செவ்வாய், 15 மே, 2018

புடவையில் அசத்தும் தமிழ் நடிகைகள் ! படம் உள்ளே.

புடவையில் அசத்தும் தமிழ் நடிகைகள் ! படம் உள்ளே.

பியூஷன், இண்டோ வெஸ்டர்ன், என பெண்களுக்கு நாளும் புதுப்புது வடிவங்களில் ஆடைகள் வந்தாலும், பாரம்பரிய ஆடைகளுக்கு இருக்கும் மதிப்பே தனி தான். குறிப்பாக நேர்த்தியாக புடவை அணியும் போது, அது அணிபவரை, ஒரே நேரத்தில் அழகாகவும் கம்பீரமாகவும் வெளிப்படுத்துகிறது. அதை நன்கு புரிந்துகொண்ட சில நடிகையர், புடவைகளின் வழி தங்கள் முத்திரையை பதிக்கின்றனர்.


பொதுவாக தற்கால நடிகையர் பலரும், தனிப்பட்ட மற்றும் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது, வெஸ்டர்ன் அல்லது எத்தினிக் ஸ்டைல் ஆடைகளை தான்  அதிகம் அணிகின்றனர். ஆனால், ஒரு சிலர் எப்போதும் புடவையையே விரும்பி அணிகின்றனர். இதை அவர்களின் அடையாளமாகவும் மாற்றுகின்றனர். அதில் சில நடிகைகள், ‘புடைவைக்கு ஏற்ற மேட்சிங்’ மற்றும் தங்களை கம்பீரமாக வெளிப்படுத்தும் விதத்தால், அனைவரையும் ஈர்த்து விடுவார்கள். கீர்த்தி சுரேஷ், அதிதி பாலன், வித்யா பாலன், ஸ்ரீதிவ்யா மற்றும் சிநேகா ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.  எங்கு சென்றாலும், புடவையையே இவர்கள் அதிகமாக விரும்பி அணிகின்றனர். இவர்களின் புடவை ஸ்டைல், நிச்சயம் இந்த தமிழ் புத்தாண்டிற்கு உங்களுக்கு உதவும்.
கீர்த்தி சுரேஷ் 

தன் முதல் படத்திலேயே ஹோம்லி லுக்கில் தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்ட நாயகி. உன் மேல ஒரு கண்ணு, பாடலை ரீவைண்டில் கேட்டு கேட்டு அலுத்துப் போன காதுகள் இங்கு ஏராளம். அந்த அளவிற்கு கீர்த்தியின் மீது அத்தனை க்ரேஸ். கீர்த்தி இதுவரை வந்த படங்களில், புடவை என்ட்ரி இல்லாத படங்களே இல்லை எனலாம். திரையில் மட்டுமில்லை. பட புரமோஷன், வீட்டு நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகள் என தன் நிஜ வாழ்கையிலும் கீர்த்தி புடவையைதான் அதிகமாக அணிகிறார்.

ஒரு பேட்டியில், நீங்கள் புடவைதான் அதிகமாக அணிகிறீர்கள். உங்களுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளமும் உங்களைப் புடவையில்தான் காண விரும்புகின்றனர். இது ரசிகர்களுக்காகவா என கேட்டதற்கு, “எனக்கு புடவை மிகவும் பிடிக்கும். எனவேதான் அதிகமாக உடுத்துகிறேன். எனக்கு நன்றாக இருக்கும் என வீட்டில் சொல்வார்கள்” என்று பதில் அளித்தார். சமீபத்தில் தனது அடுத்த படமான தளபதியின் 62 பட துவக்க விழாவிற்கு சென்றபோது, வெள்ளை நிறப் புடவை, அதற்கு ஏற்ற ஹேர் பன், ஆக்சஸரீஸ் என அசத்தினார். கீர்த்தியின் ஸ்டைலிஸ்ட், இந்த்ரக்‌ஷி பட்நாயக். இவர்தான் கீர்த்திக்காக அணிகலன்கள் மற்றும் ஆடைகளைத் தேடித் தேடி தேர்ந்தெடுக்கிறார். கீர்த்தி சுரேஷின் அடுத்த படமான, மஹாநதிக்கும் இவர்தான் ஸ்டைலிஸ்ட். அது சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படம். இதில் நடிகை சாவித்திரியாக கீர்த்தி இருக்கிறார்.
அதிதி பாலன்
அதிதி பாலன், சிம்பில் மற்றும் க்யூட். குறுகிய காலத்திலேயே உச்சத்தைத் தொட்ட நடிகை. சிம்பிளான உடைகள், பகட்டான அணிகலன்கள் இல்லை, அலங்காரம் இல்லை. இருப்பினும் தன் இயற்கை அழகால் அனைவரையும் கொள்ளைக் கொண்டுள்ளார். அதிலும் அவரின் அதிகப்படியான தேர்வு புடவை. ஒரே ஒரு படம்தான் என்றாலும், அவருக்குக் குவிந்த பாராட்டுக்கள், விருதுகள் ஏராளம். அவரை நேரகாணலுக்கு அழைக்காத மீடியாக்களே இல்லை எனலாம். அப்படி அவர் சென்ற எல்லா இடங்களுக்கும், காட்டன் புடவை, சில்க் புடவை என சிம்பிள் ஆகவே தன்னை வெளிப்படுத்துகிறார். அதிலும் சிங்கிள் ப்ளீட் கொண்டு நேர்த்தியாக அணிகிறார்.

அணிகலன்களிலும் பெரிய அளவில் ஸ்டேட்மென்ட் போல் இல்லாமல், மினிமலிஸ அணிகலன்களையே புடவைக்கு மேட்சாக அணிகிறார். சிகை அலங்காரத்தில் எப்போதும் ஃப்ரீ ஹேர்தான். எப்போதாவது பின்னல் அலங்காரம் செய்து கொள்கிறார். மேக் அப் விஷயத்தில் ஆடைக்கு மேட்சாக வட்டமான பெரிய பொட்டு வைக்கிறார். மற்ற அலங்கார விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை. அவருக்கு இப்போது வரை ஸ்டைலிஸ்ட் இல்லை. அவரே அவருக்கு மேக் அப் செய்து கொள்கிறார்.

ஸ்ரீதிவ்யா

திரையிலும் திரைக்குப் பின்னும் ஸ்ரீதிவ்யா எப்போதுமே அமைதிதான். இருப்பினும் தன் ஆடைகளால் அட்ராசிட்டி செய்துவிடுவார். சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார். அப்போது பேஸ்டல் நிற புடவையில் அசத்தினார். அதற்கு ஏற்ற முழுக்கை பிளவுஸ் மற்றும் டிரெண்டி ஒட்டியானம் என, பியூஷன் ஸ்டைலில் கலக்கினார். பொதுவாகவே புடவை தேர்விலும், டிசைனர் புடவைகளைக் காட்டிலும் சில்க் புடவைகளையே அதிகமாக தேர்வு செய்கிறார். அதிலும் பழைய மாங்காய் டிசைன், புட்டாஸ் கொண்ட பழமையான தோற்றம் கொண்ட புடவைகளைதான் அதிகமாக நாடுகிறார்.

இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோக்கள் போட்டாலும், புடவையில் இருக்கும் படங்களையே அதிகமாகப் பகிர்கிறார். அதில் ‘ஐ லவ் சாரி’ என்கிற ஹேஷ்டேக் ,அவருக்கு புடவை மீதான அதீத விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் விளம்பரங்களில் நடித்தாலும், நகை விளம்பரம், புடவை விளம்பரங்களே அதிகமாக தேர்வு செய்கிறார்.

வித்யா பாலன்
ஆடை அலங்கார விஷயத்தில் வித்யா பாலனை யாருக்குத்தான் பிடிக்காது. கம்பீரமான பேச்சு, தைரியமான படத்தேர்வுகள் என, வியக்க வைக்கும் நிஜக் கதாப்பாத்திரம். மனதில் பட்டதை தைரியமாக பேசும் நடிகை. எங்கும் எப்போதும் புடவை மட்டும்தான் வித்யாவின் ஆல் டைம் ஃபேவரட். டசர், பைத்தானி, இக்கட், சில்க், பனாரசி என, அவர் கட்டாத புடவை ரகங்களே இல்லை. டிசைன்கள் விஷயத்தில் மினிமலிஸம்தான் வித்யாவின் சாய்ஸ். மினுக்கும், அதிக வேலைபாடுகள் கொண்ட புடவைகளை இவர் அணிவது இல்லை.

தன் உடல்வாகிற்கு ஏற்ப, ஒவ்வொரு புடவையையும் இவர் அணியும் நேர்த்தி அத்தனை அழகு. உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு இப்படியும் புடவையில் ஸ்டைல் செய்யலாமா என்பதற்கு முன் உதாரணமாக இருக்கிறார். அணிகலன்களிலும் புடவைக்கு ஏற்ப ஆக்சிடைஸ்டு , கோல்ட், ஆன்டிக் என அசத்துவார். இவருக்கு பாலிவுட்டில் பிரபலமான மேக்கப் ஆர்டிஸ்டான ஷ்ரேயாதான் எப்போதும் அலங்காரம் செய்கிறார். படங்களுக்கும் இவரே மேக்கப். ஷௌனக் அமோன்கர் மற்றும் பிரணாய் ஜேட்லி ஆகியோர்தான் ஸ்டைலிங் செய்கின்றனர்.
சிநேகா பிரசன்னா

10, 12 ஆண்டுகளுக்கு முன்புவரை, தனது அழகிய புன்சிரிப்பு மற்றும் ஹோம்லி லுக் காரணமாக, பெரும்பாலான தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் சிநேகா. புன்னகை அரசி என செல்லமாக தன் ரசிகர்களால் அழைக்கப்படுவார். டிரெடிஷ்னல் உடைகளில், இப்போதும் எப்போதும் சிநேகா தனித்துவம்தான். சிநேகாவின் மேக்கப், நகைத் தேர்வு, ஹேர் ஸ்டைல் என அத்தனையும் அழகு மிளிரும். தனக்கான ஆடையை அவரே பார்த்துப் பார்த்து வாங்குகிறார். டிவி நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சி, வீட்டு நிகழ்ச்சி என, அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் புடவையையே பெரும்பாலும் அணிந்து அசத்துகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக