வெள்ளி, 11 மே, 2018

இது என் அம்மாவின் உண்மைக்கதை- நடிகையர் திலகம் பற்றி சாவித்ரி மகள் நெகிழ்ச்சி

இது என் அம்மாவின் உண்மைக்கதை- நடிகையர் திலகம் பற்றி சாவித்ரி மகள் நெகிழ்ச்சி...

முதன்முதலில் என் அம்மாவின் உண்மைக்கதை வெளியாகியிருக்கிறது’ என ‘நடிகையர் திலகம்’ படம் குறித்து சாவித்ரி மகள் விஜய சாமுண்டீஸ்வரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் ‘நடிகையர் திலகம்’.நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படம், தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரில் நேற்று முன்தினம் ரிலீஸாகியிருக்கிறது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சாவித்ரி போலவே தத்ரூபமாக அவர் நடித்துள்ளதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
“படப்பிடிப்பின்போது அடிக்கடி என்னிடம் போனில் பேசுவார் கீர்த்தி சுரேஷ். அம்மா எப்படி சாப்பிடுவார் என்பது உள்பட அம்மாவின் பல மேனரிஸங்கள் பற்றி என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார். நான் இரண்டு முறை படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றிருக்கிறேன். ஷாட் முடிந்து அவர் என்னை நோக்கி வரும்போது, என் அம்மாவே என்னை நோக்கி நடந்து வருவது போல இருக்கும். என் அம்மாவைப் போல நடந்து கொள்ளும் ஆற்றல் இயல்பாகவே கீர்த்தியிடம் இருக்கிறது. அம்மாவைப் பற்றி அவருக்கு நான் 20 முதல் 25 டிப்ஸ்கள் வரை கொடுத்திருப்பேன். அது இல்லாமலேயே அவராகவே கிட்டத்தட்ட 12 மேனரிஸங்கள் வரை இயல்பாகவே கொண்டு வந்தார்.
எல்லா நடிகர்களுமே மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படம் குறித்து எனக்கு ரொம்பவே சந்தோஷம். நான் மிகவும் எமோஷனலாக இருக்கிறேன். காரணம், முதன்முதலில் என் அம்மாவின் உண்மைக்கதை வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்னர் ஏகப்பட்ட எதிர்மறையான வதந்திகள் வந்துள்ளன. ஆனால், இந்தப் படம் முழுக்க முழுக்க உண்மை” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் சாவித்ரியின் மகளான விஜய சாமுண்டீஸ்வரி.
இந்தப் படத்தில், சாவித்ரியின் கணவர் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். பத்திரிகையாளராக சமந்தா நடித்துள்ளார். விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே, நாக சைதன்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழில் இன்று இந்தப் படம் ரிலீஸாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக