக்காகக் காத்திருக்கும் புத்தகங்களைப் போன்றவை இப்பாடல்கள்.
இன்று மெய்நிகர் புதையலைப் போல ஏராளமான விஷயங்களைக் கொண்டிருக்கும் இணையத்தில் இதுபோன்ற பாடல்கள் பார்க்க, கேட்க கிடைக்கின்றன. காலத்தின் நிறம் ஏறிய பழைய புகைப்பட ஆல்பங்களைப் புரட்டிப் பார்க்கும் அனுபவத்தைத் தரும் பாடல்கள் இவை. அந்த வரிசையில் இடம்பெறும் பாடல், ‘எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ.’ இடம்பெற்ற திரைப்படம் ‘இது எப்படி இருக்கு’. கருப்பு-வெள்ளைத் திரைப்படம் இது.
குமுதம் இதழில் எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘அனிதா இளம் மனைவி’எனும் தொடர்கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 1978-ல் வெளியானது. ஆர். பட்டாபிராமன் இயக்கிய இப்படத்தில் நாயகி பாத்திரத்தில் தேவி நடித்திருந்தார். கமல், ரஜினி போன்ற இளம் நடிகர்களின் வருகைக்குப் பிறகு சந்தை மதிப்பை இழக்கத் தொடங்கிய நடிகர்களில் ஒருவரான ஜெய்சங்கர்தான் படத்தின் நாயகன்.
சற்று ஜீரணிக்க முடியாத நடிகர் தேர்வுதான். சுஜாதாவின் கதைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட எந்தப் படமும் அவர் மனதுக்குத் திருப்தி தராதது. இதை அவரே பல முறை குறிப்பிட்டிருக்கிறார் (அவர் திரைக்கதை, வசனம் எழுதிய படங்கள் இதில் அடங்காது). அந்த வகையில் யாருடைய நினைவிலும் நிற்காத படமாக வந்துசென்ற இப்படத்தில், இளையராஜாவின் இசையில் உருவான இந்தப் பாடல் மட்டும் தனித்த அழகுடன் மிளிரும்.
‘லாலா..லாலலா..’ என்று தொடங்கும் எஸ்.ஜானகியின் ஹம்மிங்கைத் தொடர்ந்து வானில் இருந்து இறங்கிவரும் வயலின் இசையைத் தந்திருப்பார் இளையராஜா. புராதன நகருக்கு வெளியே சாலையைப் பார்த்தபடி நிற்கும் மரங்களின் இலைகளை அசைக்கும் காற்றாக ஒலிக்கும் இசை அது. அந்த இசையின் முடிவில், பாடலின் பல்லவியைத் தொடங்குவார் ஜானகி.
குரலாலேயே இயற்கையை அளக்க முயல்கிறாரோ என்று நினைக்கும் அளவுக்கு அவரது குரல், வானில் மிதந்து மெல்ல இறங்கிவரும். புல்லாங்குழல், வயலின் கலவையாக சில விநாடிகள் ஒலிக்கும் நிரவல் இசையைத் தொடர்ந்து அனுபல்லவியைத் தொடங்குவார் ஜேசுதாஸ். ‘பார்வை ஜாடை சொல்ல இளம் பாவை நாணம் கொள்ள…’ என்று தொடங்கி ‘எங்கும் நிறைந்த இயற்கையின் சுகம்’தரும் பல்லவியுடன் இணைந்துகொள்வார்.
பெண் குரல்களைக் குயில் குரல்களைப் போல் ஹம்மிங் செய்ய வைக்கும் பாணியை இளையராஜா புகுத்திய பாடல்களில் இப்பாடல் முதன்மையானது என்று சொல்லலாம். குயில் போலவே ஒலிக்கும் புல்லாங்குழல் இசையைத் தொடர்ந்து அந்த ஜாலத்தை இளையராஜா ஜானகி இணை நிகழ்த்திக் காட்டியிருக்கும். ‘குகுகுக்கூ… குகுகுக்கூ…’ என்று தொடங்கும் ஜானகியின் ஹம்மிங்குடன் மற்றொரு அடுக்கில் சற்று தாழ்ந்த குரலில் இதே ஹம்மிங்கை மற்றொரு பெண்குரல் பாடும் (அதுவும் ஜானகியின் குரல்தான்).
இந்த ஹம்மிங்கைத் தொடர்ந்து பரவசமூட்டும் வயலின் கோவை ஒன்று குறுக்கிடும். பாடிக்கொண்டே பறந்து செல்லும் குயில்கள் மஞ்சள், சிவப்பு, செம்பழுப்பு வண்ணக் கலவையாக விரிந்து செல்லும் வானைக் கடந்து செல்வது போன்ற காட்சிப் படிமம் மனதில் தோன்றி மறையும்.
சுமார் ஆறு நிமிடங்கள் கொண்ட இப்பாடலின் ஒவ்வொரு நொடியிலும் எதிர்பாராத ஆச்சரியங்களை வைத்திருப்பார் இளையராஜா. வழக்கம்போல இரண்டே சரணங்கள் கொண்ட இப்பாடலின் நிரவல் இசைக் கோவைகள் பல விநாடிகள் நீளம் கொண்டவை. பெரிய கேன்வாஸில் பிரம்மாண்டமான ஓவியத்தை வரையும் ஓவியன், ஆங்காங்கே ஓவியத்தின் அழகை ரசித்து ரசித்து மேலும் செழுமைப்படுத்துவதுபோல், நிரவல் இசைக்கோவையின் நீளத்தை அதிகரித்துக்கொண்டே செல்வார் இளையராஜா.
இரண்டாவது சரணத்தில் வீணை இசையைத் தொடர்ந்து வரும் புல்லாங்குழல் இசை, எங்கோ ஒரு தொலைதூரக் குளிர்ப் பிரதேசத்தைக் கடந்து செல்லும் மேகத்தைப் போல் மிதக்கும். சரணத்தில், ‘தேனாக…’ என்று வானை நோக்கி உயரும் ஜேசுதாஸின் குரலுடன், ‘லலலல..லலல..லலல’ என்று சங்கமிக்கும் எஸ். ஜானகியின் ஹம்மிங் இந்தப் பாடலுக்கு ஒரு தேவகானத்தின் அழகைத் தரும். அத்தனை துல்லியமான இசைப் பதிவாக இப்பாடல் இப்போது கிடைக்கவில்லை. ஆனால், தெளிவற்ற ஒலிவடிவில் இருப்பதே இப்பாடலுக்கு ஒரு தொன்மத் தன்மையைக் கொடுக்கிறது.
பி. சுசீலா பாடும் ‘தினம் தினம் ஒரு நாடகம்’என்றொரு பாடலும் இப்படத்தில் உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக