இதயவீணை’ படப்பிடிப்புக்காக காஷ்மீருக்கு எம்.ஜி.ஆர். சென் றிருந்தார். அங்கிருந்த பிரபல ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். இதை அறிந்து ராணுவத்தினர் அவருக்கு வர வேற்பு அளித்தனர். பின்னர், தங்களின் ராணுவ நலச் சங்கம் ஒன்றுக்கு வருகை தர வேண்டுமென்று அழைப்பு விடுத்தனர். அவர்களின் வேண்டு கோளை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார். அவர்தான் எங்கு சென்றாலும் வெறும் கையோடு சென்று பழக்கமில்லையே. ராணுவ நலச் சங்கத்துக்கு நிதி கொடுக்க முடிவு செய்தார். அவரிடம் அப்போது பணம் இல்லை. படத்தின் தயாரிப்பாளரான மணியனிடமும் படப் பிடிப்பு செலவுக்கு வைத்திருந்ததைத் தவிர பெரிதாக தொகை இல்லை.
அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ஒரு பெரும் தொகையை குறிப்பிட்டு ‘‘கடனாக கிடைக்குமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். அதற்கு தொழிலதிபர், ‘‘தாராளமாக. ஆமாம், அப்படி என்ன தேவை உங்களுக்கு?’’ என்று வினவினார். எம்.ஜி.ஆர். அவரிடம் விஷயத்தைச் சொன்னதும் தொழிலதிபர் அசந்துபோய்விட்டார். ‘கடன் வாங்கி இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக கொடுக்கிறாரே?’ என்று நினைத்தார். தனது எண்ணத்தை எம்.ஜி.ஆரிடமும் சொன்னார்.
‘‘தவறாக நினைக்காதீர்கள். ராணு வத்தினர் விரும்பி உங்களை அழைக் கிறார்கள். ஏதாவது தொகை கொடுக்க வேண்டுமென்றால் கொடுங்கள். ஆனால், இவ்வளவு பெரிய தொகை வழங்குவது தேவையா?’’ என்றார். எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்துவிட்டது.
‘‘நீங்களும் நானும் சென்னையில் இருந்து லட்சம் லட்சமாக சம்பாதித் துக்கொண்டு பாதுகாப்பாக இருப் பதற்கு நாட்டை பாதுகாக்கும் இந்த ராணுவத்தினர்தான் காரணம். அவர்களது உழைப்புக்கும் தியாகத்துக்கும் இந்தத் தொகை மிகவும் குறைவு. முதலில் பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். சென்னை திரும்பியதும் தருகிறேன்’’ என்று தொழிலதிபரிடம் சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். வேகமாகச் சென்றுவிட்டார். பிறகு தொழிலதிபரிடம் மறுப்பேது? அவர் ஏற்பாடு செய்து கொடுத்த தொகையை ராணுவ நலச் சங்கத்துக்கு நன்கொடையாக எம்.ஜி.ஆர். வழங்கினார். இதை எதிர்பார்க்காத ராணுவத்தினர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக