புதன், 30 மே, 2018

கலைகளின் பிறப்பிடத்தில் மலர்ந்த நாட்டியத் தாரா ஈ.வி.சரோஜா



 ஈ.வி.சரோஜா

கலைகளின் பிறப்பிடத்தில் மலர்ந்த நாட்டியத் தாரா  ஈ.வி.சரோஜா

இயல் இசை நாடக மன்றத்தின் திருவாடுதுறை ராஜரத்தினம் அரங்கில் நிகழும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்தோறும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்களில் ஈ.வி.சரோஜாவின் படம் கண்களையும் மனதையும் ஒரு சேரக் கவர்ந்திழுக்கக் கூடியது. தமிழ்த் திரையில் பல நடிகைகள் நடனமணிகளாக இருந்தாலும், சரோஜாவின் நடனத்தில் துள்ளல், நளினம் இரண்டுமே கவனத்தை ஈர்க்கக் கூடியவை.

அவர் நடித்த பல படங்களில் இடம் பெற்ற நடனக்காட்சிகளைப் பார்க்கும்போது அது தனித்தன்மையுடன் இருப்பதை உணர முடியும். மான் குட்டியைப் போல் துள்ளிக் குதிப்பதில் ஆகட்டும், கால் தரையில் படாமல் அந்தரத்தில் மிதப்பது போல் மிக வேகமாகக் கால்களை மாற்றி சில நடனங்களை அவரால் எளிதாக ஆடிக் காண்பிக்க முடிந்திருக்கிறது.

மிக இளம் பெண்ணாக மெலிந்த தோற்றத்தில் ஆரம்பகாலப் படங்களில் அவர் தோன்றினாலும் அவரின் நடிப்பும் நடனமும் சற்றும் சளைத்தவையல்ல. முதன்மைக் கதாநாயகி அந்தஸ்தைப் பெற முடியாவிட்டாலும், ஒருபோதும் நடிப்பில் சோடை போய் விடவில்லை. இரண்டாவது நாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் நகைச்சுவை பொங்கும் நடிப்பு என அனைத்து வகையாகவும் அவரால் திரையில் மிளிர முடிந்தது.

நடிகர்கள் சந்திரபாபு, கே.ஏ.தங்கவேலு, நாகேஷ் என்று நகைச்சுவை நடிகர்களுக்கும் இணையாக நடித்தவர். அதிலும் குறிப்பாக சந்திரபாபுவுடன், அவரின் வேகமெடுக்கும் பாடல்களுக்கு ஏற்ப அதே துரித கதியில் ஆடுவதும் அசாத்தியமானதுதான். ‘புதுமைப்பித்தன்’ படத்தில் அரண்மனை அடிமைப்பெண்களில் ஒருத்தியான அபராஜிதாவாக ஆடிய ஆட்டங்கள் நினைவில் நிற்பவை. அதிலும், ‘தில்லானா பாட்டுப் பாடி குள்ளத் தாரா’ என்று சந்திரபாபு பாடும் பாடலுக்கு ஆடி அனைவராலும் ரசிக்கப்பட்டவர்.

கலைகளின் பிறப்பிடத்திலிருந்து…

திருவாரூர் அருகே உள்ள எண்கண் கிராம7ம் சரோஜாவின் பிறந்தகம். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் கலைகளின் பிறப்பிடம். அங்கு பாரம்பரியக் கலைகளான நாட்டியம், இசை இரண்டையும் போற்றிக் கொண்டாடிய கலைக் குடும்பத்தில் பிறந்தவர் எண்கண் வேணு பிள்ளை சரோஜா என்ற ஈ.வி.சரோஜா.

தந்தையார் வேணு பிள்ளை இசைக்கலைஞர், தாயார் ஜானகியும் அப்படியே. சரோஜாவுடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள். ஒருவர் அண்ணன், மற்ற இருவரும் தம்பிகள். சரோஜாவின் ஏழாவது வயதில் தந்தையார் காலமானார். பிறந்தது கலைக்குடும்பம் என்பதால் இயல்பாகவே கலைகளின் மீதான ஆர்வம் அவரது ரத்தத்திலேயே கலந்திருந்தது. தாயாரும் மகளின் மனதை அறிந்தவராக நடனம் கற்பிக்க முடிவெடுத்தார். காலில் கட்டிய சலங்கைகளின் வழியாக மிகச் சரியாகவே தன் தீராத கலையார்வத்தைப் பேசிற்று அந்தக் குழந்தை.

குருகுல வாசமாக நாட்டியப் பயிற்சி

அதே தஞ்சை மாவட்டத்துக்காரரான வழுவூர் ராமையாப்பிள்ளை நடனக்கலையில் மேதாவிலாசம் நிரம்பப் பெற்றவர். அக்காலக் கட்டத்தில் பிரபல திரைக்கலைஞர்கள் பலருக்கும் அவரே குருவாகவும் இருந்து நாட்டியம் பயிற்றுவித்து வந்தார். சென்னையில் மிகவும் புகழ் பெற்ற நட்டுவனாராகவும் திகழ்ந்தவர். வைஜெயந்திமாலா, குமாரி கமலா என பல புகழ் பெற்ற நாட்டியத்தாரகைகள் இவரால் மெருகேற்றப்பட்டவர்கள்.

அவ்வளவு பேரும் புகழும் பெற்ற கலைஞர், அந்தச் சமயத்தில் திருவாரூர் சென்றிருந்தார். ஒரு வகையில் அவர் சரோஜாவின் உறவினரும் கூட. ராமையாப் பிள்ளை திருவாரூர் வந்திருப்பதை அறிந்த சரோஜாவின் தாயார் ஜானகி அம்மாள், நாட்டியப் பித்தான தன் மகள் சரோஜாவை அழைத்துக்கொண்டு அவரைப் பார்க்கச் சென்றார். மகளை அவருக்கு அறிமுகம் செய்து வைத்து, ‘என் மகளுக்கு நீங்களே குருவாக இருந்து அவளைப் பயிற்றுவிக்க வேண்டும்’ என்றும் அவரிடம் கேட்டுக் கொண்டார்.

குழந்தை சரோஜாவின் துறுதுறுப்பான முகமும் அலைபாயும் கண்களும் அவருக்கு எதையோ உணர்த்தின; ‘இந்தச் சிறுமி எதிர்காலத்தில் நல்ல நாட்டிய மங்கையாகப் பிரகாசிப்பாள்’ என்ற எண்ணவோட்டம் அவருக்குள் எழுந்தது. தாயாரின் ஆசியுடனும் குருவுடனும் சென்னைக்குப் பயணமானார் சரோஜா. குருகுல வாசமாகவே அவருக்கு நாட்டியம் சொல்லித் தரப்பட்டது.

மிக விரைவாகப் பயிற்சி பெற்றுத் தேறியதுடன், மிக இளம் வயதிலேயே நன்றாக ஆடக் கூடியவர் என்ற பெயரையும் குருவிடமிருந்து பெற்றார். அங்கு நாட்டியப் பயிற்சி பெறுவதற்காக வரும் மற்ற இளம் பெண்களுக்கு நாட்டியத்தைக் கற்றுத் தரும் இளம் ஆசிரியராகவும் பயிற்சியாளராகவும் அவரை உருமாற்றியது குரு வழுவூர் ராமையாப்பிள்ளை. அந்தளவுக்கு அவர் மீதும் அவரின் நடனத்திறன் மீதும் அளவில்லாத நம்பிக்கை கொண்டிருந்தார். சரோஜாவும் குருவின் நம்பிக்கையை வீணடிக்கவில்லை.

மிக விரைவில் சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் 1951 ஆம் ஆண்டு, அப்போதைய பிரபல நீதியரசர் ஏ.எஸ்.பி.அய்யர் முன்னிலையில் அரங்கேற்றம் அமோகமாக நடைபெற்றது. குருவின் ஆசிகளும் உடன் இருந்தது என்றே சொல்ல வேண்டும். 15 வயது சிறுமி மிகச் சிறப்பாக ஆடி அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டார்.

அக்காலத்தின் அரங்கேற்றம் நிகழும் சபாக்கள் மூலமாகவும் திரைப்படங்களுக்கு நட்சத்திரங்களையும் நாட்டியத் தாரகைகளையும் தேடும் படலம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மற்ற ஊர்களைக் காட்டிலும் சென்னை மாநகரம் அதற்கான களமாகவும் இருந்தது உண்மை. அப்படி ‘என் தங்கை’ படத்தின் பிரதான பாத்திரமான தங்கை மீனாவாகக்  கண்டுபிடிக்கப்பட்டவர்தான் ஈ.வி. சரோஜா.


கண்மூடித்தனமான திரையுலக நுழைவு

எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்க, ‘என் தங்கை’ என்ற படத்தைத் தயாரிப்பதில் ‘அசோகா பிக்சர்ஸ்’ நிறுவனம் அப்போது மும்முரமாகக் களமிறங்கி இருந்தது. கதாநாயகி இல்லாமல், தனித்த நாயகனாக எம்.ஜி.ஆர். நடிக்க அவருக்கு தம்பியும் தங்கையுமாக நரசிம்ம பாரதியும், ஈ.வி.சரோஜாவும் நடிப்பதென்று முடிவானது.

வழக்கமான எம்.ஜி.ஆர். பட பாணியிலிருந்து முற்றிலும் விலகி, குடும்பத்தின் மூத்த மகனாக, குடும்பச்சுமையைத் தன் தோள்களில் தாங்கும் பொறுப்புள்ள மூத்த சகோதரனாக எம்.ஜி.ஆர். பின்னாளில் ஏறக்குறைய இது சிவாஜி பட பாணி. ஆனால், அப்போது சிவாஜி திரையுலகில் நுழையவே இல்லை. எம்.ஜி.ஆரும் தனக்கென தனி பாணி இதுதான் என்பது போன்ற சுழலில் சிக்கிக் கொள்ளாத ஆரம்ப நிலையிலேயே இருந்தார். வேட்டியும், சட்டையுமாக படம் நெடுக எளிய காஸ்ட்யூமில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

கண் பார்வையற்ற தங்கை மீனாவாக, சோக ரசம் சொட்டச் சொட்ட அறிமுகப் படத்திலேயே தன் நடிப்பால் அனைவரையும் கண் கலங்க வைத்தார் ஈ.வி.சரோஜா. அவரைச் சுற்றியே படத்தின் கதையும் பின்னப்பட்டிருந்தது. கண் பார்வையில்லாமல் ஒரு பெண் இந்த உலகில் வாழ்வது எவ்வளவு கடினம் என்பதைக் கதை விவரித்தது.

தங்களைப் போன்ற எளியவர்கள் வாழ்வதற்கு இந்த உலகம் தகுதியற்றது என்பதை, எந்தவிதமான புரட்சிகர வசனங்களும் இல்லாமல், புறக்கணிக்கப்பட்டு உயிரிழந்த தன் தங்கையின் உடலைத் தோளில் சுமந்தவாறு நேராகக் கடலுக்குள் இறங்கி தன்னை மாய்த்துக் கொள்வார் கதாநாயகன் எம்.ஜி.ஆர். வாழ்க்கையின் மீதுள்ள பிடிப்பை பிரதானப் படுத்தாமல், தற்கொலையை முன்னிறுத்தியதாலோ என்னவோ, இப்படம் பெரும் வரவேற்பைப் பெறவில்லை.

படத்தின் பிரதான பாத்திரங்களான எம்.ஜி.ஆர், நரசிம்ம பாரதி, மாதுரி தேவி, ஈ.வி.சரோஜா என நால்வருமே விபத்து மற்றும் தற்கொலைக்கு பலியாவது நம்பக்கூடியதாகவும் இல்லை. பொதுவாக எதிர்மறை எண்ணங்களை விதைக்கும் படங்கள் பெரிதாக மக்களால் விரும்பப்படுவதில்லை என்பதற்கு இந்தப் படமே சாட்சி.

திரையிலும் நடனங்களே பிரதானம்

நடிப்பின் வழியாக அறியப்பட்டதை விட நடனங்கள், பாடல்கள் வாயிலாகவே பெரிதும் மக்களால் அடையாளம் காணப்படுபவராக இருக்கிறார் ஈ.வி.சரோஜா. ‘தில்லானா பாட்டுப் பாடி குள்ளத்தாரா…’ ‘குல்லா போட்ட நவாப்பு…. செல்லாது உங்க ஜவாப்பு...’ வாங்க மச்சான் வாங்க…. வந்த வழியப் பாத்துப் போங்க…’ ‘தேன் மதுவை வண்டினம் தேடி வரும்…’ ‘அழகைப் பார்… நீ பழகிப் பார், எனதன்பே என்னைப் பார்’ என எத்தனை பாடல்கள், அதற்கான நளினம் மிகு நடனங்கள்.

‘மதுரை வீரன்’ படத்தில் மானைத் துரத்தி வரும் வேடனாக எம்.ஜி.ஆர். பெண்களின் அந்தப்புர நந்தவனத்துக்குள் நுழைந்துவிட, அவரிடம் எகத்தாளமாகப் பேசி நையாண்டி செய்வதில் ஆரம்பித்து, கேலியும் கிண்டலுமாகத் தொடரும் ‘வாங்க மச்சான் வாங்க…. வந்த வழியப் பார்த்துப் போங்க….’ பாடலில் தரையிலிருந்து இரண்டடி உயரத்துக்கு மேலாக அவர் துள்ளிக் குதிப்பது, மான் துள்ளலாகவே இருக்கும்.

பட்டணமும் பட்டிக்காடும்

கிராமத்திலிருந்து பட்டணத்துக்குப் பிழைக்க வரும் ஒருவனின் பட்டண வாசம் பற்றிய கற்பனைகளுக்கு கிராமத்துப் பெண்ணொருத்தி பதிலடி கொடுப்பதாக அமைந்த எவர்க்ரீன் பாடல், ‘பட்டணந்தான் போகலாமடி பொம்பள, பணங்காசு தேடலாமடி’ ரேடியோ காலத்திலிருந்து இன்றைய யூடியூப் காலம் வரை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாடல்.

நாடோடிகளாகத் தெருவில் ஆடிப் பாடிப் பிழைக்கும் ஒரு ஜோடி பாடுவதாக அமைந்த இப்பாடல் ‘எங்க வீட்டு மகாலட்சுமி’ படத்தில் இடம்பெற்று பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அந்தப் பாடலில் இடம்பெற்ற  ‘ஒலகம் தெரிஞ்ச பொம்மனாட்டி, நான் ஒன்னுமே தெரியா கம்மனாட்டி’ என்ற வரிகள் வெகு பிரபலம், அந்த ஆண் குறிப்பிடும் ‘ஒலகம் தெரிஞ்ச பொம்மனாட்டி’ ஈ.வி.சரோஜாவே தான். இந்தப் படத்தில் இந்த ஒரு பாடல் காட்சியில் மட்டுமே அவர் தோன்றினார்.

நமக்கு மட்டும் நமக்கு மட்டும் நாயகி சொன்ன ரகசியம்
ஈ.வி.சரோஜாவுக்கென்றே ராமண்ணா தயாரித்த படம் ‘மணப்பந்தல்’, ஆனால், இந்தப் படத்தை அவர் இயக்கவில்லை. ஈ.வி.சரோஜா, சரோஜா தேவி என இரு கதாநாயகிகள் என்றாலும் இருவருக்கும் சமமான பங்களிப்பு வழங்கப்பட்டது. தங்கள் வீட்டு மாடியில் குடியிருக்கும் இளம் டாக்டர், நாயகன் எஸ்.எஸ்.ஆரை அந்த வீட்டுப் பெண் ஈ.வி.சரோஜா ஒருதலையாகக் காதலிக்க, அவரோ ரயில் பயணத்தில் சந்திக்கும் மற்றொரு நாயகி சரோஜா தேவியின் மீது மாறாக் காதல் கொள்கிறார்.

அவர்கள் காதல் கனிந்து நிற்கும் வேளையில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கதாநாயகனுக்கு பதிலாக அவனுடைய அண்ணனை மணக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறார் சரோஜாதேவி. காதலி அண்ணியாக மாறிய துயரம் நெஞ்சை அடைக்க விரக்தியின் விளிம்பில் நின்று எந்த இலக்குமற்று ஊரைச் சுற்றி வருகிறார் நாயகன் எஸ்.எஸ்.ஆர்.

அதேவேளை, ஒருதலைக் காதல் நிறைவேறாமல் போனதால் எதிலும் பற்றில்லாமல் இருக்கும் நாயகி ஈ.வி.சரோஜா, தாயாரின் பிடிவாதத்தால் சுய விருப்பமின்றி வேறொருவருக்கு மாலையிடச் சம்மதிக்கிறார். ஆனால், மனம் நிலை கொள்ளாமல் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன் மணக்கோலத்துடன் தண்டவாளத்தில் போய் படுத்துக் கொள்கிறார்.

தொலைவிலிருந்து அந்தப் பெண்ணைப் பார்த்து டிரைவர் ரயிலை நிறுத்த, அதே வண்டியில் பயணிக்கும் நாயகன் இறங்கி வந்து மணக்கோலத்திலிருக்கும் நாயகியைப் பார்த்து வாயடைத்து நிற்க, தங்கள் காதலில் தோற்ற இருவரும் மண வாழ்க்கையில் ஒன்றிணைகிறார்கள். பல திருப்பங்களுக்குப் பின், கதாநாயகனைக் கரம் பிடிக்கிறார் ஈ.வி.சரோஜா. ‘ஒருமுறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு’ என்பதெல்லாம் கவைக்குதவாது என்பதை மீண்டும் மீண்டும் இம்மாதிரியான கதைகள் ஆணித்தரமாக நிரூபித்திருக்கின்றன.

ஈ.வி.சரோஜாவுக்கு நடிப்பதற்கான அற்புதமான வாய்ப்பையும் இப்படம் வழங்கியது. அந்தக் கால இளம் பெண்களின் ‘காதல் தேசிய கீதங்கள்’  பலவற்றில் ஒன்றான ‘உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன். அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே’ ஈ.வி.சரோஜாவுக்குக் கிடைத்த அற்புதமான பாடல்களில் ஒன்று. எத்தனை பெண்கள் தங்கள் காதலனுக்கு இந்தப் பாடல் வழியாக தூதனுப்பியிருக்கிறார்கள்…. சேதிகளைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவையெல்லாம் ரசமானவை….

சீவி முடித்து சிங்காரித்த அன்புத் தங்கை…
‘படிக்காத மேதை’ படத்தில் பணக்காரக் குடும்பத்துச் செல்லப் பெண்ணாக ஆரம்பிக்கும் வாழ்க்கை, தந்தை வியாபாரத்தில் நொடித்துப் போய், மரணமடைய குடும்பம் ஆட்டம் காண்கிறது. பொறுப்பற்ற அண்ணன்கள் விலகிக் கொள்ள தாயைக் காப்பாற்ற வேலைக்குச் செல்ல வேண்டிய சூழலுக்கு ஆளாவாள் அந்தச் செல்லப்பெண். பொழுதுபோக்காகக் கற்றுக் கொண்ட, தனக்குத் தெரிந்த நாட்டியத்தையே முதலீடாக்கி அம்மாவுடன் வாழ்க்கையை நகர்த்துவார்.

அந்தச் செல்லப் பெண் பாத்திரம் ஈ.வி.சரோஜாவுக்கு இயல்பாய் அமைந்தது. அதே குடும்பத்தில் வளர்ப்பு மகனாக, வேலைக்காரனாக நடித்த சிவாஜி தங்கை மீது அன்பும் அக்கறையும் கொண்டவராகவும், அதே நேரத்தில் திருமணத்துக்குக் காத்திருக்கும் தங்கையை மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்த்து விட்டுப் போக, அவளைக் கேலி செய்து பாடும் ‘சீவி முடிச்சு சிங்காரிச்சு, சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சு…’ பாடலும் திருமண வீடுகளில் அந்நாட்களில் போடப்படும் ரெக்கார்டுகளில் முதன்மை பெற்ற ஒன்று.

வீரமும் விவேகமும் கொண்ட மங்கை சித்ரா…
ஈ.வி.சரோஜாவின் திரைப் பாத்திரங்களில் சற்றே வித்தியாசமானது ‘வீரத்திருமகன்’ படத்தில் ஏற்ற வீரமங்கை பாத்திரம். கொடுங்கோலாட்சி நடக்கும் மன்னராட்சியில், அதை எதிர்த்து நிற்கும் புரட்சிகரக் குழுவில் ஒருத்தியாகவும், அதே நேரத்தில் தளபதி ரவீந்திரன் மீது ஒருதலையாகக் காதல் கொள்பவளாகவும் நடித்திருப்பார்.

ரவீந்திரனாக நடித்த ஆனந்தன், தன் காதலி தான் மறைவில் நிற்கிறாள் என்றெண்ணி ‘பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்’ என அவளை நினைத்துப் பாட, பாடலின் இறுதியில்தான் இவள் தன் காதலியல்ல வேறொருத்தி என்பதை உணர்வார். சித்ரா வேடமேற்ற ஈ.வி.சரோஜாவும் இவன் உண்மையில் தன்னைக் காதலிக்கவில்லை என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொள்வார்.

புரட்சியாளனான தன் தாய்மாமன் ஆட்சியாளர்களின் சூழ்ச்சிக்குப் பலியாக, அவனது உறுதிமொழியை தான் ஏற்று, ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மைக்கு எதிராக வாளேந்தும் வீரப் பெண்ணாக நடித்திருப்பார். இறுதியில் தானும் மன்னனின் மகள்தான் என்ற உண்மையை உணர்ந்து, பல கட்டப் போராட்டங்களுக்குப் பின் மக்களாட்சிக்கு வித்திடுவதாகக் கதை நிறைவுறும். இவரது உடன்பிறந்த தங்கையாக நடித்த மற்றோர் நாயகி இளம் அழகு மங்கை ரோஜா மலரின் ராஜகுமாரியான சச்சு.


மாலைப் பொழுதின் மயக்கத்தில் கனவு கண்ட தோழிகள்

எக்காலத்திலும் எல்லோர் மனதையும் மயக்கும் ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ பாடல் காட்சியில் ஈ.வி.சரோஜாவும் தோன்றுவார். ‘பாக்கியலட்சுமி’ படத்தின் இரண்டு நாயகிகளில் சரோஜாவும் ஒருவர். பால்ய விவாகத்தின் கொடுமையைச் சொல்லும் இப்படத்தில் இடம்பெறும் இப்பாடல் சௌகார் ஜானகி பாடுவதாகவும், ஈ.வி.சரோஜா பாடுவதாகவும் இருமுறை இடம் பெற்றாலும், அதற்கான மொத்தக் குத்தகையையும் ஒட்டுமொத்தமாக அள்ளிக் கொண்டவர் சௌகார் ஜானகி. இப்பாடல் நிலைத்து இருக்கும் காலம் வரை இவர்கள் இருவருமே நினைக்கப்படுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நள்ளிரவு நேரங்களிலும் கூட இப்பாடல் வழியாக பி.சுசீலா அனைத்து உள்ளங்களையும் ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

கொடுத்து வைத்த மகராசி

எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு இணையாக நடித்த ஒரே படம் ‘கொடுத்து வைத்தவள்’. இப்படத்தைத் தயாரித்தவர் சரோஜாவின் சகோதரர் ஈ.வி.ராஜன். சொந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் நாயகியாகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தன் நாட்டிய வகுப்புத் தோழியான எல்.விஜயலட்சுமிக்கு இரண்டாவது நாயகி வாய்ப்பையும் அளித்தார்.

ஆனால், படம் பெரிதாகப் பேசப்படவில்லை. எம்.ஜி.ஆருக்கு பைத்தியக்காரராகச் சற்றே மாறுபட்ட வேடம். ஏற்கனவே ’புதுமைப்பித்தன்’ படத்தில் பைத்தியமாக நடித்திருந்தாலும், இப்படத்தில் வேறுமாதிரியான பைத்தியம். கதாநாயகியோ வறுமையிலும் ஏழ்மையிலும் உழலும் எளிய கிராமத்துப் பெண். உறவுகளால் மோசடிக்கு ஆளாக்கப்படும் ஒரு பாத்திரம். அநேகமாக இதுவே அவரின் இறுதிப் படமாக இருப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

எம்.ஜி.ஆரின் தங்கையாக அறிமுகமானவர் அவரது இணையாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றதுடன் படவுலகை விட்டும் ஒதுங்கினார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் 100 படங்களுக்கும் குறைவாகவே நடித்தார். 2002 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியிடமிருந்து முத்தமிழ்ப் பேரவையின் ‘நாட்டியச் செல்வம்’ விருது பெற்றார். திரைத்துறையில் நிகழ்த்திய வாழ்நாள் சாதனைக்காக 2002 ஆம் ஆண்டுக்கான ‘எம்.ஜி.ஆர். விருது’  2004 ஆம் ஆண்டு தமிழக அரசால் இவருக்கு வழங்கப்பட்டது.

இயக்குநர் ராமண்ணா ஏற்கனவே நடிகை பி.எஸ்.சரோஜாவை மணந்து கொண்டவர். இரண்டாவதாக ஈ.வி.சரோஜாவையும் இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொண்டார். மனைவியர் இருவருமே ஒரே பெயரைக் கொண்டவர்கள் என்பது அரிதிலும் அரிது. இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. 2006 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் தம் 70 வது வயதில் காலமானார். ஓயாமல் ஆடிய பாதங்கள் நிரந்தர ஓய்வு பெற்றன.

ஈ.வி.சரோஜா நடித்த திரைப்படங்கள்

என் தங்கை, நீதிபதி, விளையாட்டு பொம்மை, பெண்ணரசி, மதுரை வீரன், அமரதீபம், மணப்பந்தல், கொடுத்து வைத்தவள், நல்லவன் வாழ்வான், குலேபகாவலி, புதுமைப்பித்தன், நன்னம்பிக்கை, மறுமலர்ச்சி, ரம்பையின் காதல், பாசவலை, மணாளனே மங்கையின் பாக்கியம், எங்க வீட்டு மகாலட்சுமி, நீலமலைத்திருடன், கடன் வாங்கிக் கல்யாணம், குடும்ப கௌரவம், உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், பிள்ளைக் கனியமுது, சுமங்கலி, தங்கப்பதுமை, மனைவியே மனிதனின் மாணிக்கம், ஆட வந்த தெய்வம், படிக்காத மேதை, கைதி கண்ணாயிரம், பாட்டாளி யின் வெற்றி, விடிவெள்ளி, இரத்தினபுரி இளவரசி, ராணி லலிதாங்கி, வீரத்திருமகன், நல்லதங்காள்.

- பா.ஜீவசுந்தரி செல்லுலாய்ட் பெண்கள் பகுதியில் குங்குமத்தில் ௭ழுதியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக