``மாமியார் மருமகள்னா எப்போவும் சண்டை போட்டுக்கணுமா என்ன..?'' - `சுமங்கலி' ஸ்வேதா
`கனா காணும் காலங்கள்' சீரியல் மூலமாக சின்னத்திரைக்குள் நுழைந்தவர் ஸ்வேதா. தன்னுடைய பதினேழு வயதில் மீடியாவுக்குள் நுழைந்து, திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு பிரேக் கொடுத்தார். தற்போது மீடியாவுக்குள் ரீ - என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
``என்னுடைய சொந்த ஊர் ஆரணி. படிப்புக்காத்தான் சென்னை வந்தேன். எத்திராஜ் காலேஜ்ல விஸ்காம் சேர்ந்து படிச்சிட்டு இருந்தேன். என்னோட சீனியர் மூலமா சின்னத்திரை வாய்ப்பு கிடைச்சது. ஆரம்பத்துல சின்னதா தயக்கம் இருந்தாலும் சரி முயன்று பார்க்கலாமேன்னு தோணுச்சு. அப்படித்தான் விஜய் டிவி `கனா காணும் காலங்கள்' பண்ணேன். அந்த சீரியல் எனக்கு நல்ல ரீச் கொடுத்துச்சு. நடிப்புன்னா என்னன்னே தெரியாத என்னைக் கைதூக்கிவிட்டது இந்த சீரியல் தாங்க. அதைத் தொடர்ந்து எல்லா சேனலிலும் ஒரு ரவுண்டு அடிச்சிட்டேன்.
சீரியல் தவிர்த்து, நிறைய குறும்படங்களில் நடிச்சிட்டிருந்தேன். என் கணவர் பிசினஸ் பண்றார். அதைத் தவிர்த்து அசிஸ்டென்ட் டைரக்டராகவும் இருக்கிறார். ஒரு குறும்படத்தில் எனக்கு ஜோடியா நடித்தவர்தான் என் வாழ்க்கை துணையா வரப் போகிறார்னு ஆரம்பத்துல எனக்குத் தெரியல. பழக ஆரம்பிச்சதும் இருவருக்குள்ளேயும் காதல் மலர்ந்தது. முதல்ல எங்க வீட்டுல லவ்வுக்கு சப்போர்ட் கிடைக்கல. அவங்க மனசை மாத்த ரொம்ப முயற்சி பண்ணோம். அந்தச் சமயம் நான் தொகுப்பாளினியா வேலை பார்த்துட்டிருந்தேன். ஒரு கட்டத்துக்கு மேல எங்க வீட்டுல உள்ளவங்களை சம்மதிக்க வைக்க முடியாதுன்னு தெரிஞ்சது. நாங்க ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டோம். அதுக்கப்புறம் எங்க வீட்டுலேயும் ஒத்துக்கிட்டு மூணு மாசம் கழிச்சு பெருசா எங்களுடைய திருமணம் நடந்துச்சு'' என்கிறவருக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறார்.
``2014-ல் எனக்குத் திருமணம் நடந்துச்சு. அதுக்கப்புறம் நடிப்புக்கு பிரேக் எடுத்துட்டு ஃபேமிலியை மட்டும் கவனிச்சிட்டிருந்தேன். இதுக்கிடையில் சின்ன சின்ன டெலி ஃபிலிம், குறும்படங்களில் நடிச்சிட்டிருந்தேன். என் மாமியார் எனக்கு நல்ல நண்பரா இருக்காங்க. எந்தச் சூழ்நிலையிலும் மத்தவங்களை நம்பியே இருக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க. என்னோட எல்லா முயற்சிகளையும் பாராட்டுவாங்க. மாமியார் மருமகன்னாலே சண்டை போட்டுப்பாங்க என்கிற இமேஜை தன்னோட நடவடிக்கைகள்னால உடைச்சவங்க. என்னைத் தன் பொண்ணு மாதிரிதான் ட்ரீட் பண்ணுவாங்க. நான் சோஷியல் மீடியாவில் ஆக்டிவா இருக்க ஆரம்பிக்கக் காரணமே அவங்க தந்த ஃப்ரீடம்தான். என்னுடைய பதிவைப் பார்த்துட்டு `என்னது.. நீங்க மறுபடி நடிக்கிறீங்களா..'ன்னு கேட்டவர்கள், நிறைய வாய்ப்புகளும் தந்தார்கள். இப்போ சன் டிவியில் ஒளிபரப்பாகிற `சுமங்கலி' சீரியலில் நடிச்சிட்டிருக்கேன்.
எனக்கு பிரைட் கலர்ஸ் சூட் ஆகும். பெரும்பாலும் பிரைட் கலரில்தான் டிரெஸ் எடுப்பேன். திருமணத்துக்குப் பிறகு என் காஸ்டியூம் செலக்ஷன் கொஞ்சம் மாறியிருக்கு. என் கணவர் பக்காவா செலக்ட் பண்ணிக் கொடுக்கிறார். இப்போ என்ன டிரெண்டோ அதுக்கு ஏற்ற மாதிரி காஸ்டியூம் செலக்ட் பண்ணிட்டிருக்கேன். இது தவிர்த்து எனக்கு டிராவல் பண்றது ரொம்பப் பிடிக்கும். அழகி சீரியல்தான் நான் நடிச்ச கடைசி சீரியல். நடிப்புக்கு பிரேக் எடுத்துட்டு வீட்டுல சும்மா இருக்குறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதுக்காகத்தான் ரீ-என்ட்ரி கொடுக்கணும்னு விரும்புனேன். குறிப்பா, சீரியலில் மட்டும்தான் நடிப்பேங்குறதுல ரொம்பவே உறுதியா இருக்கேன் எனப் புன்னகைக்கிறார், ஸ்வேதா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக