வியாழன், 28 ஜூன், 2018

தமிழில் வெற்றி வாகை சூடிய 'காப்பி' படங்கள்...

தமிழில் வெற்றி வாகை சூடிய 'காப்பி' படங்கள்...

தமிழின் சில வெற்றிப் படங்கள் வெவ்வேறு காலக்கட்டத்தில் வெளியான ஆங்கிலப் படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டவை என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். இதில், கமல்ஹாசன் 'தேர்ந்தவர்' என்றும் சொல்லலாம். இங்கே காப்பி என்று சொல்லப்படுவது, வெறுமனே ஒரே ஒரு காட்சியையோ அல்லது ஒரு சண்டை அமைப்போ இல்லை. படத்தின் முக்கியமான திருப்பம், அதனால் ஏற்படும் விளைவுகள் முதற்கொண்டு ஒரேமாதிரி இருப்பதுதான் காப்பி என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இங்கே ஒரே மாதிரியான கதைகளுக்குப் பஞ்சமேயில்லை. ஒரு சினிமா சுவாரசியமாக அமைவது, அதன் திரைக்கதை வடிவத்தில்தான். அந்தத் திரைக்கதையையே காப்பி அடிப்பதுதான் இங்கே விஷயமே. அப்படிப்பட்ட சில படங்கள் அடங்கிய கட்டுரையின் முதல் பகுதியைப் பார்ப்போம். 
ராஜபார்வை
கமலின் நூறாவது படம் 'ராஜபார்வை'. இந்தப் படம் கமலின் திரைவாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கக் காரணம், இந்தப் படத்திற்கு பின்னர்தான் கமல் நிறைய பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கினார். ஆனால், இதில் பரிதாபம் என்னவென்றால் இந்தப் படமே 'பட்டர்ப்ளைஸ் ஆர் ஃப்ரீ' (Butterflies are free) என்ற ஆங்கிலப் படத்தில் இருந்து தழுவப்பட்டதுதான். அதே பார்வை தெரியாத கதாநாயகன். இசையில் சாதிக்க துடிப்பது.
இதைவிட கொடுமை, படத்தின் இறுதிக் காட்சியில் மாதவிக்கு வேறொருவருடன் தேவாலயத்தில் வைத்து திருமணம் நடக்க இருக்கும். அதை மேலிருந்து பார்க்கும் கமல் படிவழியே வேகமாக இறங்கிவந்து, தடுக்க வருபவர்களை அடித்துவிட்டு, கதவை மூடி தன் கைத்தடியால் அந்த கதவை யாரும் திறக்கமுடியா வண்ணம் அடைத்துவிட்டு மாதவியை கூப்பிட்டுக்கொண்டு ஓடுவார். இது அல் பஸீனோ நடித்த 'கிராஜுவேட்' என்கிற ஆங்கிலப் படத்தின் இறுதிக் காட்சியில் அப்படியே அச்சுபிசகாமல் நிகழும். இதில் பெரிய கூத்து என்னவென்றால், ராஜபார்வை பட டைட்டிலில் கதை - கமல்ஹாசன் என்று வரும்.
அவள் ஒரு  தொடர்கதை
தமிழின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் 'இயக்குனர் சிகரம்' கே.பாலச்சந்தர். இவரின் கேரியரில் மிக முக்கியமான படம் 'அவள் ஒரு தொடர்கதை'. தமிழின் க்ளாஸிக் படங்களில் ஒன்றாக இன்றளவும் கொண்டாடப்படும் இந்தப் படம் வங்கமொழியில் மிகச் சிறந்த இயக்குநர் ரித்விக் கட்டக் இயக்கிய 'மேக தக்க தாரா' என்கிற படத்தின் அப்பட்டமான காப்பி என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
உண்மையில் அவள் ஒரு தொடர்கதை படம் பார்த்தவர்கள் யாரும் இது ஒரு காப்பி என்று சொன்னால் நம்பவே மாட்டார்கள். ஏனெனில், பாலச்சந்தர் படத்தில் பெண்கள் கதாபாத்திரம் எப்போதும் வலிமை வாய்ந்ததாக இருக்கும். ஒரு புரட்சியை நோக்கியோ அல்லது ஏற்கெனவே இருந்து கழுத்தறுக்கும் பழமையை சாடியோ கண்டிப்பாக பெண்கள் பொங்கி எழும் காட்சிகளுக்கு அவர் படத்தில் குறைவே இருக்காது. 
'மேக தக்க தாரா' படம் முழுக்க முழுக்க இந்த வகையை சார்ந்ததுதான். கொல்கத்தா போன்ற புராண நகரங்களில் வசிக்கும் நடுத்தர வீட்டு பெண் ஒருத்தி தான் வேலை செய்யும் இடத்திலும், குடும்பத்திலும் சந்திக்கும் பிரச்சினைகள், 'இதோ இன்று விடியல் வந்துவிடும்' என்கிற கற்பனை தினம் தினம் நீர்த்துப் போவதை கண்கூடாக காணுதல் போன்றவை அன்றாட நிகழ்வுகள். இதை யதார்த்தம் மாறாமல் அப்படியே 'மேக தக்க தாரா'வில் ரித்விக் கட்டக் பிரதிபலித்திருப்பார்.
பாலச்சந்தர் அதில் சிற்சில மாற்றங்கள் மட்டும் செய்து தமிழில் எடுத்தார். மேலும் இதையே பின்னர் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் மறு உருவாக்கமும் செய்தார். எல்லா மொழியிலும் வெற்றிபெற்று பெரும் புகழை தந்த இந்தப் படம் ஒரு காப்பி என்பதை நினைக்கையில் வேதனையே மிஞ்சுகிறது. அப்போதே ரித்விக் கட்டக்குக்கு உரிய கிரெடிட் கொடுத்து முறைப்படி ரிமேக் செய்யப்பட்டிருந்தால் இந்த வேதனைக்கு அவசியம் இருந்திருக்காது.
ரெட்டை வால் குருவி
பாலுமகேந்திராவின் 'ரெட்டைவால் குருவி' மிகப் பெரிய வெற்றிப்படம். மோகன் தனது சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடிய மற்றொரு படம் இது. ஆனால். இந்தப் படம் டூட்லி மூர் நடித்த 'மிக்கி + மாவுட்' (Micki + Maude) மவுஸ்' படத்தின் அட்டக்காப்பி என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எப்படி தமிழில் மோகன் ஒரு ரிப்போர்ட்டரோ ஆங்கிலத்தில் மூரும் ஒரு ரிப்போர்ட்டர். திருமணமானவர். எப்படி ஒருமுறை தற்செயலாக ஒரு நடிகையை பேட்டி எடுக்க செல்லும் மோகன் அவரால் கவரப்பட்டு ராதிகாவையே காதலிக்க ஆரம்பிக்கிறாரோ அப்படியேதான் மூரும் பேட்டியெடுக்கசென்று காதலில் விழுகிறார்.
இறுதிக் காட்சியில் இரண்டு பெண்களும் பிரசவத்திற்காக ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது முதற்கொண்டு ஆங்கிலப் படத்தில் அபப்டியே இருந்து காப்பியடிக்கப்பட்டது. அந்த ஆங்கிலப்ப டத்தில் இல்லாத ஒரே விஷயம் இளையராஜாவின் இசையும், 'ராஜராஜ சோழன் நான்' போன்ற அற்புதமான பாடல்களும், பாலுமகேந்திராவின் இயல்பான ஒளிப்பதிவும் மட்டும்தான். மற்றபடி படம் காப்பிதான் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இந்திரன்   சந்திரன்
1989-ல் 'இந்திரடு சந்திரடு' என்கிற பெயரில் ஒரு தெலுங்கு படம் வெளியானது. தமிழ் டப்பிங் - 'இந்திரன் சந்திரன்'. கமல் கதாநாயகன். விஜயசாந்தி நாயகி. ஒரு மோசமான மேயர் தான் செய்த தவறுகளை உணர்ந்து திருந்தி வாழ முயற்சிக்க நினைப்பதைப் பிடிக்காத அவரது உதவியாளர் மேயரை கொன்றுவிட்டு அந்த இடத்தில மேயரைப் போலவே தோற்றம் கொண்ட ஒருவனை நடிக்கவைப்பதும், அந்த உதவியாளனின் அராஜகத்தை அந்தப் போலி மேயரே முடிவுக்கு கொண்டுவருவதும்தான் கதை.
இந்தப் படத்தின் மிக முக்கிய திருப்பம் மேயர் நல்லவராக முடிவு செய்வதும், அந்த மேயரை உதவியாளன் கொன்று குதிரை லாயத்தில் தொங்க விடுவதும், பின்னர் இறுதிக் காட்சியில் ஒரு பொதுக்கூட்ட மேடையில் வைத்து உதவியாளனை மாட்டிவிடுவதும்தான். இது அனைத்துமே அப்படியே 1988-ல் வெளியான 'மூன் ஓவர் பாரோடோர்' (Moon over parador) என்கிற ஆங்கிலப் படத்தில் இருந்து அப்பட்டமாக காப்பி அடிக்கப்பட்டது. 
'இந்திரடு சந்திரடு'வில் திரைக்கதை மட்டுமில்லாது, மேயரின் உடலமைப்பும் கூட கிட்டத்தட்ட ஆங்கிலப் படத்தை ஒத்தே இருந்தது. மேலும் ஆங்கிலப் படத்தில் வரும் பிரெசிடன்ட் கதாபாத்திரம் ஒரு மாதிரி இறுகிய குரலில்தான் பேசும். தெலுங்கில் மேயர் கதாபாத்திரமும் அப்படியே பேசும். ஒரு கெட்டவனை அழிக்கவோ அல்லது நல்லவனை கொன்றுவிட்டு இப்படி ஆள்மாறாட்டம் செய்து இன்னொருவனை நடிக்கவைக்கும் கதையோ நமக்கு புதிதில்லை. ஆனால் திரைக்கதையின் திருப்பங்களும்கூட ஒரேமாதிரி அமைத்ததுதான் இந்தப் படம் காப்பி என்கிற வாதத்தை வலுவாக்குகிறது.
இதுவும்  காப்பிதான்...
பாப் என்கிற ஒருவன் நிறைய போஃபியாக்கள் இருக்கும் ஒரு பயந்தாங்கொள்ளி. தனது இந்த நோயை சரிப்படுத்த அவன் ஒரு மருத்துவரிடம் செல்ல, அந்த மருத்துவரோ தனது பரம எதிரியான இன்னொரு மருத்துவரை சந்திக்கச் சொல்லி அனுப்பிவிடுகிறார். அந்த இன்னொரு மருத்துவர் அப்போது குடும்பத்தோடு விடுமுறையில் இருக்கிறார். ஆனால், அவர் விடுமுறை கழிக்கும் இடத்திற்கே சென்று அவரிடம் தன் பிரச்னைகளை கூறுகிறான் பாப். இது பொறுக்காத, தனது விடுமுறை நாட்கள் நாசமாய் போவதை விரும்பாத மருத்துவர் அவனை பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட, மறுநாள் அவன் மீண்டும் அதே இடத்திற்கு திரும்பி வந்துவிடுகிறான்.
பின்னர் அவனை மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று சொல்லி மனநலம் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்க, மறுநாளே அந்த மருத்துவமனை ஊழியர்கள் "இவன் நன்றாக ஜோக் சொல்கிறான். எல்லோரையும் சிரிக்க வைக்கின்றன. இவன் பைத்தியமில்லை" என்று கூறி மீண்டும் மருத்துவரிடமே அனுப்பிவிடுகிறார்கள். இறுதியில் பாப்பை ஒரு காட்டில் கொண்டு போய் விட்டுவிடுகிறார். அங்கிருந்து தப்பிக்கும் பாப் பின்னர் எப்படி மருத்துவரின் ஈகோ-வை சரிபப்டுத்தி அவரை நல்வழிப்பப்டுத்துகிறான் என்பதே 'வாட் அபவுட் பாப்' படத்தின் கதை.
என்ன சொல்றீங்க... தமிழ்ல பிரபலமான காமெடி திரைப்படத்தின் கதையைச் சொல்றீங்கன்னு நினைச்சா இன்னொரு ஆங்கில படத்தின் பெயரைச் சொல்றீங்களே என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?  கமல் நடிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய 'தெனாலி' படத்தின் மூலமே இந்த வாட் அபவுட் பாப்தான்.  அதன் கதைதான் இது. காட்சிக்கு காட்சி தமிழில் காப்பியடிக்கப்பட்ட இந்தப் படத்தின் டைட்டில் போடும்போதுதான் முதன்முறையாக கமலின் பெயருக்கு முன்னால் 'உலக நாயகன்' என்கிற பட்டம் சேர்க்கப்பட்டது. உலக சினிமாவையெல்லாம் சரமாரியாக காப்பியடித்து எடுத்ததனால்தான் ஒருவேளை அவருக்கு இந்த பட்டம் கொடுத்தார்களோ!
கு ணா
இன்றளவும் கமலின் பரீட்சார்த்த முயற்சி படங்களில் முக்கியமானது 'குணா'. கமல் தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தப் படமும் ஒரு ஸ்பேனிஷ் மொழி படத்தில் இருந்து சுட்டதுதான் என்பதை நினைக்கையில் வேதனையாக இருக்கிறது. Tie me Up Tie me Down என்கிற இந்தப் படத்தை இயக்கியது பெத்ரோ அல்மோதோவர் என்கிற உலகப் புகழ் பெற்ற இயக்குநர்.
பல அருமையான க்ளாஸிக் படங்களை எடுத்த இவரின் இந்தப் படத்தின் கதை ஒரு சினிமா நடிகை மீது பைத்தியமாக இருக்கும் மனநலம் குன்றிய ஒருவன், அந்த நடிகையை கடத்திச் சென்று விடுகிறான். அந்த நடிகையை திருமணம் செயவதே தன் லட்சியம் என்று கூறும் அவனை முதலில் அந்நடிகை வெறுத்தாலும் பின்னர் அவளும் காதலிக்க தொடங்குகிறாள். இறுதியில் இணைந்தார்களா இல்லையா என்பதே கதை. இதையே குணாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிற்சில மாற்றங்கள் செய்து கமல் எடுத்திருந்தார். அபிராமி அபிராமி!
மேற்சொன்ன படங்கள் எல்லாம் காப்பியாகவே இருக்கட்டும். படத்தின் டைட்டில் போடுகையில் 'இந்த மாதிரி இந்தப் படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்டதே இந்தப் படம்' என்று சின்னதாக ஒரு ஸ்லைட் போட்டிருந்தால் கூட அவர்களின் நேர்மையை மெச்சி இருக்கலாம். ஆனால், பொதுவில் அந்தப் படங்களை பற்றி பேசும்போது கூட மேற்சொன்ன உண்மையான படங்களை பற்றி மூச்சே விடாமல் இருந்துகொண்டு, சில சமயங்களில் அது தனது சொந்த மூளையில் உதித்தது போன்று பேட்டியெல்லாம் கொடுப்பதுதான் கொடுமை. இந்தப் பட்டியல் இன்னும் முடியவில்லை. கமல் வெறும் ஆரம்பம்தான்.
இன்றைய இளைய தலைமுறை இயக்குநர்கள் பலரும் கூட இந்தக் காப்பி அடிக்கும் விவகாரங்களில் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. அதைப் பற்றியும் பார்ப்போம்...
தெய்வத் திருமகள்
இயக்குநர் ஏ.எல்.விஜய் காப்பி அடிக்கும் விஷயத்தில் மன்னர். இவரது இயக்கத்தில் 2011-ல் வெளிவந்த 'தெய்வத்திருமகள்' மிகப் பெரிய வெற்றியடைந்த படம். விக்ரம் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த இந்தப் படம் 2001-ல் வெளிவந்த ஆங்கிலப் படமான 'ஐ ஆம் சாம்' என்ற (I Am Sam) படத்தின் அப்பட்டமான காப்பி. காப்பி என்றால் வெறும் காட்சிகள் மட்டுமில்லை. படத்தின் ஜீவனான கதைக்கருவும், முக்கியக் கதாபாத்திரத்திற்கு இருக்கும் நோயும் முதற்கொண்டு அப்படியே ஆங்கிலத்தில் இருந்து சுட்டது. அதேபோல் கதாநாயகனுக்கு, அவனுக்காக வாதாடும் வக்கீலுக்கும் இடையிலான உறவும் கூட ஆங்கிலப் படத்தில் உள்ளவாறே அமைக்கப்பட்டிருக்கும்.
இந்தக் காப்பி விவகாரம் பற்றி இயக்குநர் விஜய்யிடம் கேட்டபோட்து, தான் 'ஐ ஆம் சாம்' படத்தை பார்த்ததே இல்லை என்றும், இது காப்பியாக இருந்தால் ஒரு வெளிநாட்டு திரைவிழாவில் எப்படி எல்லாரும் பாராட்டுவார்கள் என்றும் புத்திசாலித்தனமாக கேட்டிருந்தார். ஆனால், உண்மை ஊருக்கே தெரியும். இப்படி முழுப் படத்தையும் சுட்டு மாட்டிக் கொண்டாலும், இதற்கு முன்பே இவர் எடுத்த 'மதராசப்பட்டணம்' படம் பல ஆங்கிலப் படங்களில் இருந்து அப்பட்டமாக உருவப்பட்ட படமாகும். குறிப்பாக சில காட்சிகள் 'அப்பகோலிப்டோ' படத்திலிருந்தும், சில காட்சிகள் இந்தியில் வந்த 'மங்கள் பாண்டே' படத்தில் இருந்தும் சுடப்பட்டது. 
வாமனன்
'வாமனன்' என்றொரு படம் ஜெய் நடித்து 2009-ல் வெளிவந்தது. இந்தப் படம் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் வெளிவந்த ஃபாலோயிங் (Following) என்ற படத்தின் அப்பட்டமான காப்பி. இந்தப் படத்தின் இறுதிக்காட்சி மட்டும் 'எனிமி ஆஃப் தி ஸ்டேட்' (Enemy of the State) படத்திலிருந்து திருடப்பட்டிருந்தது. 'ஃபாலோயிங்' படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இது நோலன் இயக்கிய முதல் படம். கையில் பணமில்லாத காலக்கட்டத்தில் பிலிம் சுருளுக்கான பணத்தை மட்டும் அவ்வப்போது ஏற்பாடு செய்து, கிடைத்த இடத்தில், கிடைத்த ஒளியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, தியேட்டர்களில் கூட வெளியாகாமல் டிவிடியாக மட்டுமே வெளிவந்து, இப்போது நோலனின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக மதிக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர் ஐ.அஹமது தனது முதல் படத்திலேயே அப்பட்டமாக காப்பியடித்திருந்தார். ஆனால், சிக்கலான திரைக்கதையை கொண்ட இந்தப் படம் தமிழில் ஓடவில்லை.
நியூ
எஸ்.ஜெ.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த 'நியூ' படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் இது டாம் ஹேங்ஸ் நடித்து 1988-ல் வெளிவந்த 'பிக்' (Big) என்கிற படத்தின் அப்பட்டமான காப்பி. எப்படியென்றால், ஒரு சிறுவன் பெரியவனாக ஆசைப்படுதல், பின்னர் ஒரு குழந்தைகளுக்கான பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து அங்கே தனது குழந்தைத்தனமான செய்கைகளாலும் யோசனைகளாலும் அங்கிருப்பவர்களை கவர்ந்து இறுதியில் சுபம். இதையே தமிழுக்குத் தகுந்தவாறு சற்று மாற்றி, அதில் தாய்ப்பாசம் என்னும் அரதப் பழைய விஷயத்தை புகுத்தி, அதற்கு சம்பந்தமே இல்லாமல் முழுக்க முழுக்க இரட்டை அர்த்த வசனங்களை வைத்து, பகலில் சிறுவன், இரவில் இளைஞன் என்று ஜல்லியடித்து படத்தை ஓடவைத்தார்.
'பிக்' படம் பார்த்தால் இந்தக் கதையின் மூலம் அவர்கள் சொல்லவந்த இந்தச் சிறுவயது சிக்கல்கள், ஆசைகள் அதன் காரணமாக நமது மனது சிந்திக்கும் விஷயங்கள், அதேபோல் இளைஞனாக இருக்கையில் நாம் சாதாரண விஷயங்களை குழப்பி அதை மேலும் மேலும் சிக்கலாக்குவதால் வரும் பிரச்சினைகள் என பலவற்றை நகைச்சுவையோடு சொல்லியிருப்பார்கள். என்னதான் தமிழில் மிகப் பெரிய வெற்றியை 'நியூ' பெற்றிருந்தாலும் கூட அதன் மூலப்படமான 'பிக்' அருகில் கூட வர இயலாது.
கஜினி
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் மெகா ஹிட்டான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம். இந்தப் படம் 'மெமன்டோ' (Memento) என்கிற ஆங்கிலப் படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்பது பலருக்கும் தெரிந்ததுதான். அதற்கு முக்கிய காரணம் இரண்டு படத்தின் கதாநாயகர்களுக்கும் இருக்கும் நோயின் ஒற்றுமை. 15 நிமிடத்தில் எல்லாவற்றையும் மறந்துவிடும் நோய் அது. மேலும் அந்தக் கதாநாயகன் தன் மனைவியை கொன்ற கெட்டவர்களை தேடி அலைகிறான். இவை இரண்டுமே கஜினியில் இருந்தது. அதேபோல் புகைப்படங்களின் மூலமாக எல்லோரையும் நினைவில் வைத்துக்கொள்வதும் இதில் ஒன்று. இதைத் தவிர வேறு ஒற்றுமைகள் இல்லை. குறிப்பாக இரண்டு படங்களின் திரைக்கதையும் வெவ்வேறு தளத்தில் இயங்குபவை. 
மெமன்டோ படத்தின் திரைக்கதை முழுக்க முழுக்க நான்-லீனியர் முறையில் சொல்லப்பட்டிருக்கும். கஜினியில் இரண்டு பெரிய பிளாஷ்பேக்குகள் மட்டும் உண்டு. ஆயினும் படத்தின் ஜீவனான அந்த மறதி நோயும், கதாநாயகனின் நோக்கமும் ஒன்றே என்பதால் இந்தப் படத்தை காபி அடித்த படங்களின் பட்டியலில் தாராளமாக சேர்க்கலாம். 
சில நல்ல படங்கள் நாம் பார்த்து மனது சந்தோஷமாக இருக்கும். ஆனால் அந்தப் படம் ஏதோ ஒரு ஆங்கிலப் படத்தின் தழுவல் என்று தெரிய வருகையில் மனம் மிகுந்த வருத்தத்தில் திளைக்கும். அப்படி ஒரு சம்பவம்தான் 'அபியும் நானும்' படம் பார்த்த பின்னர் உண்டானது. 'ஃபாதர் ஆஃப் தி பிரைடு' (Father of the Bride) என்ற ஆங்கிலப் படத்தில் இருந்து கதைக்கரு, பல முக்கியமான காட்சிகள் என எல்லாவற்றையும் காப்பி அடித்து எடுத்திருந்தார் ராதாமோகன். ஆனால், தமிழில் வழக்கம்போல தந்தை - மகள் சென்டிமென்ட் காட்சியை அதிகப்படுத்தி, மகள் காதலிக்கும் பையனின் காட்சிகளை குறைத்து முழுக்க முழுக்க வேறொரு படம் போலவே தோற்றமளிக்க செய்திருப்பார்கள். ஆனால், தமிழில் படம் பெரிய வெற்றி பெறாமல் போனது.
நான்
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக அறிமுகமான முதல் படம் 'நான்'. யாரும் எதிர்பாராமல் நன்றாக ஓடிய இந்தப் படம் 'தி டேலன்டட் மிஸ்டர் ரிப்ளே' (The talented Mr.Ripley) என்ற ஆங்கிலப் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது. தமிழில் கதாநாயகனின் பின்புலமாக அவன் சிறுவயதிலேயே குற்றங்கள் புரிந்ததுவிட்டு சீர்திருத்த பள்ளியில் படித்தவனாகவும், திடீரென ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு வாய்ப்பு எதிர்பாராமல் கிடைக்க, அதை உபயோகித்து மருத்துவக் கல்லூரியில் படிக்க போவதாகவும், இவன் உண்மையில் யார் என்ற விஷயம் அவனது நண்பனுக்கு தெரிந்ததும் அவர்களுக்குள் ஏற்படும் கைகலப்பில் எதிர்பாராமல் நண்பன் இறந்து விடுவதாகவும் திரைக்கதை அமைத்திருப்பார்கள்.
இப்படி தமிழ் சினிமா கதாநாயகனுக்கே உரிய வகையில் அவனை நல்லவனாக பதிய வைக்க இதையெல்லாம் செய்திருப்பார்கள். இதையெல்லாம் தவிர்த்துவிட்டு உள்ளது உள்ளபடி அவன் அந்த சந்தர்ப்பத்தில் இதைத்தான் செய்வான்... அதுவும் தெரிந்தே... அது கொலையாகவே இருந்தாலும் கூட. அவன் செய்யும் எல்லா செயல்களுமே அப்படியே தமிழில் விஜய் ஆண்டனியும் செய்வார். என்ன ஒன்று ஆங்கிலத்தில் கதாநாயகனும் ஒரு கதாபாத்திரம். தமிழில் அது கிடையாது. 
ஆங்கிலப் படத்தின் இறுதிக்காட்சியில் இவ்வளவு குழப்பங்களுக்கும் மூல காரணமாக இருக்கும் ஒருவரை ஹீரோ கொலை செய்துவிடுவான். தமிழில் விஜய் ஆண்டனி தான் யாராக நடிக்கிறாரா அவரது குடும்பத்தை நல்லபடியாக கவனித்துக்கொள்வார். மற்றபடி படம் அப்பட்டமான காப்பிதான் என்பதில் சந்தேகமே வேண்டாம். கணேசன், கட்டு ரையாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக