தாலாட்டும் நினைவுகள்: நான் சந்தோஷமாக இருக்கிறேன் - 'சௌகார்' ஜானகி பேட்டி
நன்றி: தி ஹிந்து
செளகார் ஜானகி. சுமார் 70 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் கோலோச்சிவரும் நட்சத்திரம். 86 வயதை எட்டியுள்ள இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் 387 படங்களிலும் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் நடித்துச் சாதனை படைத்திருக்கிறார். அவரது வாழ்க்கை நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்:
நான் பிறந்தது ஆந்திராவில் ராஜமுந்திரியில். என் அப்பா பேப்பர் டெக்னாலஜி படித்துவிட்டு இங்கிலாந்தில் மூன்று ஆண்டு வேலை பார்த்துவிட்டுத் திரும்பியவர். எங்கள் குடும்பம் ஆசாரமான பிராமணக் குடும்பம். அதனால் சின்ன வயதில் எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது.
எங்கள் அப்பா வேலைக்காக சென்னை வந்தபோது எனக்குப் பன்னிரண்டு வயது. போக் ரோடில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினோம். அப்போது வானொலி நிலையத்தில் பாலர் நிகழ்ச்சியில் நான் பங்கேற்பேன். எனது உச்சரிப்பைக் கேட்டு விஜயா ஸ்டூடியோவின் பி.என். ரெட்டி, என்னைப் பற்றி விசாரித்துவிட்டு என்னைப் பார்ப்பதற்கு வந்துவிட்டார். அவர் `சினிமாவில் நடிக்கிறாயா?' என்று கேட்டபோது தயக்கமில்லாமல் `சரி' என்று உற்சாகமாகச் சொல்லிவிட்டேன். வீட்டில் நான் போய் சந்தோஷமாகச் சொன்னபோது அம்மா கோபமாகச் சண்டைபோட, என் அண்ணா என்னை அடித்தேவிட்டான். அவசரம் அவசரமாக வரன் பார்த்து குண்டூரில் ரேடியோ இன்ஜினீயராக இருந்த ஸ்ரீனிவாசராவ் என்பவருக்குக் கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள்.
திருமணத்துக்குப் பின் திருப்புமுனை
என் வீட்டுக்காரருக்கு நிரந்தரமான வேலையில்லை. பாதி நாள் சாப்பாட்டுக்கே கஷ்டம். அப்போதுதான் நான் என் கணவரிடம், கல்யாணத்துக்கு முன்னால் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. இப்போது நடிக்கலாமா என்று கேட்டேன். என் கணவரும், `பரவாயில்லை என்று ஒத்துக்கொண்டார்.
கையில் மூன்று மாதக் குழந்தையுடன் பி.என். ரெட்டியையைப் போய்ப் பார்த்தபோது அவர், “நான் உன்னைக் கதாநாயகியாப் போடறத்துக்குதான் கூப்பிட்டேன். அந்தப் படம் முடிந்துவிட்டதே' என்றார். நான் அவரிடம், என் கஷ்டத்தைச் சொல்ல அவரது தம்பி எடுக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். என்.டி. ராமாராவுக்கும் கதாநாயகனாக அதுதான் முதல் படம். அந்தப் படத்துக்கு எனக்குக் கிடைத்த ஊதியம் 2,500 ரூபாய். அந்தப் படம் ‘செளகார்’.
நன்றாக ஓடிற்று. எனக்கும் நல்ல பெயர். ஆனால், அடுத்தடுத்து வாய்ப்புகள் வரவில்லை. `சின்னப் பெண்ணா, மெலிஞ்சு இருக்கிறார், கதாநாயகி ரோலுக்கு சரியாக வர மாட்டார்' என்று நினைத்தார்கள். அப்போது மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம் எடுத்த ‘வளையாபதி' படத்தில் கதாநாயகி வாய்ப்புக் கிடைத்தது. பாரதிதாசனின் கதை-வசனம். ‘வளையாபதி’ வெளியான அன்றுதான் சிவாஜி கணேசனின் ‘பராசக்தி’ வெளியானது. என் படம் நன்றாக ஓடினாலும் பராசக்தி அளவுக்கு ஓடவில்லை. பின்னர் ஜெமினி தமிழில் எடுத்த ‘மூன்று பிள்ளைகள்’ படத்தைத் தெலுங்கில் எடுத்தபோது எனக்குக் கதாநாயகி வாய்ப்பு கொடுத்தார்கள்.
திரையும் நாடகமும் இரு கண்கள்
பாலசந்தர் சார் எனக்கு அறிமுகமானதே நாடகங்கள் மூலமாகத்தான். அப்போது அவர் ‘ராகினி கிரியேஷன்ஸ்’ என்ற நாடகக் குழுவை வைத்திருந்தார். அமெச்சூர் நாடகக் குழுவில் சம்பளம் எதுவும் கிடைக்காது. நாடகத்துக்கான உடைகளைக்கூட நாம்தான் எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் மனத் திருப்திக்காகச் செய்தேன். முதன்முதலில் அவரது ‘மெழுகுவர்த்தி’ எனும் நாடகத்தில் நடித்தேன். அதில் நாகேஷ், ஸ்ரீகாந்த் எல்லாரும் நடித்தார்கள். அவர் இயக்கத்தில் ‘காவியத் தலைவி’ நடிச்சப்போ எனக்கு 40 வயசு. அதில ‘அம்மா’, ‘மகள்’ என்ற இரண்டு வேடங்களில் நடித்திருந்தேன். படம் நல்ல வெற்றி!
புதிய பறவை கொண்டுவந்த திருப்பம்
எம்.ஜி.ஆரோட `பணம் படைத்தவன்', `ஒளி விளக்கு' என்று பல படங்கள் பண்ணியிருக்கேன். ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’யில் ஜெயலலிதா என் மகளாக நடித்தார். அப்போது அவர் மிகவும் சிறிய பெண். எங்கள் வீட்டிற்கெல்லாம் வந்து என் பெண்களோடு விளையாடியிருக்கிறார். நான் சின்னப் பெண்ணாகப் பார்த்த அவர் அவ்வளவு பெரிய அந்தஸ்துக்கு உயர்ந்தபோது எனக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது.
நான் தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் காமராஜர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருந்தேன். நான் அவரிடம், `உங்கள் வீட்டில் தண்ணீர் எடுத்துக்கட்டுமா?’ என்று கேட்பேன். அவர் சிரித்துக்கொண்டே, ‘என்னம்மா நீ இப்படிக் கேட்கிறே? நான் எல்லாரிடம் சௌகார் ஜானகி வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்' என்று சொல்வார். இப்படி எல்லாருடைய மதிப்பையும் பெற்றுத்தான் சந்தோஷமாக வாழ்ந்தேன். என் குடும்பத்தில் யாரும் சினிமாவுக்கு வர வேண்டும் என்று நினைக்கவில்லை. என் பேத்தி வைஷ்ணவி சினிமாவுக்கு வந்ததுதான் எனக்கு அதிர்ச்சி.
சிவாஜி ஃபிலிம்சின் `புதிய பறவை'யில் கிளாமர் ரோலில் நடித்ததற்கப்புறம்தான் என் திரையுலக வாழ்க்கையில் திருப்பமே ஏற்பட்டது. நல்ல நல்ல கதாபாத்திரங்கள் வந்தன. பாலசந்தரின் ‘பாமா விஜயம்’, ‘எதிர் நீச்சல்’, ‘தில்லு முல்லு’ ஆகியவை எனக்கு வேறு ஒரு அந்தஸ்தைக் கொடுத்தன. அவருடைய மகன் இறந்த பிறகு விசாரிக்க அவரைப் போய்ப் பார்த்தேன். அவர் இறந்தபோது நான் போகவில்லை. கம்பீரமான இயக்குநராகவே மனதில் பதிந்த அவரை இறந்த நிலையில் நான் பார்க்க விரும்பவில்லை.
ரஜினிக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமை
எனக்கு உரிய இடம் சினிமாவில் கிடைக்காமல் போனதற்கு எனக்குத் திரையுலகத்தின் `கணக்கு' தெரியாமல் போனதுதான் காரணம். நான் இரண்டே முறைதான் வாய்ப்புகளைத் தேடிப் போயிருக்கிறேன். முதல்முறை ‘செளகார்’ படத்தில் நடிக்க, இரண்டாவது, ‘ஒளிவிளக்கு’ திரைப்படத்துக்காக. `நானே நடிக்கிறேன்' என்று ராமாபுரம் தோட்டத்திலுள்ள அண்ணன் எம்.ஜி.ஆர்., வீட்டுக்கு ஃபோன் செய்தபோது எம்.ஜி.ஆர்., மகிழ்ச்சியுடன் உடனே ஒப்பந்தம் செய்துவிட்டார். அந்தப் படத்தில் வரும் `இறைவா, உன் மாளிகையில்' என்ற பாடல் எம்.ஜி.ஆர்., ப்ரூக்ளின் மருத்துவமனையில் இருந்தபோது மிகவும் பிரபலமானது. அவர் திரும்பியதும் நான் அவரைச் சந்தித்தபோது, `நீ நடித்த பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கிறதே அம்மா!' என்று கூறி நெகிழ்ந்தார்.
சிவாஜி கணேசனுடன் நடிப்பதற்குப் பெரிய அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அந்த மாதிரி முழு ஈடுபாட்டுடன் கூடிய பிறவி நடிகரை இனிமேல் பார்க்க முடியாது. எம்.ஜி.ஆர். மனிதாபிமானம் கொண்ட சிறந்த மனிதர் எல்லாரையும் மரியாதையோடு நடத்துவார். அவர் நடிகர் மட்டும் அல்ல; சினிமாவின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். ஜெமினி கணேசன் விளையாட்டுப் பிள்ளை. அவரை நான் எப்போதும் அண்ணா என்றுதான் கூப்பிடுவேன்.
ரஜினிகாந்துடன் ‘தில்லுமுல்லு’, ‘தீ’, ‘சிவா’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். அவர் என்னுடைய மகன் மாதிரி. அவர் பிறந்தநாள், என் பிறந்தநாள் இரண்டுமே டிசம்பர்12-தான்.
உள்ளம் நெகிழ வைத்த கமல்
கமல ஹாசன் `சினிமா பைத்தியம்' படத்தில் என் தம்பியாக நடித்தார். அவரது பெருந்தன்மையைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது. `ஹே ராம்' இந்தி, தமிழ்ப் பதிப்புகளில் நடித்தேன். ஆனால், எல்லாக் காட்சிகளுமே நீக்கப்பட்டுவிட்டன. 1999 செப்டம்பர் மாதம் நான் இருதய அறுவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அப்போது, ‘ஹே ராம்’ படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த மொத்தத் தொகையையும் கமல ஹாசனின் மேனேஜர் கொண்டுவந்து கொடுத்தார். அறுவை சிகிச்சைக்கு மிகவும் உதவியாக இருந்தது. அந்தப் படத்தில் ஒரே காட்சியில் முகம் கூட சரியாகத் தெரியாமல் நான் வருகிறேன். ஆனால், முழுத் தொகையையும் கமல ஹாசன் கொடுக்கிறார். இந்த மனசு யாருக்கு வரும்?
இந்த மாதிரியான கதாநாயகர்களோடு நடித்தது என்னுடைய அதிர்ஷ்டம். ஆனால், என்ன காரணமோ தமிழ்த் திரையுலகம் என்னை முழுதுமாக மறந்துவிட்டது. தெலுங்குப் படங்களில் அவ்வப்போது நடிக்கக் கூப்பிடுகிறார்கள். விளம்பரங்களில் நடிக்கிறேன். 1949-லிருந்து 74 வரை நீண்ட காலம் கதாநாயகியாக நடித்து, இன்னும் வாழும் நடிகை நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன்.
எத்தனையோ விருதுகள் எனக்கு வந்திருக்கின்றன. எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. வந்தால் சந்தோஷம்; வராவிட்டால் பரவாயில்லை. எனது ஓய்வு நேரங்களில் பழைய, இனிய நினைவுகளை அசைபோடுகிறேன். அந்த நினைவுகள் என்னைத் தாலாட்டுகின்றன. நான் சந்தோஷமாக இருக்கிறேன். ஏனென்றால், எனக்கு எதிர்பார்ப்புகள் இல்லை. அதனால் ஏமாற்றங்களுமில்லை. இதைவிட வேறு என்ன வேண்டும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக